Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday 28 December 2013

“1008 பிரச்சனைக்கு நடுவில் 377...” – கண்ணகி இளமலர்...

கஜராஹோ சிற்பக்காட்சி


11.12.13 அன்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தாக்கத்தில் நம் உரிமைகளுக்கான போராட்டம் ஒருபக்கம் வலுவடைந்து கொண்டு இருக்கிறது என்றாலும், நாட்டுநடப்பு ஏதும் அறியாமல் தேடி வந்த பாலின்ப நிறைவு கிடைத்தாலே போதும் என்று எண்ணும் ஒரு சிலரின் இடையே குழப்பத்துடன், தூக்கமின்றி, மகிழ்ச்சியின்றி, நிம்மதியின்றி உலா வரும் உயிர் ஆவிகளே பெரும்பான்மை என்பது மறுக்க முடியாத உண்மை…. ஓர்பால் ஈர்ப்பினர் மத்தியில் தற்கொலை எண்ணங்களை எளிதில் ஏற்படுத்தும் வலிமை கொண்ட  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை  எச்சரிக்க, ஆவிகளின் துணையை நாடுவது நமது கற்பனை கதைகளில் சாத்தியம் எனினும், நடைமுறையில் நம் சமூகத்தினரின் ஆவிகள் நீதிபதிகளை கேள்வி கேட்டார்களா? என்பது எவரும் அறியாத மர்மம்…. ஆவிகளைப்பற்றிய மர்மம் அல்ல, நிகழ்வுகளைப்பற்றிய மறைக்கப்பட்ட உண்மையும் மறுக்கப்பட்ட நீதியின் மர்மமும் தான் இந்த பதிவு….

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு சுமார் ஒரு மாதம் முன்னதாகவே சட்டத்தின் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தன் கடமையை செவ்வனே செய்தது…. ஆம், பிரிக்கப்பட்டது இராதா (வயது 20), இராணி (மாற்றப்பட்ட பெயர்கள்) இருவரின் காதல் மட்டுமல்ல  இராதாவின் உயிரும் தான்; எனினும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 இன் கீழ் அல்ல, Habeas corpus எனப்படும் ஆட்கொணர்வு ஆணையின் மேற்கோள் காட்டலின் துணையுடன் என்பது மேலும் அதிர்ச்சியூட்டும் மனித உரிமை மீறல்….

குழந்தைப் பருவத்திலிருந்து தோழிகளாக பழகி வந்த இராதாவும் இராணியும் தங்களின் ஓர்பாலீர்ப்பை உணர்ந்து, காதலை வெளிப்படுத்தி, வாழ்க்கைத்துணையாக வாழும் விருப்பத்தை பெற்றோர்களிடம் தெரிவித்தனர்…. வழக்கம் போல், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தங்கள் இல்லற வாழ்வை துவங்க முற்பட்டனர்…. இராதாவின் பெற்றோர் காணாமல் போன தங்களின் மகளை  கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது மட்டும் அல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தனர்…. 

இதை தொடர்ந்து திண்டுக்கல் அருகே காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இராணி சமேத இராதா நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்…. சட்டவிரோதமான கைதுகளிலிருந்தும், முறைக்கேடான கைப்பற்றல்களிலிருந்தும் தனி மனித விடுதலையை காக்க வேண்டிய ஆட்கொணர்வு மனு, 18 வயது நிரம்பிய இருவரை அவர் விருப்பமின்றி பெற்றோர்களிடம் ஒப்படைக்க துணை நிற்கும் அவலம் நம் நாட்டில் தான் அதிகம். தேவையற்ற நெறிமுறைகளை கடைபற்றிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காதலர்களை பிரித்து பெற்றோர்களுடன் வழி அனுப்பி வைக்க உத்தரவிட்டது…. காவல் துறையினர் மற்றும் பெற்றோரின் கடிந்துரைகளுக்கு உள்ளான இராதா  மனச்சோர்வுடன் "இந்த சமூகத்தில் நான் பட்ட அவமானம் போதும். என் உயிர் தோழியை நான் மறக்க முடியாது…. அதனால் இந்த உலகத்தை விட்டு நான் செல்கிறேன்" என்று தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு, தன் அறையில் தூக்கிலிட்டு உயிர் துறந்தார்….

இந்த செய்தியை தமிழ் ஊடகங்கள் பல வெளியிட முற்படவில்லை, வெளியிட்ட ஒரு சில நாளிதழ்களும் தங்கள் கற்பனை திறனில் ஆண்-பெண் காதல் திருமண முறிவின் தற்கொலை போன்ற கட்டுக்கதைகளை சித்தரித்தன…. அநீதியை களைய அவர்களின் எழுதுகோல்கள் ஒத்துழைக்கவில்லை…. ஒரு சில ஆங்கில நாளேடுகளும் பி.டி.ஐ (P.T.I) யின் முன்னவைக்கு இணங்கி இந்த நிகழ்வை செய்தியாக வெளியிட முயற்சித்தன…. இது போல் மாற்று பால்விருப்பு/பாலீர்ப்பு நிராகரிப்பினால் நிகழும் தற்கொலைகளின் உண்மை மறைக்கப்பட்டு பல்வேறு வண்ணங்களில் வெளிவந்த செய்திகள் ஏராளம் என்பது பலர் அறிந்ததே…. நிகழ்ந்தனவை அனைத்தும் வரலாற்று ஏடுகளில் இடம் பெற வேண்டும் என்பதற்கான பதிவல்ல இது; கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும்  இருந்து நாம் எதிர்காலம் நோக்கி செல்ல கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்பதன் சிந்தனைச் சீண்டலாக அமைந்தால் அதுவே மாற்றத்தின் முதல் படி....2013 ஜூலை மாதம், கேரளா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த சங்கமா மனித உரிமை பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தின் சட்டபூர்வ தலையீட்டால் சரண்யா (21), சுருதி (21) என்னும் இளம் பெண்கள் அவர்கள் விருப்பபடி பாதுகாப்புடன் வாழ நீதிமன்ற தீர்ப்பு உதவியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர்பாலீர்ப்பை குற்றமற்றது என்று அறிவித்து இருந்தால், ஒரு சில கொண்டாட்டங்களுடன் பல்வேறு பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டிருக்கும்.... “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுஎன்ற பழமொழி போல் புதன்கிழமை வெளிவந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல விடுபட்ட உரிமைகளைப் பெற சாத்தியங்களை வழி வகுத்துள்ளது என்றால் மிகை ஆகாது…. மேலே பதிவு செய்த நிகழ்வுடன் தொடர்புடைய சட்ட குளறுபடிகளை முதலில் நோக்குவோம்.... வீட்டை விட்டு வெளியேறும் 18 வயது நிரம்பிய பெண்கள் மீது ஆட்கொணர்வு மனுவை தொடுத்து பெற்றோருடனும் குடும்பத்தினருடனும் விருப்பமின்றி அனுப்பும் செயலை நீதிமன்றங்கள் தடை செய்ய வேண்டும்.... இது லெஸ்பியன் பெண்களுக்கான அடக்குமுறை மட்டும் அன்று குடும்பத்தினரின் எதிர்ப்பில் ஆண் பாலினரை மணக்க விரும்பும் பெண்ணையும் வீட்டில் அடக்கி ஆளும் முயற்சியாகும், ஆகவே இது பாலீர்ப்பு பாகுபாடின்றி பொது பெண்ணுரிமை பிரச்சனையாக பார்க்கப்படவேண்டும்....

ஓர்பாலீர்ப்பு கொண்ட பெண்களை ஒடுக்கி துன்புறுத்த .. 340: முறையின்றி தனிமைச் சிறைவைத்தல், ... 361: கவர்ந்து கடத்தல், .. 362: ஆள் கடத்தல், .. 366: வற்புறுத்தி திருமணத்திற்கு இணங்கவைத்தல் போன்ற அவதூறு வழக்குகள் அவ்வபொழுது உடன்பாடு இல்லாத பெற்றோர் மற்றும் உறவினர்களால் இரு பெண்களை கட்டாயப்படுத்தி பிரிக்க கையாளப்படுவதும் நிதர்சனம். பெரும்பான்மையான லெஸ்பியன் பெண்களை .. 377 இன் கீழ் தண்டிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, ஏனெனில் பாலுறுப்பு உட்செலுத்தலின் சாத்தியமின்மை என்ற  வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்.... இருப்பினும் நீதிமன்றம் சட்டங்களை பொருள் கொள்ளும் முறையும், காவல் துறையினரும் , உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சட்டங்களை நோக்கும் விதமும் முற்றிலும் மாறுபட்டது.... மக்களின் புரிதலின்மையால் ஏற்ப்படும் முன்முடிவு எய்திய ஓரவஞ்சனையின் காரணத்தால் ஓர்பால் ஈர்ப்பினர் ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்…. காவல் துறையினரால் கைது செய்யப்படுவதும் பொது மக்களால் இழிவும் கேளிக்கையும் செய்யப்படும் அபாயமும் உள்ளது…. ஆதலால் சட்டம் நம்மில் தனி ஒரு நபரையோ, தனி பிரிவினரையோ, ஒட்டு மொத்த பால்விருப்பு/பாலீர்ப்பு சிறுபான்மையினரையோ தண்டனைக்கு உட்படுத்தும் எனில் நாம் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்….

ஓர்பாலீர்ப்பு நவீன வாழ்க்கை முறையின் தொனிப்பிறழ்ச்சி  அல்ல, இயற்கையாகவே தோன்றுவது: அது காலம் காலமாக நம் பண்பாட்டில் இடம் பெற்றுள்ளது, இவற்றை இயற்கைக்கு முரண் என்று எதிர்க்கும் சட்டங்களே மேற்கத்திய இறக்குமதி ஆகும்…. பழமையை போற்றும் நாம் பழமையில் புதைந்த சில பெண்ணடிமை சிந்தனையையும் தகர்த்தால் மட்டுமே சம உரிமை என்பது நமக்கு கிடைக்கும்…. சிவபுராணத்தில் ஆண் கடவுளாக சித்தரிக்கப்படும் சிவனின் விந்துவை அக்னி உட்கொண்டதாகவும், பின்னர் கார்த்திகை பெண்மணிகளின் உதவியினால் கார்த்திகேயன் பிறந்ததையும் வளர்க்கப்பட்டதையும்  நம்புவோர், ஆண் துணையின்றி பெண்கள் தனித்து குழந்தை பெறுவதை தகாத பாவச் செயலாகவே கருதுகின்றனர்.... ஆண்களான நாரதரும் கிருஷ்ணரும் ஓர்பால் பாலுறவு கொண்டதனால் பெற்று எடுத்த 60 பிள்ளைகளின் பெயரை கொண்டே 60 ஆண்டு சுழற்சி முறை (1. பிரபவம் - 60. அட்சயம்) உருவாகியதாக பஞ்சாங்கங்கள் கூறுகிறது. இரு ஆண் கடவுள்களின் சங்கமத்தில் பிறந்த ஐயப்பனை நோன்பு கொண்டு  வழிபடும் பக்தர்களும், திருமாலின் பற்றால் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வார் பாசுரங்களுடன் மார்கழியை பின்பற்றுவோரும் ஓர்பாலீர்ப்பை எதிர்ப்பது தங்கள் நம்பிக்கையையே எதிர்க்கின்றனர் என்பது புலப்படும்.... மனுஸ்மிரிதி போன்ற ஏட்டு சுரைக்காய்கள் ஓர்பாலீர்ப்பை இயற்க்கைக்கு முரண் என்று எதிர்க்கவில்லை எனினும் ஓர்பால் உறவில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களையே அதிக தண்டனைகளுக்கு உள்ளாக்குவதாக குறிப்பிடுகிறது.... ஓர்பால் உறவில் ஈடுபடும் ஆணுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பத்திய உணவை உண்பதும், சாதி விலக்கலும் தண்டனைகளாம்  ஆனால் பெண்ணுக்கோ சவுக்கு அடி, பொருள் அபராதம், கழுதை மேல் ஏற்றி ஊர்வலம்  என்று நீளும் பட்டியல் ஆணாதிக்க கற்பனையில் சமத்துவமின்றி இயற்றப்பெற்றவை என்பதையே வலியுறுத்துகிறது....


          மதங்களும் ஓர்பாலீர்ப்பை குற்றமாக சித்தரித்து, மனித இனத்தின் அழிவுக்கான செயல் என்றே குறிப்பிடுகிறது. மனித இனத்தின் அழிவு அப்படி தான் நிகழ வேண்டும் என்று 4.5 பில்லியன் ஆண்டுகள் அகவையுடைய இந்த பூமிப்பந்தும் இயற்க்கையும் தீர்மானித்தால் அதை சில காலம் மட்டுமே வாழும் மனிதர்களாகிய நம்மால் மாற்ற இயலுமா ? அன்பையும் காதலையும் பால் பாகுபாடின்றி முறையான காமமாக, விருப்பமுள்ள இருவர்  பகிர்வது மனித இனத்தின் மற்றறொரு பரிணாம தொடர்ச்சி என்பதை ஏற்க மறுக்கும் மதங்களே அன்புடைமையை போற்றும் நெறிகளிலிருந்து முரண்படுகிறது. 
              
கண்மூடித்தனமான தண்டனைகள் சமயசார்பின்றி சமநிலையுடன் செயல்படவேண்டிய இந்திய மக்கள் ஆட்சி முறையில் சாத்தியமா என்பதை கலாச்சார சீர்தூக்கிகளாக இருக்கும் பலர் எதிர்முழக்கமிடும் முன் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்…. கஜராஹோ வின் கலை நயம் மிக்க தொன்மையான கட்டிட கட்டமைப்பு நம் பண்பாட்டின் உண்மை நிலையை தெளிவாக சிற்பங்களின் வழியாக உணர்த்துகிறது…. இயற்க்கைக்கு முரணான சிற்பங்களை பண்டைய மக்கள் புனிதமாக கருதும், நன்னெறிகளை பொழியும் இடமான கோவில்களில் ஏன் வடித்தனர்? பின் வரும் மரபினர் இயற்க்கையாக  தோன்றும் உணர்வுகளின் வெளிப்பாடு இனப்பெருக்கத்திற்கு உதவும் காம புணர்ச்சியை தாண்டி மனதை ஒருநிலைப்படுத்தும் ஓக நிலை என்பதை  அறிந்து கொள்ள அன்றி வேறு எதற்க்காக இருக்க முடியும்?

சட்டத்தை விட ஆற்றல் கொண்டது பொது மக்களின் பார்வையும் சமூக அங்கீகாரமும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.... இந்த நிலையை அடைய சிறுபான்மையினராகிய நாம் முதலில் நம்மை நாமே தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.... நமக்குள் இருக்கும் பேதங்கள் நாம் மற்றொருவரை வேற்றுமை படுத்துவதற்கு அல்ல, அடையாளப்படுத்தும் நோக்கமாக அமைய வேண்டும். நமக்கு எஞ்சி இருப்பது ஒரே வழி, கூடி நின்று குரல் கொடுத்து போராடுவது.... அதற்க்காக நீங்கள் பொது தளங்களில் போராட வேண்டும் என்பது பொருள் அல்ல, உங்களை ஓர்பாலீர்ப்பாளராக ஊருக்கே அறிவிக்கவும் அவசியமும் இல்லை.... 

     உங்களின்  நெருங்கிய வட்டத்தில் இந்த தலைப்பில் உரையாடல்களை தொடங்குங்கள்: மனிதர்களின் உயரம், தோல் நிறம், போன்றே பாலீர்ப்பு என்ற பண்பும் இயற்கையாக தோன்றும் பாலியல் வெளிப்பாடே (Alternative sexuality is a natural variation of human sexuality); இது உடலைத்தாண்டிய உணர்வு தழுவிய ஆக்கூறு; உண்மையான காதல் பால் பேதம் அற்றது; மனித உரிமைகளுள் காக்கப்படவேண்டியது என்ற புரிதலை ஏற்ப்படுத்தி கண்ணோட்டத்தை சீர்படுத்தினாலே போதுமானது…. 

              இந்த வாய்ப்பின் வழியாக நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தாரின்  எண்ணங்களில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே டெல்லியில் நடைபெற்ற அரசியல் புரட்சி போல் ஒரு பெரு மாற்றம் உருவாகும். மாற்றங்கள் "ஆம் ஆத்மி"யுடன் நின்றுவிடாமல்  "நாம் தொடருமி"ந்த சிறு செயல்களாலும் நிகழும்.... அந்த நாள் என்று வரும் என ஆவலுடன் அனைவரும் காத்துக்கொண்டு தான் இருக்கிறோம்…. அந்த நாள் வெகு விரைவில் விடியும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில் காத்துக்கொண்டே இருப்போம்….

அநீதிகளை களைய போராடும் 
கண்ணகி இளமலர்

மேற்கோள் இணைய முகவரி:

12 comments:

 1. Yes first of all public should change their views... And thanks to kannagi izhgamazhar and tks for vijay anna for such a gud post..

  ReplyDelete
 2. makkalin vaalkai, urimai, paathukaapu patriyellam kavalai padamal, kalacharathai patri kavalai pattu enna seiya pogirarklo!

  1948-m varusam chandralekha-nu oru padam vanthathu anna. antha padathula circus seen onnu varum. athula T.R.Rajakumari circus dressla, athavathu verum gown mattum potukitu, saal illama varuvaanga. athuke neraiya amaipukalum, makkalum meladai illanu ethirpu solli, padatha veli vida koodathunu thaduthaangalam.apram vasan romba poradi padatha veli vittaram. antha padatha veli naatulalam dupping panni veliyittangalam.

  aanal innaiku mela oru bra, keela oru jutty mattum potukittu aaduranga. kochaiya pesuranga! kalacharatha romba nalla kaapathuranga!

  namakum ithe mathiri oru vidiyal varumnu nambuvom friends!

  ReplyDelete
 3. @Deepan J நீங்கள் கூறுவது போல் திரையுலகில் பல புரட்சிகள் நடைபெற்றது உண்மை எனினும் நாம் கேட்பது நாகரீக வளர்ச்சியின் உரிமையோ பிற்காலத்தில் கொச்சை படுத்தப்படவேண்டும் என்கிற நிலையோ அன்று. மனிதர்களுள் ஏற்ப்படும் இயற்கையான உன்னதமான உணர்வுகளின் வெளிப்பாட்டை குற்றம் அற்றது என்றும், இயற்க்கைக்கு முரண் அல்ல என்னும் புரிதலை தான். எனவே தவறான உவமைகளை இங்கே கையாண்டு தெளிவு பெற விரும்புவோரை குழப்ப வேண்டாம். விடியல் என்னும் நம்பிக்கையில் தான் உலகின் ஒரு பாதி சுழல்கிறது. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

  ReplyDelete
 4. sorry. ippa ammal.a kochai paduthuravanga, nalaiku nammala purinjuppanganu solla vanthenga

  ReplyDelete
  Replies
  1. @ Deepan J ஆம், நீங்கள் சொல்ல வந்த கருத்து இப்பொழுது புரிகிறது! மக்கள் நம்மை புரிந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை, நம்மை புரியவைக்கும் முயற்சியில் நாம் நம்பிக்கையோடு உள்ள வரை!

   Delete
 5. pothu makal nambala pathi romba thappa ninikurathuku media vum press um oru mukiya karanam.............

  nanbargale nambikaiyoudu kathurupom namakana vidiyal vidiyum vari...........

  ReplyDelete
  Replies
  1. @Sridhar: நீங்கள் சொல்வது உண்மை தான். நம் ஊடகங்கள் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதை விட பரபரப்பான செய்தியை வெளியிட்டு தங்கள் விற்பனையையும், பார்வையாளர்களையும் அதிகரிப்பதிலே முனைப்பாக செயல்படுகின்றன. இருப்பினும் ஒரு சில தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் பாலியல் சிறுபான்மையினருக்கான ஆதரவு தெரிவித்து மக்களின் கண்ணோட்டத்தை விரிவுர செய்ததும் மாற்றத்தின் முதல் நிலை.

   Delete
 6. ஒவ்வொரு வார்த்தைகளும் சிந்திக்க வைக்கிறது...கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்...அதன் முலம் நிறைய தற்கொலை குறைய வேண்டும்...நீங்கள் சொல்வது போல் நம்மைப் பற்றி நாம் அறிய வேண்டும் ...கண்டிப்பாக மாற்றம் வரும்...

  ReplyDelete
 7. நன்றி samram! சிந்திக்க தொடங்குவதே முதல் மாற்றம். :)

  ReplyDelete