Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Saturday 14 December 2013

"இந்தியா ஏன் ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்...?" - ஆழமான காரணங்கள்....


“இடது கை பழக்கம் உடையவர்களுக்கு இனி ஆயுள்தண்டனை...”, “இரட்டை குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவிக்கும் தாய்களுக்கு இனி ஐந்து வருட சிறை தண்டனை...” இப்படிப்பட்ட சட்டங்கள் நம் நாட்டில் போடப்பட்டிருந்தால், நீங்களெல்லாம் என்ன செய்திருப்பீர்கள்?... இந்நேரம் கொதித்தெழுந்து, “இது என்ன முட்டாள்த்தனமான சட்டம்?... இதெல்லாம் அந்த நபர்கள் தெரிந்தா செய்கிறார்கள்?... இயற்கையின் படைப்புகளை சட்டம் போட்டு தடுக்க இவர்கள் யார்?”னு உங்க மனங்களில் நிச்சயம் கோபம் உண்டாகியிருக்கும்...
அப்போ ஏன் “ஒருபால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றம்”னு நீதிமன்றம் அறிவித்தபோது, அதை மட்டும் நீங்க “அடடே!.... அருமையான தீர்ப்பு...”னு ஆமோதிக்குறீங்க?....
“வலது கை பழக்கம் உடையவர்கள் பெரும்பான்மை நபர்கள் என்பதால, இடது கை பழக்கத்தை எப்டி குற்றம் சொல்ல முடியும்?... ஒரு குழந்தை பிரசுவிக்கும் தாய்கள் பெரும்பான்மை என்பதால, இரட்டை குழந்தைகளை ஈன்றெடுக்கும் தாய்களை குற்றவாளிகளாக எப்படி கருத முடியும்?”னு நீங்க என்னை பார்த்து கேட்கும் கேள்வி நியாயமானதென்றால், நான் கேட்கும் இந்த கேள்வியின் நியாயத்தையும் கொஞ்சம் உணருங்கள்... “எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் பெரும்பான்மை என்பதால் ஒருபால் ஈர்ப்புள்ள நபர்களை எப்படி குற்றவாளியாக்க முடியும்?”....
இதை மனநோய் என்று மார்தட்டும் புண்ணியவான்களே, American Psychiatric Association அமைப்பு ஒருபால் ஈர்ப்பை மனநோய்கள் பட்டியலிலிருந்து 1970களிலேயே நீக்கிவிட்டது என்பதை நாற்பது வருடங்களாக இன்னுமா நீங்கள் அறியவில்லை?....
(இந்த இணைப்பில் ஒருபால் ஈர்ப்பு மனநோய் இல்லை என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.... http://www.psychiatry.org/lgbt-sexual-orientation )
இதை ஒரு பழக்கவழக்கமாக நினைக்கும் பழமைவாதிகளே, ஒருபால் ஈர்ப்புக்கு காரணம் மரபணு சார்ந்த விஷயங்கள் என்பதை ஆய்வுகள் ஏறத்தாழ உறுதி செய்துள்ளது (http://en.wikipedia.org/wiki/Biology_and_sexual_orientation )...
விடுதிகள், சிறைச்சாலைகள், முகாம்கள் போன்ற ஒருபாலினத்தவர் மட்டும் வாழும் இடங்களில், ஓரினச்சேர்க்கை அதிகம் நிகழ்வதாக நினைக்கும் மக்களே, முதலில் நீங்கள் MSM (Men Sex With Men) என்பதற்கும், ஒருபால் ஈர்ப்புக்கும் உள்ள வேறுபாட்டை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.... சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு ஆணுடன் உறவு கொள்ளும் எல்லா ஆணும் ஒருபால் ஈர்ப்பு நபர் கிடையாது... http://envijay.blogspot.in/2013/02/blog-post_8.html
மேற்கத்திய நாடுகளின் கலாச்சார சீர்கேடாக இதை நினைக்கும் கலாச்சார காவலர்களே, மெட்ராஸ் தாண்டி ஊர்களே இல்லை என்று நினைக்கும் எங்கள் ஊர் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட இந்த ஒருபால் ஈர்ப்பு இருக்கிறதே, அவர்கள் எங்கு போய் இந்த மேற்குலக கலாச்சாரத்தை கற்று வந்தார்கள்?...
இயற்கையாக விலங்குகளுக்கு கூட இந்த ஒருபால் ஈர்ப்பு பழக்கம் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளார்களே, அப்படியானால் அதுவும் மேற்குலக விலங்குகளின் தாக்கம் என்பீர்களோ?... http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals
“ஆணையும் பெண்ணையும் ஆண்டவன் படைத்ததே இனப்பெருக்கத்திற்குதான்... குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒருபால் ஈர்ப்பு உறவு இயற்கைக்கு புறம்பானது”னு உங்கள் முக்கிய வாதம் இருக்கலாம்... இந்த சட்டம் நீக்கப்பட்டு, ஒருபால் ஈர்ப்பு நபர்கள் திருமணம் செய்து வாழும் நிலைவந்தால் இந்த உலகம் அடுத்த தலைமுறையை இழந்துவிடுமா என்ன?... இருக்கும் மக்கள் தொகையில் வெறும் 15% மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் மனித இனமே அழிந்துவிடும் என்பதை போன்ற ஒரு பிம்பத்தை ஏன் உருவாக்குகிறீர்கள்?... நாங்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒருபால் ஈர்ப்பு நபர்களாக நிறைக்க சொல்லவில்லை, இருக்கும் சிறுபான்மை மக்களான எங்களுக்கு அந்த உரிமை கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.... “இனப்பெருக்கத்திற்கு துணை செய்யாத இல்லறம் இயற்கைக்கு முரணானது” என்பது உங்கள் கருத்தானால், “குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத, விரும்பாத ஆண் பெண் எதிர்பால் தம்பதிகளையும் உங்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குவீர்களா?... அவர்களையும் தண்டனைக்கு உரிய மக்களாக பாவிப்பீர்களா?”.... இனப்பெருக்கம் என்பது இல்லறத்தின் ஒரு பகுதிதானே தவிர, ஒட்டுமொத்தமாக இல்லறத்திர்கான குடும்பத்திற்கான லைசன்ஸ் இல்லை.... உலகமே மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறும்போது, இனப்பெருக்கம் எல்லா இடத்திலும் நடந்தே தீரவேண்டும் என்பதுதான் இயற்கைக்கு புறம்பான வாதம்....  மக்கள் தொகை எல்லை மீறி போய்விடக்கூடாது என்பதனால் தான் கடவுளே, ஒருபால் ஈர்ப்பை குறிப்பிட்ட மனிதனுக்கு பிறக்கும்போதே தீர்மானித்துவிடுகிறான்... அந்த கடவுளின், இயற்கையின் படைப்பில் இருக்கும் நியாயத்தை கூட உணராமல், இன்னும் எங்களை எதிர்பால் உறவுக்குள் திணிப்பது தான் நியாயமா?...
எயிட்ஸ் நோய்க்கு காரணம் ஒருபால் ஈர்ப்புதான் என்று ஓலமிடும் ஒழுக்க சீடர்களே, இரண்டிற்கும் எவ்விதமான நேரடி தொடர்பு ஒன்றுமில்லை என்பதை, பால்வினை நோய் மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.... எச்.ஐ.வி கிருமிக்கு நம்மை போல ஆண் பெண் பேதம் கிடையாது... நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவனிடம், புணரும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நிச்சயம் அவரையும் நோய் தாக்கும் என்பதை புரியாத நபர்களா நீங்கள்?.... (http://www.rense.com/general73/homphn.htm )

சட்டம் போடும் நீங்களே ஒரு ஆய்வை எடுங்கள்... எயிட்ஸ் பாதிக்கப்பட்ட நபர்களை முதலில் கணக்கெடுங்கள், அவர்களுள் எத்தனை பேர் ஒருபால் ஈர்ப்பினர் என்பதை குறிப்பெடுங்கள்... நிச்சயம் அந்த ஆய்வு எங்கள் மீது பூசப்பட்ட “எச்.ஐ.வி” சாயத்தை போக்கும் முடிவுகளை உங்களுக்கு தெரிவிக்கும்....
அதுமட்டுமல்லாமல், ஒருபால் ஈர்ப்பினர் என்றால் ஏதோ சில லட்சத்தில் இருக்கும், சிறுபான்மையினருள் சிறுபான்மை மக்களாக நினைக்க வேண்டாம்... அரசுகள் குறிப்பிடும் சில லட்சங்கள் என்பது தங்களை வெளிப்படுத்திக்கொண்ட ஒருபால் ஈர்ப்பு மக்களை மட்டும்தான்... இன்னும் என்னைப்போல தங்களை வெளியுலகிற்கு வெளிப்படுத்திடாத கோடிக்கணக்கான மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.... நிச்சயம் மொத்த மக்கள் தொகையில் என்னை போன்ற நபர்கள் 12 – 18% பேர் இருப்பார்கள் என்பதை சில சாம்பிள் கணக்கெடுப்புகள் மூலம் உணரமுடிகிறது....
இவற்றையெல்லாம் உணர்ந்துதான் மேற்குலக நாடுகள் பலவும் எங்களுக்கு எதிரான சட்டங்களை நீக்கி, எங்களுக்கு ஆதரவான சட்டங்களை புகுத்தியுள்ளது...
நம் இந்தியர்களும் இது புரியாமல் இல்லை, ஆனாலும் மறுக்க ஒரு காரணம் இருக்கிறது... அது “மதம்”... “ஒருபால் ஈர்ப்பு சரியா? தவறா?”னு வாதம் எழும்போதெல்லாம், நம்ம ஆட்கள் முதலில் மதத்தை பிடித்துக்கொண்டு பேசத்தான் விரும்புகிறார்கள்... சட்டம் என்பது அறிவியல் பூர்வமான முடிவுகளை கொண்டு மாற்றப்படனுமா? அல்லது, மதம் சார்ந்து இயங்கனுமா?... இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு’ன்னு பாடப்புத்தகங்களில் படித்ததோடு வேறு எங்கும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை...
இப்போதும் எங்களுக்கு ஆதரவான மக்கள், “ஐயப்பன், விநாயகர், முருகன்...” போன்று கடவுள்களின் பிறப்பையும், வேறு சில ஆதாரங்களையும் கொண்டு எங்களுக்கு ஆதரவாக இந்து மதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை சொல்கிறார்கள்... எனக்கு அவற்றில் உடன்பாடில்லை, இந்த விஷயத்தை அரசும் சட்டமும் மதம் கடந்து, அறிவியல் பார்வையோடு அணுகவேண்டும் என்பதுதான் என் விருப்பம்... மதம் சார்ந்துதான் முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக மனு தர்மத்தையும், வேதங்களையும் மட்டுமே நாம் நமக்கான சட்டங்களை நிர்மாணிக்க வேண்டும்...
மனிதனால்தான் மதம் கண்டுபிடிக்கப்பட்டது.... ஆதி மனிதன் தான் பயந்த விஷயங்களை கடவுளாக வணங்க தொடங்கினான், அதற்கு பிறகுதான் மதங்களை உருவாக்கினான்... அந்த வகையில் பார்த்தால் ஒருபால் ஈர்ப்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது, இன்னும் சொல்லப்போனால் மனிதன் கடவுளை கண்டுபிடிக்கும் முன்பே, அவனுக்குள் பாலீர்ப்பு என்கிற விஷயம் பதியப்பட்டுவிட்டது.... அதனால், தயவுசெய்து இனியும் மதங்களை துணைக்கு அழைத்துக்கொண்டு, எங்களை பலியிடாதீர்கள்... நான் வணங்கும் கடவுளை பூஜை அறையில் வணங்கத்தான் நான் விரும்புறேன், படுக்கை அறை வரை அவர்களை சாட்சிக்கு அழைக்க நான் விரும்பவில்லை...
அடுத்ததாக இந்திய கலாச்சாரம் பற்றி கொதிக்கிறார்கள் கலாச்சார, பண்பாட்டு காவலர்கள்... எது இந்திய கலாச்சாரம்?.... நெடுங்காலமாக ஒரு விஷயம் பின்பற்றப்பட்டு வந்தால், அது நம் கலாச்சாரம் ஆகிவிடுமா?...
அப்படிப்பார்த்தால், கணவன் இறக்கும்போது மனைவியையும் உடன்கட்டை ஏறசெய்து கொன்ற “சதி”யும் இந்திய கலாச்சாரம் தான், பருவம் அடையும் முன்பே குழந்தைகளை திருமண பந்தத்திற்குள் தள்ளிய “குழந்தை திருமணம்” இந்திய கலாச்சாரம் தான், ஒரு குறிப்பிட்ட இனத்து பெண்களுக்கு பொட்டு கட்டி சட்டப்படி பாலியல் தொழிலுக்கு நிற்பந்தப்படுத்திய “தேவதாசி” முறையும் இந்திய கலாச்சாரம் தான், பெண்களை ஆண்களின் அந்தப்புரத்தை அலங்கரிக்க பயன்படுத்திய “அந்தப்புரம்” விஷயம் கூட நம் கலாச்சாரம் தான்...
இவற்றையெல்லாம் ஒரு காலத்தில் தவறென்று உணர்ந்து நாம் முற்போக்குவாதிகளாக மாறவில்லையா?... இவற்றை நம் வழக்கங்களிலிருந்து நீக்கியபோது “நம் கலாச்சாரம் பறிபோகிறது!” என்று ஏன் நீங்கள் கூப்பாடு போடவில்லை....
இன்றைக்கு ராஜாராம் மோகன் ராயும், அன்னை முத்துலட்சுமி ரெட்டியும், தந்தை பெரியாரும் போல இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க எங்களுக்கான ஒரு ஆள் இல்லை என்பதை தவிர, அத்தகைய கொடுமைகளுக்கும் எங்கள் மீதாக சட்டப்படி நீங்கள் பிரயோகிக்கும் இந்த கொடுமைக்கும் பெரிய வேறுபாடு இல்லை...
நாங்கள் வானத்திலிருந்து குதித்த வேற்று மனிதர்கள் இல்லை, மங்கள்யானில் கொண்டுவரப்பட்ட செவ்வாய் கிரக வாசியும் இல்லை... உங்களை போன்ற மக்களுக்கு இடையில் எங்கள் உணர்வுகளை மறைத்து வாழும் உங்களை போன்ற சாதாரண இந்திய பிரஜை தான்....
“ஓரினச்சேர்க்கை தப்புதான்...”னு நீங்க சொல்லும்போது, அதை தலையாட்டி ஆமோதித்து மனதிற்குள் வருந்தும் உங்கள் பிள்ளை ஒரு ஒருபால் ஈர்ப்பு நபராக இருக்கலாம்... “நீதிமன்றம் சரியாத்தான் சொல்லுது... நம்ம கலாச்சாரப்படி இதல்லாம் சரியா வராது!” ன்னு சொல்லும்போது, அதை ஒரு அச்சத்துடன் எதிர்கொண்டு, உதட்டளவில் மட்டும் சிரிக்கும் உங்கள் உயிர் நண்பன் “ஒருபால் ஈர்ப்பு”நபராக இருக்கலாம்...
“காதல் தோல்வியால் கல்லூரி மாணவன் தற்கொலை..., கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு...., குடும்ப பிரச்சினையால் இளம்பெண் விஷம் குடித்து மரணம்...” என்று உங்கள் அக்கம் பக்கங்களில் நிகழும் நிகழ்வுகளுக்கும், நாளிதழ்களில் கடக்கும் செய்திகளுக்கும் பின்னணியின் பலநேரங்களில் இந்த ஒருபால் ஈர்ப்பு காரணங்களாக இருக்கக்கூடும்.... http://en.wikipedia.org/wiki/Suicide_among_LGBT_youth  
எங்களுக்கு நீங்கள் முக்கியத்துவமோ, பிரதிநித்துவவோ கொடுக்க தேவையில்லை... உங்களை போன்ற சகஜமான மனிதர்கள்தான் நாங்களும் என்று உணர்ந்து, உங்களை போல எங்களுக்கும் ஒரு இயல்பான வாழ்க்கையைத்தான் கேட்கிறோம்.... அச்சமின்றி வாழ நாங்கள் ஆசைப்படுகிறோம்...
ஒரு விஷயத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்... ஒருவேளை இந்த உலகம் “ஒருபால் ஈர்ப்பு நபர்களை” பெரும்பான்மையினராக கொண்டிருந்து, உங்களை போன்ற எதிர்பால் ஈர்ப்புள்ள நபர்களுக்கு இப்படி உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தால் உங்கள் மனம் எப்படி கொதித்திருக்கும்?... ஒரு ஆணை இன்னொரு ஆண் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று உங்களை கட்டாயப்படுத்தி இருந்தால், உங்கள் நிலைமை எப்படி ஆகியிருக்கும்?... நீங்கள் கற்பனை செய்யவே அஞ்சிடும் ஒரு வாழ்க்கையை எங்கள் மக்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள், இனி வரும் தலைமுறையாவது நித்தமும் மரணிக்கும் அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, விருப்பப்பட்டு வாழும் வாழ்க்கையை வாழ தயவு செய்து வழிவிடுங்கள்...
பொதுமக்களே, அரசே, அரசியல்வாதிகளே, சட்ட வல்லுனர்களே, சமூக ஆர்வலர்களே, ஊடக துறை அன்பர்களே உங்கள் அனைவரையும் நான் மன்றாடி கேட்பது ஒன்றுதான், “எங்களை வாழ விடுங்கள்!”....
உங்கள் பாதங்களில் பணிந்து நான் கேட்பதும் அதுதான், “எங்களை இனியாவது வாழவிடுங்கள்...!”

17 comments:

 1. நானும் ஆரம்பத்தில் ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறான ஒரு விடயம் என்று தான் நினைத்தேன்.ஆனால் மருத்துவபீடத்தில் genetics படிக்கும் போது தான் அது மரபணு சாரந்த விடயம் என்று தெரிந்துகொண்டேன்.ஆனால் இப்போதும் கூட ஓரினச்.சேர்க்கை என்பது எனக்கு ஒரு வித்தியாசமான விடயமாகவே தென்படுகின்றது.காரணம் என்னால் புரிந்து கொள்ளமுடியாத,நான் ஒருபோதும் உணராத உணர்வு அது.எது எப்படியிருப்பினும் நிச்சயமாக ஓரினச் சேர்க்கையாளர்களின் உணர்வுகளும் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டியவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது.ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் சிறுபான்மையினரின் உணர்வுகளையும் உரிமைகள் மறுக்கப்படும் போது ஏற்படும் வேதனையையும் என்னால் நன்றாகவே உணர முடியும்.அந்தவகையில் இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிக முட்டாளத்தனமானதும் அராஜகமானதும் என்பது என் கருத்து.ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு குறிப்பாக ஆண்களுக்கு HIV,Hep.A தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் ஏனையோரை விட அதிகம் என்றாலும் எயிட்ஸ் நோயாளருள் 80%இற்கும் அதிகமானோர் எதிர்ப்பால் ஆர்வமுடையவர்களே.ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் "நவீன கணணியியலின் தந்தை" என்று போற்றப்படும் அலன் டியூரிங்கை அவமதித்து தற்கொலை செய்ய வைத்தது போன்ற அவலச் சம்பவங்கள் இனி மேலும் நடைபெறக் கூடாது என்பது தான் என் விருப்பமும் கூட

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி தினேஷ்.... உங்களை போன்ற சிலர் எங்களுக்காக குரல் கொடுப்பது நிச்சயம் மனநிறைவாகவே இருக்கிறது....

   Delete
 2. நன்றி விஜய். மிகவும் அருமையான பதிவு. வெறுப்பை மட்டுமே வினாக்களாக உமிழும் ஹோமோபோபிக் நபர்களுக்கு தக்க பதிலளித்தது மெத்த மகிழ்ச்சி. எனினும் உங்கள் எழுத்துக்கள் தொட்டி பட்டியையும் அடைந்து மக்களின் எண்ணம் மாற வேண்டுமெனில், மக்கள் அதிகம் வாசிக்கும் நாளேடுகளையும் தொலைக்காட்ச்சி, வானொலி போன்ற ஊடகங்களையும் அடைய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி நண்பா.... நிறைவான கருத்துகளால் மகிழ்ச்சி....

   Delete
 3. @ Dineshsanth.S :) உங்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் கூறுவது போல் அறிவியல் தொலைநோக்குடன் மக்கள் எங்களை புரிந்துகொள்ளாவிடிலும் மனித நேய அடிப்படையில் மண்ணில் உயிர் வாழும் சக மனிதர்களை மதிப்பார்களாயின் அதுவே போதுமானது.

  ReplyDelete
 4. romba emotional ah eludhirukinga.. And i hope seekirame ellarum idha purunjukuvanga..

  ReplyDelete
 5. நல்ல விஷயங்கள் நடக்கும் விஜய்...நீங்கள் ஏற்கனேவே சொல்லிருப்பது போல் நம்மை எதிர்வாதம் செய்கிறார்கள் என்றாலே மனதில் அந்த சிந்தனை வந்துவிட்டது என்று தானே அர்த்தம்...தங்கள் வீட்டில் அது போல் நடக்கும் போது இனி ஆணுடன் வாழ சம்மதிக்கிறார்களோ இல்லையோ கண்டிப்பாக பெண்ணுடன் வாழ வற்புறத்த மாட்டார்கள்...அந்த மாற்றம் சில இடங்களில் தெரிகிறது விஜய்...கொஞ்சம் கொஞ்சமாக மாறுவார்கள்...இப்போ நம்முடைய நிலை ஒரு படி மேல வர வேண்டுமானால்...நிறையவே சாதிக்க வேண்டும் பின்னர் என் வெற்றிக்குப் பின்னால் என்னவன் இருந்தான்னு இருவரும் சொல்லும்போது யாரும் மறுக்க முடியாத நிலை வரும்...அதற்கு உதாரணமாக திகழ்பவர்கள் திருநங்கைகள் நர்த்தகி நடராஜன் -சக்தி நடன மேடைகளில் பிரபலம்...அதரவாக இருவருக்கும் யாரும் இல்லாமல் இன்று சாதித்து கொண்டு இருக்கிறார்கள்...நீங்கள் சொன்ன எழுதிய கருத்தை வைத்து என்னை போன்றோர் தாழ்வு மனப்பான்மை நீங்குகிறது விஜய்...அதை இன்னும் அதிக படுத்துங்கள்...நிறைய பேர் வீரியதுடன் எழுவார்கள்...அப்பொழுது பெண்ணுடன் திருமண கட்டாயம் குறையும்...நாம் தனியாக வாழ அனுமதி கிடைக்கும்...நீங்கள் சொல்வதைப்போல் சூழ்நிலையால் திருமணம் செய்தவர்கள் தானே பெற்றோர் ஆக இருப்பார்கள்...தன பிள்ளைகள் உணர்வை புரிந்து நடப்பார்கள்...ஆனால் இப்பொழுது நம் கடமை நம்மவர்கள் தெருக்களில் நாலு பேர் தெரிய அசிங்கமாக நடப்பதை தடுக்க வேண்டும்...I heart frm a idiot in train" நான் கை வேலை செய்யறதை நிறுத்திட்டேன் அதான் பொட்டைக நிறைய இருக்கே ஜிப்பை தொறந்தா வந்து.............."புரியும்னு நினைக்கிறேன்...எதோ கேவலமான வஸ்துவை போல் நாம் இருக்க கூடாது விஜய்...மனதைரியம் இல்லாமல் குற்ற உணர்வில் வாழ்வை கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...உங்கள் கதைகளின் முலம் தைரியம் கொடுங்கள்...அப்புறம் பாருங்கள் இவர்கள் யார் நம்மை மறுப்பது...உங்களின் இந்த ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது...வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துகள் மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கு சாம்.... மிக்க நன்றி....

   Delete
 6. Exactly, but the govt, all those opponents have the view is that "being gay = having sex with men" This should be changed with the idea that " being gay = having love and affection towards another man, and therefore having sex with men" I dont know when people like viko will change their attitude towards "What is meant by being gay ?"

  Also, I Think even the the gay activists are focused on "right for having sex with men" > This again gives the opponent a view that "being gay means a certain kind of habit that makes one to have sex with men".

  It is not Germany or Switzerland, when a law is changed you put up in the notice board and people will see it and start following from that day onwards. No, in India everything should get blended into the culture, everything should made as a movement, as some one said, it should be made as a civil rights movement, it should touch people's heart. Socially, people should realise that "being gay is much more than anal sex"

  We should create a strong cultural background for this. people always need this ! Lets hope the best bhaiyya !! "

  ReplyDelete
  Replies
  1. இது உடலுக்கான உரிமை அல்ல, உணர்வுக்கான உரிமை என்பதை நிச்சயம் மக்கள் புரிந்துகொள்வார்கள் தம்பி.... மிக்க நன்றி...

   Delete
 7. But What the hell Ambedkar did rather than just copying things from the british laws ? Did he really work for it ? Well, there is nothing wrong in removing his statues. God save him.

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை அம்பேத்கர் இந்நேரம் இருந்திருந்தால், நிச்சயம் இந்த சட்டத்தை நீக்க சொல்லியிருப்பார்.... ஒடுக்கப்பட்டவர்களின் வலி நிச்சயம் அவருக்கு மட்டுமே புரிந்திருக்கும்....

   Delete
 8. saataiyala adichathu mathiri sullunu solliteenga. aanal sattam satchiyaiyum, santharpathaiyum pakuthu. neethipathiyum mathavathiya irukuranga. arasum kalacharatha kaapathuratha solluthu. otu vanganumla.

  namma urimaiyilum arasiyal irukuthu!

  ReplyDelete
 9. Romba Nalla post na.. Dineshshanth, kannagi, samram, rockingraj star, deepan ellaroda commentsum boost-up pannadhu.. Samram trainla ketta mathari nanum asingama pesuradha nerula 2 thadaivai ketruken.. facebook, other social sitesla asingama post, comment pandratha romba romba pathuruken.. Ellam kadanthu pogum..

  ReplyDelete
 10. Well said vijay. A salute to you Dineshanth. I have had heard similar things in public places about gays as samram mentioned. It's hurting. even the so called top guys thinks bottom guys are for their pleasure, what a shame!!! Sati, women exploitation, devadasi, slavery, infant marriages all took its own time to heal. Our problems also will take sometime to heal!!! Let's hope for that to happen soon...

  ReplyDelete