Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 24 December 2013

"WAKE UP 377..." - சிறுகதை....

    
ழ்ந்த உறக்கத்திலிருந்த மதியழகனை அலைபேசி ஒலி சற்றே கலவரத்துடன் எழுப்பியது... நேரம் சரியாக நள்ளிரவு ஒரு மணி, அலைபேசி திரையில் “கணேஷ்” பெயர் பளிச்சிட்டது.... “இந்த நேரத்திற்கு கணேஷ் எதற்காக அழைக்குறான்?” குழப்பத்தில் கொட்டாவி விட்டபடியே எழுந்து அமர்ந்து, அலைபேசியை காதில் வைத்தார்....
“என்ன கணேஷ் இந்த நேரத்துல?” தூக்கக்கலக்கம் வார்த்தைகளில் வெளிப்பட்டது....
“சாரி சார்... தூங்கிட்டிங்களா?... நான் தொந்தரவு பண்ணிட்டேனோ?” பவ்யமாக பேசினார் கணேஷ்....
“இது என்னய்யா கேள்வி?... இதை கேட்கத்தான் இந்த நேரத்துல போன் பண்ணியா?... என்ன விஷயம்னு முதல்ல சொல்லுப்பா....” சம்பிரதாய கேள்விகளை எப்போதும் போல இப்போதும் தவிர்த்துவிட்டார் மதி...
“சாரி சார்... இன்னிக்கு தீர்ப்பு சொன்னிங்கல்ல, ரெண்டு பசங்களுக்கு.... அதுல ஒரு பையன் ஜெயில்ல தற்கொலை பண்ணிகிட்டானாம்...”
“என்னது?... எந்த கேஸ்?... ஓஹ்!.. அந்த 377ஆ?... அஞ்சு வருஷம்தானே கொடுத்தேன்... அந்த பசங்களா?... அதுல எந்த பையன்”
“ஆமா சார், அதுல ஒருத்தன் தான்... உயரமா, செவப்பா காண்ணாடி போட்டிருப்பானே, மதன் அவன் பேரு.... அவன்தான் இறந்தது... அந்த செக்ஷன்’ல உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வந்த முதல் தீர்ப்பு இது... அதனால மீடியா இதுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திட்டாங்க, இப்டி டெத் நடந்துட்டதால உங்களையும் எதாச்சும் இம்சை பண்ணுவாங்க... அதனால கொஞ்சம் சேப்டியா இருங்க சார்....”
“சரி கணேஷ்... எப்டி அவன் தற்கொலை பண்ணிட்டான்?... அவ்ளோ கேர்லசா இருந்துட்டாங்களா போலிஸ்?”
“தெரியல சார்... பிளேடால கழுத்து நரம்பை அறுத்துட்டானாம்... ரொம்ப கோரமா இருந்ததா எஸ்.ஐ சொன்னார்... உங்களுக்கு போலிஸ் ப்ரொடக்ஷன் கொடுக்க சொல்லி எஸ்.பி ஆபீஸ்லேந்து ஜி.ஓ வந்திருக்காம்...”
“ஓகே கணேஷ்,... நான் பார்த்துக்கறேன்... மேற்கொண்டு தகவல் எதுவும்னா எனக்கு கால் பண்ணு...” அழைப்பை துண்டித்த மதியழகனின் முகமெல்லாம் வியர்த்துவிட்டது... அவருடைய பதினான்கு ஆண்டு நீதிபதி வாழ்க்கையில், இப்படி தீர்ப்பு சொன்ன அதே நாளில், குற்றவாளி ஒருவன் தற்கொலை செய்துகொள்வதென்பது இதுதான் முதல் முறை... “நீதிபதிகள் கடுமையான தீர்ப்புகள் கொடுத்தபிறகு, பேனாவின் முனையை உடைப்பது வழக்கம்... நான் அப்படி செய்வதில்லை, அந்த அளவிற்கு ஒரு தண்டனையை ஒரு முறைக்கு, நூறு முறை யோசித்தபின்பே கொடுப்பேன்” விகடனில் ஒருமுறை மதியழகனின் பேட்டி இப்படித்தான் வெளியானது, இப்போது நிகழ்ந்த இந்த நிகழ்வால் தன் “நேர்மை” இமேஜுக்கு எதுவும் பங்கம் வருமோ? என்பதில்தான் அவர் இன்னும் அதிக கவலை கொள்ள தொடங்கினார்...
மெல்ல எழுந்து ஹாலுக்கு சென்று, குளிர்சாதன பெட்டியிலிருந்து தண்ணீரை எடுத்தார்... வாயில் ஊற்றிய அந்த தண்ணீரில் பெரும்பகுதி, உடலை நனைத்து தரையில்தான் வழிந்தது... அப்போதுதான் தன் கைகள் நடுங்குவதை உணர்ந்து, தனக்குள் நடக்கும் புதுவித மாற்றங்களை உணர்ந்தார்... தண்ணீர் பாட்டிலை அருகில் வைத்துவிட்டு, மெல்ல அறையை நோக்கி திரும்பும்போது ஹாலின் ஒரு இருக்கையில் யாரோ அமர்ந்திருப்பதை போல உணர்ந்து, திடுக்கிட்டார்...
ஏதோ உருவம் ஒன்று அமர்ந்திருக்கிறது, ஆனால் அதன் தெளிவான தோற்றம் கண்களுக்கு புலப்படவில்லை... சத்தம் போட முனைந்தும் முடியாமல் தொண்டையை அடைத்தது, கால்கள் தரையோடு சேர்த்து பிணைக்கப்பட்டதை போல நகர முடியாமல் ஒட்டிக்கொண்டது... தன்னை சுற்றி என்ன நடக்கிறது? என்பதை புரியாமல் தவிக்க, அந்த உருவம் மெல்ல தன் தோற்றத்தை வெளிக்காட்டியது...
அது அவங்க ரெண்டு பேர்ல ஒருத்தனேதான்!... சிவப்பாக, உயரமாக கண்ணாடி அணிந்திருக்கும் அவனேதான்... காலையில் தான் தண்டனை கொடுக்கப்பட்டு, சற்றுமுன்பு இறந்ததாக “கணேஷ்” சொன்ன அந்த இளைஞன்தான்... பெயர் நினைவில்லை, வழக்கு மட்டும் நினைவில் இருக்கிறது.... “ஐபிசி 377, 5 வருடம் சிறை” ஆம்!... அவனேதான்... வழக்கு நடந்த இரண்டு வருடங்களும் பெரும்பாலும் இறுக்கமான முகத்துடனே காணப்பட்டவன் முகத்தில், முதல் முறையாக சிரிப்பு... கழுத்தில் ஏதோ காயம், அதிலிருந்து ரத்தம் சொட்டு சொட்டாக வடியத்தொடங்கியது...
“பதறாதிங்க நீதிபதி சார்... உங்களுக்கு ஏற்கனவே பீபி இருக்கு... ஒரு முறை மைல்ட் அட்டாக் கூட வந்திருக்கு, இந்த நேரத்துல உங்க பதற்றம் உங்களுக்குத்தான் ஆபத்து...”
“நீ.... நீ எப்டி?... இறந்துட்டதா.... என்னைப்பத்தி உனக்கு?....” குறிப்பிட்ட வார்த்தைகளோடு தொண்டை அடைக்க, எச்சிலை விழுங்கியபடியே பேச முயன்று தோற்றார் மதி...
“பொறுமை... பொறுமை சார்.... நான் மனுஷன் இல்ல, ஆவி... நான் இறந்து அரை மணி நேரம் ஆகுது... ஆவிகள்’கிட்ட லாஜிக் பாக்காதிங்க, எங்களுக்கு எல்லாம் தெரியும் சார்...” மிகத்தெளிவாக வார்த்தைகள் முத்தைப்போல வெளிப்பட்டது, பேசும்போதுகூட அவன் முகத்தின் சிரிப்பில் கொஞ்சமும் மாற்றமில்லை...
“உனக்கு இப்ப என்ன வேணும்?... என்னை பழிவாங்க போறியா?...” கொஞ்சம் நிதானித்து பேசத்தொடங்கினார்...
“பழிவாங்கவா?.... ஹ ஹ ஹா.... உங்க சட்டம் மாதிரி, எங்க சட்டத்துல பழிக்கு பழி கிடையாது சார்... கொலை பண்ண குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுப்பீங்க, அப்போ சட்டம் பண்ற கொலைக்கு யார் தண்டனை கொடுப்பாங்க?... ஆவிகள் பீனல் கோட் படி, நாங்க யாரையும் பழிவாங்க மாட்டோம்.... ஹ ஹ ஹா....”
“அப்போ எதுக்கு இங்க வந்த?... ஏன் இப்டி வந்து பயமுறுத்துற?... நான் என்ன தப்பு பண்ணேன்?”
“அதை கேட்கத்தான் சார் நான் இங்க வந்தேன்.... நான் என்ன தப்பு பண்ணேன்?” மதன் முகம் வாடியபடி கேட்டான்....
“செக்ஷன் 377ன்படி இயற்கைக்கு முரணான ஓரினச்சேர்க்கை’ல ஈடுபட்டதால உனக்கு தண்டனை கொடுத்தேன்... ஆயுள் தண்டனை கொடுக்கக்கூடிய அளவுக்கான அந்த தண்டனைக்கு, நான் அஞ்சு வருஷம் கொடுத்ததே பலர் விவாதிக்குற விஷயமா ஆகிடுச்சு....”
“ஒருபால் ஈர்ப்பு தவறா சார்?”
“அப்டிதான் சட்டம் சொல்லுது....”
“நானும் கூட யாரையும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபடலையே சார்... ஒரு ஆணோட சம்மதத்தோட படுக்கையை பகிர்ந்துகிட்டது எப்டி சார் என் தப்பாகும்?... அதுவும் யாரோ ஒரு ஆண் இல்லை அவன், ஆறு வருஷம் பழகின காதலன்... அதுக்குத்தான் அஞ்சு வருஷம் தண்டனையா சார்?”
“இங்க சம்மதங்கள் முக்கியமில்ல, சட்டப்படி அந்த சேர்க்கைதான் குற்றம்....” மதியழகன் வாதத்திறமையை ஆவியுடனும் காட்ட தவறவில்லை....
“நீங்கல்லாம் அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் போன்றவற்றில் இருக்குற நியாயத்தைவிட, சட்டம், சமூகம், அரசியல் இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பிங்க!... சட்டப்படி தற்கொலை கூட குற்றம்தான், அதுக்காக மேலும் அஞ்சு வருஷம் எனக்கு தண்டனை கொடுத்திடாதிங்க.... ஹ ஹ ஹா...”
“இதுக்கு போய் ஏன் தற்கொலை பண்ணின?... அஞ்சு வருஷம் தானே?... அப்புறம் நீ நிம்மதியா வாழலாமே?” அக்கறை கலந்த வார்த்தைகளில் வினவினார் மதி....
“நிம்மதியாவா?... எப்டி சார்?... பிடிக்கலைன்னாலும் யாரோ ஒரு பொண்ணை கட்டிட்டு வாழணுமா?... எல்லாம் முடிஞ்சு போச்சு சார்... எனக்கும் நிறைய கனவுகள் இருந்துச்சு, அதனால வாழணும்னு ஆசை இருந்துச்சு.... யு.பி.எஸ்.ஸி எக்ஸாம் பாஸ் பண்ணியிருந்தப்போ என் மேல வழக்கு போட்டாங்க, அத்தோட என்னோட ஐ.ஏ.எஸ் கனவு மறைஞ்சு போச்சு... கேஸ் நடந்த இரண்டு வருஷமும் கொஞ்சம் கொஞ்சமா என்னோட நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் என்னைவிட்டு விலகிட்டாங்க.... பெத்த கடனுக்காக அப்பா மட்டும் தீர்ப்பை கேட்க வந்தார், வக்கிலுக்கு பணம் கொடுத்ததோட அவரும் போய்ட்டார்... இதெல்லாத்தையும் விட, யாருக்காக இவ்வளவையும் தாங்கிட்டு இவ்வளவு நாளா வாழ்ந்தேனோ, அவனே என்னைய வெறுக்க ஆரமிச்சுட்டான் சார்... அவன் ஜெயிலுக்கு போனதுக்கும், நான்தான் காரணமாம்... அவங்க குடும்பமே என்னைய சபிச்சுது.... யார்கூட வாழ்க்கை முழுக்க ஒண்ணா வாழணும்னு நினைச்சேனோ, அவனை ரெண்டு வருஷமா ஒன்னாவே கூண்டுல நிக்க வச்சது மட்டும்தான் இந்த வழக்கால எனக்கு கிடச்ச ஒரே ஆறுதல்.... இனி இழக்க ஒன்னுமில்லைன்னுதான், உயிரையும் இழந்தேன் சார்... ஒரு மனுஷனோட உயிரை மட்டும் வச்சுட்டு, மொத்தத்தையும் பிடுங்கனும்னா அவங்க மேல போடவேண்டிய சட்டப்பிரிவு சார் இந்த 377…” சொல்லி முடிக்கும்போது அவன் கண்ணீரும், ரத்தத்தோடு கலந்தபடியே தரையை நோக்கி வழிந்தது....
மதியழகனும் வாதம் மறந்து, ஸ்தம்பித்து நின்றார்....
“என்னால ஒன்னும் பண்ண முடியல தம்பி, சட்டம் சொல்றபடிதான் என்னால செயல்பட முடியும்....” இயலாமையோடு பேசினார்....
“நல்லவேளை சார்... உங்க பையன் மூணு வருஷத்துக்கு முன்னாடியே தற்கொலை பண்ணிட்டான்....”
“என் பையனா?... அவனை எப்டி உனக்கு தெரியும்?....” பதறினார் மதி...
“பொறுமையா இருங்க சார்... நான்தான் சொன்னேன்ல, ஆவிகள் கிட்ட லாஜிக் பாக்காதிங்கன்னு.... அவன் ஏன் இறந்தான்னு உங்களுக்கு தெரியுமா?”
“எக்ஸாம்’ல பெயில் ஆனதால.... அதுதானே காரணம்?.... சொல்லுப்பா....” மதியின் கண்களில் நீர் நிரம்பி வழியத்தொடங்கியது....
“அவன் இறந்ததும் நல்லதுதான் சார், இல்லைன்னா அவனையும் சட்டம்ங்குற பேர்ல கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை செஞ்சு கொன்னிருப்பாங்க.... ஹ ஹ ஹா....” சிரிப்பு சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும் அந்த நொடியில், மதியழகனின் கால்கள் தரையிலிருந்து விடுபட்டது, தடுமாறி சுவற்றில் சாய்ந்தார்... சுவற்றின் மீது மாட்டியிருந்த அவர் மகனின் புகைப்படம் சரிந்து அவர் மீது விழுந்தது...
திடுக்கிட்டு விழித்தார்.... அறைக்குள் படுத்திருக்கிறார், அருகில் மனைவியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.... “அடச்ச!... கனவா?.... ஆண்டவா...!” மெல்ல எழுந்து பூஜை அறைக்குள் சென்று திருநீறை எடுத்து நெற்றியில் நிரப்பினார்... அப்போதுதான் ஹாலில் மாட்டியிருந்த மகனின் புகைப்படம் கீழே விழுந்து, அதில் மாட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையின் மணிகள் சிதறிக்கிடப்பதை கவனித்தார்.....
ஓடி சென்று அதை சரி செய்தபோதுதான் மெல்ல திரும்பி ஹாலை நோட்டமிட்டார்.... குளிர்சாதனப்பெட்டியின் அருகே தண்ணீர் பாட்டில் திறந்து கிடக்க, தண்ணீர் தரையில் ஆறாக பாய்ந்திருக்கிறது.... குறிப்பிட்ட அந்த இருக்கையின் அருகில் சென்றார், யாரையும் காணவில்லை.... இருக்கையின் அருகே சிந்தப்பட்டிருந்த சிவப்பு மையை உற்றுநோக்கிய சமயம், அவர் அலைபேசி திடீரென அலறியது..... திரையில், “கணேஷ்” பெயர் பளிச்சிட்டது... நேரம் சரியாக ஒன்றென கடிகாரம் மணி அடித்தது.... (முற்றும்)

19 comments:

  1. Very nice story vicky, the concept was very natural and very simple wordings.
    its very true vicky. in future it might be happen. who knows wat going to happen???????????

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.... இப்படியும் கூட நடக்க வாய்ப்பிருக்குதான் நண்பா...

      Delete
  2. Nice Post Wish you all the best by http://wintvindia.com/

    ReplyDelete
    Replies
    1. வின் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு எனது மனமுவந்த நன்றிகள் பல.... உங்களை போன்ற ஊடகத்தினர் தான் எங்கள் வலிகளை வெளியுலகத்திற்கு கொண்டு சேர்க்க முடியும்... செய்வீர்கள் என நம்பிக்கையுடன்... உங்கள் விஜய்,,,

      Delete
  3. அருமையான படைப்பு...இந்த தீர்ப்பில் செக்ஸ் தாண்டிய உணர்வை அவர்கள் தெரிந்து கொள்ள நினைக்கவில்லை அது தான் ஏன் என்று புரியவில்லை...அதை நன்றாக சொல்லிருக்கிங்க...எதோ செக்ஸ்க்கு license கேட்பதாகவே இந்த விஷயம் திசை திருப்ப படுகிறது...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சாம், நமக்கான உரிமைகளை பற்றி இன்னும் முழுமையாக பொதுத்தள மக்கள் அறியவில்லை.... உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பா...

      Delete
  4. superb story.. Nice narration...

    ReplyDelete
  5. ஆவிகள் கிட்ட லாஜிக் பாக்காதிங்க! லாஜிக் இல்லாமல் தீர்ப்பு கொடுத்த நீதிபதி மதியழகனின் மதிக்கும் மனதுக்கும் நடக்கும் போரின் கற்பனை வடிவமாய் வலம் வந்த மதனின் ஆவி லாஜிக்கான பாத்திரம்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி தோழி.... லாஜிக் இல்லாத ஆவி கதை என்றால்லும், கொஞ்சம் லாஜிக்கோடு எழுத முயன்றேன்.....

      Delete
  6. nice vijay... really hard to think , if it happens true? oh god please help us in this concern..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலா....
      கடவுள் நிச்சயம் நம் பக்கம் நிற்பார் நண்பா...

      Delete
  7. nice story , back to the future or Forward to the Past

    ReplyDelete
  8. இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட சகமனிதனின் உணர்வை த்ர்லோட சொல்லியிருக்கங்க விக்கி. கடந்த சில நாட்களாகவே 377 பற்றி திணசரி நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வந்த வண்ணம் உள்ளன. இந்த தீர்ப்பு நமக்கு எதிராயிருந்தாலும், எல்லா மக்களும் இதைப்பற்றி விவாதிக்கிறாங்க. இதைப்பற்றி எண் நண்பர்களிடம் எப்போதும் பேசதயங்கிய எனக்கு,
    எண் நண்பர்களே இதைப்பத்தி பேசிய போது ஓர்பாலிருப்ப பத்தின எனக்கு தெரிந்த தகவலை முதல்முறையா பகிர்ந்து கொண்டேன். இந்த வார இந்திய டுடேயில் 377பற்றி கட்டுரைப் படித்தேன். 377 ஓரினசேர்க்கைக்கு மட்டும் எதிரானதல்ல, வாய்வளியாகவும்,ஆசனவாய்வளியாக உறவு கொள்ளும் கணவன் மனைவியையும் இந்த சட்டம் தண்டிக்கும், ஆணுறுப்பு பெண்ணுறுப்பு வளியாகவே உறவுயிருக்க வேண்டும் என்றியிருந்தது.
    இந்த சட்டத்தின் முலம் ஆயகலை 64யையும் எப்படி கையால முடியும். இந்த சட்டம் வந்தால் எல்லாவித மக்களுக்கும் ஆபத்துதான். ஏதோ ஒரு பெரிய மாற்றம் வரும். அதில் நமக்குரிய நியாயமான உரிமைகள் கிடைக்கும்ணு நம்புவோம் விக்கி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பா... இந்த தீர்ப்பு நிறைய குழப்பங்களை சமூகத்தில் உருவாக்கியுள்ளது... ஆனால், அதற்காக கலங்க வேண்டாம்... குழம்பினால்தான் தெளிவும் பிறக்கும்...

      Delete
  9. super anna. unga kobatha romba azaga storyla sollirukeenga. judgeku mathiyazaganu per vachathu storyoda logic mathiri irukuthu anna. storyoda end super.

    ReplyDelete
  10. Story konjam trickey irruku 2 times padichu than purinjukiten super story narration, with a message..................

    ReplyDelete
    Replies
    1. இரண்டு முறை படிச்சாதான் புரிஞ்சுதா?... சில இடங்களில் கொஞ்சம் கவனம் தேவைப்படும் அளவிற்கு கதை நகர்வதால் அப்படி ஆகியிருக்கலாம் நண்பா.... ஆனாலும், புரிந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...

      Delete