Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 29 October 2017

"My Son is Gay" லோகேஷுடன் ஓர் நேர்காணல்!






“முற்றுமுழுதாக சமபால் ஈர்ப்பை கருவாகக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், இன்னும் சில நாட்களில் தமிழக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது  நான் எழுதும் ஏதோ ஒரு கதையின் கற்பனை வரிகள் அல்ல இவை... நம்மால் நம்பமுடியாத இந்த சாதனையை, கடும் போராட்டத்திற்கு இடையே செய்து சாதித்திருக்கும் அன்பு நண்பர் லோகேஷ் ஒரு தமிழ் இளைஞரும் கூட... 


My Son is Gay (என் மகன் மகிழ்வன்) என்ற திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷை நீண்ட காலத்திற்கு பிறகு தொடர்புகொண்டபோது, அவ்வளவு உற்சாகமாய் பேசத்தொடங்கினார்...

GAY  என்கிற வார்த்தையையே சற்று வெளிப்படையாக உச்சரிக்க தயங்கும் ஒரு சூழல் நிலவும் தமிழகத்தில், “My Son is Gay” என்று தலைப்பிலேயே அந்த வார்த்தையை வெளிப்படையாய் வைக்கக்காரணம் என்ன?

இது ஒரு சமபால் ஈர்ப்புள்ள நபரோட வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஒரு திரைப்படம்தான்... திரையரங்கிற்குள் அவங்க ஒரு கேவைத்தான் திரையில் பார்க்கப்போறாங்க... அப்டி இருக்கும்போது வேறு மறைமுகமான பேரை சொல்லி, திரைப்படம் பார்க்க வரும் மக்களை நான் ஏமாற்ற விரும்பல... நான் விரும்புற சமூக மாற்றம் முதலில் என்னோட திரைப்படத்தின் பெயரிலிருந்து தொடங்கட்டுமே...

ஆரம்பத்துல சின்ன பட்ஜெட் படமா தெரிஞ்சுது... ஆனால் அனுபமா, ஜேபி, கிஷோர், ஸ்ரீரஞ்சனின்னு பல பிரபலங்கள் வரிசைகட்டி நடிச்சிருக்காங்களே, எப்டி இது முடிஞ்சுது?

எனக்கே ஆச்சர்யமான விஷயம்தான் இது... இதுதான் கரு, இதுதான் படம்னு முதல்ல முடிவு பண்ணி வேலைகளை தொடங்கிட்டேன்... தொடங்கினேனே தவிர, அதை எப்படி கொண்டுபோறதுன்னு தெரியாம தடுமாறினேன்... பெரிய பின்னனியல்லாம் இல்லாத சாதாரண பையன்தான் நான், திரைத்துறையிலும் பெரிய அனுபவம் இல்ல... அப்டி இருக்கும்போது என்னோட கான்செப்ட்டை நான் சரியான நபர்கள்கிட்ட கொண்டுபோனேன், அவங்க கொஞ்சம் கூட யோசிக்காம நடிக்க சம்மதிச்சாங்க... அதுதான் என்னோட வாழ்க்கையின் திருப்புமுனைன்னு சொல்வேன்... அனுபமா, ஜெயபிரகாஷ், கிஷோர், ஸ்ரீரஞ்சனி எல்லாருமே மிகப்பெரிய ஈடுபாட்டோட நடிச்சிருப்பாங்க, அதை ஸ்க்ரீன்ல நீங்க நிச்சயம் பீல் பண்ணுவீங்க...

கேன்னாவே ‘அவனா நீ?ன்னு கேலி பேசுற தமிழ் திரையுலகில், இந்தப்படம் எப்படிப்பட்ட கதையோட வரப்போகுது?

சமபால் ஈர்ப்புகொண்ட இளைஞனுக்கும், அவனோட அம்மாவுக்கும் இடையில நடக்குற உணர்வுப்போராட்டம்தான் கதையோட கரு... அதான் டைட்டில்லையே சொல்லிட்டேனே... அதுமட்டுமில்லாம ஒரு கேவோட வாழ்க்கைல நடக்குற இன்பம், துன்பம், வலி, புறக்கணிப்பு, காதல்னு எல்லாமும் கலந்த ஒரு கதம்பமாத்தான் படம் இருக்கும்... கடைக்கோடி தமிழனுக்கும் இதுதான் கேன்னு புரிஞ்சுக்கக்கூடிய விதத்துல திரைக்கதையை தெளிவா அமைச்சிருக்கோம்...

ஒரு கே சப்ஜெக்ட் எடுக்கப்போறிங்கன்னு சொன்னதும் உங்க குடும்பம், நண்பர்கள்லாம் எப்டி ரியாக்ட் பண்ணாங்க?...

முதல் படமே இவ்ளோ ரிஸ்க் எடுக்கணுமா?ன்னு எல்லாரும் தயங்கினாங்க... நம்ம சொசைட்டிய நினைச்சு பயந்தாங்க... ஆனால், இதான் படம்னு நான் உடும்புப்பிடியா இருந்துட்டேன்.. நிறைய கஷ்டங்களை சந்திச்சேன்... அப்போலாம் அவங்கதான் எனக்கு சப்போர்ட்டாவும் இருந்தாங்க... ஒருகட்டத்துல எல்லாமே சரியா அமைஞ்சு, படம் நல்லவிதமா போறது தெரிஞ்சதும் என்னோட நலன்விரும்பிகள் அத்தனை பேரும் உற்சாகமாகிட்டாங்க...

குடும்பம், நண்பர்களே இப்டி முதல்ல தயங்கினப்போ, படத்துக்கான செலவின விஷயங்களை எப்டி சமாளிச்சிங்க?...

அதுக்கு ரொம்பவே சிரமப்பட்டேன்... கிட்டத்தட்ட நான்கு வருட போராட்டம்.. எவ்வளவோ தயாரிப்பாளரை பார்த்தும் பலனில்லை... க்ரவுட் பண்டிங் போல புதுவித முயற்சில்லாம் செஞ்சு பார்த்தும் தோல்விதான்... ஆனாலும் ஒருகட்டத்தில் எல்லாம் அதுவாவே அமஞ்சிது... முகம் தெரியாத பலர் பலவிதத்துல உதவினாங்க... பலரோட பேர் கூட தெரியாது... அந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்றைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்... இப்போ திரைப்படத்தை மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்னு வாங்கிருக்கு... அவங்க ஹிந்திலையும் டப் பண்ணி ரிலீஸ் பண்ணப்போறதா சொன்னாங்க... சென்சார் சான்றிதழ் கூடிய சீக்கிரம் கிடைச்சதும், திரையில் உங்க மகிழ்வன் வருவான்....

திரைத்துறையினர் இந்த முயற்சிய எப்டி பார்த்தாங்க?

பலதரப்பிலும் நல்ல ரெஸ்பான்ஸ்... சேரன் சார், மிஷ்கின் சார்னு பலர் இந்த முயற்சிக்காகவே பாராட்டினாங்க... ப்ரிவியூ ஷோ பார்த்தபிறகுதான் அவங்களோட முழு ரெஸ்பான்சும் தெரியும்...

தமிழ்நாட்டுல செயல்படுற பாலீர்ப்பு தொடர்பான அமைப்புகள் கிட்டருந்து எப்படிப்பட்ட ஆதரவு கிடைச்சுது?...

நியாயமா இந்த கேள்விக்கு “நோ கமெண்ட்ஸ்னுதான் பதில் சொல்லணும்... ஆனாலும், சில தனிப்பட்ட நபர்கள் நிறையவே உதவினாங்க... ஆனால், அமைப்புகள்னு சொல்றப்போ..... எப்போ அவங்களுக்குள்ள மலிந்திருக்கும் அரசியலை தாண்டி வராங்களோ, அப்போதான் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை பற்றி அவங்க யோசிக்கவே முடியும்...

சரி, கடைசியா எங்க சமபால் ஈர்ப்பு சமூக மக்களுக்கு என்ன சொல்லனும்னு நினைக்குறீங்க?...

சொல்ல நினைத்ததையல்லாம் படத்திலேயே சொல்லிட்டேன்... அவங்களோட வலிகள் இன்னும் நிறைய வெளியுலகுக்கு தெரியவரவே இல்ல... எத்தனையோ தற்கொலைகள் பாலீர்ப்பு புறக்கணிப்பு காரணத்தால நிகழ்ந்தாலும், அதை பொருட்படுத்தும் மனநிலையில் இந்த சமூகம் இல்லை... சட்டமும், சமூகமும் உங்களுக்கும், உங்க உணர்வுகளுக்கும் எதிரா இருந்தாலும் துணிவோட நீங்கதான் உங்க உரிமைக்காக குரல் கொடுக்கணும், போராடனும்... சீக்கிரமே இந்த அவலங்களுக்கு விடிவு கிடைக்கும்னு நம்பிக்கையை மட்டும் இழந்துடாதிங்க... 

நன்றி லோகேஷ்....

எங்கள் சமூக மக்களின் உணர்வுகளை முதல்முறையாக வெள்ளித்திரைக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கும் அன்பு நண்பர் லோகேஷ் அவர்களுக்கு உங்கள் விஜயின் நன்றிகள்!...

7 comments:

  1. Waiting for a movie , lokesh ur awesome, thanks for the movie

    ReplyDelete
  2. Very bold step ... keep it up.

    ReplyDelete
  3. Am very and after a very long time am came back here... Lokesh I alreadyseen in film festival... Now u r so admiring me... Vijay please write more this... All the best

    ReplyDelete
  4. Am very and after a very long time am came back here... Lokesh I alreadyseen in film festival... Now u r so admiring me... Vijay please write more this... All the best

    ReplyDelete
  5. Thanks for updating on this. Really looking forward to it especially coz its Tamil !

    ReplyDelete
  6. Am waiting for this movie sure i ll see

    ReplyDelete