Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 2 October 2012

நெஜமாவா சொல்றீங்க - பகுதி 3

ஒரு பக்கம் காதல் என்றாலும், மறுபக்கம் தான் அவனை முறையாக பாதுகாக்க தவறிவிட்டோமோ? என்ற ஆற்றாமையும் அவனை நித்தமும் ஈட்டி போல குத்தியது.... பெரும்பாலும் நண்பர்களை தவிர்த்து, தனிமையை விரும்பினான்.... அவன் தங்கியிருக்கும் வீட்டில், அவன் அறை முழுக்க சாந்தனை நினைவுபடுத்தும் விதமாக எல்லாமும் இருக்கும்படி செய்திருந்தான்... அவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவன் கொடுத்த புத்தகங்கள், முதன்முதலில் கொடுத்த காதல் அட்டை முதல் கடைசியாக கொடுத்த பிரிவுக்கடிதம் வரை எல்லா கடிதங்கள், சாந்தனுடன் பேருந்தில் பயண சீட்டு முதல் திரை அரங்கம் சென்ற திரை அரங்க சீட்டு என்று காகித குவியல்கள் ஒரு பக்கம் என்று அந்த அறை மட்டும் ஏதோ பொருட்காட்சி அளவிற்கு நிறைக்கப்பட்டிருந்தது .... அந்த பொக்கிஷமான அறைக்குள் எத்தகைய நெருங்கிய நண்பர்களையும் பிரபா அனுமதித்ததில்லை..... இதற்கு மத்தியிலும் இந்த இரண்டு வருடமும் கொஞ்சமும் நம்பிக்கை இழக்காமல் அவன் தேடாத இடமில்லை..... திருச்சி தஞ்சை தொடங்கி, ராமேஸ்வரம் சென்னை என்று கடந்து பல இடங்களிலும் தேடினான் சாந்தனை.... எத்தனை தேடல்களும் பிரபாவை ஒரு போதும் சோர்வாக்கவில்லை..... வழக்கமான ஒரு இரவு சாந்தனை நினைத்து, நினைவு தனியும்வரை மதுவை குடித்துவிட்டு, ஆழ்ந்து உறங்கினான்.... அதிகாலையில் கதவு தட்டும் ஓசை கேட்டது, இன்னும் கொஞ்சம் போதை தணியாத பிரபா மெல்ல தடுமாறி எழுந்து முகத்தை கழுவிவிட்டு கதவை திறந்தான்.... திறந்ததும் அதிர்ந்தான்..... அங்கு நின்றது ஒரு கனம் சாந்தனைப்போல இருந்தது, மறுகணமே அது சாந்தன் இல்லை என்று உணர்ந்தவனாக, “யார் நீங்க?.... என்ன வேணும்?” என்றான்.....
“என்னைய மறந்துட்டிங்களா?..... “ என்றான் புதியவன்....

“சாரி, நியாபகம் இல்ல..... நீங்களே சொல்லிடுங்க” என்றான் பிரபா....
“நெஜமாவா சொல்றீங்க?” என்று அந்த புதியவன் கேட்டதும், பிரபாவின் மூளைக்குள் பொறி தட்ட, சட்டென நினைவுக்கு வந்தவனாக, “டேய் கௌதம், நீதானா?..... ஆளே மாறிட்ட?..... எப்டி இருக்க?” என்றான் மகிழ்ச்சி பொங்க பிரபா.... இந்த கௌதம்’ஐ பிரபா மறந்தாலும், வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை..... பிரபாவின் அன்பான வார்த்தைகளை கேட்டதும், மன நிறைவான கௌதம், “இப்டி வாசல்ல வச்சே கேட்டுட்டு, வெளில அனுப்பிடுறதா உத்தேசமா?.... உள்ள கூப்பிட்டா நான் ஒன்னும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்” என்று சொன்னதும்தான் பிரபாவுக்கே, கௌதம் இன்னும் வாசலில் நிற்பது புரிந்தது..... சிரித்தவாறே உள்ளே அழைத்த பிரபா, “என்னடா இப்டி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்க?.... தனியாவா வந்த?” என்றான்....
“நான் கேட்டரிங் முடிச்சுட்டு, வெளிநாடு போகப்போறேன் அத்தான்.... அதுக்கு முன்னாடி இங்க தஞ்சாவூர்ல ஆறு மாசம் ட்ரைனிங் வச்சுருக்காங்க.... அதான் வந்தேன்.... இங்க தங்கிக்கலாம்ல?” என்றான் கௌதம்....
“இது என்னடா கேள்வி?.... தாராளமா தங்கிக்கோ..... ஆறு மாசம் தானே, தயங்காம தங்கலாம்” என்று பிரபாவும் சிரித்தான்....
“அப்போ ஆறு மாசத்துக்கு மேல தங்கனும்னா, தயங்கிகிட்டே தங்கனுமா?....”
“உன்கிட்ட பேசி சமாளிக்க முடியாது..... மாமா நல்லா இருக்காங்களா?”
“எங்கப்பாவ கேக்குறீங்களா?.... அவரும் இங்க வந்திருக்கார்.... ஒரு முக்கியமான வேலையா கீழ எங்கயாச்சும் போயிருப்பார்”
“இங்க என்ன இந்த நேரத்துல முக்கியமான வேலை அவருக்கு?”
“எதாவது புதருக்குள்ள போயி குவாட்டர் அடிப்பாரு.... அதான்.... அவர் திருந்தவே மாட்டார்” என்று கௌதம் சொல்லி முடிக்கையில் சரியாக அங்கு வந்துவிட்டார் கௌதமின் அப்பா.... தோளில் பலாப்பழம் ஏந்தி, கைகளில் பேக்கரி பொருட்களோடு மது மணம் கமகமக்க உள்ளே நுழைந்தார் அவர்....
பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தபிறகு, “தம்பி, இந்தப்பய இங்குனதான் ஏதோ வேலை பாக்கனுமாம்.... புதுசா போற பயலுவள ஏதோ ரேப்பிங் பண்ணுவாகலாம்ல?....” என்றார் அப்பா அப்பாவியாக....
“ஐயோ அப்பா.... அது ரேப்பிங் இல்ல, ராகிங்..... “ என்று திருத்தினான் கௌதம்....
“இல்ல மாமா.... நான் பாத்துக்கறேன்....எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அங்க மேனேஜரா இருக்கார், நான் பாத்துக்கறேன்.... நீங்க கவலைப்படாதிங்க” என்ற பிரபாவின் ஒப்புதலுக்கு பிறகு அங்கிருந்து கிளம்ப தயாரானார் அப்பா...
“இருந்து சாப்பிட்டுட்டு போங்க மாமா” என்றான் பிரபா....
“இல்லப்பா.... நான் சாப்டேன்..... ஊர்ல வேலை இருக்கு, நான் போறேன்பா” என்று அவர் கிளம்பிய பிறகு பிரபாவை பார்த்து சிரித்த கௌதம், “அதான் சொன்னேன்ல, எங்கப்பா புல்’லா சாப்டுட்டார்...” என்று சிரித்தான் ....
அப்படியே எதேச்சையாக சமையலறை பக்கம் பார்த்த கௌதம், அங்கு கிடந்த மது புட்டிகளை பார்த்து அதிர்ந்தபடி, “அடக்கொடுமையே அத்தான், என்ன இது?... எங்கப்பாவாவது, ஒரு நாளைக்கு ஒரு புல்லுக்கு மேல குடிக்க மாட்டார்.... இது என்ன இவ்வளவு பாட்டில்?” என்றான்....
“ஐயோ.... அது மொத்தமா எடுத்து வச்சிருக்கிற பாட்டில்டா..... இதை எடுத்துட்டு போக ஆள் வருவாங்க, அதான் எடுத்து வச்சேன்....” என்றான் பிரபா....
அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, சமையலறைக்குள் சென்று சூடாக ஒரு காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தான் கௌதம்....
அதை குடித்த பிரபா, சுவையில் அதிசயித்தவனாக பாராட்டவே, “என்ன அத்தான் இதுக்கே இப்டி சொல்லிட்டிங்க..... நம்ம செட்டிநாட்டு சமையல் முதல், சைனீஸ், தாய் சமையல் வரை அத்தனையும் எனக்கு அத்துபடி.... இனி ஆறு மாசமும் நீங்க என் சமயலைத்தான் சாப்பிடனும்...” என்று சிரித்தான்....
“அப்போ எல்லா சாப்பாட்டுக்கும் நான் தான் உனக்கு சோதனை எலியா?” என்று பிரபா சிரிக்க, கௌதம் செல்லமாக கோபம் கொண்டான்....
இப்படி பிரபா சிரித்து பேசியே பல மாதங்கள் ஆகி இருந்தது.... ஏனோ எப்போதும் கௌதம் ஒரு மந்திரவாதிதான், எத்தகைய சோகத்தின் போதும் அந்த சோகத்தை அவனுடன் இருக்கும் நேரம் ஏதோ மந்திரம் போட்டு மறக்கடித்துவிடுவான்....
கௌதமின் வரவு பிரபாவை கொஞ்சம் மாற்றி இருந்தது என்று நாம் சொன்னாலும், சாந்தனின் நினைவுகளை அது கொஞ்சமும் குறைக்கவில்லையோ என்று சொல்லும் அளவிற்கு பிரபா வழக்கம்போல மது, புலம்பல் என்று நிறுத்தவில்லை....
இந்த ஒருசில வாரங்கள் கௌதமிடம் பிரபா சகஜமாகவும், கொஞ்சம் கலகலப்பாகவும் பேசினாலும், பிரபாவினுள் புதைந்துகிடக்கும் ஏதோ ஒன்றை கௌதமால் கண்டுபிடிக்க முடியவில்லை.... பிரபாவின் மனதைப்போலவே, கௌதமிற்கு இன்னொன்றும் புரியாத புதிராகவே இருந்தது.... அது பிரபாவின் அறை.... கௌதம் வந்த முதல்நாளே, அவனிடம் பிரபா போட்ட ஒரே கட்டுப்பாடு, “என் இந்த ரூம்குள்ள இதுவரை நான் யாரையும் அனுமதிச்சதில்ல, நீயும் அதுக்குள்ள போகவேணாம்.... அதைப்பத்தி எதையும் கேக்கவும் வேணாம்” என்றான்.... இதைப்பற்றி அதற்கு பிறகு கௌதமும் கேட்டுக்கொள்ளவில்லை... ஆனாலும், கௌதம் மீதிருந்த நம்பிக்கையால் அந்த அறையை பூட்டுவதில்லை பிரபா, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக கௌதமும் தன் எல்லை மீறியதில்லை.... வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த பிரபா, அன்று காலை முதல் தும்மிக்கொண்டிருந்ததை கவனித்தான் கௌதம்....
“என்ன அத்தான்?... சளி பிடிச்சிருச்சா?.... துளசில சூப் செஞ்சு தரவா?” என்றான் கௌதம்....
சிரித்த பிரபா, “எல்லாத்துக்கும் ஒரு ட்ரீட்மென்ட் நீயே வச்சிருக்கியா?.... இல்ல, இப்போ லேட் ஆச்சு, சாயந்திரம் பாத்துக்கலாம்” என்றவாறு கிளம்பிவிட்டான் பிரபா....
பிரபா சாதாரணமாக சாத்திவிட்டு சென்ற அவன் அறைக்கதவு எதேச்சையாக திறந்துகொண்டது காற்றினால்..... எப்போதும் அப்படி தானாக திறந்துவிட்டால், மூடிவிட்டு செல்வதைப்போல அன்றும் மூட சென்ற கௌதம் அந்த அறையின் தரையை பார்த்துவிட்டு, “இவ்வளவு குப்பை கிடந்தா, அப்புறம் எப்புடி சளி குணமாகும்.... இந்த தூசியே இதை பெருசா கொண்டு போய்டும்.... அவர் வர்றதுக்கு முன்னாடி குப்பையையாவது சுத்தம் பண்ணலாம்” என்றவாறே கீழே கிடந்த காகிதங்களையும், குப்பைகளையும் அகற்றினான்....
மதியம் நேரத்தில் வழக்கம்போல தன் பயிற்சிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தான் கௌதம்.... பிரபா முன்னரே வந்திருப்பதை கவனித்த கௌதம், உள்ளே சென்றதும் பிரபாவை பார்த்து, “என்னத்தான் பண்றீங்க?.... இப்போ எப்டி இருக்கு உடம்பு?” என்றான் அக்கறையுடன்.... பிரபாவோ முகம் கோபத்தில் வெடித்து காணப்பட்டான்.... கௌதமின் கேள்விகளை கவனிக்காதவனைப்போல “என் ரூம்குள்ள யார் போனது?” என்றான் பிரபா....
பிரபாவின் இந்த கோபத்திற்கான காரணம் புரியாமல், “ஐயோ அத்தான்.... உள்ள போயி நான் எதையும் எடுக்கல.... கீழ கிடந்ததை கூட்டி சுத்தப்படுத்துனேன், அவ்வளவுதான்” என்று கௌதம் நிறுத்தும் முன்னரே அவனை அறைந்துவிட்டான் பிரபா.... கன்னத்தில் கைவைத்தவாறே, கோபப்பட்டுவதற்கு பதிலாக சமாதானப்படுத்தும் விதமாக, “நான் எதையும் எடுக்கல, நான் வேற எதையும் பாக்கல அத்தான்....” என்றான் கௌதம்....
அதை சற்றும் பொருட்படுத்தாத பிரபாவோ, “இங்க கூட்டின குப்பைகளை எங்க போட்டிருக்க?.... அது இப்போ எனக்கு வேணும்” என்றான் பிடிவாதமாக....
தன்னை அடித்ததோடு மட்டும் நில்லாமல்,தன் பேச்சையும் கண்டுகொள்ளாமல் ஏதோ பித்து பிடித்தவன் போல பிரபா பேசுவதை கண்டு எரிச்சலான கௌதம், நேராக சென்று குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டிருந்த அந்த குப்பை கூடையிலிருந்து எடுத்து வந்து, அதை பிரபா கையில் கொடுத்தான்...
அதை வாங்கி பிரித்த பிரபா, உள்ளே கிடந்த பேருந்து பயண சீட்டுகள், திரை அரங்க சீட்டுகள், பொருட்கள் வாங்கிய பில் போன்றவைகள் இருந்ததை கண்டதும் கொஞ்சம் நிம்மதி ஆனவனைப்போல , கெளதமை சிறிதும் கண்டுகொள்ளாதவனைப்போல தன் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான் பிரபா....
கௌதமிற்கு பிரபாவின் இந்த முகம் கொஞ்சம் ஆச்சரியமாகவும், நிறைய அதிர்ச்சியாகவும் இருந்தது.... பிரபாவின் மீது கொஞ்சம் கோபம் இருந்தாலும், தன் மீதான பிரபாவின் இந்த கோபத்திற்கு ஏதோ ஒரு நியாயமான விஷயம் இருக்கும் என்று நம்பினான்.... தன்னை அவ்வளவு பாசமாக நடத்திய பிரபாவா, இந்த குப்பைகளுக்காக என்னை அடித்தார்?.... அப்படியானால், அந்த குப்பைகளுக்குள் ஏதோ ஒரு பெரிய ரகசியம் பிரபாவின் மனதிற்குள் இருந்தது கௌதமிற்கு.... இருந்தாலும், எத்தகைய சுமைகளையும் எளிதில் சமாளித்து, அடுத்தகட்ட நகர்வுக்கு தயார் ஆகிடும் கெளதம், அத்தகைய ஒரு பிரச்சினையையும் பொருட்படுத்தாமல் இரவு உணவை தயாற்படுத்திக்கொண்டான் கெளதம்.... பிரபா அடித்ததைக்கூட அவன் பெரிதாக நினைக்காமல், அவன் சளி குறைந்திட தூதுவளை தோசை, துளசி சட்னி என்று ஒரு மூலிகை சமையலே செய்த கௌதமின் அக்கறை நிச்சயம் துளியும் எவ்வித எதிர்பார்ப்பும், நோக்கமும் அற்றது....
இரவு ஒன்பது மணிக்கு அறையின் கதவு திறக்கப்பட்டு, வெளியே இருந்த குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மதுபான புட்டியை எடுத்து அங்கு வழக்கமாக தண்ணீர் அடிக்கும் மேசையில் வைத்து குடிக்க தொடங்கினான் பிரபா... பிரபாவின் உடல்நிலையை நினைத்து நினைத்து தான் ஒவ்வொரு செயலும் செய்தபோதும், பிரபா இப்படி செய்வதை எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாமல், அதை கண்டுகொள்ளாதவாறே புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தான் கௌதம்....
ஒரு மணி நேரம் குடித்த பிரபா, வழக்கத்தைவிட அன்று கொஞ்சம் அதிகமாகவே குடித்துகொண்டிருந்தான் பிரபா.... அப்போது, தான் செய்த இரவு உணவை எடுத்து அந்த மேசையின் மீது வைத்துவிட்டு கிளம்ப முயன்ற கெளதமை அழைத்தான் பிரபா.... அத்தனை குடித்தும், பிரபா வாய் குழறவோ, உளறவோ இல்லாமல் நிதானமாக அழைத்தான் கெளதமை....
“சாயந்திரம் அடிச்சது பத்தாதா?... இப்ப தண்ணிய போட்டுட்டு வேற அடிக்க போறிங்களா?” என்று வராத கோபத்தை வந்தவனைப்போல காட்டிக்கொண்டான் கௌதம்.....
கையை பிடித்து கெளதமை அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்தவாறே, “சாரிடா.... ஏதோ அவசரத்துல அடிச்சிட்டேன்.... நான் அவ்வளவு சொல்லியும், நீ ரூம்குள்ள போயிருக்க கூடாதுல்ல?.” என்றான்....
“இப்போ இவ்வளவு தன்மையா பேசுற நீங்க, சாயுங்காலமே இதை கேட்டிருக்கலாம்ல.... நான் எதையும் பாக்கவோ, எடுக்கவோ போகல.... காத்துல அந்த ரூம் கதவு தொறந்துடுச்சு, மூட போறப்போ அந்த குப்பைகளை பாத்தேன்... ஏற்கனவே உங்களுக்கு தும்மல் இருந்துச்சு, அந்த குப்பையால இன்னும் அதிகமாகும், தூசியால ஆஸ்த்மா வரைக்கும் கூட போகலாம்... அதான், தரையை சுத்தம் பண்ணேன், அவ்வளவுதான்... அப்படி என்னதான் அந்த ரூம்ல வச்சிருக்கிங்க?.... தங்கமா, வைரமா?... அந்த குப்பைகளுக்கா இவ்வளவு கோபப்பட்டிங்க?” என்று படபடவென்று கொட்டினான் கௌதம்....
ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு தொடர்ந்த பிரபா, “அது குப்பை இல்ல.... அது என் உயிர்.... சாந்தன் கைபட்ட அந்த ஒவ்வொரு பொருளும் இன்னும் என்னை வாழ வச்சிருக்கு.... இப்பவும் அவன் வாசனை அந்த ரூம்குள்ள இருக்கும், அதனாலதான் அதுக்குள்ள ஒரு பாடி ஸ்ப்ரே கூட நான் கொண்டுபோரதில்ல... இதெல்லாம் பைத்தியக்காரத்தனமா இருக்கலாம், ஆனால் இந்த சின்ன சின்ன செண்டிமெண்ட் மட்டும் இல்லாமல் இருந்திருந்தா நிச்சயம் நான் இந்நேரம் கிறுக்கு புடிச்சு செத்தே போயிருப்பேன்..... அந்த ரூம்ல நான் சாந்தனோட இதுமாதிரி நினைவுகளோட வாழ்ந்திட்டு இருக்கேன்” என்று தொடங்கிய பிரபா, ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லா கதைகளையும் கூறி முடித்தான்.... ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மொத்த விஷயங்களை பிரபா கூறி முடித்ததும், அந்த இடமே சலனம் இல்லாத மவுனம் நிறைந்து காணப்பட்டது..... கௌதமின் கண்கள் கண்ணீரால் அந்த விஷயங்களை கிரகித்துக்கொண்டிருன்தது..... சொல்லி முடித்துவிட்டு, அடுத்த கோப்பை மதுவை எடுத்து வேக வேகமாக குடித்து சோகத்தை தணிக்க முற்பட்டான் பிரபா.
சிறிது அமைதிக்கு பிறகு கௌதம், “சாரி அத்தான்.... நான் தான் உங்கள சரியா புரிஞ்சுக்கல.... நிஜமாவே உங்க வலிய என்னால தாங்கிருக்க முடியுமான்னு தெரியல.... இவ்வளவு நாள் உங்க தரப்பு நியாயத்தை நான் புரிஞ்சுக்கல.... ஏதோ வீம்புக்காக வீட்ல சண்டை போட்டு வந்துட்டிங்கன்னு நெனச்சேன், நெஜமாவே உங்க கோபம் நியாயமானதுதான்..... உங்க உணர்வுகள நான் காயப்படுத்திருந்தா சாரி அத்தான்” என்றவாறே பிரபாவின் கைகளை இறுக்கி பிடித்தான்.... அந்த பிடியில் ஒரு அரவணைப்பை உணர்ந்தான் பிரபா, ஏனோ அதுவரை அடக்கிய உணர்வுகள் கொந்தளித்து அப்போது பிரபாவையும் மீறி கண்ணீராய் வழிந்தது....
இதைக்கண்ட கௌதம், “சரி இன்னமும் நீங்க சாந்தன் அண்ணனோட இவ்வளவு காதலோட இருக்கிங்களா?.... அப்புறம் ஏன் தண்ணி அடிக்கிறீங்க?... அவருக்கு அது பிடிக்காதுன்னு சொன்னிங்களே” என்றான்....
“ஆமா.... அவனுக்கு பிடிக்காதுதான்.... ஆனால், அவனை மறக்க நான் தினமும் இதை குடிக்க வேண்டி இருக்கே”
“அப்டினா நீங்க அவரை மறந்துட்டிங்களா?”
“இல்ல... அது முடியல... இத குடிக்கிற கொஞ்ச நேரத்துல மறக்குற மாதிரி இருக்குது, அவ்வளவுதான்...”
“அப்புறம் ஏன் இது?... மறக்க முடியாத ஒரு விஷயத்தை, இப்டி மறைக்க ட்ரை பண்ணிங்கன்னா நிச்சயம் அது அவர் நினைவுகளை இன்னும்தான் அதிகப்படுத்தும்.... அதுவும் அவருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சுதான் அவரை மறக்க முயற்சிக்கனுமா?... இது தெரிஞ்சா அவரே உங்க மேல கோபப்படுவார்.... நான் உங்கள கஷ்டப்படுத்தனும்னு சொல்லல, அவருக்காக ஒரு பஸ் டிக்கெட்டை கூட தூக்கி போடாம வச்சிருக்கிற நீங்க, அவருக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சுகிட்டு, அதுக்கு அவரையே காரணமாகவும் சொன்னா நிச்சயம் யாரா இருந்தாலும் கோபப்படுவாங்க.... இதுக்கு மேல நான் உங்ககிட்ட உரிமை எடுத்துக்க விரும்பல, இதையே ஓவரா பேசி இருந்தா சாரி அத்தான்.... இதுல சாப்பாடு இருக்கு, சாப்டு தூங்குங்க” என்று கூறிவிட்டு படுக்க சென்றுவிட்டான் கௌதம்... அருகில் இருந்த கோப்பையில் இருந்த மதுவை பார்த்தபடியே, அதை கையில் எடுத்த பிரபா, கொஞ்சம் யோசித்த பிறகு அதை அப்படியே கீழே ஊற்றிவிட்டு சாப்பாட்டை எடுத்து சாப்பிட தொடங்கினான்.... இதை கவனித்த கௌதம் தனக்குள் சிரித்தவாறே படுக்க சென்றுவிட்டான்..... பிரபாவின் மனதிற்குள் கௌதம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் உயர்ந்துகொண்டே இருந்தான்... இந்த வயதில் இவ்வளவு பக்குவமாக தான் இருந்திருந்தால் எவ்வளவு பிரச்சினைகளை சமாளித்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டான் பிரபா.... அம்மா இல்லை, அப்பாவோ மீனை விட அதிக நேரம் தண்ணீரில் இருக்கும் முழு நேர குடிகாரர், எப்போதும் மற்ற சொந்தங்களை நம்பியே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் கௌதம் நிச்சயமாக சுயம்புவாக வளர்ந்து நிற்கும் நல்லவன்.... ஒருவேளை அத்தகைய வளர்ந்த சூழலே இந்த முதிர்ச்சிக்கும், பக்குவத்திற்கும் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் பிரபா.... பலவாறும் அன்று இரவு முழுக்க பிரபாவின் நினைவுகளை ஒருவாராக ஆக்கிரமித்துக்கொண்டான் கௌதம்.... அப்படியே அந்த மேசையில் தூங்கிவிட்டான் பிரபாவும்.... காலை நேரத்து கௌதமின் காபி’தான் பிரபாவை அன்றும் எழுப்பியது..... முகம் கழுவிவிட்டு கௌதமின் காபியை பிரபா ருசித்தான்...... அப்போது அங்கு மேசையில் இருந்த கௌதமின் அலைபேசியை எதேச்சையாக எடுத்து பார்த்தபோது, அதில் திரையில் ஒரு குழந்தையின் படம் இருந்தது.... பார்த்ததும் ஈர்க்கும் ஏதோ ஒன்று அந்த குழந்தையின் முகத்தில் இருக்கவே, ஆச்சரியத்துடன் கௌதமிடம், “ஏய் கௌதம், யாருடா உன் போன்ல வால்பேப்பரா வச்சிருக்குற குழந்தை..... ரொம்ப க்யூட்டா இருக்கு” என்றான்.... எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்த கௌதம், சிரித்தவாறே, “எல்லாம் உங்களுக்கு வேண்டப்பட்டவங்கதான்” என்றான்.... இதை கேட்டவுடன், ஒருவாராக யூகித்த பிரபா, “இது மாணிக்கம் மாமாவோட.....” என்று இழுத்தான்....
தலையை அசைத்து அதை ஆமோதிப்பதைப்போல, “ஆமா.... இது அவங்க பையன்தான்” என்றான் கௌதம்.... பிரபா கோபித்துக்கொண்டு வந்த பிறகு, ஜனனிக்கு குழந்தை பிறந்தது தெரிந்தாலும், அப்போதிருந்த கோபம் காரணமாக அதைப்பற்றி மேற்கொண்டு கேட்கவோ பார்க்கவோ செல்லாமல் இருந்துவிட்டான்.... அதற்கு பிறகு இப்போதுதான் தன் “மச்சான்”ஐ கௌதம் மூலம் பார்த்துள்ளான் பிரபா.... அதை கேட்டவுடன், தன்னை அறியாமல் கசிந்த கண்ணீரை கௌதம் பார்க்கும் முன் துடைத்துக்கொண்டவாறே, அதை பொருட்படுத்தாதவனைப்போல அமர்ந்திருந்தான்....
“அத்தான், அந்த குட்டிப்பையன் பேரு என்னனு கேட்டா ஆச்ச்சரியப்படுவீங்க” என்றான் கௌதம்.... அதை என்னவென்று கேட்க மனம் துடித்தாலும், அத்தகைய ஆர்வத்தை கௌதமிடம் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தவாறே மேலும் அதைப்பற்றி கேட்காமல் இருந்தான் பிரபா.... கௌதமாகவே அதைப்பற்றி பேசுவான் என்று நினைத்த பிரபாவிற்கு ஏமாற்றமே மிச்சம்... அடுத்தடுத்து வேறு பேச்சுக்களை பேசிய கௌதம், இதைப்பற்றி வாயையே திறக்கவில்லை.... மற்ற பேச்சுகள் எதுவுமே அப்போது பிரபாவிற்கு எரிச்ச்சலடையும் பேச்சுக்கலாக இருந்தமையால், வழி இன்றி தலையை அசைத்துக்கொண்டிருந்தான் பிரபா.... தானாகவே அந்த குழந்தை பற்றி பேசுவான் என்று நினைத்த பிரபாவிற்கு கடைசி வரை ஏமாற்றமே....
“சரி அத்தான்.... நீங்க கெளம்புங்க, உங்களுக்கு லேட் ஆச்சு” என்று சொன்னபடியே எழ முற்பட்ட கெளதமை அழைத்த பிரபா, “கௌதம், என்னத்தையோ சொல்றேன்னு சொல்லிட்டு சொல்ல மறந்துட்டியா?” என்றான்...
“இல்லையே அத்தான்... அப்டி எதுவும் இல்லையே.... எதுவும் கேக்கணுமா என்ன?” என்றான் கௌதம்....
முகம் சுருங்கிய பிரபா, “இல்ல.... நீ போ” என்று கூறிவிட்டான்....
சிரித்தவாறே பிரபாவின் பக்கத்தில் அமர்ந்த கௌதம், “எதுக்கு உங்களுக்கு இந்த வீம்பு?... உங்க மாமா பையனை பற்றி கேக்க எதுக்கு இவ்வளவு தயக்கம்.... அவன் பேரு என்னனு தெரியணும், அவ்ளோதானே..... அவன் பேரு கவின் பிரபா.... “ என்று கூறி முடிக்கையில் பிரபா மனம் ஏனோ அதிகமாக மகிழ்ச்சியும், பதட்டமும் அடைந்தது....
தொடர்ந்த கௌதம், “உங்க போட்டோவ கைல வச்சுகிட்டு அத்தான், அத்தான்னு அவன் சொல்றதே தனி அழகுதான்.... அம்மா, அப்பான்னு சொல்றதைவிட அவன் அதிக நேரம் அத்தான்னுதான் சொல்வான் அந்த குட்டி பிரபா.....பேரு மட்டுமில்ல, பிடிவாதம், கோபம் இதுல எல்லாத்துலையும் இந்த பிரபாவை மிஞ்சிடுவார் அந்த பிரபா....” என்று சிரிக்க, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அதற்கு மேல் அடங்கமாட்டாமல் வெளியாகி அழத்தொடங்கிவிட்டான் பிரபா.... அந்த அழுகையை கௌதம் சமாதானப்படுத்தவில்லை.... அது அந்த நேரத்திற்கு தேவையான அழுகை.... கோபம், பிடிவாதம் எல்லாம் கண்ணீரோடு கரைந்துவிட அந்த அழுகை தேவையானதாக இருந்ததாக கௌதம் நினைத்தான்.... அதற்கு மேல் அதைப்பற்றிய பேச்சுக்களை இருவரும் தொடரவில்லை.... வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வந்த பிரபா சகஜமாகி இருப்பதை கண்டு கௌதம் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்... வழக்கமான பேச்சுகளுக்கு பிறகு ஒன்பது மணி ஆகிவிட்டது.... வழக்கமாக பிரபாவின் மது அருந்தும் நேரம் அது.... கௌதமின் மனம் ஏனோ, கொஞ்சம் பதைபதைத்தது.... தான் கூறிய கருத்தை நிஜமாகவே பிரபா ஏற்றானா? அல்லது, போதையின் தாக்கத்தால் முந்தைய நாள் இரவு அதை கீழே ஊற்றினானா? என்று புரிந்துகொள்ள முடியாமல் அந்த குழப்பம் அடைந்தான் கௌதம்.... அந்த நேரத்தில் எழுந்த பிரபா, நேராக குளிர்சாதன பெட்டியை நோக்கி நடக்கவே கௌதம் மனம் படபடத்தது... அதை திறந்தபோது, பிரபா திருந்தவே மாட்டான் என நொந்துகொண்டான் கௌதம்.... அதை திறந்து, அதில் இருந்த தண்ணீரை குடித்த பிரபா, கெளதமை பார்த்து சிரித்துவிட்டு, “பயந்துட்டியா?.... இதுக்கு மேலையும் நான் அதை தொட்டா நான் மனுஷன் இல்லடா” என்று மீண்டும் சிரிக்கவே, கௌதத்தின் முகத்தில் ஒரு பெருமிதம் சுடர் விட்டது.....
ஒரு வாரம் கழித்து மாலை நேரத்தில் எங்கோ அவசரமாக கிளம்பிய கெளதமை பார்த்த பிரபா, “எங்கடா கிளம்புற?.... இந்த நேரத்துல பூகம்பமே வந்தாலும் வெளில போகமாட்டியே?” என்றான்....
“கிண்டல் பண்ணாதிங்க அத்தான்.... இன்னைக்கு சிவராத்திரி, அதான் கோவிலுக்கு போறேன்.... “
“சரி சரி.... நல்லா வேண்டிக்கோ, சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகணும்னு வேண்டிக்கோ” என்று கிண்டல் செய்யவே, வெட்கத்தில் சிரித்தவாறே கோவிலை நோக்கி விரைந்தான் கௌதம்....
இரண்டு மணி நேரம் கழித்து கதவு தட்டப்பட, திறந்த பிரபா, அங்கு கௌதம் ஒரு குழந்தையை கையில் வைத்தபடி நிற்பதை பார்த்ததும் சிரித்தபடி, “என்னடா உன் கடவுள் இவ்வளவு வேகமா இருக்காரு?... கல்யாணம் ஆகணும்னு வேண்டுனா குழந்தையை கைல கொடுத்து அனுப்பிடுறாரா?....” என்று மீண்டும் சிரிக்கவே, கடுப்பான கௌதம், “லூசா நீங்க?.... நல்லா பாருங்க, இந்த குழந்தையை உங்களுக்கு அடையாளம் தெரியலையா?” என்றான்...
பிரபா அதை யூகிப்பதற்குள் அந்த குழந்தை, “பபா த்தான்...” என்று மழலை மொழியில் பிரபாவை அடையாளம் கண்டுவிட்டது....
பிரபா அந்த குழந்தையை கண்டுகொள்வதற்கு முன், அந்த குழந்தை அவனை அடையாளம் கண்டது ஆச்சரியமான ஒன்றுதான்....
அதற்கு பிறகு அதை யோசிக்கவே தேவை இல்லாமல் மாணிக்கத்தின் குழந்தை என்று உறுதியானதும் , கொஞ்சமும் யோசிக்காமல் குழந்தையை தன் கையில் வாங்கிய பிரபா, கண்களின் நீரோடும், மனம் முழுக்க பாசத்தோடும் மாசற்ற அந்த குழந்தையை முகம் சிவக்கும் அளவிற்கு கொஞ்சினான்.... ஒருசில நிமிடங்கள் அந்த குழந்தையுடன் தான் வேறு ஏதோ உலகத்தில் இருப்பதை போல உணர்ந்தான் பிரபா,...
“இந்த குட்டிப்பயல நான் வாங்குரதுக்குள்ள, வரமாட்டேன்னு அந்த பாடு படுத்தினான், உங்கள பார்த்ததும் இப்படி ஒட்டிகிட்டான் பாருங்க.... பயங்கரமான ஆளுதான்....” என்று கௌதம் சொல்லி சிரிக்கையில்தான் சுயநினைவே வந்தான் பிரபா.... குழந்தையுடன் மழலை பேச்சில் பிரபாவும் பேசி விளையாடியது கெளதமை ஆச்சரியப்படுத்தியது.... சாக்லேட், பிஸ்கட் என்று கையில் கிடைத்த எல்லாவற்றையும் கொடுத்தான் பிரபா.... தன் அறைக்குள் தூக்கி சென்று விளையாடினான்.... தான் சுத்தப்படுத்தியதுக்கு அப்படி கோபப்பட்ட பிரபா, எவ்வித தயக்கமும் இன்றி அந்த குழந்தையை உள்ளே தூக்கி சென்றதை கௌதம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.... அப்போதுதான் பிரபாவிற்கு ஒரு கேள்வி எழுந்தது, “டேய், குழந்தையை எங்க பார்த்த?... யார்டேந்து வாங்கிட்டு வந்த?” என்றான் ....
“கோவிலுக்கு ஜனனி சித்தி வந்திருந்துச்சு.... அதுகிட்டேந்து வாங்கிட்டு வந்தேன்” என்றான் கௌதம்....
தலையில் கைவைத்த பிரபா, “எங்கடா அவங்க?” என்றான்....
“இங்க வந்தா எதுவும் நினைப்பிங்கன்னு, வெளில நிக்கிறாங்க” என்று கௌதம் சொன்ன மறுநிமிடம் வெளியே ஓடிய பிரபா, ஜனனியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.... கொஞ்சம் தயங்கியபடியே உள்ளே வந்த ஜனனியை பார்த்த பிரபா, “அத்த, நீங்க எப்பவும், எந்த நேரத்துலயும் இங்க தாராளமா வரலாம்.... எனக்கு கோபம் அம்மா மேலையும், மாமா மேலையும்தான்.... அடிக்கடி நீங்க வந்துட்டு போங்க அத்த.... “ என்று பிரபா சொன்னதும் ஜனனியும் மனம் உருகிவிட்டாள்.... சிறிது நேரம் குழந்தை பிரபாவுடன், குழந்தையாக மாறிப்போன பிரபாவும் விளையாடியதை கௌதமும், ஜனனியும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.....
பின்னர் நேரம் ஆவதை உணர்ந்த பிரபா, இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு கெளதமை பார்த்து, “ரொம்ப தாங்க்ஸ்டா.... நிஜமாவே இந்த குட்டிப்பயல பாக்கனும்னு நானும் ஒரு வாரமா மனசுக்குள்ள நெனச்சுகிட்டே இருந்தேன்.... இந்த இன்ப அதிர்ச்சிய நான் எதிர்பார்க்கவே இல்லடா” என்று நெகிழ்ந்தான்....
“இப்போ இவ்வளவு டயலாக் பேசுற நீங்க, அப்பவே சொல்லிருந்தா நான் அன்னைக்கே குழந்தையை கூட்டிகிட்டு வந்திருப்பேன்..... மனசு விட்டு எதையும் பேசுங்க அத்தான், அதுவே பாதி கவலைகளை போக்கிடும்” என்று ஒரு மினி சொற்பொழிவை நடத்தியவாறே தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான் கௌதம்.....
நாளாக நாளாக கௌதமின் மீது பிரபாவிற்கு அன்பும் நம்பிக்கையும் அதிகமாகிக்கொண்டே வந்தது.... ஒருபுறம் பிரபாவின் அன்பு வளர, மறுபுறமோ கௌதமுக்கு பிரபாவின் மீது காதல் தழைத்து வளர்ந்தது.... "இது சரியா? தவறா? என்ற எண்ணமெல்லாம் அவன் மனதில் எழுந்தாலும், எத்தகைய கேள்வி எழுந்தாலும் பிரபாவின் மீதான காதல், அத்தனை கேள்விக்குறிகளையும் முற்றுப்புள்ளி ஆக்கிவிடும்..... கௌதம் வரவிற்கு பிறகு பிரபா நிறையவே மாறி இருந்தான்.... இறுகிய முகத்துடன் கடுகடுப்பு வார்த்தைகள் இப்போது பிரபாவிடமிருந்து மறைந்து , பழைய பொழிவும், உற்சாகமும் முகத்தில் அரும்ப தொடங்கியது.... அதீத மதுப்பழக்கம் அறவே இல்லாமல் போனது.... சொந்த பந்தங்களையே வெறுத்த அவன் வீட்டிற்குள் ஜனனி, அவள் குழந்தை என்று பிரவேசமும் தொடங்கிவிட்டது.... யாரையும் அனுமதிக்காத பிரபாவின் அறைக்குள், இப்போது எவ்வித தயக்கமும் இன்றி கௌதம் சென்று வருகிறான்.... இன்னும் எத்தனையோ மாற்றங்களை கொண்டுவந்த கௌதமால், தன்னால் பிரபாவிற்குள் இருக்கும் சாந்தனின் நினைவுகளை அகற்ற முடியும் என்று நினைத்ததுதான் முட்டாள் தனம்.... தன் எண்ணங்களை ஆசைகளை பிரபாவிடம் கூறவேண்டும் என்று தருணம் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தான்....
அது ஒரு அந்தி சாயும் மாலை நேரம், இறுகிய மனங்களையும் இளகிய மனமாக ஆக்கும் அந்த தென்றல் வீசிய தருணத்தில், பிரபாவும் கௌதமும் தனியே மாடியில் அமர்ந்து பலவாறும் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தனர்.... "அத்தான் நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னு, நெனக்கிறேன்.... அதை நீங்க எப்டி எடுத்துப்பீங்கன்னு தெரியல, இருந்தாலும் இதை சொல்ல முடியலைனா என் மனசு உறுத்திகிட்டே இருக்கும்" என்று கௌதம் போட்ட பீடிகையின் அர்த்தம் புரியாமல் விழித்த பிரபா, "என்னடா இவ்ளோ பில்டப் கொடுக்குற?... நிச்சயம் நான் உன்ன எதுக்காகவும் தப்பா நெனக்க மாட்டேன், சொல்லு" என்றான் பிரபா.... அணு குண்டே விழுந்தாலும், "அப்படியா?" என்று கேட்கும் அளவிற்கு பிரபாவின் மனமும், உடலும் அவ்வளவு மென்மையாக இருந்தது அன்று, அதை அறிந்துதான் இந்த தருணத்தில் தன் மனதினை திறக்க முடிவு செய்தான் கௌதம்.....
"அது.... அது.... நான் உங்கள லவ் பண்றேன் அத்தான்...." என்று கௌதம் கூறி முடிக்கையில் பிரபா லேசான அதிர்ச்சி அடைந்தது அவன் முகமாற்றத்தில் தெரிந்தது..... சில நிமிடங்கள் பிரபா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததை கவனித்த கௌதம் , கொஞ்சம் பயத்துடன் "ஐயோ அத்தான், நான் தப்பா பேசிருந்தா சாரி, இதுக்கு நீங்க பதில் சொல்லனும்னு அவசியமும் இல்ல.... சாரி அத்தான்" என்றான் ......
மௌனம் களைந்த பிரபா, "பரவால்லடா.... நான் உன்ன தப்பா நெனைக்கல.... பட், என் நிலைமை புரிந்தும் நீ இத கேட்டதுதான் எனக்கு கஷ்டமா இருக்கு.... நான் சாந்தனை லவ் பண்றது தெரிஞ்சும் இதை நீ கேட்டிருக்கலாமா?" என்றான்.....


"அத்தான், ஒரு உண்மைய சொல்லனும்னா, உங்கள உங்க வீட்ல நான் பாத்த முதல் நாளே உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுது.... நீங்க பண்ண ஒவ்வொரு செயலுமே உங்க மேல இருந்த ஆசைய காதலா மாத்திடுச்சு.... 'ஆண்டவா இவருக்கு லவ்வரே இருக்க கூடாது'ன்னு கடவுள்கிட்ட வேண்டிகிட்டேன்.... அப்பவே நான் இதை சொல்லிருந்தா நான் சின்ன பையன்னு சொல்லி மறுத்திருப்பிங்க, அதான் இப்ப சொல்றேன்.... சாந்தன் நிச்சயம் எங்கயோ நல்லா இருப்பார், அவரை நெனச்சே நீங்க மனசு வருந்திகிட்டு இருந்தா சரியா இருக்காதுன்னு நெனச்ச்சதாலதான் சொன்னேன்.... சாந்தன்கூட அவரைப்பற்றி நீங்க நெனைக்காம, வேற ஒரு காதலோடு வாழணும்னு ஆசைப்பட்டார்...... அதனால இதைப்பத்தி யோசிங்க.... நான் அதிகப்ரசங்கித்தனமா பேசிருந்தா சாரி...." என்றவாறு அமைதியானான் கௌதம்.....

"இதைப்பத்தி நான் யோசிக்கவல்லாம் மனசு வரல..... சாந்தனை நான் பார்த்தாதான் மத்த விஷயங்கள் எதையும் நான் யோசிக்கவே முடியும்.... அவன் வருவான்னு நம்புறேன்.... நீ உன் மனசை மாத்திக்கிறதுதான் நல்லது கௌதம்... நிஜமாவே உனக்கேத்த ஒரு ஆள் கிடைக்கும், அப்போ இந்த பிரபாவல்லாம் உனக்கு டம்மி ஆகிடுவான்...." என்று பிரபா சிரிக்க, அந்த நகைச்சுவையை ரசிக்க மனம் இல்லாதவனாக எழுந்து சென்றுவிட்டான் கௌதம்.... கௌதமின் செயல்களை ரசித்தவாறே, பழையபடி சாந்தனின் நிகழ்வுகளில் தன்னை ஆட்படுத்திக்கொண்டான் பிரபா.... ஆனாலும், அடுத்த நாளே எதுவும் நடக்காதது போலவே பழையபடி உற்சாகமாக வளையவந்த கௌதம் நிச்சயம் எந்த செயலிலும் தன்னை ஆச்ச்சரியப்படுத்துபவனாகவே இருந்தான் பிரபாவை பொருத்தவரை.... பழைய கவனிப்பு, அக்கறை, உற்சாகம், கலகலப்பு என்று எதுவும் குறையாமல் இருந்தான்... ஒருவகையில் பிரபாவிற்கு அதனால் கோபமும் வந்தது, அதாவது தான் காதலிக்கவில்லை என்று கூறியும், அதற்கு சிறிதும் வருத்தமில்லாமல் இருப்பதால், தன் மீது அவன் காதல் அவ்வளவுதானா? சிறு வருத்தம் கூட இல்லாத அளவிற்கா தன் மீதான அவன் காதல் இருந்தது? என்று முட்டாள்தனமாக கோபம் கொண்டான் பிரபா.....
"டேய், நேத்து தான் நான் உன்ன லவ் பண்ணலைன்னு சொன்னேன், இன்னைக்கு நீ இவ்வளவு சாதாரணமா எடுத்துகிட்டு திரியுற.... அப்டினா, என் மேல உனக்கிருந்த காதல் அவ்வளவுதானா?" என்று அதை கேட்டே விட்டான் பிரபா....
ஆழமாக சிரித்த கௌதம், "இதுக்கு எதனால நான் வருத்தப்படணும்?... நான் என் லவ்வை சொல்லிட்டேன்..... என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அதனால எப்டியும் உங்க மனசு மாறும்னு நம்பிக்கையும் எனக்கு இருக்கு..... அதனால, டோன்ட் கேர்..." என்று கூறிவிட்டு வழக்கமான தன் பணிகளை தொடங்கியதை ஆச்சரியம் விலகாமல் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் பிரபா..... வயதில் தன்னைவிட கௌதம் சிறியவனாக இருந்தாலும், வாழ்க்கை பாடத்தை தன்னைவிட நிறையவே தெரிந்திருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டான்.... ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் பிரபாவை ஆச்சரியப்படுத்தி, அமர்க்களப்படுத்திவிடுகிறான் கௌதம்....
அடுத்து ஒரு மாதமும் அந்த பெயர் தெரியாத உறவு இருவருக்குள்ளும் வித்தியாசமான உணர்வை கொடுத்தது..... வழக்கம்போல தன் பணிகளை செய்துகொண்டிருந்தான் கௌதம், வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்கவே, "என்ன இன்னக்கி இவ்வளவு சீக்கிரம் வந்துட்டாங்க?...." என்று நினைத்தவாறே கதவை திறந்த கௌதம் ஒரு நிமிடம் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்து நின்றான்.... காரணம், வாசலில் நின்றது சாந்தன்.... திகைத்து நின்ற கெளதமை பார்த்த சாந்தன், "ஏய், இவன் நம்ம சென்னைல பார்த்த பையன்தானே?... இவனும் இங்கதான் இருக்கானா?" என்று பிரபாவை பார்த்து கேட்க, பின்னர்தான் சுய நினைவுக்கே வந்தான் கௌதம்.... பின்னர் சுதாரித்து உள்ளே இருவரையும் அழைத்த கௌதம், பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு குளிக்க சென்றான் சாந்தன்.... பிரபாவோ எப்போதையும்விட அன்று அதீத குழப்பத்தில் காணப்பட்டான்.... குழம்பிய கௌதம், "என்னத்தான் இன்னும் எதையோ இழந்த மாதிரியே இருக்கீங்க.... சொல்லப்போனா இப்போ வருத்தப்படவேண்டிய நானே, இதை சந்தோஷமா எடுத்துக்கைல நீங்க இப்படி இடிஞ்சு போயி உக்காந்திருக்கிங்களே?" என்றான் ....
"சாந்தனுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்...." என்ற ஒற்றை வரியோடு பிரபா முடித்துக்கொன்டாலும், அவன் மனது அந்த நேரத்தில் என்னன்னமோ சொல்ல சொல்லியதை கௌதம் அறியாமல் இல்லை.... கௌதம் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தபடி, "என்ன சொல்றீங்க?.... நெஜமாவா?... நீங்க அவரை சும்மாவா விட்டிங்க?.... நல்லா நாலு வாங்கு வாங்கலாம்ல" என்று ஆத்திரத்துடன் கேட்டான்....
"உண்மைய சொல்லனும்னா, அவன்தான் என்மேல கோபப்படனும்.... அவன் நிச்சயம் ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால்தான் கல்யாணம் பண்ணிருக்கணும், அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு அவன் போக நான்தானே காரணம்.... அதுவுமில்லாம, நான் அவனை முழுசா மறக்கனும்னா அவன் இப்டி எதாவது செய்யனுன்னு நெனச்சுதான் இப்டிலாம் பண்ணிருக்கான்.... அவன் செய்ற ஒவ்வொரு காரியத்திலும், என் மேல ஒரு அக்கறை இருக்கும்டா.... இதைப்பத்தி நான் அவன்கிட்ட மேலையும் எதுவும் கேக்க போறதில்ல, நீயும் எதையும் கேட்டு அவனை கஷ்டப்படுத்தாத.... எதையும் கேட்டு அதனால அவன் கஷ்டப்பட்டான்னாவோ, சங்கடப்பட்டான்னாவோ அதை என்னால தாங்கிக்க முடியாது.... அவனோட எந்த காரியத்துலையும் ஒரு முக்கியமான காரணம் இருக்கும்..... அவன் எனக்கில்லைன்னு வருத்தத்தைவிட , அவன் எங்கயோ இருக்கான்குற நிம்மதி போதும் எனக்கு"
என்று பிரபாவின் வார்த்தைகளில் அவ்வளவு நிதானமும் தெளிவும் காணப்பட்டது..... நிச்சயமாக பிரபா இவ்வளவு ஆழமாக யோசிக்கவும், நிதானமாக பேசுவதற்கும் காரணம் கௌதமுடனான பழக்கம்தான்.... ஒருவகையில் இதை பிரபா எளிதாக எடுத்துக்கொண்டதற்கு கௌதம் மிகவும் நிம்மதி அடைந்தான்.... குளித்துவிட்டு வந்த சாந்தன், பழைய நினைவுகளை தவிர்த்து நிகழ்கால விஷயங்களை பேசிக்கொண்டிருந்தான்.... பிரபா ஒரு வேலையாக வெளியே சென்றுவிட, சாந்தனும் கௌதமும் காலை உணவை சாப்பிட்டபடி பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தனர்..... ஏனோ, சாந்தனுக்கு கெளதமை பார்த்ததும் இனம் புரியாத ஒரு பாசம் தொற்றிக்கொண்டு, பலநாள் நண்பனிடம் பேசுவதைப்போல அவ்வளவு அன்யோன்யமாக பேசிக்கொண்டிருந்தான்.... கௌதமும், கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தான்....
அப்போது, “இவ்வளவு நல்லவங்களா இருக்குற நீங்க ஏன் பிரபாகிட்ட பொய் சொன்னிங்க?” என்றான் கௌதம்....
சாப்பிட்டுக்கொண்டிருந்த சாந்தனுக்கு புரை ஏறி, தண்ணீர் குடித்து இயல்பான பிறகு, “என்ன சொல்ற?.... நான் என்ன பொய் சொன்னேன்?” என்றான் சாந்தன்....
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு பிரபா அத்தான்கிட்ட பொய் சொன்னதைத்தான் சொல்றேன்..... உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு உங்க வாய் சொன்னாலும், கண் உங்கள காட்டிக்கொடுத்துடுது.... உண்மைய சொல்லுங்க, ஏன் அப்டி சொன்னிங்க” என்று கௌதம் அழுத்தம் திருத்தமாக அப்படி பேசியதை ஆச்சரியம் விலகாமல் பார்த்த சாந்தன், மறுக்கவோ மறைக்கவோ முடியாமல் மகுடிக்கு மயங்கிய பாம்பை போல பேசத்தொடங்கினான், “நீ உண்மைலயே பெரிய ஆள்தான்.... பிரபா சொன்ன மாதிரி நீ ஜீனியஸ் தான்.... எனக்கு கல்யாணம் ஆகல.... ஆனால், பொய்யை அவன்கிட்ட நான் சொல்லலைனா எப்பவும் அவன் என்னைய மறக்க மாட்டான்..... காதலை அவன் மறக்க மாட்டான்.... அதனாலதான்..... இவ்வளவு நாள் என்கூட பழகுன பிரபா கூட இதை கண்டுபிடிக்கல, ஆனால் நீ பெரிய ஆளுடா, சரியா கண்டுபிடிச்சிட்ட....” என்று சாந்தன் சொல்லி முடித்ததும், கொஞ்சம் கோபமான கௌதம், “உங்கமேல அவர் எவ்வளவு காதலோட இருக்கார்னு தெரியுமா?... அவரை விட்டு பிரியர அளவுக்கு உங்களுக்கு இப்போ என்ன முக்கியமா போச்சு?” என்றான்....
“முக்கியம்தான் கௌதம்.... முதல்ல நான் பிரபாவை விட்டு பிரிஞ்சு போனது அவன் அம்மாவுக்காக.... நான்தான் குடும்பம், உறவுகள் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்னா, அவனும் என்னால அப்படி ஒரு கையறு நிலைமைக்கு வந்திடக்கூடாதுன்னு ஒரு எண்ணத்துல போனேன்.... அப்போ மனசு முழுக்க வலியோடையும், ரணத்தோடவும் போனேன்.... ஆனால், இந்த முறை நான் அவனை நிரந்தரமா பிரிய போறதுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கு..... அது.....” என்று தயங்கினான் சாந்தன்.....
“அப்டி என்ன நியாயமான காரணம்?.... சொல்லுங்க அதை” என்றான் கௌதம்....
“நானும் என் நண்பர்கள் பலரோட என் தாய்நாட்டுக்கு போகப்போறோம்.... நான் பிறந்ததற்கான அர்த்தத்தை நியாயமாக்க போறேன்.... புரியலையா?.... எங்கள் தேசத்து சுதந்திரத்துக்காக போராட போறோம்.... இது எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்னு நெனக்கிற?.... என்ட அப்பா, அம்மா, அக்கா இவங்களோட இறப்புக்கெல்லாம் பதில் சொல்ல போறன்.... எங்கட நாட்டில புனித போர் தொடுக்க போறோம்.... நான் பிறந்ததுக்கு ஒரு அர்த்தம் சொல்ல எனக்கு காலம் வந்திருக்கு கௌதம்...“ என்று கூறிய சாந்தனின் முகத்தில் பொலிவும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடியதை கவனித்தான் கௌதம்.... நிச்சயம் இதைவிட நியாயமான காரணம் எதை சொல்லி இருந்தாலும், அதற்கு மறுப்பு சொல்லி இருந்திருக்கலாம்.... ஆனால், இத்தகைய ஒரு காரணத்தை பொய்யாக கூட கௌதமால் மறுக்க முடியவில்லை.... ஆனாலும், “சரி அண்ணா, இதை நீங்க பிரபா அத்தான்கிட்டாயே சொல்லிட்டு போயிருக்கலாமே?... அவர் புரிஞ்சுப்பார்னு நெனக்கிறேன்” என்று அதிலும் பிரபாவிற்கு சாதகமான ஒரு கருத்தை முன்வைத்தான் கௌதம்....
சிரித்த சாந்தன், “இதை அவன் எப்படி எடுத்துக்குவான்னு உனக்கு தெரியாதா?.... நிச்சயம் அவனும் என்கூட வருவேன்னு உறுதியா நிப்பான்.... செத்தாலும் என் கூட சாகனும்னு நினைப்பான்... அதுவுமில்லாம இந்த போர்ல நான் உயிர் மீண்டுவர சாத்தியம் ரொம்பவே குறைவு.... அப்படி ஒன்னு நடந்தா நிச்சயம் என் இறப்பை நிச்சயமா அவனால தாங்கிக்க முடியாது.... அவன் என்கூட இருந்து சாகுறதைவிட, எங்கயோ இருந்து வாழற சந்தோசம் எனக்கு போதும்..... அதனால நான் என் மனைவியோட எங்கயோ நல்லா வாழ்ந்திட்டு இருக்கிறதா அவன் நினைக்கட்டும்.... பிரபாவ பாக்குற வரைக்கும் , இப்படி சொல்லிட்டு போனப்புறம் அவன் என்ன ஆகுவானோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு, இப்போ உன்னை பாக்குறப்போ அந்த பயமும் போய்டுச்சு” என்றான்....
சாந்தன் கூறிய எல்லாவற்றையும் கிரகித்த கௌதம், கடைசியாக சாந்தன் கூறிய தன்னை பற்றி கூறிய வார்த்தைகள் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “என்ன சொல்றீங்க?.... என்னை பார்த்ததும் அந்த பயம் போயிடுச்சா? ஏன்?” என்றான்....
“அது உனக்கே புரியும்.... ஆனால், எனக்கும் அது தெரியும்னு உனக்கு இன்னும் புரியலையா?” என்று புதிர்போட்டான் சாந்தன்....
“அண்ணா, புதிரல்லாம் போடாம, தெளிவா சொல்லுங்க” என்று வெட்கினான் கௌதம்....
கௌதமின் கைகளை பிடித்த சாந்தன், “நீ பிரபாவை காதலிக்கறது எனக்கு புரியுது.... முதல்ல என்னை பாக்குறப்போ, ‘இவன் ஏன்டா வந்தான்?’னு நெனச்சுதான் என்னை பார்த்த.... இப்போ உன்கூட பேசுனதிலிருந்து நான் முடிவே பண்ணிட்டேன்....” என்று கூறவே, அதை மறுக்க முடியாமல் கௌதமும் ஆமோதித்தான்....
“அதனால்தான் சொல்றேன் கௌதம்... நிச்சயம் உன்னைய தவிர வேற யாராலையும் அவனை மீட்டிருக்க முடியாது.... நான் போன பின்னாடியும், அவனை நீ எளிதா மாத்திடலாம்... ஆனால், ஒரே ஒரு சத்தியம் நீ எனக்கு பண்ணனும்” என்றான் சாந்தன்....
சாந்தனின் நோக்கத்தை அறிந்த கௌதம், “புரியுது அண்ணா.... எந்த நிலையிலும் நீங்க சொன்ன இந்த உண்மைகளை அவர்கிட்ட சொல்ல மாட்டேன்.... நீங்க சொல்ற நியாயமான காரியத்துக்கு நானும் துணை நிற்பேன்.... “ என்றான்....
தான் சொல்ல வந்த வார்த்தைகளை, ஒன்றுகூட மாற்றாமல் கௌதம் சொன்னதில் ஆச்சரியம் அடைந்தாலும், அப்படி கௌதம் யூகிக்காவிட்டால்தான் அது ஆச்சரியம் என்பது சாந்தனுக்கும் தெரியும்....
இப்படியே பலவிஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தனர் சாந்தனும், கௌதமும்.... சாந்தன் இத்தகைய முக்கியமான ஒரு உண்மையை எப்படி கௌதமிடம் கூறினான் என்பது அவனுக்கே புரியவில்லை.... அடிக்கடி கெளதமை பற்றி பிரபா சொல்வது, “அவன்கிட்ட பேசுறப்போ எதையும் மறைக்க முடியாது.... “ என்பது எவ்வளவு உண்மை என்பதை சாந்தன் உணர்ந்தான்.... அப்போது சிரிப்பு மறைந்து கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் கௌதம், “இது உங்களுக்கு கஷ்டமா இல்லையா?” என்றான்....
அப்போதுதான் சாந்தனின் கண்களும் கலங்கியது, “கஷ்டம் இல்லைனா நான் அவனை காதலிச்சதே பொய்னு ஆகிடாதா?.... ஆனால், நான் இவ்வளவு ஆனபிறகு அவனோட வாழ்றது நிச்சயம் யாருக்கும் சந்தோசம் தராது.... அவனை மறக்க முடியாம இந்த ரெண்டரை வருஷத்துல அவனை நினச்சு பலமுறை தற்கொலைக்கு முயற்சி பண்ணேன்.... ஒவ்வொரு நாளும் அவனை நினச்சு சாகுறதைவிட, ஒரே வழியா செத்துடலாம்னு நெனச்சேன்.... அப்புறம்தான் எனக்கு போராளிகள் தொடர்பு கிடைச்சு பயிற்சி எடுத்துகிட்டேன்.... நமக்கு பிடிச்ச ஒன்னை நாம மறக்கனும்னா, அதைவிட அதிகமா நாம வேற ஒன்னை பிடிச்சதா ஆக்கிக்கனும்.... அந்த விதத்துல பிரபாவோட பிரிவை விட, என் தேசத்து போராட்டம் கொஞ்சமும் குறைஞ்சதில்ல.... எல்லாத்தையும் என்னால மறக்க முடியுமான்னு தெரியல, ஆனால் என்னோட நினைவுகளை திசைதிருப்ப இப்படி ஒரு சூழல் எனக்கு அவசியம்.... அதே போல, பிரபாவை நீதான் மாத்தணும்.... நீ மாத்திடுவன்னு நான் நிச்சயமா நம்புறேன்..... ஆனால், நம்ம சந்தோஷத்துக்காக நம்மை சார்ந்தவங்க கஷ்டப்படாம பாத்துக்கோ.... நீ தெளிவான ஆளுங்குரதால அது உனக்கு புரியும்...... நான் மன நிம்மதியோட என்னோட நாட்டுக்கு போவேன்.... “ என்று கெளதமை கட்டி அணைத்தான்...
கௌதமும் அந்த உருக்கமான பேச்சில், கண் கலங்கிடவே அந்த இடமே உருக்கமாக சூழல்களால் நிரம்பி இருந்தது.... பின்னர் பேச்சு திசைமாறி வேறு விஷயங்களுக்கு மாறி, இறுக்கம் களைந்து , இணக்கம் அதிகமானது.... முதலில் பிரபாவுக்கு சாந்தன் துரோகம் செய்கிறானோ? என்கிற தயக்கம் கௌதமிற்கு இருந்தது.... ஆனால், இறுதியில் கௌதம் சாந்தனின் இந்த முடிவுக்கு பின்னால் இருந்த நியாயத்தை உணர்ந்தான்.... தன்னால் பிரபாவுக்கோ, அவன் குடும்பத்திற்கோ எவ்வித இழப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற ஆழமான எண்ணம் அவனுக்குள் இருந்ததே, இத்தகைய முடிவுக்கு காரணம் என்று புரிந்தது கௌதமிற்கு.... இப்போது பிரபாவைவிட்டு சாந்தன் விலகுவதற்கும் அவனுக்கு ஒரு நியாயமான போராட்ட எண்ணம் இருப்பதால், இதற்கு நிச்சயம் தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று நினைத்தான் கௌதம்....
இப்படி பலவாறும் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.... கலகலப்பான சிரிப்பொலி பிரபா வீட்டிற்குள் நுழைந்ததும் காணாமல் போனது.... உள்ளே நுழையும்போதே முகம் வாடியே காணப்பட்டது பிரபாவிற்கு.... மறுநாள் சாந்தன் அங்கிருந்து கிளம்பியாக வேண்டும் என்று சாந்தன் சொன்னதும், இன்னும் இறுக்கமாகிவிட்டான் பிரபா... இருந்தாலும், சாந்தனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கையில், தான் அவனிடம் அதிக உரிமை இனி எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தன் எல்லைகளை தனக்குள் நிர்ணயித்துக்கொண்டான் பிரபா.... அன்று இரவு இருவரும் ஒரே படுக்கையில் படுத்திருந்தாலும், மற்ற தழுவல்களுக்கு அன்று இருவருமே இடம் கொடுக்கவில்லை.... தனக்கு மட்டுமே என்று நினைத்த உடல், இன்று வேறொருவருக்கு சொந்தமாகி இருக்கையில் எந்த உரிமையில் அவனுடன் உறவாடுவது என்ற தயக்கத்தில் பிரபா, எல்லாவற்றையும் புரந்தள்ளிவிட்டான்.... “சாந்தன் இனி தனக்கு சொந்தமில்லை” என்ற உண்மையை அவன் மனம் புரிந்துகொன்டதன் வெளிப்பாடுதான் இந்த முடிவிற்கு காரணம், ஆனால், அதை முழுமையாக அவன் மனம் ஏற்க இன்னும் பக்குவப்படவில்லை என்பதால்தான் சோகமே உருவாக காணப்பட்டான் பிரபா.... மறுநாள் காலை முதல் சாந்தனுக்காக சிறப்பு விருந்து ஏற்பாடு செய்துகொண்டிருந்தான் கௌதம்....
“சாந்தன் அண்ணே, நீங்க பேசாம உக்காந்திருங்க, எந்த உதவியும் செய்ய வேண்டாம்.... சாப்பிட கூப்பிடுறப்போ வந்தா மட்டும் போதும்” என்று கௌதம் சொன்ன கட்டளையை மீறாமல் சாந்தனும் பிரபாவும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்....
ஒருவழியாக பிரபாவும், கௌதமும் சாப்பிட அமர்ந்தனர்.... பதார்த்தங்களை பார்த்த பிரபாவுக்கு ஒன்றும் புரியாமல், “என்ன சாப்பாடுடா இது?... இருக்குறதுல இடியப்பம் மட்டும்தான் தெரிஞ்ச ஐட்டமா இருக்கு....” என்றான் ....
சிரித்த கௌதம், “அத்தான், இந்த கிரேவி பேரு ஒடியல் கூழ்... மீன், நண்டு, இறால், கருவாடு எல்லாம் கலந்த கிரேவி..... அடுத்து இதுவந்து, கொத்து ரொட்டி.... சிக்கன், ரொட்டி, காய்கறி எல்லாம் கலந்த ஒரு ஹெல்த்தியான டிஷ்.... அப்புறம் இது வந்து தொதல், நம்ம ஊர் பாயாசம் மாதிரி.... இது எல்லாத்தையும்விட இந்த பணியாரம் செய்யத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்...” என்றான்....
“என்னென்னமோ செஞ்சிருக்க, பணியாரம் செய்யவா கஷ்டம்னு சொல்ற?” என்று ஆச்ச்சரியமானான் பிரபா....
“அத்தான், இது சாதாரண பணியாரம் இல்ல, பனங்காய் பணியாரம்... பனம்பழம் தேடி வாங்கிட்டு வர்றதுக்குள்ள தாவு தீந்துடுச்சு.... பனை மரங்களே குறைஞ்சதால இது வாங்குறது ரொம்ப கஷ்டமா போச்சு” என்று அந்த பணியாரத்தை எடுத்து பிரபாவிற்கு வைத்தான்....
சிரித்த பிரபா, “லூசாடா நீ?.... அப்புடி கஷ்டப்பட்டு இதல்லாம் செய்யனும்னு என்ன அவசியம்? அப்டி என்ன இந்த டிஷ்கள்’ல ஸ்பெசல்?....” என்றான்....
“அதுக்கு பதிலை நீங்க சாந்தன் அண்ணன்கிட்டயே கேட்டுக்கோங்க” என்று சாந்தனை பார்த்தான்.... என்ன சொல்கிறான் என்று பிரபாவும் சாந்தனை பார்க்க, சாந்தனோ கண்கள் கலங்கியபடி அமர்ந்திருந்தான்.... கண்களை துடைத்தவாறே எழுந்த சாந்தன் கெளதமை கட்டிப்பிடித்து, “ரொம்ப நன்றிடா.... நிஜமாவே உன்னைப்போல தம்பி இல்லையேன்னு நான் ஏன்குறேன்டா.... ரொம்ப நன்றி” என்று மனம் உருகி வார்த்தைகளை விதைத்தான் சாந்தன்....
“அழாதிங்க அண்ணே.... உங்கள அண்ணனா நெனச்சுதான் நான் இவ்வளவும் பண்றேன்.... நன்றிலாம் வேண்டாம், அப்டி சொல்லி என்னைய பிரிச்சிடாதிங்க.... சாப்புடுங்க” என்று சாந்தனை அமரவைத்து உணவுகளை பரிமாறுனான் கௌதம்.....
நடப்பது ஒன்றும் புரியாமல், விழித்தவாறே பிரபா, “இங்க என்னப்பா நடக்குது?... சத்தியமா ஒன்னும் புரியல.... யாராச்சும் சொல்றீங்களா?” என்றான்....
இறுக்கமான சூழ்நிலையை தளர்த்தும் விதமாக மெலிதாக சிரித்த சாந்தன், “ஒன்னுமில்ல பிரபா.... இப்போ கௌதம் செஞ்சிருக்கது எல்லாமே எங்க யாழ்ப்பாண உணவு வகைகள்.... ஆறு வயசுல விவரம் தெரியாத நேரத்துல நான் சாப்பிட்ட இந்த உணவுகள நான் சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசைப்பட்டேன்... நிஜமாவே இங்க நான் இதை எதிர்பார்க்கல.... இந்த ஒடியல் கூழ் எங்க அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க.... இதை பார்த்ததும் எனக்கு அது நினைவுக்கு வந்ததால ரொம்ப எமொசனல் ஆகிட்டேன்.... சாப்பிட்டு பாரு, எங்க சாப்பாட்டை” என்றதும் கெளதமை பார்த்து பெருமித சிரிப்பு சிரித்தான் பிரபா.... அந்த உணர்ச்சிகரமான விஷயங்கள் முடிந்து அனைவரும் இயல்பு நிலைக்கு வருவதற்குள் சாந்தனின் பயணம் தொடங்க நேரம் வந்துவிட்டதால் இன்னுமொரு இறுக்கமான தருணம் அங்கு வந்துவிட்டது.... சாந்தன் எங்குபோகப்போகிறான் என்பது பிரபாவுக்கு தெரியாது, அதைப்பற்றி தெரிந்த ஒரே ஆள் கௌதம் மட்டும்தான்.... தஞ்சையிலிருந்து திருச்சி தொடர்வண்டி நிலையம் செல்வதுவரை மட்டும்தான் பிரபாவிடம் சாந்தன் கேட்டுக்கொண்டது.... அதற்கு மேல் சாந்தன் எங்கு செள்ளப்போகிறான் என்பதை பிரபாவே தெரிந்துகொள்ள விரும்பவில்லை, தேவையற்ற பொய்களை தவிர்க்கும் பொருட்டு சாந்தனும் அதைப்பற்றி சொல்லவில்லை..... அந்த வீட்டிலிருந்து கிளம்பும் முன் கௌதம் அருகில் வந்த சாந்தன், “தம்பி.... பிரபாவை பத்திரமா பாத்துக்கோ.... எங்கட தேசம் சுதந்திரம் அடைஞ்சா, ஒருநாளில நீங்க ரெண்டுபேரும் அங்க வரவேணும்.... என்ட நினைவே பிரபாவுக்கு வராம நீ பார்த்துக்கோ... யாரோட மனசும் புண்படாதபடி, நீங்க இணைஞ்சு வாழனும்.” என்று கூறிவிட்டு அவனை கட்டிப்பிடித்து கண்ணீரோடு விடைபெற்று சென்றான் சாந்தன்.... சாந்தன் விட்டு சென்ற நினைவுகள், சுவடுகளாக அங்கு நிறைந்து காணப்பட்டது.... அதிலிருந்து கௌதம் மீளவே சில மணி நேரங்கள் ஆனது அவனுக்கு.... கௌதமிற்கே இவ்வளவு பாதிப்பும் தாக்கமும் இருக்கிறது என்றால், பிரபாவை பற்றி சொல்லவே வேண்டாம்.... மிகுந்த மன வருத்தத்தோடும், முகம் முழுக்க வேதனை ரேகைகளோடும் இரவு வீட்டிற்கு வந்த பிரபா, நேராக தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டுக்கொண்டுவிட்டான்..... கௌதமும் பிரபாவின் மனதை அறிந்து எவ்வித தொந்தரவும் செய்யாமல் தன் வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.... அன்று மட்டுமல்ல, அடுத்த இரண்டு நாட்களுக்குமே அந்த இறுக்கம் சிறிதும் குறையவில்லை... எந்த தருணத்திலும் அந்த பிரபாவின் வருத்தத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்த கௌதம், பிரபாவின் வழியில் குறுக்கிடவில்லை.... பின்னர் இன்னும் ஒருவார காலம் ஓரளவு மாறினான் பிரபா... அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட கௌதமும் மெல்ல மெல்ல பிரபாவின் மனத்துயரையும், குழப்பங்களையும் திசை மாற்றிட தன்னாலான விஷயங்களை மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டான்.... சாந்தன் இனி தனக்கில்லை என்பதை பிரபா தாமாகவே உணர்ந்த தருணத்தில், அந்த வெற்றிடத்தை நிரப்ப அங்கு தயாராக இருந்த கௌதம் அதை பூர்த்தி செய்து நிரப்பிவிட்டான் என்றே சொல்லவேண்டும்.... இருந்தாலும் அதை வெளிப்படுத்த பிரபாவிற்கும், அதை நினைவுபடுத்த கௌதமும் தருணம் எதிர்பார்த்து காத்திருந்தனர்..... பழையபடி தன்னிலைக்கு வந்தான் பிரபா, கவலைகள் குறைந்து நிதர்சனம் உணர்ந்து வாழப்பழகிக்கொண்டான் பிரபா....
ஒருநாள் ஞாயிறு, பிரபாவிற்கு ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது.... கௌதமிடம் சென்ற பிரபா, “டேய் கௌதம், இன்னைக்கு நான் ஒன்னு வித்தியாசமா பண்ணலாம்னு நெனக்கிறேன்...” என்றான்....
பதறியதைப்போல நடித்த கௌதம், “அத்தான், பகல்லயேவா?.... வேண்டாம் அத்தான்” என்றான்....
“எரும எரும.... நான் சொல்றத முழுசா கேளு..... எப்பவும் நீதானே சமைக்குற, இன்னைக்கு ஒருநாள் நாள் உனக்கு சமைச்சு, நீ அதை சாப்பிடனும்..... டீல் ஓகேவா?” என்று கூறினான் பிரபா....
சிரித்த கௌதம், “அத்தான், நான் சொன்னதைவிட, இது ரொம்ப பயமா இருக்கு.... இதற்கு அப்பீலே கிடையாதா?” என்றான் ....
“போடா, போயி ஒழுங்கா வெளில உக்காரு.... நான் சாப்பிட கூப்பிடுறப்போ மட்டும் வந்தா போதும், இன்னைலேந்து நீ என் சமையலுக்கு அடிமையாகுற அளவுக்கு நான் செய்றேன் பாரு” என்று சொல்லிவிட்டு கெளதமை வெளியே அமரவைத்துவிட்டு, சமையல் வேலைகளை தொடங்கினான் பிரபா.... பயங்கரமாக, அதி தீவிரமாகவும் மும்முரமாகவும் பிரபா சமைப்பதை சமையலறையில் இருந்த சத்தம் வெளிக்காட்டியது....
ஒருவழியாக பசி வயிற்றை கில்ல, சாப்பிட அமர்ந்தான் கௌதம்.... தான் செய்த பதார்த்தங்களை எடுத்து மேசையில் வைக்க, அவற்றை திறந்து பார்த்த கௌதம், “அத்தான், இந்த தயிர்சாதமும், ஊறுகாயும் செய்யவா இவ்வளவு பில்டப்.... அதுவும், நீங்க பாசுமதி அரிசில தயிர்சாதம் செஞ்சிருக்கிங்க, அப்டி செய்ய கூடாது அத்தான்.... இருந்தாலும், பரவால்ல, தயிர்சாதமும், ஊறுகாயும் பார்க்க நல்லாவே இருக்கு” என்றான்.....
முகம் கடுகடுக்க கெளதமை பார்த்த பிரபா, “டேய் என்ன கொழுப்பா?.... அது தயிர்சாதம் இல்ல, ப்ரைட் ரைஸ், அது கோபி மஞ்சூரியன்.... இது ரெண்டும் ஒனக்கு தயிர்சாதமாவும், ஊறுகாயாவும் தெரியுதா?..... உன்ன கொல்லப்போறேன்” என்று கையை ஓங்க, நிலைமையின் விபரீதத்தை புரிந்து எழுந்து ஓட முற்பட்ட கௌதம், ஓடும்போதே, “அத்தான், தயவுசெஞ்சு, இந்த மாதிரி அடுத்த முறை செஞ்சு, மத்தவங்கள பயமுறுத்தாதிங்க” என்று ஓட, கோபமாகி அவனை அடிக்க பாய்ந்து, சிரிப்பும் கலகலப்புமாக நீண்ட நாட்களுக்கு பிறகு அன்றைய பொழுது கழிந்தது இருவருக்கும்....
அன்றொருநாள் மாலை கெளதமை அழைத்த பிரபா, “கௌதம், ரெண்டு பேரும் பெரிய கோயிலுக்கு போயிட்டு வருவோமா?.... நான் அங்க போயி ரொம்ப நாள் ஆச்சு” என்றான்....
இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய கௌதம், “அத்தான், நீங்களா இத சொல்றது?.... இது என்ன கேள்வி, இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் ரெடியாகிடுவேன்.... நைட் டின்னர்’கு எதாச்சும் தயார் பண்ணிடவா இப்பவே?”என்றான்....
சிரித்த பிரபா, “இன்னக்கி ஒருநாள் எங்கயாச்சும் ஹோட்டல்ல போய் நல்ல சாப்பாடு சாப்பிட்டு வருவோம்... ஏதோ அந்த பெரிய கோவில் ஆண்டவன் புண்ணியத்துல இன்னக்கி நல்ல சாப்பாடு சாப்பிடலாம்” என்று கூற, நறுக்கென பிரபாவின் தொடையில் கிள்ளிய கௌதம், கிளம்பி கோவிலுக்கு கிளம்பினர் இருவரும்....
வாராவாரம் வரும் கோவில்தான் என்றாலும் , அன்று என்னவோ கௌதமிற்கு இமயமலை பனிமலை லிங்கத்தை பார்த்த பரவசம் அவனுக்குள் இருந்தது.... அதைக்கண்ட பிரபா, “என்னடா இவ்வளவு சந்தோஷமா இருக்க?.... இந்த கோவிலுக்கு இப்பதான் முதல்ல வர்றியா என்ன?” என்றான்....
“அப்டிலாம் இல்ல.... ராஜராஜ சோழனை விட அதிக முறை இந்த கோவிலை நான் பாத்துட்டேன்.... உங்களுக்குதான் பக்கத்துலையே இந்த கோவில் இருந்தாலும், புதுசா தெரியும்.... இன்னக்கி உங்ககூட வந்ததால அந்த சந்தோசம் அத்தான்.... அதனாலதான்” என்ற கௌதம் மகிழ்வோடு சிரித்தான்....
இதை கேட்ட பிரபா மனம் மகிழ்ந்தாலும், ஒருபுறம் கோவிலை பற்றி தனக்கு தெரியாது என்பதைப்போல கௌதம் சொன்னதில் கொஞ்சம் கோபமான பிரபா, “இந்த கோவில பத்தி எனக்கு தெரியாதா?...ஏய், நான் இந்த தஞ்சாவூர்லையே பொறந்து, வளர்ந்து, வாழ்ந்தவன்... இந்த கோவிலை பத்தி என்கிட்டயே டயலாக் பேசுறியா?” என்றான்....
சிரித்த கௌதம், “மதுரைக்காரன் கிட்டயே சவாலா? ....உண்மைய சொன்னா, உங்களுக்கு இவ்வளவு கோபம் வருதா?... சரி நமக்குள்ள ஒரு போட்டி... இந்த கோவில்ல இருக்குற ஒரு வித்தியாசமான சிற்பத்தை நான் சொல்றேன், அதை சரியா இன்னைக்கு நீங்க எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கிறீங்கலான்னு பாக்கலாமா?” என்று சவால் விட்டான் கௌதம்....
இது மானப்பிரச்சினயாக மட்டுமல்லாமல் ஊர் பிரச்சினையாகவும் போனது பிரபாவிற்கு, உடனே ஒப்புக்கொண்ட பிரபா, “சரி, என்ன பெட் வச்சிக்கலாம்?” என்றான்....
“காசு பணம் எல்லாம் பெட் வச்சா நல்லா இருக்காது.... நீங்க ஜெய்ச்சா நான் உங்களுக்கு முத்தம் தரேன், நான் ஜெய்ச்சா நீங்க எனக்கு முத்தம் தாங்க.... இதான் பெட், ஓகேதானே?” என்ற கௌதம் விஷமப்புன்னகை உதிர்த்தான்....
கௌதமின் வில்லங்கமான இந்த சவாலின் நோக்கம் புரியாத பிரபாவிற்கு, அப்போது அந்த மான பிரச்சினையில் வெல்ல வேண்டும் என்ற நோக்கமே அதிகம் இருந்ததால், கௌதம் விரித்த வலையில் விழுந்துவிட்டான்.... “சரி சொல்லு, என்ன சிற்பம் அது?” என்றான் பிரபா....
“மூனு தலை, ஏழு கைகள், குதிரை தலை, யானை உருவம் கொண்ட ஒரு சிற்பம் இங்க இருக்குற ஒரு தூன்ல இருக்கு, அதை கண்டுபிடிங்க” என்று கௌதம் போட்ட சவால் பிரபாவிற்கு குழப்பத்தையே அதிகம் ஆக்கியது.... இருந்தாலும் அந்த கோவிலில் உள்ள அத்தனை தூண்களையும் ஒன்றுவிடாமல் தேடினான் பிரபா.... கோவிலுக்கு வந்தவர்கள் பலரும் பிரபாவை ஒரு வித்தியாசமான பார்வையில் பார்க்க, அதைகூட பொருட்படுத்தாமல் தேடினான்.... கடைசியாக ஒரு வழியாக களைப்பின் மிகுதியால் தன் தோல்வியை ஒப்புக்கொண்ட பிரபா, “சரிடா நான் ஒத்துக்கறேன், என்னால கண்டுபிடிக்க முடியல.... நீயே சொல்லிடு” என்று கூறிவிட்டான்....
“அப்டி சொன்னா எப்டி?.... பந்தயத்த மறந்துட்டிங்களே..... முத்தம் கொடுங்க” என்றான் கௌதம்....
யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிரபா, மெல்ல கௌதமின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்....
உற்சாகத்தின் எல்லைக்கே சென்ற கௌதம், வெட்கத்தில் சிரித்தான்....
“சரி சொல்லு, எங்க இருக்கு அந்த சிற்பம்?” என்று மறுபடியும் பிரபா கேட்க, சுற்றும் முற்றும் பார்த்த கௌதம், பிரபாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.... பதறி விலகிய பிரபா, “என்னடா பண்ற?... நீ என்னத்துக்கு எனக்கு முத்தம் கொடுத்த?” என்றான்....
“சாரி அத்தான்..... நானும் தோத்துட்டேன்.... அப்டி ஒரு சிற்பமே இங்க இல்ல.... உங்கள வெறுப்பேத்ததான் அப்டி சொன்னேன்” என்று கௌதம் சிரிக்க, பிரபாவோ கோபமானாலும் அதையும் மீறி சிரித்துவிட்டான்.... பின்னர் உணவகம் சென்று சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்கு செல்லும்வரை பிரபா அதை சொல்லி சிரித்துக்கொண்டே வர, கௌதம் மனமோ பிரபாவுடனான முத்த பரிமாற்றங்களை எண்ணி லயித்துக்கொண்டிருந்தது.... இதையெல்லாம் பிரபா எப்படி பார்க்கிறான்?, தன் காதல் அவனுக்கு புரிகிறதா? என்று இன்னும் ஒரு குழப்பமான கேள்வி கெளதமை குழப்பிக்கொண்டே இருந்தது.... இரவு முழுக்க அதே சிந்தனையில் இருந்த அவன், இந்த குழப்பங்களுக்கு நாளையே முடிவு கொண்டுவர வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.... மறுநாள் காலை, பிரபா பணிக்கு கிளம்பும்போது, “அத்தான், இன்னக்கி ஒரு முக்கியமான விஷயம் நான் உங்ககிட்ட பேசணும், எத்தன மணிக்கு வருவீங்க?” என்றான்....
“இன்னைக்கு அரைநேரம்தான் காலேஜ், நான் மதியம் சாப்பிட வந்திடுறேன்.... இன்னக்கி உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு.... மறக்காம ஒரு ஸ்வீட் மட்டும் செஞ்சிடு...” என்று கூறிவிட்டு பிரபா சென்றதும், கௌதம் மனது பட்டாம்பூச்சியாக சிறகடிக்க தொடங்கியது.... “அது என்ன சர்ப்ரைஸ்?... ரொமாண்டிக்கா லவ்வை ப்ரப்போஸ் பண்ண போறாரா?... இல்ல, அதையும் தாண்டி மத்த விஷயங்கள் நடக்க போகுதா?... பரவால்லையே, நேத்து கொடுத்த முத்தம் இவ்வளவு சீக்கிரமா வேலை பாக்குதே” என்று மனம் மகிழ யோசித்தான் கௌதம்.... பிரபா ஏதேனும், ஆச்சரியமாக செய்து தன்னை அசத்துவதற்கு முன்னால் தான் அசத்த வேண்டும் என்று எண்ணியவாறே மதிய சமையலை அதகளப்படுத்தினான் கௌதம்..... பிரியாணி முதல் சகல ஐட்டங்களும் கமகமக்க தயார் ஆகிக்கொண்டிருந்தது.... தானும் அன்று அழகாக தெரிய தன்னையும் எப்போதையும்விட அன்று இன்னும் மெருகேற்றும் விதமாக அழகுபடுத்திக்கொண்டவாறே, அழகான ஆடைகளை அணிந்து பேரழகோடு தன் அழகை கண்ணாடி முன் ரசித்துக்கொண்டிருந்தான்.... பின்னர் பிரபா வரும் நேரம் ஆகிவிட்டதால், வீடு முழுக்க கமகமக்கும் நறுமண திரவியங்களை தெளித்து, சாதாரண மூடில் வருபவர்களைக்கூட, காமத்தின் வழியில் செலுத்தும்படி எல்லாம் செய்து வைத்திருந்தான்.... எப்போதும் கல்லூரி முடிந்தவுடன் நேராக வீட்டிற்கு வந்துவிடும் பிரபா, அன்று சோதனைக்காகவே இரண்டு மணி நேரம் கூடுதல் ஆனபிறகும் வரவில்லை.... ஆனால், இந்த தாமதத்தைகூட கௌதம், “எனக்காக எதுவும் வாங்கிட்டு வரப்போயிருக்கார் போல..... ச்ச... நான்தான் எதுவும் கிப்ட் கூட வாங்கல” என்று நொந்துகொண்டான்..... இப்படி யோசித்துக்கொண்டிருக்கையில் கதவு தட்டப்பட, ஆர்வத்திற்கு இடையிலும் தன் முகத்தை கண்ணாடியில் சரி செய்துகொண்டு கதவை திறந்தான் கௌதம்.... திறந்த கௌதமிற்கு அங்கு கண்ட காட்சி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்..... அங்கு நின்றது பிரபாவுடன் அமுதா, பிரபாவின் மாமா மகள்.... இவள் நல்லவள்தான் என்றாலும், இவளை சுற்றிய சில காரணங்களால்தான் பிரபா சாந்தனுடன் பிரிய நேர்ந்தது என்பதை கௌதம் அறிந்திருந்தான்.... இப்போது மீண்டும், ரீமேக்’காக வந்திருப்பது, தன் காதலை கெடுக்கவோ? என்ற எண்ணம் மனதிற்குள் ஆழமாக பதிந்தது.... ஆனாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் உள்ளே அழைத்தான் கௌதம்.... உள்ளே வந்த அமுதா, மூக்கை கைகுட்டையால் அமிழ்த்தியவாறே, “ஐயோ, என்னப்பா இது ஸ்மெல்?... குடலை பெரட்டுது” என்றாள்.....
“அது ரூம் ஸ்ப்ரே.... கொஞ்சம் ஓவர் ஆகிடுச்சு, அதான்” என்று கூறிவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டான் கௌதம்....
“என்னதான் உங்களுக்கு டேஸ்டோ, இதல்லாம் மார்ட்சரில அடிக்கிற ஸ்ப்ரே” என்று உள்ளே நுழைந்ததுமே அமுதா, கௌதம் இடையில் பனிப்போர் தொடங்க, அந்த வாசனை திரவியம் காரணமாக இருக்கும் என்று கௌதம் நினைத்தே பார்க்கவில்லை.... அமுதா கூறிய விஷயங்களைவிட, அவள் கூறிய எல்லாவற்றிற்கும் சிரித்தபடியே “ஆமாம்” போட்ட பிரபா மீது எரிச்ச்சலானான் கௌதம்.... இருந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல், “சரி, சாப்பிட வாங்க அத்தான்” என்றான் கௌதம்....

 “ஐயோ சாரிடா.... அமுதாவோட வர்ற வழியிலேயே நாங்க சாப்டோம்.... நீ சாப்பிடுடா...” என்று பிரபா சொன்னதும், கௌதமின் முகம் சோர்வாக ஆகிவிட்டது..... இதை கவனித்த பிரபா, “சரி, ஸ்வீட் செஞ்சியா?.. அது மட்டும் ரெண்டு பேருக்கும் தாடா” என்று கூறவே, அதில் கொஞ்சம் மன நிம்மதி அடைந்த கௌதம், மகிழ்வுடன் இரண்டு கிண்ணங்களில் கேசரி எடுத்து இருவருக்கும் கொடுத்தான்....
பிரபா, ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் அமுதாவோ, “என்ன கௌதம், ஏலக்காய் இவ்ளோ போட்டிருக்க?.... கேசரியோட டேஸ்டே மாறிடும் தெரியுமா?... அதோட இவ்வளவு நெய் ஊத்தினா ஹெல்த் என்னாகுறது?” என்று கூறியது, கெளதமை எரிச்சலடைய வைத்தது....

“அப்டிலாம் ஒன்னும் ஆகாது அமுதா.... எவ்வளவு நெய் ஊத்தினா, என்ன பாதிப்பு வரும்னு எனக்கும் தெரியும்... நான் அதை படிச்சவன்தான்” என்ற கெளதமை இடைமறித்த பிரபா, “டேய், அமுதா படிச்சது டயட்டீசியன் கோர்ஸ்’டா.... எந்தெந்த சாப்பாடு, எவ்வளவு எப்டி சாப்பிடனும்னு அவளுக்கு சரியா தெரியும்” என்று பிரபா அமுதாவிற்கு ஆதரவாக பேசியது, எரியும் நெருப்பில் நெய்யை(கேசரியிலும் நெய், நெருப்பிலும் நெய்.... எவ்வளவு பொருத்தம் பாத்திங்களா) ஊற்றியது போல இருந்தது கௌதமிற்கு.......
அதற்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாதவனைப்போல தன் அறைக்கு சென்று படுத்துவிட்டான் கௌதம்.... “இவனெல்லாம் திருந்தவே மாட்டான்.... இவன் ரொமான்ஸ் மூடோட வருவான்னு நெனச்ச நான்தான் இந்த உலகத்துலேயே பெரிய முட்டாள்.... மனுஷனா இருந்தா அந்த மூட் வரும், இந்த மாதிரி ஜந்துக்களுக்கு என்னதான் வரும்.... இதுல, அவ நான் செய்ற சாப்பாட்டை குறை சொல்றா, கொறமாசத்துல பொறந்தவ.... அதுக்கு பல்லை காட்டிகிட்டு இந்த லூசும் சிரிக்குது.... கொஞ்சமாவது லவ் பெய்லியர் ஆன மாதிரியா திரியுறான்..... “ என்று பிரபாவையும், அமுதாவையும் வசைமாரி மொழிந்தான் கௌதம்... அப்படியே நினைத்தவாறே தூங்கிவிட்டான் கௌதம்... மீண்டும் எழுந்து பார்க்கும்போது மாலை மணி ஆறு ஆகிவிட்டது.... இன்னும் ஹாலில் சிரிப்பு சத்தம் ஓயவில்லை.... “என்னதான் பேசிக்கிதுங்களோ தெரியல, இவ்வளவு நேரமா இப்டி மொக்கை போடுதுங்க.... சாயங்காலம் பிரபா காபி குடிப்பார், அதை போட்டு குடுத்திட்டு நாம இங்க வந்திடலாம்” என்று எண்ணியவாறே அறையை விட்டு வெளியே வந்தான் கௌதம்... பிரபாவின் கையில் காபி கோப்பை இருந்தது, அதை கையில் வைத்தவாறே , “ரொம்ப நல்லா இருக்கு அமுதா காபி.... நல்ல முன்னேற்றம்தான்... அம்மா போடுற மாதிரியே போட்டிருக்க, ஆயிரம்தான் இருந்தாலும் பொண்ணுங்க போடுற காபி மட்டும் ஒரு தனி டேஸ்ட் தான்” என்றான்
இதை கேட்டதும் இன்னும் கோபமான கௌதம், “இருக்கும்... உனக்கு இதுவும் இருக்கும், இதுக்கு மேலையும் இருக்கும்... உனக்கெல்லாம் போய் விழுந்து விழுந்து செஞ்சேன் பாரு, என் புத்தியை எதால அடிக்கிறதுன்னே தெரியல” என்று மனதிற்குள் நினைத்தவாறே மீண்டும் அறைக்குள் சென்றுவிட்டான் கௌதம்....
“இந்த லூசுகளை பத்தி என்னத்த நெனக்கிறது, நம்ம வேற எதாச்சும் செஞ்சு மைன்ட டைவர்ட் பண்ணலாம்” என்று நினைத்த கௌதம் கையில் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தான்.... பக்கங்களை விரல்கள் புரட்டிக்கொண்டே இருந்தாலும், மனம் முழுக்க ஹாலில் இருந்தவர்களை சுற்றியே அலைபாய்ந்தது..... ஒருவழியாக அமுதா, “ஐயோ அத்தான், இப்டி பேசிட்டே நேரம் போனதே தெரியல..... அப்பா நாலு தடவை கால் பண்ணிட்டாங்க.... இன்னும் ரெண்டுநாள் தஞ்சாவூர்லதான் இருப்பேன் அத்தான், நாளைக்கு சாயந்திரம் பார்க்கலாம்” என்று அமுதா கூறியது துல்லியமாக கௌதமின் காதுகளில் விழுந்தது.... கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும், மனம் முழுக்க மறுநாள் மாலையும் இந்த கொடுமையை அனுபவிக்கணுமா? என்று நொந்துகொண்டான்.....
அமுதா சென்றபிறகு கௌதம் அறைக்கு வந்த பிரபா, “என்னடா இங்க வந்துட்ட?.... நம்ம அமுதாதானே, பேசிட்டு இருந்திருக்கலாம்ல” என்றான்....
இன்னும் கோபம் குறையாத கௌதம், “எதுக்கு?... மறுபடியும் அவ என்னைய அசிங்கப்படுத்தனும், அதை நீங்க ரசிக்கனுமா?.... நல்ல எண்ணம்தான்” என்றான்....
சிரித்த பிரபா, “அட லூசு, அதை நீ பெருசா எடுத்துகிட்டியா?.... அவ விளையாட்டுக்கு சொன்னாடா.... அதல்லாம் மனசுல வச்சுக்காத.... வா சாப்பிடலாம்” என்றான்....
“நீங்க சாப்பிடுங்க, எனக்கு பசிக்கல.... அவளையே எதாவது சாப்பாடு செய்ய சொல்லிருக்கலாம்ல, அவ கை பட்டாதான் உங்களுக்கு பாகக்காயும் இனிக்குமே?” என்று கௌதம் சிறுபிள்ளை போல பேசியதை கண்டு பிரபாவே ஆச்சரியப்பட்டான்.... பின்னர் ஒருவழியாக அவனை சமாதானப்படுத்தி இருவரும் சாப்பிட்டு முடித்தனர்....
எல்லா வேலைகளும் முடிந்து படுக்க செல்லும் முன் கெளதமை அழைத்த பிரபா, “இங்க வா.... உன்கிட்ட பேசணும்” என்றான்....
நிறைய ஏமாற்றங்களோடு இருந்தாலும், ஒரு சிறு நம்பிக்கையில் அவன் அருகில் அமர்ந்தான் கௌதம்.....
“நம்ம அமுதா இருக்கால்ல, அவ உண்மையாவே ரொம்ப நல்ல பொண்ணுடா” என்றான் பிரபா....
கடுப்பான கௌதம், “இதை சொல்லத்தான் கூப்டிங்களா?.... ஆள விடுங்க, நான் போயி தூங்குறேன்” என்றான்...
விடாப்பிடியாக மேலும் தொடர்ந்த பிரபா, “நெஜமாதான் சொல்றேன் கௌதம்... சின்ன வயசுலேந்து அவ எனக்குதான்னு வீட்ல பேசிப்பேசியே அவ மனசுல ஆசைய வளர்த்துட்டாங்க.... நான் சாந்தன் விஷயத்துல வீட்டை விட்டு வந்ததுக்கப்புறம், மாணிக்கம் மாமா எல்லா விஷயத்தையும் அவகிட்ட சொல்லிருக்கார்.... முதல்ல அழுதாலும், அப்புறமா மனசை தேத்திக்கிட்டு அவங்க அப்பா அம்மாவை அதுவே வேற மாதிரி பேசி சமாளிச்சுடுச்சு.... அதனால, எங்க ரெண்டு குடும்பத்துக்கு இடைளையும் நடக்க இருந்த பெரிய சண்டை நின்றுச்சு.... இப்பவும்கூட என் அம்மா, மாமா யாரும் என்னை புரிஞ்சுக்காத போதும், அவ சரியா புரிஞ்சு நடந்துகிட்டா..... இப்பவும் அவளா வந்து எனக்கு ஆறுதல் சொல்ல வந்திருக்கா.... ரொம்ப நல்ல பொண்ணு” என்றான்....
கௌதமின் மனமோ இன்னும் குழப்பம் என்பது சிறிதும் குறையாமல் தத்தளித்தது.... இவ்வளவு அபிமானம் பெற்றுவிட்ட அமுதாவை மீண்டும் பிரபா ஏற்றுக்கொண்டுவிட்டால், “தன் காதல் அரும்பும் முன்னரே கருகிய மலரைப்போன்று ஆகிவிடுமே” என்று மனம் நொந்தான் கௌதம்....
அந்த குழப்பத்தோடு இரவு படுத்துவிட்டான்.... மறுநாள் தானாகவே அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்த கௌதம், தன் காதலை மீண்டும் ஒருமுறை பிரபாவிடம் வலியுறுத்த நினைத்தான்.... எந்த விஷயத்தையும் எளிதாக கையாளும் கௌதமால், பிரபா விஷயத்தில் குழப்பமும், கோபமுமே அதிகம் தென்பட்டது... மறுநாள் காலை பிரபா அவசரமாக பணிக்கு சென்றுவிட்டதால், அதுபற்றி பேச வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடினான் கௌதம்... அன்றைய பொழுது முழுவதும் அவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனையாக கழிந்தது.... ஒருவேளை மாலை வீட்டிற்கு வராமல் நேரடியாக அமுதாவை பார்க்க பிரபா சென்றுவிடுவானோ?.. அமுதா மீதான பிரபாவின் அபிப்ராயம் காதலாக மாறிடுமோ? என்றெல்லாம் என்னென்னமோ நினைத்த கௌதம் அன்றைய பொழுது முழுவதும் எதுவும் சாப்பிட கூட மறந்தவனாக இருந்தான்.... இப்படி இதுவரை எந்த விஷயத்திற்கும் கௌதம் குழம்பியதில்லை, ஏனோ பிரபாவை எதற்காகவும் எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்ற அதீத எதிர்பார்ப்பும், காதலும் கெளதமை இப்படி மழுங்கடித்து முடமாக்கியது.... நல்லவேளையாக பிரபா வந்துவிட்டான் ஒருவழியாக.... வந்தவன், கௌதமிடம் பேச எதுவும் நேரமில்லாதவனைப்போல நேரத்தை பார்த்தவாறே அவசர அவசரமாக கிளம்பினான்..... “அத்தான், எங்க இவ்வளவு அவசரமா கிளம்புறீங்க?... உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்” என்று எப்போதும் போலல்லாமல் அமைதியாக கூறினான் கௌதம்.....
சிரித்த பிரபா, “என்னடா இவ்வளவு பவ்யமா பேசுற?... இப்போ நேரமில்லை.... ஒன்னு பண்ணலாமா?... நீயும் என்கூட வா, போற வழில நானும் உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்” என்று கூறவே கௌதமும் வேறு வழி இல்லாமல் பிரபாவுடன் கிளம்பினான்.....
வெளியில் பிரபா நண்பனின் மகிழுந்து நின்றது.... அமுதாவை பார்க்கப்போவதற்காக பிரபா இவ்வளவு மெனக்கடுவதை கௌதம் வித்தியாசமாகவே பார்த்தான்.... ஆனாலும், அந்த மகிழுந்து பயணத்தின் போது எப்படியும் தன் எண்ணங்களை பிரபாவிடம் கூறியே ஆகவேண்டும் என்று நினைத்தவாறே வண்டியில் ஏறினான்.....
வண்டி புறப்பட்ட அடுத்த நிமிடம் பிரபாவே தொடங்கினான், “கௌதம், நீ அமுதாவ பத்தி என்ன நினைக்குற?” என்றான்....
இந்த கேள்வி நிச்சயம் கெளதமை மேலும் கோபமாக்கியது, “அவளுக்கென்ன?.... அவள பத்தி நான் என்னத்த நெனக்கிறது?.... என் கூட இருக்குறவங்களையே என்னால இன்னும் சரியா புரிஞ்சுக்க முடியல, இதுல அந்த பொண்ணை பத்தி என்ன நெனக்கிறது?” என்று அந்த கேள்வியிலும் பிரபாவை வாறினான்....
“சரி அத விடு.... சாந்தன் நாம பேசிகிட்டு இருக்கையில ஒன்னு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றான் பிரபா....
கௌதம் மனதிற்குள் கொஞ்சம் நிம்மதி ஆனது, ஒருவேளை தன்னிடம் கூறியதைப்போல பிரபாவிடமும் தாங்கள் இருவரும் ஒன்று சேரவேண்டும் என்று கூறி இருப்பானோ? என்கிற குழப்பத்தில், “என்ன சொன்னார்?... எதைப்பத்தி?” என்றான் கௌதம்.....
“அவனை மறக்க சொன்னான், அதுக்கப்புறம் உன்ன சுத்தி உள்ளவங்க சந்தோஷப்படுற மாதிரி வாழ்க்கைய அமைச்சுக்க சொன்னான்... அப்டினா, அவன் நான் அமுதாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு அப்டி சொல்லிருப்பானோ?” என்றான் பிரபா....
இதை கேட்டு, ஆடிப்போனான் கௌதம்.... “அடப்பாவி... பக்கத்துல இருக்குறவங்க சந்தோஷப்படுற மாதிரின்னா, என்னை லவ் பண்ண அவர் சொன்னார்.... இதை அரைகுறையா புரிஞ்சுகிட்டு இந்த லூசு இப்டி புரிஞ்சுக்குதே?.... அவர் கூடவே இருக்குற என்னைவிட, பேராவூரணில இருக்குற அமுதா பக்கத்துல வந்துட்டாளா?” என்று தன் மனதிற்குள் நினைத்து கவலைப்பட்டான் .....
ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாத கௌதம், அமைதி காத்தான்... தன்னிடம் சாந்தன் சொன்ன விஷயங்களை இப்போது பிரபாவிடம் கூறினாலும், அதை ஒருவேளை பிரபா நம்பாவிட்டால் அது மேலும் மன சங்கடமாகிவிடும் என்பதால் அத்தகைய அமைதி காத்தான்.... கௌதமின் அமைதியை கவனித்த பிரபா, "என்னடா சொல்ற?.... நான் இன்னைக்கு என் காதலை அவகிட்ட சொல்லலாம்னு இருக்கேன், நீ என் பக்கத்துல இருந்தா எனக்கு தைரியமா இருக்கும்.... கொஞ்சம் பதட்டமா இருக்குடா" என்ற பிரபா தனக்குள் சிரித்துக்கொண்டான்.... இடியே தலையில் விழுந்ததைப்போல உணர்ந்தான் கௌதம்.... "நீ இந்த மாதிரி பண்ணிகிட்டே இரு, எத்துன ஜென்மம் எடுத்தாலும் உனக்கு லவ்வரே செட் ஆகமாட்டாங்க.." என்று வழக்கம்போல மனதிற்குள் மட்டுமே நினைத்துக்கொண்டான் கௌதம்.... எது நடக்கக்கூடாது என்று நினைத்தானோ, எதை நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தானோ அது தன் கண் முன்னாடியே தன்னை மீறி நடக்க இருக்கும் தருணத்தை எண்ணி விரக்தியின் உச்சத்திற்கே சென்றான் கௌதம்.... அழுதுவிடாமல் மனதை கட்டுப்படுத்தியவாறே எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான் கௌதம்... பிரபாவோ இன்னும் "அமுதா புராணத்தை" விடாமல் பாடிக்கொண்டே இருந்தான்.... எதையும் காதால் கேட்கவோ, அதை உணரவோ கௌதம் விரும்பவுமில்லை, அதை கவனிக்கவும் இல்லை... ஒருவாராக அமுதா இருக்கும் இடத்தை அடைந்ததும், மகிழுந்தின் கண்ணாடி வழியே முகத்தை கொஞ்சம் அழகுபடுத்தியவாறே கெளதமை பார்த்து,"முகம் பிரஷா இருக்கா.... மூஞ்சில ஒரு ரொமாண்டிக் லுக் தெரியுதா?" என்று சிரித்தான்  பிரபா.... அதற்கு சம்பிரதாயத்துக்காக கூட சிரிக்க மனமில்லாமல், கீழே இறங்கினான் கௌதம்.... அமுதாவை பிரபா பார்த்ததும் தான் ஒருவன் நிற்பதையே அவன் கவனிக்காததால், பிரபாவை பார்த்த கௌதம், "சரி அத்தான், நீங்க கிளம்புங்க, எனக்கு தலை வலிக்குது நான் கிளம்புறேன்" என்றான்.... "இருடா, லவ்வை சொல்லிடுறேன், அப்புறம் போகலாம்" என்று பிரபா கட்டாயப்படுத்த, அதற்கு மேலும் அதை சகிக்க முடியாத கௌதமோ "இல்ல அத்தான், நான் கெளம்புறேன்" என்று கிளம்ப முற்பட்டான்....
சிரித்த அமுதா, "ஐயோ பிரபாத்தான், தயவு செஞ்சு சொல்லிடுங்க, அவன் அழுதிடுவான் போல" என்றாள்... ஒன்றும் புரியாமல் விழித்த கௌதமிடம் ஒரு ரோஜாப்பூவை நீட்டிய பிரபா, "ஐ லவ் யூ கௌதம்" என்றான்.... ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற கௌதம், தன்னை அறியாமல் தன்னையும் மீறி அழத்தொடங்கிவிட்டான்... பின்னர் அவனை சமாதானப்படுத்திய பிரபா, "லூசா நீ?... இதுக்கல்லாம் போயி அழுவியா?... நீ எவ்ளோ மெச்சூரிட்டியான பையன்னு நெனச்சேன், நானும் உன்ன லவ் பண்றது உனக்கு புரியலையா?" என்றான்.... கௌதமால் இன்னும் அழுகயிலிருந்து மீள முடியவில்லை... அமுதாவோ, "அழாத கௌதம்... நேத்து அத்தான பாக்க வந்தது கூட, நான் ஒருத்தர லவ் பண்றேன், அதுக்கு அத்தானோட ஐடியா கேக்கத்தான்... அப்போதான் அத்தானும் உன்னை லவ் பண்றது எனக்கு தெரிஞ்சுது... உன்கிட்ட விளையாடி பாக்கலாம்னுதான் இவ்வளவும் பண்ணாரு.... சாரிடா" என்றாள்....
"இல்ல அமுதா, நான்தான் உனக்கிட்ட சாரி கேக்கனும், உன்னைத்தான் நான் தப்பா நெனச்சுகிட்டேன்.... இந்த மாதிரி காதல்களை எத்தனை பேரு இங்க புரிஞ்சுக்கிறாங்க?.... நீ இவ்ளோ சின்ன பொண்ணா இருந்தாலும் இதை புரிஞ்சுகிட்டதுக்கு தாங்க்ஸ்" என்று அழுகைக்கு இடையில் தேம்பியவாறே இத்தகைய வார்த்தைகளை உதிர்த்தான் கௌதம்....
சிரித்த பிரபா, "சாந்தன் எனக்கில்லைன்னு எப்போ தெரிஞ்சுதோ, அப்போவே என் கண் முன்னால வந்தது நீதான்டா... நீ என்ன மாயமந்திரம் போட்டியோ, நானும் சாந்தனும் திருச்சி போன ஒன்றரை மணி நேரத்துல முக்கால் வாசிநேரம் உன்னைப்பத்திதான் பேசுனான்.... நாம ரெண்டு பேரும் சேரணும்னு அவன் ரொம்ப ஆசைப்பட்டான்.... என் ஆசை, சாந்தனோட ஆசை, உன் காதல் எல்லாம் உன்னை நான் அப்பவே லவ் பண்ண வச்சிடுச்சு... ஐ லவ் யூ டா" என்றான் பிரபா... பின்னர் சூழ்நிலை அறிந்து அமுதா சென்றுவிட, பல விஷயங்களையும் மெய்மறந்து பேசினார்கள் இருவரும்.... ஒருகட்டத்தில் சாந்தன் தனக்கில்லை என்பதை மனதார ஏற்க பழகிய பிரபா, அடுத்த நொடியே கெளதமை தன்னை அறியாமல் காதலிக்க தொடங்கிவிட்டான்.... சாந்தனின் சொல்லுக்காக மட்டுமல்லாமல், கௌதமின் உண்மையான காதலின் வலிமையால் அந்த காதலை ஏற்றுக்கொண்டுவிட்டான் பிரபா... ஒருவழியாக பத்து மணிக்கு வீட்டிற்கு சென்றனர் இருவரும்.... எப்போதும் வீடே எதிரொலிக்க கலகலக்கும் வீடு, அன்று ஏனோ அமைதியையும், மவுனத்தையும் காதலாக அள்ளித்தெளித்தது....
கௌதம் இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..... சாதாரணமாக பேசுவான், இடையிடையே அவனையும் மீறி கண்ணீர் துளிகள் பெருக்கெடுக்கும், அப்போதெல்லாம் கெளதமை தன் மார்போடு அனைத்து ஆறுதல் கூறுவதில்தான் கௌதமிற்கு எத்தனை எத்தனை சுகம்.... இருவரும் அதைத்தவிர வேறு எதையும் எதிர்பாராமல் உறங்க சென்றுவிட்டனர்.... மறுநாள் காலை கௌதமிற்கு புத்துணர்ச்சியையும், பொலிவையும் கொடுத்தது.... எப்போதும்போல பிரபாவிற்கு காபி எடுத்துக்கொண்டு போனாலும், எப்போதையும்விட ஒரு உற்சாகமும், கனிவும் இன்று அதிகமாக கௌதமிற்கு இருந்தது..... இவ்வளவு நாள் ஒரு நண்பனைப்போன்ற ஒருவனிடம் பழகியதற்கும், இன்று தன் காதலனுடன் பழகுவதற்கும் வித்தியாசம் இருக்காதா என்ன.... ஆனால், ஆச்சரியமாக கௌதமிற்கு அன்று வெட்கமும் வேறு இருந்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.... ஹாலில் அமர்ந்து தன் பணிகளை செய்துகொண்டிருந்தான் பிரபா, அவனிடம் காபியை கொடுத்ததும், அதை வாங்கி வைத்துவிட்டு கௌதமின் கைகளை பிடித்து, “உக்காருடா, சும்மா வேலையே பாத்துகிட்டு இருக்காத” என்று கூறிவிட்டு கௌதமின் அருகில் நெருங்கி அமர்ந்தான்.... இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், கௌதம் மனதிற்குள் படபடப்பு அதிகமானது, பிரபாவின் மூச்சுக்காற்று பட்டதும், அனல் காற்று வீசுவதைப்போல உணர்ந்தான் கௌதம்...... தொடுதல்களும், கை தழுவல்களும் இயல்பாக நடப்பதுதான் என்றாலும், அன்று கௌதமை சொக்க வைத்தது.... இது எதுவும் புரியாமல், தெரியாமல் தன் பணிகளை கவனித்த பிரபா, அதற்கு பின்னரும் தான் கிளம்பி பணிக்கு செல்ல ஆயத்தமானான்.... செல்லும் முன் கெளதமை அழைத்த பிரபா, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு எதார்த்தமாக வெளியே சென்றுவிட்டான்..... மின்சாரம் பாய்ந்ததைப்போல உணர்ந்தான் கௌதம், அந்த ஒருசில நொடிகளில் கௌதம் உடல் முழுக்க சிலிர்ப்பு உண்டானது.... முத்தம் கொடுத்தவன், எதுவும் நடக்காதது போல சென்றுவிட்டாலும் கௌதாமோ உள்ளுக்குள் ஒருவித உணர்வு கலவைகளையே அனுபவித்தான்.... இத்தகைய உணர்வுகள் மற்றும் வித்தியாசங்களில் இருந்து விடுபடவே கௌதமிற்கு இரண்டு நாட்கள் ஆனது.... இருவருக்குள்ளும் அதிகபட்சம் இத்தகைய சைவ முத்தங்களுக்குள்ளேயே முடிந்துவிட்டது.... அதைத்தாண்டி உடல் ரீதியாக எதையும் இருவருமே அப்போதைக்கு எதிர்பார்க்கவில்லை... ஆனால், மன ரீதியாக இருவரும் ஒவ்வொரு நாளும் மிகவும் நெருக்கமானார்கள்.... மனம் திறந்து பல விஷயங்களையும் பேசினர், ஒருவர் இன்றி மற்றொருவர் வாழ முடியாது என்கிற நிலைக்கு இருவருமே தள்ளப்பட்டனர்.... அத்தகைய நல்ல விஷயங்கள் மட்டுமே நடந்த நாட்களில், திருஷ்டிப்பரிகாரம் போல ஒரு நிகழ்வும் நடந்தேறியது... திடீரென ஒருநாள் வயிற்றுவலியால் அவதிப்பட்டான் பிரபா.... அதோடு மட்டுமல்லாமல் ந்க்காயச்ச்சலும், வாந்தியும் சேர்ந்திட, பதறிய கௌதம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், பிரபாவுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்றும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குடல்வாலை நீக்கியாக வேண்டும் என்றும் கூறப்பட்டது.... இத்தகைய அறுவை சிகிச்சைகள் மிக சாதாரணமாக நகரங்களில் நடைபெறுகிறது என்றாலும், அறுவை சிகிச்சை என்றதுமே கௌதம் பதரிப்போனான்... மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடானபோது பிரபாவின் குடும்பத்திற்கு கௌதம் தகவல் சொல்லி அனுப்பிவிட்டான்.... சாதாரண காய்ச்சல் என்றாலே, அம்மா அருகில் இருக்கவேண்டும் என்று சிறுவயதில் இருந்தே பழக்கமான பிரபா, தனக்கு அறுவை சிகிச்சை என்றதும் பயத்தில் பதறிவிட்டான்.... சரியாக அந்த நேரத்தில் அம்மாவும், மாமாவும் வந்தது பிரபாவின் மனதிற்குள் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இன்னும் அந்த வீம்பில் இருந்தான்... ஆனாலும், அந்த வீம்பு அவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்காமல், அம்மா அழுததைப்பார்த்து முடிந்துவிட்டது..... அம்மா அருகில் அமர்ந்து, ஆறுதலான வார்த்தைகள் கூறியதும் உருகிய பிரபா கொஞ்சம் பயம் தெளிந்தான்.... அறுவை சிகிச்சை அறைக்குள் செல்லும் முன் மாணிக்கத்தை அழைத்த பிரபா, “மாமா, அம்மாவ நல்லபடியா பாத்துக்க.... எனக்கு எதாச்சும் ஆச்சுன்னா நீதான் மாமா எல்லாத்தையும் பாத்துக்கணும்” என்று உருக்கமானான்.....
இதை கேட்டு கடுப்பான மாணிக்கம், “டேய், கொஞ்சம் விட்டா ஓவரா போற.... இப்பல்லாம் ஹால்ஸ் சாப்பிடுற மாதிரி, ஹார்ட் ஆபரேசன் செஞ்சுகிட்டு போராணுக.... சாதாரண அப்பெண்டிக்ஸ் எடுக்குறதுக்கு இவ்வளவு பில்டப் ஆகாதுடா.... போனா போறன்னு விட்டா, அநியாயத்துக்கு டயலாக் பேசுற... வாய மூடிட்டு போயி, ஆபரேசன் செஞ்சிட்டு வா” என்று கூறவே அந்த பயத்திலும் பிரபா சிரித்துவிட்டான்..... உண்மையில் அம்மா அழுது பயத்தை அதிகப்படுத்தினாலும், மாணிக்கத்தின் இந்த பதில் பிரபாவை மனரீதியாக ரொம்பவே அமைதியாக்கியது.... அறுவை சிகிச்சை முடிந்து, ஒருநாள் மருத்துவமனை அறையில் இருக்க வேண்டும் என்பதால் ஒரு அறையில் பிரபா படுத்திருக்க, மாணிக்கமும் கௌதமும் அவன் அருகில் அமர்ந்திருந்தனர்.... வழக்கம்போல அம்மா அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டார்.... அப்போது ரவுன்ட்சுக்கு வந்த டூட்டி டாக்டர், பிரபாவிடம் வழக்கமாக சில கேள்விகளை அவசர அவசரமாக கேட்டுவிட்டு கிளம்ப முற்பட்டார்.... அவரை பார்த்ததும் மாணிக்கத்திற்குள் எங்கோ பார்த்தது போல ஒரு உணர்வு.... அவர் சென்றதும் பிரபாவிடம், “மாப்ள, இந்த ஆள நான் எங்கயோ பாத்திருக்கேன், எங்கன்னுதான் மறந்துட்டேன்” என்றான்...
“அது மன பிரம்மையா இருக்கும் மாமா... உன்ன தெரிஞ்ச மாதிரி அவர் காட்டிக்கவே இல்லையே, ஆனால் அவர் பயந்து நின்னத பாத்தா உன்னால எப்பவோ பாதிக்கப்பட்டிருப்பார்னு நெனக்கிறேன்” என்று பிரபா சொன்னதும், அந்த மருத்துவர் யார் என்பது மாணிக்கத்திற்கு நினைவிற்கு வந்துவிட்டது, “டேய், அது யார்னு ஞாபகம் இல்லையா?... நம்ம குஞ்சு டாக்டர்... வல்லத்துல என்கிட்டே மாட்டினாரே..... திருச்சில வந்து மாட்டிருக்கான் பாரு, நமக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சு, ரவுண்ட்ஸ் போறவனை நானும் ஒரு ரவுண்டு கட்டிட்டு வரேன்” என்று கூறிவிட்டு மாணிக்கம் கிளம்ப பிரபா சிரித்தான்... பக்கத்து அறையில் வழக்கமான விசாரிப்புகளை முடித்துவிட்டு மாடிக்கு செல்ல முயன்றவரை வழிமறித்தான் மாணிக்கம்....
“டாக்டர், நல்லா இருக்கிங்களா?”
“யார் நீங்க?.... எனக்கு ஞாபகம் இல்லையே?”
“நடிக்காதிங்க டாக்டர்.... என்னைய உங்களால எப்டி மறக்க முடியும்?.... நீங்க குஞ்சு ஸ்பெசலிஸ்ட் ஆக காரணமே நான்தானே” என்று மாணிக்கம் சொன்னதும் பதறிய மருத்துவர், “அய்யய்யோ சத்தம் போடாதய்யா..... நீ பண்ண ஒருநாள் கூத்தால அஞ்சுகன் அப்டின்குற என் பேரை எல்லாரும் குஞ்சுகன்’னுதான் கூப்டாங்க.... என் பேரு நாரிப்போனதால, யாருக்கும் தெரியக்கூடாதுன்னு அரசாங்க வேலையை தூக்கி போட்டுட்டு, திருச்சிக்கு வந்து இந்த ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல வேலை பாக்குறேன்.... இங்கயும் வந்து பொழப்ப கெடுத்திடாதப்பா” என்று கை கூப்பி கும்பிட, சிரிப்பை அடக்கிய மாணிக்கம், “டாக்டர், இப்டியல்லாம் பேசாதிங்க.... இன்னைக்கும் என் குஞ்சு எந்திருச்சு நிக்குதுன்னா அதுக்கு நீங்கதான் காரணம்.... உங்களுக்கு நன்றி தெரிவிச்சு போஸ்டர்’லாம் ஓட்டுற ஐடியால இருக்கேன்.... நீங்க இதுக்கே அசந்தா எப்புடி?” என்றான்....
பதறிய மருத்துவர், “ஐயோ சாமி, ஆள விடு... நான் வேற மாநிலத்துக்கே போயிடுறேன்.... நீ இருக்குற வரைக்கும் இந்த தமிழ்நாட்டு பக்கமே வரமாட்டேன்” என்றவாறே அவசரமாக ஓடிவிட்டார்.....
சிரித்தபடியே அறைக்கு வந்து பிரபாவிடம் கூற, அவனும் நீண்ட நாட்களுக்கு பிறகு மெய்மறந்து சிரித்தான்....
பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபிறகு, அனைவரின் வேண்டுகோளின்படி உடல்நலம் தேறும்வரை அனைவருடனும் பசுஞ்சோலையில் தங்கிட ஒப்புக்கொண்டான்.... வீட்டிற்கு சென்றதும், குட்டி பிரபாவுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடினான் பிரபா.... பிரபாவை கவனிக்கும் பொறுப்பு கௌதமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது..... இதை கௌதமும் மனம் ஒப்ப ஏற்றுக்கொண்டான்.... ஒருசில நாட்களில் கௌதம்- பிரபா நெருக்கம் பற்றிய சந்தேகம் மாணிக்கத்திற்கு எழுந்தது.... நிச்சயம் ஒரு நட்பால், உறவால் உண்டான பிணைப்பு போல அல்லாமல், அதையும் தாண்டிய ஒரு பிணைப்பு இருவருக்குள்ளும் இருந்ததை உணர்ந்த மாணிக்கம் மனதிற்குள் கொஞ்சம் கலவரமானான்.... புயல் அடித்து ஓய்ந்து, இப்போதுதான் வீடு கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலைமையில் மீண்டும் ஒரு சுனாமியை எதிர்கொள்ளும் மனநிலையோ பக்குவமோ அங்கு யாருக்கும் இல்லை என்பதை உணர்ந்தான் மாணிக்கம்...
இது மிகவும் சிக்கலான விஷயம் என்பதால், இதை இம்முறை கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் மாணிக்கம்.... கெளதமை ஒருநாள் தனியாக சந்தித்து இதுபற்றி கேட்டான் மாணிக்கம்....
“கௌதம், நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காத, உனக்கு பிரபா பத்தி பழைய விஷயங்கள் தெரியும்னு நெனக்கிறேன்”
“தெரியும் சித்தப்பா....அத்தான் சொன்னாங்க.... “
“அந்த பிரச்சினையால வந்த விளைவுகளும் உனக்கு தெரியும்..... அப்டி இருக்கையில நீ அதே தப்பை பண்ண மாட்டேன்னு நெனக்கிறேன்” என்று மாணிக்கம் சொல்லி முடிக்கையில், இத்தகைய ஒரு விஷயத்தை எதிர்பார்த்திராத கௌதம் அமைதியாக திகைத்து நின்றான்....
மீண்டும் தொடர்ந்த மாணிக்கம், “நான் சொல்றது உனக்கு புரியும்னு நெனக்கிறேன்.... உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நட்பு மட்டும்தான் இருக்கும்னு நம்புறேன், அது மட்டுமே இருக்கனும்னு சொல்லிக்கறேன்” என்று சொல்லும்போது அதில் ஒரு அழுத்தமும், கண்டிப்பும் தெரிந்தது.....
மாணிக்கத்தை பகைத்துக்கொள்ள முடியாது என்பது கௌதமிற்கு நன்றாக தெரிந்தாலும், எந்த காரணத்திற்காகவும் பிரபாவையும் விட்டுக்கொடுக்க முடியாது என்று உணர்ந்த கௌதம் முதல் முறையாக மாணிக்கத்தை எதிர்த்து பேசினான்.... “சாரி சித்தப்பா..... உங்கள எதிர்த்து பேசுறேன்னு நெனக்காதிங்க, பிரபா அத்தான் இல்லாம நான் வாழமுடியாது.... அவரை பற்றி நல்லா புரிஞ்ச நீங்க, இந்த தடவையும் பழைய மாதிரி தப்பு பண்ண மாட்டிங்கன்னு நெனக்கிறேன்..... நீங்க புரிஞ்சு எங்களை சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்புறேன்” என்று கூறிவிட்டு மறுபேச்சு பேசாமல், பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான் கௌதம்....
கௌதம் இப்படி பேசி பார்த்ததே இல்லை மாணிக்கம்.... இத்தகைய பதிலால் மாணிக்கம் கொஞ்சம் உறைந்து போனான் என்றுதான் சொல்லவேண்டும்....  அடுத்த இரண்டு நாட்கள் மாணிக்கத்திடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... அன்று கௌதமிற்கு அவன் அப்பாவிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது..... அந்த அழைப்பு வந்தபிறகு கௌதம் ரொம்பவே உடைந்து போய் இருந்தான்... இதைக்கண்ட பிரபா, “ஏன்டா ஒரு மாதிரி இருக்க?... காலைல உங்க அப்பாகூட பேசுனதிலிருந்தே ஒரு மாதிரி இருக்க, என்ன ஆச்சு?” என்றான்....
கண்கலங்கிய கௌதம், முதலில் அதை கூறாமல் மறுத்தாலும், பின்னர் பிரபாவின் வற்ப்புறுத்தலால் சொல்ல தொடங்கினான், “நான் அவசரமா வெளிநாடு போறதுக்கு அப்பா ஏற்பாடு பண்றார்.... அவர் சொன்னதை பார்த்தா இன்னும் ஒரு மாசத்துக்குள்ள என்னை அனுப்பிடுவார்னு நெனக்கிறேன்....எப்பவும் இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா அவர் பேசமாட்டார்.... இதுல யாரோ அவரை இயக்குற மாதிரி தெரியுது” என்றான்.....
ஒன்றும் புரியாத பிரபாவோ, கௌதம் அருகில் அமர்ந்தவாறு அவன் கைகளை பிடித்துக்கொண்டு, “என்ன சொல்ற?... யார் மேல நீ சந்தேகப்படுற?.... தைரியமா சொல்லு, எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணலாம் “ என்று கூறவே, கௌதமும் மனம் திறந்து மாணிக்கம் தன்னிடம் பேசிய விஷயங்களை பற்றி கூறிவிட்டு, “ஒருவேளை மாணிக்கம் சித்தப்பா தான் இதுக்கு இவ்ளோ அவசரப்படுத்துறாரோன்னு பயமா இருக்கு” என்றான்....
பிரபா ஆழமாக யோசிக்க தொடங்கினான்.... ஏற்கனவே ஒருமுறை தான் செய்த அலட்சியத்தால், அஜாக்கிரதையால் காதலை இழந்ததால், இம்முறை அவர்கள் பாணியிலேயே அவர்களின் எண்ணங்களை நொறுக்கிட வேண்டும் என்று முடிவு செய்தான்.... இந்த விஷயத்தை பற்றி மாணிக்கத்திடமோ, மற்ற யாரிடமோ பிரபா எதையும் பேசவுமில்லை, வெளிக்காட்டிக்கொள்ளவும் இல்லை..... ஆனால், அவர்களுக்கு அறியாமல் ஒரு வேலை பார்த்தான்.... தனக்கும் கௌதமிற்கும் கனடா செல்ல ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தான்.... தனக்கும் கௌதமிற்கும் அங்குள்ள நண்பன் மூலமாக அங்கு வேலைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, சென்னைக்கு ஒரு வேலையாக செல்வதாக கூறிவிட்டு கௌதமுடன் கனடா கிளம்ப ஆயத்தமானான்.... ஒரு வாரம் கழித்து அந்த நாளும் வந்துவிட்டது.... பிரபாவும் கௌதமும் விமான நிலையத்தில் புறப்பட தயார் ஆனார்கள்... அவர்களை வழியனுப்ப அமுதா தன் காதலனுடன் வந்திருந்தாள்..... நால்வரும் பேசிக்கொண்டிருக்கையில் அமுதாவிடம் நன்றி கூறினான் பிரபா....
“இதுக்கல்லாம் எதுக்கு அத்தான் தாங்க்ஸ்.... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போறேன்.... உங்கள இப்போ வழியனுப்ப இன்னொரு வி.ஐ.பி வரப்போறார்..... இன்னும் ரெண்டு நிமிஷத்துல இங்க வந்திடுவார், நீங்க சொல்ல வேண்டிய நன்றியெல்லாம் அவர்கிட்ட சொல்லிக்கொங்க” என்று அமுதா சொன்னதும், அதற்கு அர்த்தம் புரியாமல், யாராக இருக்கும் என்று குழம்பினான் பிரபா.... ஆனால், அவ்வளவு யோசிப்பதற்கு முன்னால் அமுதா கூறிய அந்த நபர் அங்கு வந்துவிட்டார்.... அவர் வேறு யாருமில்லை, நம்ம மாணிக்கம் மாமாவேதான்..... அதைப்பார்த்த பிரபாவும் கௌதமும் அதிர்ச்சியாகி நின்றார்கள்..... அங்கு வந்த மாணிக்கம், கண்கள் கலங்க பிரபாவை கட்டி அணைக்க, ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான் பிரபா....
அந்த அதிர்ச்சியில் மீளாமல் நின்ற பிரபாவிடம் அமுதா, “அத்தான் நான் உங்ககிட்ட ஒரு உண்மைய மறச்ச்சதுக்கு சாரி..... நீங்களும் கௌதமும் கனடா போகப்போற ஐடியா சொன்னவுடனே, எனக்கு என்ன பண்றதுக்கு புரியாம நான் பேசுனது மாணிக்கம் சித்தப்பாகிட்டதான்..... இப்போ இங்க ஏர்போர்ட் வர்ற வரைக்கும் எல்லா விஷயத்துக்கும் அவர் உறுதுனையா இருந்தார்..... அவருக்கு தெரியும்ன்குற விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க என்னை நம்ப மாட்டிங்கன்னு சொன்ன அவர், உங்க ரெண்டு பேர் ட்ராவல் சம்மந்தமா எல்லா வேலையும் பார்த்தார்” என்று கூறி முடித்ததும், பிரபாவால் அதை நம்ப முடியாமல் கண்ணீரோடு மாணிக்கத்தை பார்க்க, மாணிக்கமா சிரித்தான்....
“கௌதமும் நீயும் லவ் பண்ற விஷயம் எனக்கு அமுதா சொல்லி முன்னாடியே தெரியும்.... கௌதமும் இதுல உறுதியா இருக்கானான்னு தெரிஞ்சுக்கதான், அவன்கிட்ட பேசுனேன்.... அவன் உன்னைவிட ரொம்ப உறுதியா இருந்தான்.... இதை எப்டி வீட்ல சமாளிக்கிரதுன்னு யோசிச்சப்போதான், நீங்க வெளிநாடு போகப்போற விஷயம் அமுதா மூலமா எனக்கு தெரிய வந்துச்சு.... எனக்கும் அது சரின்னு பட்டதால சில உதவிகள் செஞ்சேன், அவ்ளோதான்.... மத்தபடி நீங்க நினைக்குற மாதிரி கௌதம் அப்பாகிட்ட நான் எதுவும் சொல்லி, உங்கள பிரிக்க பார்க்கலடா மாப்ள” என்று மாணிக்கம் சொல்லி முடித்தபோது அடக்கமாட்டாமல் அழுத பிரபா, மாணிக்கத்தை கட்டி அணைத்தான்....
சூழல் சற்று நிதானத்திற்கு திரும்பிய பிறகு பிரபா, “நிஜமாவே நீ இவ்ளோ செய்வன்னு நெனைக்கல மாமா.... உன்னமாதிரியே அம்மாவும் எங்கள புரிஞ்சுக்க மாட்டாங்களா?” என்றான்....
“இது ஒன்னும் அமெரிக்கா இல்ல மாப்ள.... ஒரே நாள்ல, இதை ஏத்துக்கற பக்குவமெல்லாம் இப்போதைக்கு இங்க இல்ல.... ஆனாலும், மத்த எல்லா விஷயங்களை விடவும் நீதான் முக்கியம்னு அக்கா புரிஞ்சுக்குற காலம் வர்றப்போ நானே அக்காவ அங்க கூட்டிட்டு வரேன்.... உனக்கே இவ்வளவு பிடிவாதம் இருக்கையில, உங்க அம்மாடா அது, எவ்வளவு இருக்கும்..... நிச்சயம் உம்மேல அதுக்கு ரொம்ப பாசம் இருக்குடா, நான் பாத்துக்கறேன்..... ஒருநாள் நானே அதை கூட்டிட்டு அங்க வரேன்..... அக்கா மட்டுமில்ல, மத்த எல்லாரும் இதை புரிஞ்சுக்கற நேரம் வரும்.... அதுவரை நீங்க இத நெனச்சு கவலைப்படாம, இனியாவது அந்த நாட்ல நிம்மதியா வாழுங்க..... இத்தனை நாளும் நீங்க கஷ்டப்பட்டதே போதும்பா, இனியாவது உங்க கஷ்டத்துக்கெல்லாம் விடிவு கிடைக்கட்டும்.... இங்க எல்லாரும் மாறுவாங்கன்னு நம்பிகிட்டு இருக்குற நேரத்துல, இதை ஓரளவு புரிஞ்சுகிட்ட மக்கள் வாழுற இடத்துக்கு போயி நிம்மதியா வாழ்றது தப்பில்ல..... எல்லாம் மாறிடும் மாப்ள, அப்போ மறுபடியும் இங்க வாங்க...... “ என்ற மாணிக்கத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிரபாவை நெகிழ்ச்சியாக்கியது.....
இருவருக்கும் வாழ்த்துகள் கூறி மாணிக்கம் , அமுதா வழி அனுப்பி வைத்தனர்....
விமானத்தில் அமர்ந்த கௌதம் பிரபாவை பார்த்து, “நம்மள எல்லாரும் புரிஞ்சுப்பாங்களா அத்தான்?” என்றான்.....
கௌதமின் கைகளை எடுத்து தன் கண்களில் ஒட்டிக்கொண்ட பிரபா, “நிச்சயம் எல்லாரும் புரிஞ்சுப்பங்க, எல்லா விஷயங்களும் ஒரு நாள் மாறும்டா” என்றான்....
“நெஜமாவா சொல்றீங்க?” என்ற கௌதமின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாத பிரபா, அந்த கைகளுக்கு ஒரு முத்தம் கொடுத்ததோடு பதிலை முடித்துக்கொண்டான் பிரபா..... விமானம் உயரப்பறந்தது.... பறக்கும் விமானத்தை தொலைவில் இருந்து பார்த்த மாணிக்கத்தின் கண்கள் கலங்கியது.....
நாமும் அந்த தம்பதி சிறப்புடன் வாழ வாழ்த்திடுவோம்...
(முற்றும்)...

4 comments:

 1. annaa!!!! indha kadhaila vandha pala sambavangal en vaazhkaila nadandhirukku!!!!
  unga ezhuthukkala ulamaara nesikkiren na!!!!

  ReplyDelete
 2. வணக்கம் விஜய்.

  நட்பு, காதல், உறவுகள், சமுகம் பற்றிய ஆழமான கருத்துக்கள் நிரைந்த இக்கதைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. Anna, oru differentana mega serial story, start panni evlo thuram travel aki irukku ithu, evlo valikal, romance, thiruppumunai... appa. ana idaiyila varra kunjagan doctor & neyi comedy super...

  ReplyDelete
 4. நிகரில்லாக் காதல் காவியம் என்றே இதனைக் கருதுகிறேன் . என்னைப்போலுள்ளவர்களுக்கு இது ஒரு வரம் மாதிரி, நாங்களெல்லாம் பேசவே பயப்படும் ஒரு விடயத்தை காதல் காவியமாக்கித்தந்த விஜய்க்கு நன்றி. இவ்வாறு இணையத்தில் எழுதுவதை விட பேசாமல் இவற்றையெல்லாம் திரட்டி ஒரு புத்தகம் எழுதுங்களேன். நானே அனைத்தையும் வாங்கிவிடுவேன் .இணைய வாசமே இல்லாத என் சக உள்ளங்களுக்கும் இது போய்ச்சேர வேண்டும். மேலும் இது போன்று நல்ல படைப்புக்களைத் தர அன்போடு வேண்டுகிறேன்.....கோடி நன்றிகள்
  அத்தோடு எனக்கு இதைப்பற்றி நிறைய வினாக்கள் உண்டு. இதைப்பற்றி யாரிடமாவது மனம் விட்டுப்பேச ஆசை தொடர்புக்கு.. whatsapp and viber -+94779307699

  ReplyDelete