Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday, 11 October 2012

இந்திய ஊடகங்களின் பார்வையில் "கே"




வாள் முனையைவிட பேனா முனையின் கூர்மை அதிகமாக இருந்தால்தான் ஒரு நாடு வளமாகவும், நாட்டு மக்கள் நலமாகவும் இருக்க முடியும் என்று ஒரு சொல்லாடல் உண்டு..... நிச்சயம் அது நூறு சதவிகிதம் உண்மையான ஒன்று.... இங்கு இப்போ நான் கூறப்போவது நம் ஒருபால் விருப்பம் உடைய சமூகத்தினர் பற்றி ஊடகங்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்றுதான்.... பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகிய மூன்றும் கே பற்றி எத்தகைய நிலைப்பாட்டை இத்தனை காலமும் எடுத்துள்ளார்கள் என்பதை கவனித்தால் அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருக்கும்.... இத்தகைய ஊடகங்கள் நினைத்தால் ஒரே நாளில் கோட்சே'வை இந்தியாவின் தேசப்பிதாவாக்க முடியும் அளவிற்கு வலிமை மிகுந்தவை இந்த ஊடகங்கள்.... ஆனால், அதே வேளையில் தொடர்ந்து இந்த ஊடகங்கள் பல காலமாக சில உண்மைகளை மறைத்து, பொய்யான தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.... ஒரு பொய் சொல்வதற்கு நிகரான தவறு, ஒரு உண்மையை மறைப்பதிலும் இருக்கிறது.... அந்த தவறை செய்யும் இந்த ஊடகங்கள் பற்றி கொஞ்சம் யோசித்து பார்ப்போம்..... முதலில் பத்திரிகைகள்....

படித்தவர்கள் மத்தியிலும் நகர்ப்புறங்களிலும் ஒரு தெளிவான மனநிலையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பத்திரிகை துறையினர் இதை பற்றி செய்திகள் வெளியிடுவதையேதவிர்த்துவிடுகின்றன.... அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இது குடும்பத்தினர் மத்தியில் தங்கள் பத்திரிகைக்கான தகுதி குறைந்துவிடும் என்கிறார்கள்.... அதே பத்திரிகைகள் தான், சிவகாசி ஜெயலட்சுமி யார் யாருடன் உல்லாசமாக இருந்தார் என்பது தொடங்கி, நித்தியானந்தா ரஞ்சிதா விவகாரத்தை அட்டைப்படத்தில் போடுவது வரை தங்கள் சர்க்குலேசனை அதிகரிக்க செய்திகளாக போடுகிறார்கள்..... இத்தகைய ஆபாசமான விஷயங்களை வெகுஜன பத்திரிகைகள் தங்கள் தலைப்பு செய்தியாக்க எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை.... ஆனால் ஒரு சமூக விழிப்புணர்வுக்கான, கே உறவு தவறல்ல என்ற உண்மை நிலைப்பாட்டை செய்தியாக்க இவர்கள் தயங்குவது விந்தையான விஷயம் தான்..... ஒரு விஷயம் தங்கள் பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்றால், அது எத்தகைய தரம் தாழ்ந்த செய்தியானாலும் முதற்பக்கத்தில் போட துணியும் இந்த பத்திரிகைகள், இந்த கே பற்றிய உண்மையான நிலைப்பாட்டை கூறினால் தங்கள் விற்பனைக்கு எந்த உதவியும் இருக்காது என்ற எண்ணத்தால் இத்தகைய செய்திகளை தவிர்த்துவிடுகிறார்கள்...... இவர்களுக்கு தங்களின் விற்பனையும், லாபமும் மட்டுமே முக்கியம் என்ற நிலையாகிவிட்டது.... வெங்கட் மோகன் காதலை பற்றியும், வானவில் அணிவகுப்பை பற்றியும், சென்னை தோஸ்த் பணிகளை பற்றியும் எத்தனை பத்திரிகைகள் குறைந்தபட்சம் ஒரு பெட்டி செய்தியாவது போட்டிருக்கும்?.... நான் பொய்யான ஒன்றை திரித்து கூறுங்கள் என்று சொல்லவில்லை, உண்மையை உரக்க சொல்லுங்கள் என்று மட்டும்தான் சொல்கிறேன்..... தவறான ஒன்றை நியாயப்படுத்துங்கள் என்று சொல்லவில்லை, சரியான ஒன்றை சரியாக சொன்னால் போதும் என்று மட்டும்தான் சொல்கிறேன்..... விற்பனையை மட்டுமே நோக்கமாக கொண்டு செய்திகளை வெளியிடாமல், காலாகாலத்திற்கும் உங்கள் பத்திரிகையின் தரம் இந்த நாட்டில் நிலைபெற்றிட இத்தகைய உண்மைகளை சொல்லுங்கள்.....

தொலைக்காட்சிகளும் இதே நிலைப்பாட்டுடன் தான் செய்திகளை தருகிறார்கள்.... பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் இப்படி என்றால், மறுபுறம் திரைத்துரையோ நெகட்டிவான கருத்துக்களை ஒருபால் விரும்பிகளை பற்றி பொதுமக்கள் மத்தியில் திணிக்கிறார்கள்..... ஒருபால் விருப்பத்தை மிகப்பெரிய தவறாகவும், கேவலமான ஒன்றாகவும், நகைப்பிற்குரிய ஒரு விஷயமாகவும் ஆக்கிவிடுகிறார்கள்.... அத்திப்பூத்தார்போல ஒருசில திரைப்படங்கள் கே பற்றி வந்தாலும், அதிலும் இந்த விஷயம் கேலிக்கூத்தாக காட்டப்படுவதுதான் வேதனை....  “அவனா நீ?”, “கொரில்லா சிறை”, என்று மிகவும் கேவலமாக கே பற்றி காட்டி, திரைத்துறை தன்னை கீழ்த்தரமாக ஆக்கிக்கொண்டுவிட்டது..... வெகுஜன மக்களும், பாமர மக்களும் எளிதில் ஒன்றை புரிந்துகொள்ள இத்தகைய திரைப்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன....

 சுதந்திர போராட்டங்களின் பொது, பல பொது கூட்டங்களில் ஊட்ட முடியாத தேசபக்தியை, ஒரு நாடகத்தில் ஊட்டி மக்களை திரட்டுவார்களாம்.... அத்தகைய தாக்கமும், வலிமையையும் மிக்க இந்த திரைத்துறை பொதுமக்கள் மத்தியில் இப்படி ஒரு தரம் தாழ்ந்த பிம்பத்தை கே பற்றி திணிப்பது நிச்சயமாக சமூக விழிப்புணர்வுக்கு பெரும் தடங்கலாக அமையும்.... கே பற்றி ஹர்ஷ்பீல்ட் உதவியில் ஐரோப்பாவில் வெளியான ஒரு திரைப்படம் தான், ஐரோப்பிய மக்கள் மத்தியில் கே பற்றி நல்ல அபிப்ராயம் வரவழைத்ததை நான் முன்பு கூறினேன்..... ஆனால், நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை வராவிட்டாலும், குறைந்தபட்சம் இதைப்பற்றி தவறான விதைகளை விதைக்காமல் இருந்தாலே சமூகம் மாறிட ஒரு வாய்ப்பாக அமையலாம்.... பத்திரிகையும், தொலைக்காட்சியும் இதைப்பற்றி வாயே திறக்காதது பிரச்சினை என்றால், திரைப்படங்களோ இதைப்பற்றி வாயை திறப்பது பிரச்சினையாக இருக்கிறது..... ஒரு நகைச்சுவை காட்சி மூலம் மக்கள் மனதில் எளிதாக ஒரு கருத்தை நிலைபெற்றிட செய்ய முடியும்.... அத்தகைய நல்ல விஷயத்தால், நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்க முற்படாமல் இப்படி செய்வது வேதனையாக இருக்கிறது.... இப்போதல்லாம் இத்தகைய வலிமையான ஊடகங்களின் பங்களிப்பால், திருநங்கைகள் பற்றி ஓரளவு மக்கள் புரிந்துகொள்ள தொடங்கி இருக்கின்றனர்.... கல்கி, ரோஸ், ஸ்ரீ போன்ற திருநங்கைகளை பற்றிய தெளிவான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து நல்ல முன்னேற்றத்திற்கு வித்தான விஷயத்தை செய்து வருகின்றனர்..... இன்னும் சில காலத்தில் முற்றிலும் அவர்களும் சமூகத்தோடு கலக்கும் நாள் வருமளவிற்கு நல்ல முறையில் நிலைமை உள்ளது..... ஆனால், ஒருபால் விருப்பம் கொண்டவர்கள் விஷயத்தில் இன்னும் தங்களை புதிப்பித்துக்கொள்ளாமல இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.....

 ஒருபக்கம் இ.பி.கோ 377 சட்டத்திருத்தத்தை நீக்கக்கோரி பல்வேறு விதமான சட்ட போராட்டங்கள் நடைபெறும் வேளையில், கூடிய விரைவில் அத்தகைய சட்ட திருத்தம் வந்து “கே உறவு தவறல்ல, கே திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படலாம்” என்ற நிலை வெகுவிரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது நமக்கு.... ஆனால், சட்டத்தின் மூலம் ஒரு சமுதாய புரட்சியை மக்கள் மத்தியில் கொண்டுவர முடியாது..... சட்டத்தை மதித்து உடனே, கே உறவை அங்கீகரிக்க நம்ம மக்கள் ஒன்றும் மாபெரும் பகுத்தறிவாளர்கள் கிடையாது.... இத்தகைய சமூக மாற்றமும், சமுதாய புரட்சியும் வரவேண்டுமானால் நாம் மேற்சொன்ன மூன்று விஷயங்களும் தங்கள் பங்கினை முழுமையாகவும், சரியாகவும் செய்ய வேண்டும்..... பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையினர் திறம்பட தங்கள் பணிகளை முறையாக செய்தாலே விரைவில் நம்மை பற்றிய புரிந்துணர்வு மக்கள் மத்தியில் மிக எளிதாக சென்றுவிடும் என்று நம்பலாம்..... நல்ல நாள் பார்த்து, சொந்த பந்தம் சூழ, மணமேடையில் ஒரு கே திருமணம் நடைபெற்றால் கூட அது ஆச்சரியப்பட ஒன்றுமில்லாத அளவிற்கு, எதிர்காலத்தில் இந்த ஊடகங்கள் தங்கள் பணிகளை செய்யும் என்று நிச்சயம் நாம் நம்பலாம்.... எல்லாம் மாறும், காலம் தான் அந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று நம்புவோம்....

No comments:

Post a Comment