ஆள்
அரவமற்ற ஒரு இடத்திற்கு வந்தவுடன், கால்கள் அதற்குமேல் நகர மறுத்தது..
உப்புக்காற்று முகத்திற்கு சாமரம் வீச, அலைகளின் விளிம்பு என் கால்களை
தொட்டுச்செல்கிறது... கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், கலங்கரை விளக்கத்தை தவிர
எதுவும் புலப்படவில்லை.. காரிருள் சூழ்ந்த கடலை கண்கள்
வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்க, விழியோரம் கண்ணீர் அனிச்சையாய்
வழிந்தோடிக்கொண்டிருந்தது...
“உனக்கு அழுகையே வராதா?” பலபேர் என்னிடம் கேட்டதுண்டு...
உணர்வுகளை உரக்க வெளிப்படுத்த தெரியாதவன் என்கிற பட்டம் சூடிய நாட்களும் உண்டு..
எவ்வளவோ சண்டைகள், இழப்புகள், தோல்விகள் என கடந்தபோதெல்லாம் கலங்காத கண்கள்தான்
இப்போது கசிந்துகொண்டிருக்கிறது...
‘தூசு விழுந்துடுச்சு,
உப்புக்காத்து எரியுது’ என்று காரணங்கள் தேடி மழுப்பவல்லாம் மனமில்லை...
ஆம், நான் அழுகிறேன்... நானும்
ஒரு உணர்வுள்ள உயிரினம்தான் என்று நிரூபிக்க அந்த ஆண்டவன் உருவாக்கிய சூழல்
இதுவெனில், அந்த கற்சிலைகளை கடலில் தூக்கிப்போடும் அளவிற்கான வேதனையோடு அழுகிறேன்...
அலைபேசியை எடுத்து, திரையில்
தோன்றிய வருணின் சிரித்த வால்பேப்பரை பார்த்தபோது மனதினுள் சுருக்கென முள் தைத்ததை
போன்ற வலி.. சிரிக்கிறான்... கடைசியாக எப்போது சிரித்தான் என்கிற ஞாபகம் இல்லை,
சமீபத்தில் இல்லை என்பது மட்டும் உண்மை..
அழைத்தேன்... “அழைப்பை ஏற்கவில்லை”, “பிஸியாக இருக்கிறார்” குரல்கள் அடுத்தடுத்து
நச்சரித்துக்கொண்டிருந்தது...
நான்காவது அழைப்பில், “ஹலோ” எரிச்சல், வார்த்தையாய் விழுந்தது..
“வருண்...”
“என்ன வேணும் இப்போ?” கேட்கும் எதையும் கொடுக்க
மனமில்லாத வினவல்...
“என்ன முடிவு பண்ணிருக்க?”
“நீ இதோட ஆறு தடவை இதே கேள்வியை
கேட்டுட்ட... பிரேக்கப்தான் ஒரே முடிவுன்னு பர்ஸ்ட் டைமே சொல்லிட்டேன்..”
ஆறு முறை அல்ல, ஆயிரம் முறை கூட கேட்டுக்கொண்டிருக்கத்தான்
இந்த மனம் படுத்துகிறது... ஆயிரத்தில் ஒருமுறையாவது முடிவை மாற்றிக்கொள்ள
மாட்டானா? என்கிற பைத்தியக்காரத்தனமான ஆசை...
“என்னால உன்ன மறக்க முடியல...
என்னைவிட்டு போய்டாத ப்ளீஸ்...”
“நோ மோர் ட்ராமா ப்ளீஸ்... என்னைய
நிம்மதியா வாழவிடு” அழைப்பு
சடாரென துண்டிக்கப்பட்டது...
அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், திரையில் மீண்டும் சிரிக்கிறான் வருண்...
இது எனக்கும் புதிய புறக்கணிப்பு அல்ல, அவன் சொன்ன கணக்குப்படி இது ஆறோ ஏழோ தெரியவில்லை!
இதயம் இடியென துடித்துக்கொண்டிருந்தது... அழுகையும், ஆத்திரமும் அதனதன் வழியே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது..
அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன், திரையில் மீண்டும் சிரிக்கிறான் வருண்...
இது எனக்கும் புதிய புறக்கணிப்பு அல்ல, அவன் சொன்ன கணக்குப்படி இது ஆறோ ஏழோ தெரியவில்லை!
இதயம் இடியென துடித்துக்கொண்டிருந்தது... அழுகையும், ஆத்திரமும் அதனதன் வழியே வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது..
நரகத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?...
அங்குதான் சில நாட்களாய் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...
இறந்தால்தானே நரகம், பிறகெப்படி
அங்கே வாழமுடியும்?... அதுவும் இங்கே முடியும்!
“நீங்க பைத்தியக்காரத்தனமா லவ்
பண்ணிருக்கிங்களா?”
“அதென்னது பைத்தியக்காரத்தனமா?”
“உசுருக்கு உசுரா லவ் பண்றது...
அவனே நம்ம விட்டு போனாலும், விலகிப்போக மனமில்லாம அந்த காதலோடவே வாழறது...
உங்களுக்கு புரியுறா மாதிரி சொல்லனும்னா, ஆரவ்’ஐ ஓவியா லவ் பண்ண மாதிரி”
அத்தனை காலம் ஒவ்வொரு
நிமிடத்தையும் ரசித்து ருசித்து வாழ்ந்த அப்படியான பைத்தியக்காரத்தனமான காதல் முறியும்போது உண்டாகும் வலி,
அரைலிட்டர் ஓவிரான் செலுத்தினாலும் அந்த வலி குறையாது..
அதாவது நம்மால அதிகம்
நேசிக்கப்பட்டவங்களால நாம ஒதுக்கப்படுற கொடுமையான சூழலை தாங்குறதவிட, கொடுமையான
சூழலை ஒருவர் சந்திக்கவே முடியாது!...அப்படி ஒரு சூழலை நீங்க சந்தித்திருப்பவராயின், வாழ்விலும் நரகத்தை நீங்கள் அனுபவித்திருக்கக்கூடும்!
“காதல் தோல்வியால் வாலிபர்
தற்கொலை”
நாளிதழ்களில் உங்களைப்போலவே நானும் எளிதாக கடந்துவந்த செய்திதான் இது... ‘இதுக்கு
போய் தற்கொலை பண்றான் பாரு, கோழை... இவனல்லாம் வாழலன்னு யாரு அழுதது’ ஒருமுறை இப்படி வாக்குவாதமெல்லாம்கூட
செய்திருக்கிறேன்... ஆனால், இந்த நிமிடம்.. அந்த செய்திகளுக்கு பின்னால்,
துடித்துக்கொண்டிருந்த மனதினை நினைக்கும்போது என்னால் அந்த வலியை உணரமுடிகிறது...
அந்த யாரோ வாலிபர் அப்போதுதான் இறந்திருப்பான்னு
நினைக்குறீங்களா?... சத்தியமா இல்லைங்க... எப்போ அந்த காதலிக்கப்பட்ட மனத்தால்,
தான் வெறுக்கப்படுகிறோம் என்று உணர்ந்தானோ அப்போதே இறந்துபோயிருப்பான்...
மீதமிருந்த நடைப்பிணத்துக்குத்தான் சில காலங்கள் கழித்து காரியங்கள்
செய்யப்படுகிறது!...
சரி விஷயத்துக்கு வரலாம்... யாரோ ஒரு நண்பர் காதல் தோல்வியென
மனம் கலங்கி உங்க முன்னாடி வந்து நின்னா, உடனே நீங்க என்ன செய்வீங்க?...
“இதுவும் கடந்து போகும் சகோ...
எல்லாம் கொஞ்சநாள்தான், சரியாகிடும்” தத்துவம் சொல்வீர்கள்...
“திரிஷா இல்லன்னா திவ்யா” நகைத்திருக்கக்கூடும்....
“அவன் உனக்கு வர்த்தே இல்ல
மச்சி... அவன் ஆளும், மூஞ்சியும்...” சம்மந்தமில்லாமல் பிதற்றியிருப்பீர்கள்....
“அவனை நினைக்குறதையே மறந்திடு
மச்சி... மறதியைவிட சிறந்த மருந்து ஒண்ணுமில்ல” இப்படியும்கூட
சொல்லியிருப்பீர்கள்... இந்த நான்காவது வகையறா ஆட்களைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்... அதெப்படி மக்களே வலியை மறப்பது?...
ஒரு படிக்கட்டில் ஏறுகிறீர்கள்,
தடுமாறி கீழே விழுந்து கால் உடைந்து கதறிக்கொண்டிருக்கிறீர்கள்... அந்த தருணத்தில்
ஒரு நண்பர் வந்து, “விழுந்தத மறந்திடு மச்சி, வலிக்காது” என்று சமாதானம் சொல்வாரேயானால்,
உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்?...
"அப்படி என்னதான் வலி?... பொல்லாத காதல் வலி... என்னமோ இவனுக மட்டும்தான் காதலிக்குற மாதிரி பீல் பண்ணிக்கிட்டு!"
கோபப்படாதிங்க நண்பா... கொஞ்சம் இதையும் கேளுங்க!
காதல் முறிவுக்கு பிறகான நாட்களை நீங்க கடந்திருக்கிறீர்களா?
"அப்படி என்னதான் வலி?... பொல்லாத காதல் வலி... என்னமோ இவனுக மட்டும்தான் காதலிக்குற மாதிரி பீல் பண்ணிக்கிட்டு!"
கோபப்படாதிங்க நண்பா... கொஞ்சம் இதையும் கேளுங்க!
காதல் முறிவுக்கு பிறகான நாட்களை நீங்க கடந்திருக்கிறீர்களா?
அந்த நாட்களின் காலைப்பொழுது
எப்படி இருக்கும் தெரியுமா?...
வழக்கமாக எழும் ஆறரை மணி...
படுக்கையைவிட்டு எழுந்து அமர்ந்திருப்பேன்.. கைகள் அனிச்சையாகவே மொபைலை எடுத்து
வாட்சப்பை துழாவும்... எப்போதோ பயணத்தில் பழகிய பார்த்திபன் முதல், நேற்று மதியம்
அலுவலகத்தில் நம்பர் வாங்கிய பெயர் மறந்துபோன புண்ணியவான் வரைக்கும் ‘குட்
மார்னிங்’
அனுப்பியிருப்பார்கள்... அந்த காலையை இனிமையாக்க வேண்டிய வருண், இன்றைக்கும்
மெசேஜ் அனுப்பவில்லை என்று உணரும்போது அந்த விடியலின் மீதே வெறுப்பு வரும்...
அருகில்தான் நண்பன்
படுத்திருப்பான், அனாதை ஆகிவிட்டதாய் மனம் ஒப்பாரி வைக்கும்... மீண்டும்
படுத்தாலும் தூக்கம் வராது, காதலின் நினைவுகள் சிறுகச்சிறுக நம்மை
சிதைத்துக்கொண்டிருக்கும்... அலுவலகம் செல்லவே மனமிருக்காது...
வழக்கமாய் அம்மாவிடமிருந்து வரும்
அழைப்புக்கூட, அவனென நினைத்து ஏமாந்த விரக்தியில், கோபமாய் வெளிப்படும்...
“சாப்ட்டியாடா?”
“என்னம்மா வேணும் உனக்கு?...
ஆபிஸ் கிளம்பிட்டிருக்குற நேரத்துல ஏன் கால் பண்ற?... நானே பண்றேன், கட் பண்ணு!”
“என்னடா பிரச்சினை உனக்கு?... நீ
ஒழுங்கா பேசியே ரொம்பநாள் ஆச்சு... ஆபிஸ்ல எதுவும் பிரச்சினையா?, உடம்பு கிடம்பு சரியில்லையா?”
அழைப்பை அவசரமாக துண்டிப்பேன்...
சிலநிமிடங்கள் கழித்துதான் காரணமே இல்லாமல், முட்டாள்த்தனமாய் அம்மாவிடம் கோபத்தை
வெளிப்படுத்தியிருப்பதை உணரமுடியும்.. என் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகும்...
நானும் மகிழ்ச்சியாக இல்லை,
என்னாலும் பலர் நிம்மதியை இழக்கிறார்கள்... அம்மாவை சமாதானப்படுத்தவல்லாம்
முடியவில்லை.. அதற்கான மனநிலையிலும் நானில்லை...
வேகமாய் வாட்சப்பை டீஆக்டிவேட்
செய்வேன், பேஸ்புக்கை டெலிட் செய்வேன்... எந்த நண்பனின் அழைப்பையும்
ஏற்கமாட்டேன்...
“சொல்றேன்னு தப்பா நினைக்காதடா..
கொஞ்சநாளாவே உனக்கேதோ ப்ராப்ளம்னு தெரியுது, என்னன்னுதான் புரியல... ஓப்பனா பேசு” அறை நண்பன் அக்கறையாய்
வினவினான்... அந்த அக்கறையில் துளி பயமும் கலந்திருந்தது... திடீரென சைக்கோவாக
மாறி, அவனை கொலைசெய்துவிடுவேனோ? என்கிற அளவுக்கான பயம் அது... ஹாலிவுட் த்ரில்லர்
படங்களையும், ராஜேஷ் குமார் நாவல்களையும் பார்த்துப்படித்து உரமேறிய மூளை அந்த
அளவுக்கேனும் கற்பனை செய்யாவிட்டால்தான் ஆச்சர்யம்!...
பதிலெதுவும் சொல்லவில்லை...
அசட்டையாக சிரித்துவைத்தேன்... அவனுடைய பயம் மேலும் அதிகரித்திருக்கக்கூடும்,
ஆனால் கண்டிப்பாக இன்னொருமுறை என்னை கேள்வி கேட்டு இம்சிக்கமாட்டான் என்பது
மட்டும் உறுதியானது...
யாரிடமும் பேசப்பிடிக்கவில்லை...
எப்போதும் அழகாய் தெரியும் குழந்தையின் சிரிப்பில்கூட, விஷமம் இருப்பதாய் உள்மனம்
எச்சரிக்கும்... பாசத்தோடு பிஸ்கட் போடும் எதிர்வீட்டு நாய் ஆவலாய் கால்களை சுற்றும்போதுகூட,
எட்டித்தள்ளி நகரும்படி ஒரு குரூரம் மனதிற்குள் தோன்றும்...
பிடித்த உணவுப்பொருட்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்... கடுமையான பசிகூட, அதற்காக காத்திருக்கும்...
தட்டுகள் நிறைய பதார்த்தங்கள், அள்ளி எடுத்து முதல் வாய் வைக்கும்போது
அடிவயிற்றுக்குள் அதற்காகவே காத்திருந்ததைப்போல ஒரு வேதனை எழும் பாருங்க....
அதற்குப்பிறகு தொண்டைக்குழிக்குள் எச்சில்கூட இறங்க மறுக்கும்...
“என்ன பாஸ், பேலியோ டயட்டா?...
ஆளே ஸ்லிம் ஆகிட்டிங்க?”
“சுகர் எதுவும் இருக்கான்னு
டெஸ்ட் பண்ணிக்கோங்க ப்ரோ, இவ்ளோ வெயிட் லாஸ் ஆகாது”
அவரவருக்கு ஏற்றபடி அந்த உடல்
மெலிவை காரணங்களால் நிரப்பிவிடுவார்கள்...
ஒரே இடத்தில் இருப்பதால்தான்
அவ்வளவும் நினைவில் வந்து இம்சிக்கிறதென இடமாற்றம் கூட செய்து பார்த்தேன்...
நண்பர்களோடு ஈசிஆர் பயணம்.. குடி, கூத்து, ஆடல், பாடல் அட்ராசிட்டிஸ் என மற்ற எல்லோரும் இன்பத்தில் திழைத்தார்கள்...
அங்கும்போய் கடலை வேடிக்கை பார்த்துவிட்டு மட்டும்தான் திரும்பிவந்தேன்...
ஏழெட்டுபேர் என்னை
சூழ்ந்திருப்பார்கள்... அதில் யாரோ ஒருவன் என்னிடம்தான் பேசிக்கொண்டிருப்பான்...
தலைமட்டும் ஆமோதிக்க, மனமெல்லாம் எங்கோ அலைபாய்ந்துகொண்டிருக்கும்...
“இவனுக்கு என்னமோ ஆச்சு!” பொத்தாம்பொதுவாய் சொல்லிவிட்டு
கடந்துபோய்விடுவார்கள்...
நான் என்னதான் செய்வது?... பார்க்கும்
பொருளெல்லாம் ஏதோ ஒருவிதத்தில் அவனை நினைவுபடுத்துவதாகவே தெரிகிறது... கேட்கும்
பாடல்கள், பார்க்கும் காட்சிகள் எல்லாமுமே கடந்துவந்த காதல் நாட்களை ஒரு
புள்ளியிலாவது இணைத்துவிடுகிறது...
“குரங்கை நினைக்காமல்
மருந்தைக்குடி” என்று
குழந்தைகளுக்கு சொல்லும் சொலவடை உண்டு... இங்கே வருண் உடனான நினைவுகளை எவ்வளவு
தூரம் மறக்க பிரயத்தனம் செய்கிறேனோ, அதைக்காட்டிலும் பலமடங்கு நினைவுகள்
அதிகமாகிதான் என்னை இம்சிக்கவைக்கிறது...
“உங்களுக்கு மைல்டு டிப்ரஷன்
இருக்கலாம் மிஸ்டர்”
“அப்போ நான் பைத்தியம்னு
சொல்றீங்களா?”
“டிப்ரஷன்னா பைத்தியமா?...
உடம்புக்கு அப்பப்போ சளி, காய்ச்சல் வர்றமாதிரி மனசுக்கு சின்னச்சின்ன ப்ராப்ளம்ஸ் வரலாம்...
இதை கண்டுக்காம விட்டு, அதிகப்படுத்தி கஷ்ட்டப்படுறதவிட ஒரு கோர்ஸ் மெடிசின்
எடுத்துக்கிட்டா ஈசியா சரிபண்ணிடலாம்!”
கடைசியாய் அந்த மனநல
மருத்துவரிடமும் சென்று பார்த்தாகிவிட்டது...
இப்போதெல்லாம் அதிகம் தூக்கம்
வருகிறது... பிறர்மீதான கோபம் குறைந்திருக்கிறது...
ஆனால் எனக்குள் உண்டான
ஏமாற்றம்?... வலி, வேதனை?... தோல்வி, தனிமை?.... இவைகளுக்கு மட்டும் தீர்வே கிடைக்கவில்லை...
இதோ இப்போதுகூட கடற்கரையில்
தனிமையில் நான் அமர்ந்திருக்கிறேன்... மனம் முழுக்க சோகங்கள்... ஒரு பத்து இருபது
அடிகள் முன்னேறினால், ஏதோ ஒரு பெரு அலை என்னை தன்வசப்படுத்தி
இழுத்துப்போய்விடலாம்... மறுநாள் காலை நாளிதழில் நானும், “மெரினாவில் வாலிபர்
சடலம் மீட்பு” என்று
பெட்டிசெய்தியாய் உங்களை கடந்துவிடலாம்...
அலைபேசியை எடுத்தேன்... ஏழாவது
முறையாக வருணை அழைத்தேன்...
என்ன பதில் வரப்போவதென தெரிந்தே
அழைக்கிறேன்... ஏதோ ஒரு நம்பிக்கை... இந்த நிமிடத்தை மட்டுமல்ல, இனிவரும்
யுகங்களையும் அந்த நினைவுகள் வாழவைக்குமென்று!...
“ஹலோ... இப்போ என்னவேணும்?”
“முடிவுல எதாச்சும் மாற்றம்
வந்திருக்கான்னு கேட்கத்தான்” சற்று தயக்கத்தோடு வினவினேன்!..
(முற்றும்)
பிரிவின் வேதனைகள் விளக்கமாய், அழகாய் சொல்லப்பட்டிருக்கிறது. சரி, இருவரும் ஆணா? நட்பின் புறக்கணிப்பா?
ReplyDeleteஇருவரும் ஆண்தான் சகோ... ஓரினக்காதல்...
Deleteதங்களைப்போன்ற மூத்த படைப்பாளிகள் கருத்திட்டு ஊக்குவிப்பதில் மிக்க மகிழ்ச்சி...
i want many stories in tamil.my mail id govindangovindan123456@gmail.com
ReplyDeletepls accept me friendship
This comment has been removed by the author.
ReplyDeleteNice Vijay...
ReplyDeleteநன்றி பிரபு...
DeleteIndha sirukadhaiyai nigalvulgaludan koodiya kadhaiyaga amaithirundhal innun nandraga irundhirukum (en abiprayam)
ReplyDeleteஇருந்திருக்கலாம் சகோ.... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..
DeleteExpecting more stories from you in future
ReplyDeleteYour fan
Venkat
விஜய், எனக்கு கொஞ்சம் நேரம் தருவீர்களா.....
ReplyDeleteஇதே வலியோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.
ReplyDeleteஅருமையான சொல்லாடல்
இப்போதான் படிச்சேன் அப்படியே என்னுடைய story மாதிரி இருக்கு
ReplyDeleteசுயம் இல்லாத காதல். பிச்சை கேட்கும் காதல் இது. அறை நண்பன் அல்லது ரூம்மெட்ட ரொம்ப கொச்சைப்படுத்தியாத நான் உணருகிறேன். ஏதோ நம்மள கொலை பண்ணிடுவானோனு ஒரு பயத்துல கேட்டு இருப்பான்னு சொன்னது ரொம்பவும் மோசமான வராத்தை.
ReplyDelete