நேற்று (11.12.13) வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில் “சட்டப்பிரிவு 377ஐ நீக்கக்கூடாது” என்றும், அது “அதிகபட்சம் ஆயுள்தண்டனை கொடுக்கக்கூடிய
அளவிற்கான குற்றம்தான்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்... அதை அறிந்ததும் நான் கூட,
இனி நமக்கான உரிமைகள் அவ்வளவுதான் என்று கவலைப்பட்டேன்... ஆனால், சில விஷயங்களை
யோசித்துப்பார்க்கும்போது, இந்த தீர்ப்பு நமக்கான தோல்வி இல்லை என்றும்,
வெற்றிக்கான தொடக்கம் என்பதும் நமக்கு புரியும்..... ஒருவேளை தீர்ப்பு நமக்கு
சாதகமாக வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... அநேகமாக சில உற்சாக பார்ட்டிகளோடு,
சமுதாய உரிமை என்பது கிடப்பில் போடப்பட்டிருக்கும்... ஆனால், தீர்ப்பின் தோல்வி
மூலம் இன்றைக்கு இது இந்தியா முழுவதும் பேசப்படும், விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக
ஆகிவிட்டது....
தீர்ப்பு வெளியான நிமிடம் முதல் இப்போதுவரை நம் சமூகத்து
நண்பர்களின் கோபங்களை, ஆற்றாமைகளை என்னால் உணரமுடிகிறது... குறைந்தபட்சம் நமக்கான
உரிமைகளின் அவசியத்தையாவது அவர்கள் இப்போதுதான் புரிந்துகொண்டுள்ளார்கள்.... கடந்த
24மணி நேரமாக நம் தமிழக
ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது இந்த செய்திதான் (வட இந்திய ஊடகங்கள் இன்னும்
அதிகமான சிரத்தை எடுத்துள்ளன என்பதையும் நான் மறுக்கவில்லை).... குறிப்பாக தந்தி
தொலைக்காட்சி, சன் நியூஸ் போன்ற ஊடகங்கள் இதை ஒரு விவாதப்பொருளாக ஒவ்வொரு தமிழக
வீட்டிற்கும் கொண்டு சேர்த்தது.... பலதரப்பட்ட சமூக ஆர்வலர்களும் இந்த
தீர்ப்பிற்கு எதிரான தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்... இதன்மூலம் ஒருபால் ஈர்ப்பை
பற்றிய ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிற்கும் இந்த தீர்ப்பு
கொண்டு சேர்த்தது என்பதுதான் உண்மை..
நேற்று மாலை சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த
“வானவில் கூட்டமைப்பு” போராட்டத்தில், ஏறத்தாழ நூறு பேர் கலந்துகொண்டு குரல் கொடுத்தது,
இதுவரை நம் தமிழகம் சந்தித்திடாத ஒரு புது நிகழ்வு....
அமெரிக்காவின் ஸ்டோன்வால் கிளர்ச்சி பற்றி உங்களுக்கு
தெரிந்திருக்கலாம்... ஒரு சாதாரண மதுபான அரங்கில் தொடங்கிய ஒரு போராட்டம்தான்,
நாளடைவில் ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளிலும் நம் உரிமையை கொண்டுசேர்த்தது....
நிச்சயம் இத்தகைய போராட்டங்கள் அப்படி ஒரு எதிர்கால ஆக்கங்களை கொண்டுசேர்க்கும்
என்பதில் எனக்கு ஐயமில்லை....
இப்போதுதான் தமிழக அளவில் தீப்பொறி பறக்க தொடங்கியுள்ளது,
அதை குறையாமல் காட்டுத்தீ ஆக்குவது நம் கையில்தான் இருக்கிறது...
377ஐ நீக்க தேவையில்லை....
சட்டப்பிரிவு 377ஐ நீக்குவதில் சில பிரச்சினைகள் இருப்பதை உச்சநீதிமன்றமே
குறிப்பிட்டுள்ளது.... அதற்கு காரணம், ஓரினசேர்க்கை மட்டுமல்லாது, அந்த
சட்டப்பிரிவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் புணர்ச்சிகளும், விலங்குகளுடனான
புணர்ச்சியும் குற்றமே என்று இருக்கிறது... இத்தகைய நிலைமையில் நாம் சொல்வதை போல
அந்த சட்டப்பிரிவை நீக்கினால், நிச்சயம் அது குழந்தைகளின் மீதான பாலியல்
வன்புணர்ச்சியையும் காப்பாற்றுவதை போல ஆகிவிடும்... அதனால், நமக்கான தேவை என்பது
சட்டப்பிரிவில் திருத்தம் மட்டுமே.....
வேறுவழிகளும் இருக்கிறது....
உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஒட்டுமொத்த உரிமையும்
பறிக்கப்படுவதாக நினைக்கவேண்டாம்... மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு நமக்கு
இருக்கிறது... டெல்லி உயர்நீதிமன்றத்தில் நமக்கு ஆதரவான தீர்ப்பு வருவதற்கு முன்பு
ஒருமுறை, அதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.... மீண்டும் மேல்முறையீடு செய்துதான்
நமக்கான வெற்றி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சாத்தியம் ஆனது.... NAZ foundation அமைப்பின்
அஞ்சலி கோபாலன் அவர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக
அறிவித்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்... அதனால், நிச்சயம் நமக்கான உரிமை கிடைக்க
இன்னும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்பதை உணர்வோம்....
அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை
காட்டவேண்டும்...
நான் கீழே குறிப்பிட்டுள்ள சில கருத்துக்கணிப்புகளில்
உங்களது வாக்கினை அளியுங்கள்... நிச்சயம் அதில் நமக்கான பலத்தை அரசியல் கட்சிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும் நாம் காட்டமுடியும்... நேற்று பேசிய முன்னாள் மத்திய
அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூட, “அவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது.... " என்று கூறினார்.... இப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களும், மத்திய அமைச்சர் கபில் சிபல் அவர்களும், "ஓரினசேர்க்கையாளர்களின் உரிமையை பறிக்கக்கூடாது.... நாடாளுமன்றத்தில் அவர்களின் உரிமையை மீட்க முயற்சி செய்வோம்" என்று கூறியிருப்பது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய ஆதரவான கருத்துகள்.... இதன்மூலம் காங்கிரஸ் கட்சி நமக்கு ஆதரவான மனநிலையில் இருப்பது அறியமுடிகிறது... அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் நம் உரிமை வெல்ல வேண்டுமானால், பெரும்பான்மைக்கு மற்ற கட்சிகளின் ஆதரவும் தேவை.... அதனால், அரசியல்
கட்சிகளுக்கு நம் பலத்தை காட்டிட நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.... நிச்சயம்
இந்த சட்டப்பிரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசப்படும்போது, நம் பலம் பார்த்து
அரசியல்கட்சிகள் நமக்கு ஆதரவான நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் எடுக்க
வாய்ப்பிருக்கிறது....
சட்டத்தில் குழப்பம் இருக்கிறது....
இந்த சட்டப்பிரிவில் மேலும் சில குழப்பங்கள் இருக்கிறது...
அதாவது 377ஆவது சட்டப்படி வாய்வழி
புணர்ச்சி கூட குற்றம்தான்... இதன்மூலம் ஆணும் பெண்ணும் கூட வாய்வழி புணர்ச்சியில்
ஈடுபட்டால் அது குற்றம்... இது ஒருபால் ஈர்ப்பினரை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த
இந்தியர்களின் பாலியல் உரிமைக்கும் எதிரானது.... உலக சுகாதார நிறுவனமான WHO
கூறும்போது, “sexual rights is a human rights” என்று கூறுகிறது... ஒரு மனிதனின் பாலியல் உரிமைகளில் சட்டம் தலையிடுவது
என்பதுகூட, மனித உரிமை மீறல்தான் என்கிறது... ஆகையால் நிறைய குழப்பங்கள் நிறைந்த
இந்த சட்டப்பிரிவை மருத்துவ, அறிவியல் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்ய
வேண்டும்....
அறிவியலும், எச்.ஐ.வியும்....
American Psychiatric Association அமைப்பு 1970களில் ஒருபால் ஈர்ப்பு மனநோய் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக
அறிவித்துவிட்டது.... பல ஆய்வுகள் கூட இது பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட மரபணு
சார்ந்த விஷயம் என்று உறுதி செய்துள்ளது... எய்ட்ஸ் நோய்க்கும் ஓரினசேர்க்கைக்கும்
எவ்விதமான நேரடி தொடர்பும் இல்லை என்று நிறைய ஆய்வுகள் கூறுகிறது... எச்.ஐ.வி
பாதிக்கப்பட்ட ஆண் ஆணுடன் புணர்ந்தாலும், பெண்ணுடன் புணர்ந்தாலும் எயிட்ஸ்
பரவும்... மனிதர்களை போல அந்த கிருமிகளுக்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது என்பதை
உணரவேண்டும்... அமெரிக்காவில் கூட 1990களில் நிலவிய இந்த
குழப்பத்தின் விளைவாக எயிட்ஸ் நோயை “gay disease” என்றழைத்த
காலம் கூட உண்டு... ஆனால், இப்போதைக்கு எல்லாம் உணர்ந்த அந்த நாட்டினரும், அரசும்
உண்மையை உணர்ந்து ஒருபால் ஈர்ப்பை ஏற்றுக்கொண்டுவிட்டனர்.... இன்னும் நாம் மட்டும்
அந்த பழைய பொய்யை பிடித்துக்கொண்டு தொங்குவது சரியாக இருக்குமா? என்பதை சிந்தித்து
பாருங்கள்.... மேலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் வெறும் இருபது லட்சம் என்று வாதம் தீர்ப்பில் வைக்கப்பட்டுள்ளது.... எந்த வகையில் இப்படி முடிவுசெய்தார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை... எப்போது இதற்கான கணக்கெடுப்பு நடத்தினார்கள்? என்பதும் அவர்களுக்கே வெளிச்சம்... நான் ஒரு ஓரினச்சேர்க்கை நபர் என்பது இன்னும் என் வீட்டிற்கே தெரியாத நிலையில், இந்த அரசுக்கு எப்படி இது தெரிய வந்தது? என்பது ஆச்சரியம்தான்.... முதலில் கணக்கெடுப்பு நடத்துங்கள், பிறகு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபர்களை பற்றிய கணக்கெடுப்பும் எடுங்கள், பிறகு உண்மையை நீங்களே உணர்வீர்கள்....
கலாச்சார விரும்பிகளே....
நிச்சயம் இந்த சட்டத்தால் நீங்கள் நினைப்பதை போல கலாச்சார
சீரழிவுகள் நடந்திடாது... இன்னும் சொல்லப்போனால், ஒருபால் ஈர்ப்பு திருமணங்களுக்கு
கூட இந்த சட்டத்துடன் நேரடி தொடர்பு கிடையாது... ஓரினசேர்க்கையை குற்றமில்லை என்று
சொல்வதால், குறைந்தபட்சம் எங்கள் சமூகத்து இளைஞர்களின் மீது பிரயோகிக்கப்படும்
வன்முறைகளையாவது நாங்கள் தடுக்க முடியும் என்பதுதான் எங்கள் கோரிக்கை... அண்ணல்
காந்தியடிகள், நெல்சன் மண்டேலா அவர்கள், போப் அவர்கள் உட்பட பல கடவுளுக்கு நிகரான
மனிதர்களும் கூட, எங்களின் உரிமைகளுக்கான தங்கள் கருத்துகளை கூறுகின்றனர்... ஒரு
படுக்கை அறைக்குள்தான் இதுநாள்வரை உங்களின் கலாச்சாரத்தை பதுக்கி
வைத்திருக்கிறீர்களா? என்பது எனக்கு புரியவில்லை... எத்தனையோ இளைஞர்களின் உயிரை
பறித்துதான் உங்கள் கலாச்சார கட்டமைப்பை நீங்கள் பலப்படுத்த வேண்டும் என்றால்,
இன்னும் தொடர்ந்து கலாச்சாரம் காக்க போராடுங்கள்....
அமைப்புகளே ஒன்றுபடுக!....
ஒருபால் ஈர்ப்பு அமைப்புகளே, உரிமைகளுக்காக குரல்
கொடுக்கும் சமூக அமைப்புகளே, எல்லோரும் ஒன்றாக இணைந்து நின்று எங்களுக்காக குரல்
கொடுங்கள்... உங்கள் அரசியல்களை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றாக போராடவேண்டிய
தருணம் இது... மாடுகளாக பிரிந்து நின்று, சட்டம் என்னும் சிங்கத்திடம் எங்களை
பழிகொடுத்து விடாதீர்கள்.... இப்படிப்பட்ட தருணம் இனி வாய்க்குமா? என்பது எனக்கு
தெரியவில்லை... அமைந்த இந்த வாய்ப்பினை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ள
வேண்டுகிறோம்!....
தொடர்ந்து எங்கள் உரிமைகளுக்காக
குரல்கொடுக்கும் ஊடக நண்பர்களே, சமூக ஆர்வலர்களே, அரசியல் பிரமுகர்களே, சட்ட
வல்லுனர்களே, அமைப்பினரே உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!
கடைசியாக கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன்
உதயகுமார் அவர்களின் வரிகளோடு, இந்த கட்டுரையை நிறைவுசெய்கிறேன்....
“உச்ச நீதிமன்றமா, உச்சா நீதிமன்றமா?
உடல் பற்றியும், உறவு பற்றியுமெல்லாம்
தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்?
அடுத்து வருவது என்ன?
எந்தெந்த வகை உடலுறவுகள்
இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன
என்று பட்டியல் வெளியிடுவார்களோ?
மக்களின் படுக்கை அறைகளுக்குள்
பாய் போட்டு படுக்க நினைக்காமல்
பாழாய்ப் போன உங்கள் நீதி-பாதி
வேலைகளைப் பாருங்கள் அநீதிமான்களே!”....
உடல் பற்றியும், உறவு பற்றியுமெல்லாம்
தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்?
அடுத்து வருவது என்ன?
எந்தெந்த வகை உடலுறவுகள்
இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன
என்று பட்டியல் வெளியிடுவார்களோ?
மக்களின் படுக்கை அறைகளுக்குள்
பாய் போட்டு படுக்க நினைக்காமல்
பாழாய்ப் போன உங்கள் நீதி-பாதி
வேலைகளைப் பாருங்கள் அநீதிமான்களே!”....
I m so happy to hear tis... And bollywood works towards samesex.. many celebrities oppose the supreme court judgement.. so i didnt loss my confidence but only bollywood supports wat abt kollywood nd tollywood...?? Andi hope media will protest abt tis...
ReplyDeleteAnd viki anna nammanala edhavadhu idhula help panna mudiyuma..?? pls sollunga i m ready to contribute..we should do something...
ReplyDeleteகருத்துக்கு ரொம்ப நன்றி தம்பி.... இப்போதைக்கு போராட்டக்களத்திற்கு அப்படிப்பட்ட பங்களிப்புகள் தேவையில்லை தம்பி.... உங்கள் உவந்த மனதிற்கு நன்றி...
Deleteஊக்கம் அளிக்கும் ஒரு பதிவு. மனம் தளராமல் செயல்படும் தருணம் இதுவே.
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா... நீங்கள் கொடுத்த சில தகவல்களை வைத்தும்தான் இந்த கட்டுரை எழுதப்பட்டது, அதற்கும் நன்றிகள்...
DeleteAnna naan antha poll um vote panniten and i have signed that petition also anna!!! Nammala mudinjatha namma elarum nichayam seivom!!
ReplyDeleteரொம்ப நன்றி தம்பி.... நம்மால் முடிந்தவைகளை இப்படி செய்வதில் நிச்சயம் ஒரு மாற்றம் வரலாம்...
Deleteநல்ல பதிவு.என்னால் இருண்டு வரி ச்டடுஸ் டிபே பண்ணவே ,யோசிக்கும் மூளை .நீங்கள் தொடர்ந்து -அதுவும் வேலை பளு விற்கு நடுவே எழுதுவது .அனைவரையும் உற்சாகம் ஊட்டுகிறது .சின்ன வேண்டுகோள் -ஏற்கனவே
ReplyDelete,பலர் உங்களிடம் கேட்டு இருக்கலாம் .நானும் கேட்கிறேன் ."ஓரினசேர்க்கை" இந்த வார்த்தைக்கு பதிலாக "சமபால் ஈர்புடையவர்கள் " என்று குறிப்பிட வேண்டுகிறேன் .
அன்புடன் -செந்தில்
மிக்க நன்றி செந்தில்.... உங்கள் கருத்து எனக்கு புரியுது நண்பா... அந்த குறிப்பிட்ட "ஓரினசேர்க்கை" வார்த்தையை சட்டம் தொடர்பாக எழுதப்படும் கட்டுரையில் மட்டும்தான் இப்போது பயன்படுத்துறேன்... மற்றபடி பொதுவாக நான் "ஒருபால் ஈர்ப்பு" என்கிற வார்த்தையைத்தான் பயன்படுத்துறேன்.... "செக்ஸ்" என்ற பொருள்படும்படியான இடங்களில் எனக்கு "ஒருபால் ஈர்ப்பு" என்ற வார்த்தையை பயன்படுத்த உடன்பாடு இல்லை நண்பா.... அதனால்தான் இந்த வார்த்தை முரண்...
Deleteபுதிய தலைமுறையில் “ஓரினசேர்க்கை குற்றமே உச்சநீதிமன்றம் தீர்ப்பு” என்று செய்தி படித்ததும் முதலில் எனக்கு இது குறித்து விஜய் என்ன எழுதுவார்ன்னு தான் எண்ணம். நான் என்ன நெனச்சேனோ அதுதான் நீங்களும் எழுதிருகிங்க.... இதுவரை யாருமறியாமல் சந்து பொந்துகளிலும், கடற்கரை வெளிகளிலும், தனிமை நிரம்பிய வீடுகளிலும், லாட்ஜ் ரூம்களிலும் இருந்த விஷயம் இன்று இந்திய வீடுகளின் வரவேற்பறையில் விவாதிக்க படுவதற்கு இந்த தீர்ப்பு உதவியிருக்கிறது... “கே” அமைப்புகள் என்று பெயர் வைத்து கொண்டு பார்ட்டி வைத்து கூட்டி கொடுக்கும் சில அமைப்புகள் மேல்முறையீட்டு மனுக்களில் தங்களையும் இணைத்துகொண்டு நீதிமன்ற படியேறி வாதாடினால் நமக்குரிய நீதி வெகு தொலைவில் இல்லை... இந்திய அரசியலில் இறங்குமுகத்தில் இருக்கும் காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் பட்சத்தில் உணர்வை மறைத்து வாழும் நம் சகோதர சகோதரிகளின் ஆதரவு மூலமே மீண்டும் ஏறுமுகம் காணும் என்பதை அறியாதவர் இல்லை இத்தாலி பெண்மணி.. “விளக்கை யார்பிடித்தால் என்ன வெளிச்சம் வந்தால் சரிதான். அதே சமயம் உயர்த்தி பிடிக்கப்படும் விளக்கு கூரையை எரிக்காமல் இருக்க வேண்டும்..”
ReplyDeleteஉங்க எதிர்பார்ப்பை நான் வீனாக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.... உங்கள் கருத்துகளுக்கு ரொம்ப நன்றி நண்பா....
Delete