Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday, 15 October 2012

"மார்'ல சாஞ்சு அழனும்" - சிறுகதை.....


வாசகர்களின் கவனத்திற்கு : இது முழுக்க முழுக்க கற்பனை கதையே.... இதில் குறிப்பிடப்படும் பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே......


நான்கரை வருஷமாக மாணவனாக இருந்த என் கல்லூரியில் இன்று பயிற்சி மருத்துவராக உள்ளே நுழைகிறேன்.... இந்த இறுதியாண்டு தேர்வில் எப்படி தேர்ச்சி பெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை.... காரணம் என்ன பெருசா இருக்கப்போகுது?... என் வயது இளைஞர்களுக்கு வழக்கமாக வரும் பிரச்சினைதான்... ஆம், காதல் தோல்வி.... வழக்கமான பிரச்சினை, கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக நடந்தது..... ரொம்ப குழப்புறேனா?.... வழக்கமான காதல் தோல்விதான் என்றாலும், கொஞ்சம் இயல்பை மீறிய ஓரின காதல்.... நான் சொன்னது சரிதானே?... காதல் தோல்விக்கு என்ன காரணம்? என்று நீங்கள் கேட்டால், சத்தியமாக  அதற்கு பதில் எனக்கு தெரியலைங்க..... கடந்த இரண்டு மாதங்களாகவே அந்த நிகழ்வு என் நினைவை சிதறடித்து இம்சித்தது.... நேற்று இரவும், அந்த ஞாபகத்தால் வெகுநேரம் தூக்கம் வராமல் உலவிய விளைவுதான் இப்போ தலைவலியாக உருவெடுத்து நிற்கிறது.... சரி, வாங்க என் வேலையை பார்ப்போம்.... முதல் போஸ்டிங்கே ஸ்கின் டிப்பார்ட்மெண்ட்.... பெரிய தொந்தரவு இல்லாத டிப்பார்ட்மெண்ட்தான், ஆனாலும் அங்குள்ள எச்.ஓ.டி குமார் சார் கொஞ்சம் இம்சை.... எட்டு மணி ஆகிடுச்சு, முதல் நாளே லேட்டா போகக்கூடாது.... டிப்பார்ட்மெண்ட் ரூம்குள்ள போனேன்.... என்னை பார்த்ததும் கொஞ்சம் குஷியான எச்.ஓ.டி, "ஹெல்லோ சிவா, வா வா..... இன்னும் பதினைந்து நாள் போர் அடிக்காம இருக்கப்போகுது.... ஹ ஹ ஹா...." சிரித்தார்.....
என்னை ஏதோ விளையாட்டு பொருளாக பார்க்கிறாரே என்ற என் கடுப்பை காட்டிக்கொள்ளாமல், பதிலுக்கு சிரித்தபடியே உள்ளே நுழைந்தேன்... ஏற்கனவே இன்னொரு பயிற்சி மருத்துவ பெண்ணும் அங்கு அமர்ந்திருந்தாள்... எதிரில் இருந்த இருக்கையில் என்னை அமர சொன்னார் குமார் சார்...... நான்கரை வருடத்தில் எப்போ அந்த ரூம்'குள்ள வந்தாலும் கை கட்டி நின்றே பழகிய எனக்கு இன்று பயிற்சி மருத்துவரானதும் ஒரே நாளில் இந்த மாபெரும் மாற்றத்தை மனம் கொஞ்சம் ஏற்க மறுத்ததால், அசௌகரியமாகவே அமர்ந்திருந்தேன்.... ஒரு பக்கம் இயல்பாகவே தூக்கமின்மையால் வந்த தலைவலி, மறுபுறமோ எச்.ஓ.டி என்கிற பெயரில் இன்னொரு தலைவலி.... அறையை சுற்றும் முற்றும் பார்த்தேன்.... சுவரில் மாட்டியிருந்த நாட்காட்டியில் "விஷால் ஹாஸ்பிட்டல்" என்ற பெயர் பளிச்சிட்டது.... "விஷால்" அந்த பெயரை பார்த்ததும் மீண்டும் அவன் ஞாபகம் வந்துவிட்டது.... பேஸ்புக்கில் நண்பனாக அறிமுகமான அவன், ஒரு நேரத்தில் காதலனாக மாறுவான் என்று அப்போது நான் நினைக்கவில்லை.... பல காரணங்களாலும் அவன் காதலை நான் முதலில் ஏற்க மறுத்தாலும், ஒருகட்டத்தில் அரை மனதுடன் ஏற்றேன்.... பின்னர் என் இதயத்தின் நான்கு அறைகளிலும் அவன் நினைவே நிரம்பி இருந்தன.... "எனக்கு வேற எதுவும் வேண்டாம் சிவா.... மனசு கஷ்டமா இருக்குறப்போ உன் மார்ல சாஞ்சு அழுதா, அதுவே எனக்கு போதும்" என்று அடிக்கடி சொல்வான்.... எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத இத்தகைய காதலன் கிடைக்க நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கணும் என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன்.... நாளாக நாளாக அவன் வேறு எதையோ எதிர்பார்த்து கிடைக்காதது போல, தேவையற்ற சண்டைகள் உருவாகின.... ஆரம்பத்தில் அது இயல்பானதோ? என்று நினைக்கும்போது, அந்த சண்டைகள் தீவிரமாகின.... ஒருகட்டத்தில், சுத்தமாக என் தொடர்பையே துண்டித்துவிட்டான்.... இரண்டு மாதங்களாக அவனிடமிருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போனது.... என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் அரும்பியது.... எவரும் அறியாமல் துடைத்துக்கொண்டு, நிமிர்ந்தேன்.... என்னையே பார்த்துக்கொண்டிருந்தார் எச்.ஓ.டி.... நான் அழுததை கவனித்திருப்பாரோ? என்று நான் திடுக்கிட்டேன்.....
"என்ன சிவா, பயங்கர ஜாலி மூட்ல இருக்க போல.... நைட்லாம் செம்ம பார்ட்டியா?.... கண்ணெல்லாம் செவந்திருக்கு.... ஹ ஹ ஹா....." இடியென சிரித்தார்.... இப்போதெல்லாம் அவர் சொல்லும் மொக்கை ஜோக்குகளுக்கு மற்றவர்களை எதிர்பார்க்காமல் தானே சிரித்திடுறார்.... நல்லவேளையாக அதன்மூலம் அவர் ஜோக்'தான் சொல்கிறார் என்று புரிந்துகொண்டு நாங்களும் சிரித்திடுவோம்.....
இன்று நிஜமாகவே நான் சிரித்துவிட்டேன்...  நான் ஜாலி மூடில் இருப்பதாக அவர் நினைப்பைக்கண்டு சிரிக்க மட்டும்தானே முடியும்.....
"என்ன சிவா யோசிக்குற?.... எப்டி நான் கண்டுபிடிச்சென்னு பாக்குறியா?.... நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சிருக்கேன்பா" என்று சிரித்தார் குமார் சார்.....

"உங்க சைக்காலஜி'ய தூக்கி சாக்கடைல போடுங்க" என்று என்னை சொல்லசொல்லி என் மனது கட்டளையிட்டது என்றாலும், சொன்னால் என்னாகும் என்று அறிவு எச்சரித்து வாய்ப்பூட்டு சட்டம் போட்டது.....
நானும் சிரித்துக்கொண்டே, "இல்ல சார்.... கொஞ்சம் தலைவலிக்குது.... பார்ட்டிலாம் ஒண்ணுமில்ல சார்" என்றேன்....
சரியாக அந்த நேரத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஸ்கின் போஸ்டிங் வந்தார்கள்.... எங்கள் காலேஜ் பசங்கள்ளயே பல நேரம் பெருமூச்சு விடுற அளவுக்கு செம்மையா இருக்கிறது அந்த பசங்கதான்..... பெரும்பாலும் மலையாளி பசங்க, எது எது, எங்க எங்க, எவ்வளவு எவ்வளவு இருக்கணுமோ அது அது, அங்க அங்க, அவ்வளவு அவ்வளவு கச்சிதமா இருக்கும் அந்த பசங்ககிட்ட.... அதுவும் அவனுக பேசும் அந்த "கொஞ்சு தமிழ்" மொழியே நம்மை கொஞ்ச சொல்லி இம்சிக்கும்.....  குமார் சார் இருப்பதையும் மறந்துட்டு, உள்ளே வந்த பசங்களை பார்த்துக்கொண்டு (?) இருந்தேன்....
குமார் சார் அவங்களுக்கு வழக்கமான பாடங்களை சொல்லிக்கொண்டு இருக்க, வரும் சிறு சிறு கேஸ்களை நானும் அந்த இன்னொரு பயிற்சி மருத்துவ பெண்ணும் பார்த்து, பக்கத்து ரூமில் இருந்த மற்ற அஸோசியேட்'களிடம் அனுப்பினோம்.....

அப்போது அந்த அறை வாசலில் ஒரு இளைஞன் தயங்கியபடியே வெகுநேரமாக நின்றுகொண்டிருந்ததை கவனித்த குமார் சார், அந்த இளைஞனை அழைத்தார்.... வழக்கமாக ஸ்கின் டிப்பார்ட்மெண்ட் வரும் நோயாளிகள் நேராக உள்ளே வந்துவிடுவார்கள், ஆனால் பாலியல் சம்மந்தப்பட்ட நோய்கள் தொடர்பாக வருபவர்கள் அப்படி தயங்கி நிற்பது எங்களுக்கு புதிதல்ல..... குமார் சார் அழைத்ததும், கொஞ்சம் தயங்கியபடியே அறை வாசலில் வந்து நின்றான்....
“யார் தம்பி நீ?.... என்ன வேணும் உனக்கு?.... யாரை பாக்கணும்?” பக்குவமாக கேட்டார் குமார் சார்....
அறைக்குள் கூட்டமாக நின்ற மாணவர்களை பார்த்தான், அமர்ந்திருந்த என்னையும், சக பயிற்சி மருத்துவ பெண்ணையும் சுற்றியும் முற்றியும் பார்த்தான்.... எனக்கோ அவனை பார்த்ததும் ஒரு பரிதாபம் உண்டாகியது.... அவன் இவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் தன் பிரச்சினையை கூற தயங்குவது அப்பட்டமாக தெரிந்தது....
ஆனால், குமார் சாரோ, “கேட்டுட்டே இருக்கேன்ல, என்ன ப்ராப்ளம் உனக்கு?.... எனக்கு வேற வேலை இல்லைன்னு நெனச்சியா?” இம்முறை அவர் குரலில் கோபம் தொனித்தது.....
அந்த இளைஞன் மருந்துக்கு கூட வாயை திறப்பதாக தெரியவில்லை, எங்க குமார் சாரும் மரமண்டை மாதிரி அவனை விடுவதாக தெரியவில்லை....

சூழ்நிலை அறிந்து நானே குமார் சாரிடம் தயங்கியபடியே, “சார் செக்சுவலி ட்ரான்ஸ்மிட்டட் டிசிஸ் எதுவும் இருக்கும் போல சார், அதான் தயங்குறான்” என்றேன்....
வந்த முதல் நாளே நமக்கு அட்வைஸ் செய்கிறானே என்ற பார்வையில் என்னை பார்த்தார் குமார் சார்.... இருந்தாலும், ஏதோ ஒரு பூர்வ போஸ்டிங் நற்பெயரால் அவர் கோபத்துக்கு நான் ஆளாகாமல், “ஓகே, பக்கத்து ரூம் கூட்டிட்டு போயி கேஸ் ஹிஸ்டரி எடுத்துட்டு வா” என்றார்....
சற்றும் தாமதிக்காமல் அவனை அழைத்துக்கொண்டு பக்கத்து அறை சென்றேன்.... இப்போ அவன் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தது மாதிரி தெரிந்தது.... அவனை இன்னும் இயல்பாகும் வண்ணம், அவனை பற்றி மற்ற பொதுவான விஷயங்களான படிப்பு, ஊர் பற்றியல்லாம் கேட்டேன்.... அவன் பெயர் முத்து, பொறியியல் கல்லூரி மாணவன்.... அடிப்படை பரிச்சயத்திற்கு பின்பு, மெதுவாக என் மருத்துவ கேள்விகளை கேட்டேன்.....

“என்ன ப்ராப்ளம் முத்து உனக்கு?”
“அண்ணா, அது..... அது வந்து.....”
“தயங்காம சொல்லு...... அண்ணன்னு சொன்னதுக்கப்புறம் என்ன பயம் உனக்கு?.... நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்”
“யூரின் போறப்போ ‘அந்த’ இடத்துல வலிக்குது, அப்பப்போ எல்லோ கலர்ல தண்ணி மாதிரி வருது, விரைப்பை வீக்கமா இருக்கு, அதிலயும் வலியா இருக்கு” இவ்வளவு நான் இயல்பானவனாகவும், தோழமையுடன் அவனிடம் பேசியும், அவன் என்னை இன்னும் ஒரு மருத்துவன் என்ற அளவுக்குத்தான் பார்க்கிறான் என்பது அவன் பதிலிலிருந்து தெரிந்தது..... வரும் நோயாளியிடம் வேறு எதை எதிர்பார்க்கிற? என்று என் மனம் என்னை ஏளனமாக கேட்டது.....
“சரி, சமீபத்துல எப்பவாச்சும் செக்ஸ் வச்சுகிட்டியா?” என்றேன்....

இதை கேட்டதும் அதிர்ச்சியில் என்னை நோக்கினான், நான் அவனை கண்டுகொள்ளாததுபோல என் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டிருந்தேன்..... அவனிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை....
“உன்னைத்தான் கேக்குறேன் முத்து, கடைசியா எப்பவாச்சும் செக்ஸ் வச்சுகிட்டியா?” என்றேன்....
தயங்கியபடியே, “ஆமா, ஒரு வாரத்துக்கு முன்னாடி” என்றான்....
“நீ ஒழுங்கா சொன்னாத்தான் உனக்கு இங்க சரியா ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க, எதையும் மறைக்காம சொல்லு..... யார்கூட ?” என்று நான் இப்போ ஒரு மருத்துவனாகவே கேட்டேன்...
அவன் யார் கூட செக்ஸ் வச்சுகிட்டான்? என்பதை வைத்து ஒன்னும் ட்ரீட்மென்ட் பார்க்கப்போறதில்லை, என்றாலும் அவன் கே’யா என்ற கேள்விக்கு எனக்கு விடைதெரிய ஆவளாக இருந்தேன்.....
மென்று முழுங்கியபடி அவன், “ஒரு பையன் கூட பண்ணேன்.... ஒரே பையன் கூடத்தான், வேற யார்கூடவும் இல்ல” என்று கூறிய பின்பு அவன் கண்களை கசக்கினான்....

அப்படியே அவனை குமார் சாரிடம் கொண்டு போய் நிறுத்தினால், அத்தனை நபர்கள் மத்தியிலும் இதே கேள்வியை, அவர் பாணியில் இன்னும் அதட்டலுடன் கேட்டால் நிச்சயம் முத்து தாங்க மாட்டான் என்று எண்ணி, இன்னொரு அறையில் இருந்த அஸோசியேட்’டிடம் கூட்டி சென்று, சிகிச்சை அளிக்க உதவி செய்தேன்... மருந்து மாத்திரை வாங்கும் வரை அவனுடனே இருந்தேன்.... ஆனால், அவனோ அங்கிருந்து ஓடினால் போதும் என்று செல்லும் முன் கூட ஒரு வார்த்தையும் சொல்லிக்காம போய்விட்டான்..... “அண்ணன்” என்று சொன்னதனால், அவன் என்னை அண்ணனாகவே நினைக்க வேண்டும் என்ற என் எதிர்பார்ப்பு எவ்வளவு முட்டாள்த்தனமானது என்று என்னையே நொந்துகொண்டேன்.... பின்னர் வழக்கம்போல குமார் சார் அறைக்கு சென்றேன்....
“என்ன சிவா, ஒரே அடியா அவன்கூடவே போய்ட்டியோன்னு நெனச்சேன்.... ஹ ஹ ஹா....”
“இல்ல சார், எனக்கு தெரிஞ்ச பையன் அதான்....” அவரிடமிருந்து தப்பிக்க, இப்படி அடிக்கடி போய் சொல்ல வேண்டி இருக்கிறது....
“என்ன ப்ராப்ளம் அவனுக்கு?”
“கோனொரியா இன்பக்சன்..... பெயின் டூரிங் யூரினேசன், எல்லோ டிஸ்சார்ஜ், ஸ்க்ரோட்டல் ஸ்வேல்லிங் எல்லாம் இருக்கு சார்..... ரஞ்சித் சார் ஆண்டிபையோட்டிக் ப்ரெஸ்கரைப் பண்ணிருக்கார்” வரிசையாக எல்லாவற்றையும் சொன்னேன்.....
“தெரிஞ்சவன்னு வேற சொல்ற, அந்த இன்பக்சன்’கு நீ காரணம் இல்லையே??” இம்முறை அந்த சிரிப்பு என் தலைவலியை இன்னும் அதிகமாக்கியது.... அவர் சொன்னதன் உள்ளர்த்தம் புரிந்து, என் உடன் அமர்ந்திருந்த பெண்ணும் சிரிக்க, எனக்கோ தர்மசங்கடமாக போய்விட்டது.... இரண்டு தலைவலிகளிலும் தற்காலிகமாக தப்பிக்க கேண்டீன் போக முடிவு செய்தேன்.... குமார் சாரிடம் சொல்லிவிட்டு கேன்ட்டீன் சென்றேன்.....  நான் சென்ற நேரம் பொதுவாக கேண்டீனில் அங்கு பணிபுரியும் ஒருசிலரை தவிர யாரும் இருக்க மாட்டாங்க.... அது ப்ரைம் டைம் வகுப்புகள் நடக்கும் நேரம்.... கேண்டீன் உள்ளே நுழைந்ததும், முழுவதுமாக காலியாகி இருந்த மேசைகளுக்கு நடுவில், ஒன்றில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தான் முத்து.... மருத்துவமனையை விட்டு, எங்கோ அவசரமாக ஓடியதை பார்த்தபோது, அநேகமாக ஏர்போர்ட் சென்றிருப்பானோ என்று நினைத்தேன்.... இவ்வளவு அவசரமாக ஓடியது, இந்த காபிக்குத்தானா? என்று எனக்குள் சிரித்துக்கொண்டேன்..... என்னை அங்கு நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான், என்னை கண்டதும் காணாததைப்போல தலையை கவிழ்த்து அலைபேசியை நோன்டிக்கொண்டிருந்தான்..... அப்படி இருப்பதன் மூலம், என் பார்வையிலிருந்து அவன் தப்பித்துவிடுவதாக நினைக்கும் அளவிற்கா அவன் முட்டாள் என்று நினைத்துக்கொண்டே, அவனை காணாததுபோல உள்ளே சென்றேன்.... நான் அவனை க்ராஸ் செய்ததும், தப்பித்ததாய் நினைத்து அவன் விட்ட பெருமூச்சு நடந்து சென்ற எனக்கு துல்லியமாக கேட்டது.... உள்ளே சென்று காபியை வாங்கிவிட்டு, மீண்டும் அவன் அமர்ந்திருக்கும் மேசையில், அவனுக்கு எதிரில் அமர்வேன் என்று அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான்.....
அவனுடைய எந்த செய்கைகளையும் நான் கவனிக்காதவனைப்போல, “ஓ முத்து, நீ இங்கதான் இருக்கியா?” என்று சிரித்தேன்....

“ஆமா...” என்று கூறிவிட்டு அசடு வழிய சிரித்தான்.... அந்த சிரிப்புக்கு பின்னால் புதைந்திருந்த சோகத்தை என்னால் எளிதில் உணர முடிந்தது....
“அந்த மருந்தல்லாம் மறக்காம சாப்பிடு.... அப்புறம், கொஞ்ச நாள் எதுவும் வேணாம்” இப்படி நான் கூறியது அவனுக்குள் பயத்தை உருவாக்கியதை அவன் கண்கள் எனக்கு காட்டிக்கொடுத்தது....
நான் சொன்னதற்கு எந்த பதிலும் சொல்லாமல், “சரி, நான் கெளம்புறேன்” என்று செல்ல முற்பட்டான்.... ஒரு மருத்துவனுடைய உறவை, மருத்துவமனை வாசலை தாண்டி எடுத்து செல்ல கூடாது என்பதை அவன் தீர்மானமாக யோசித்திருப்பானோ? என்று நான் யோசித்தேன்.....

இருந்தாலும் நான் விடுவதாக இல்லை.... அவனை கொஞ்சம் அதட்டலோடு அமர சொன்னேன், பயத்துடனே அவனும் அமர்ந்தான்...
“ஏன் முத்து என்ன பார்த்து பயப்படுற?.... நான் ஒன்னும் உன்னைய கடிச்சு தின்னுட மாட்டேன்.... நானும் உன்ன மாதிரி ஒருத்தன்தான்” என்றேன்.... நானும் அவனை மாதிரிதான் என்று சொன்னதை அவன் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதை அவன் குழப்பமான முகத்தை பார்த்து தெரிந்துகொண்டேன்....
“புரியலையா?.... நானும் ஒரு கே தான்” இப்படி படாரென்று போட்டு உடைத்தது எனக்கே கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது..... இருந்தாலும் ஏதோ அசட்டு தைரியத்தில் அவனிடம் சொல்லிவிட்டேன்.... அதை கேட்ட அவன் இன்னும் அதிர்ச்சியானான்..... ஏதோ கேட்க தோன்றியும், அவனால் அதை கேட்க முடியாத அளவிற்கு அவன் மனம் அவனை தடுத்ததை உணர்ந்தேன்....

“நெஜமாதான் சொல்றேன் முத்து.... அதனாலதான், நீ ஒவ்வொருதடவையும் ஓடப்பார்த்தாலும், உன்னைய நான் விடாம துரத்துறேன்.... உன் வலியும், கஷ்டமும் எனக்கு புரியும்... என்னை நம்பு” என்று அவன் கைகளை பிடித்தேன்.... கைகள் நடுக்கமுற்று, வியர்த்து சில்லிட்டது.... சட்டென அவன் என் கைகளை விலக்கி விட்டான்.... அவன் செய்கை என்னை குழப்பியது.... ஒருவேளை நான் அவனை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக நினைக்கிறானா?... இருக்காது, அண்ணன் என்று சொன்னபிறகு யாரும் அப்படி நினைக்க மாட்டாங்கன்னு அவனுக்கு தெரியும்... அப்போ, இன்னும் அவன் என்னை நம்பலையா? இருக்கலாம்....
“நானும் ஒரு பையனை லவ் பண்ணி, எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சு இப்போ பிரிஞ்சிட்டோம் முத்து....” என்றேன்.... இதற்கும் நிச்சயம் பதில் வராது என்று எனக்குள் தோன்றினாலும், அவனிடம் அதை சொல்ல சொல்லி என் ஆழ்மனம் அழுத்தமாக சொன்னது....
எதிர்பாராத அதிசயமாக அவன் பேச தொடங்கினான், “சாரி அண்ணே, நான் பயந்துட்டேன்.... அதனாலதான் உங்ககிட்ட சரியா பேசமுடியல.... நானும் ஒருத்தரை லவ் பண்றேன் அண்ணே.... கே’ன்னாவே பொதுவா வேற மாதிரி தான் நினைக்குறாங்க.... லவ் பற்றியல்லாம் யாரும் நம்ப மாட்டாங்க.... அதான், நம்மள மாதிரி ஆளுங்கள்ட்டயே நான் லவ் பற்றி சொல்றதில்ல....”
“இவ்வளவு பேசுவியா முத்து நீ?.... எனக்கு ஆச்சரியமா இருக்குப்பா.... சரி, ஒரே ஒருத்தர்கிட்டதான் நீ ரிலேஷன்ஷிப் வச்சுக்கிறன்னா, இது எப்டி உனக்கு?” தயங்கியபடி கேட்டேன்.... ஆனால், அவனோ தயக்கம் எதுவும் இல்லாமல் சொல்ல தொடங்கினான்....
“என் லவ்வர் நல்லவன் தான்... ஆனால், சில விஷயங்கள் எனக்கு பிடிக்கலைனாலும், விருப்பம் இல்லைனாலும் அதை செய்ய சொல்லி கம்பல் பண்ணுவான்.... மற்றபடி, என் மேல ரொம்ப பாசமா இருப்பான்... அதனாலேயே, அவனுக்காக நான் சில விஷயங்களை அக்சப்ட் பண்ணேன்... அதோட விளைவுதான் இது..... உங்க லவ் எதனால அண்ணே ப்ரேக் அப் ஆச்சு?” இப்போது என்னைப்பற்றி கேட்டான்.....

“என்ன காரணம்னு தெரியல .... ஆனால், மூணு மாசத்துக்கு முன்னாடி, ஒரு காரனமுமே இல்லாம என்னைவிட்டு விலக ஆரமிச்சான், அப்டியே மொத்தமா விலகிட்டான்.... அனேகமா, அவன் எதிர்பார்த்ததை என்னால கொடுக்க முடியலையோ என்னவோ” என் கண்கள் என்ன அறியாமல் கலங்கியது....
என் கைகளை இப்போது அவன் பிடித்து, “கவலைப்படாதிங்க அண்ணே.... நிச்சயம் மனசு மாறி, மறுபடியும் உங்களை தேடி வருவார் அவர்....” என்றான்.... அதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்குள் எழாவிட்டாலும், அவன் சொன்னதும் அப்படி நடக்குமோ? என்ற எண்ணம் எனக்குள் துளிர்விட்டு மனதை இலகுவாக்கியது.....
முத்துவை நான் சமாதானப்படுத்த வந்துவிட்டு, இப்போ அவன் எனக்கு சமாதானம் செய்து கொண்டிருப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது.....
“சரி முத்து.... உனக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை உன் லவ்வர் செய்ய சொன்னா, நீ அதை அவருக்கு புரியவைக்கனும்பா.... இப்போ தேவையில்லாம கஷ்டப்படுற பாரு நீ...... இவ்வளவு பாசமா இருக்குற உன் லவ்வர், நிச்சயம் இதை புரிஞ்சுக்குவார்.... அதனால பேசுப்பா” என்று கூறியது அவனை யோசிக்க வைத்தது....
“ஆமாம் அண்ணே.... இந்த விஷயத்துல அவர் ரொம்பவே அடம் பிடிக்கிறார்.... மற்ற நேரத்துல வேற எதுவுமே வேனாம்னும், என் மார்ல சாஞ்சு அழுதா போதும்னும் சொல்வார்.... கடைசிவரை என்கூட இருந்தா போதும், வேற எதுவும் வேனாம்னும் சொல்வார்.... நிச்சயம் பேசுறேன் அண்ணே.... “ அவன் இப்படி அடுக்கடுக்காக பேசிக்கொண்டிருந்தாலும், இப்போ அவன் சொன்ன வார்த்தைகள் என்னை வேறு விதமாக சிந்திக்க வைத்தது.... “மார்ல சாஞ்சு அழனும்”, “கடைசி வரை உன் தோளில் சாஞ்சு ஷார் பண்ணிக்கணும்” இதைப்போல அடிக்கடி சொல்லும் விஷால், என்னிடம் செக்ஸ் விஷயத்தில் மட்டும் முரண்டு பிடிப்பான்.... அவன் சொல்வதை கண்டுகொள்ளாமல், நான் எதையோ யோசித்துக்கொண்டிருப்பதை கவனித்த முத்து, “என்ன அண்ணே யோசிக்கிறீங்க?... நான் ரொம்ப போர் அடிக்கிறேனா?” என்றான்....

“இல்ல பா.... உன் லவ்வர் பேர் என்ன?”
“விஷால்” அதிர்ந்து போனேன்.... இருந்தாலும், அது அந்த விஷாலாக இருக்க கூடாது என்று இருக்கும் அத்தனை கடவுளையும் வேண்டிக்கொண்டு , மீண்டும் அவனிடம், “அவர் போட்டோ வச்சிருக்கியா?” என்றேன்....
தன் அலைபேசியின் முகப்பு திரையில் வைத்திருந்தது, அந்த விஷாலேதான்.... அத்தனை கடவுளிடம் வேண்டியதும், அந்த நிமிடமே அர்த்தமற்று போனது.... உடல் நடுக்கம் உண்டாக, வியர்த்து கொட்டியது.... எச்சிலை முழுங்க முடியாதபடி தொண்டை அடைத்தது.... என் இந்த வித்தியாசமான ரியாக்சனை பார்த்து, முத்து பயந்து போனவனாக, “என்ன அண்ணே ஆச்சு?.... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?.... இவரை முன்னாடியே உங்களுக்கு தெரியுமா?” என்று பதறினான்....
விஷால் மீது உயிரையே வைத்திருக்கும் முத்துவை, என் ஒரு உண்மையால் ஏமாற்றிவிட வேண்டாம் என்று நினைத்தேன்.... என்னை பிடிக்காமல் போனவன், முத்து விஷயத்தில் அப்படி இருப்பான் என்று என்னால் எப்படி சொல்ல முடியும்?...

“இல்லப்பா.... தலைவலி... அதான், கொஞ்சம் டையர்டா இருக்கு.... ஆமா, இந்த விஷால் உனக்கு எவ்வளவு நாளா பழக்கம்?” என்றேன்....
“அவரை எனக்கு ஆறு மாசமா தெரியும், மூணு மாசமாத்தான் அவர் லவ்வை நான் ஒத்துக்கிட்டேன்.... இப்போ இந்த மூணு மாசமும் மனசு ரொம்ப இதமா இருக்க” அவன் இதமான மனதை, நான் பதம் பார்க்க விரும்பவில்லை.... எப்போதும் போல் அல்லாமல், இப்போ அவனிடமிருந்து ஏதோ ஒரு அவசர காரணம் கூறிவிட்டு நான் அவனைவிட்டு ஓடினேன்.... இதுவரை என் மனதிற்குள் இருந்த ஒரு விடைதெரியாத கேள்விக்கு, இப்போ முத்து மூலம் ஒரு விடை தெரிந்திருக்கிறது.... ஆம், “எதனால அவன் என்னைவிட்டு பிரிந்தான்?” என்ற கேள்விக்கு, இப்போ ரொம்பவே கேவலமான பதில் கிடைத்திருக்கு..... “வெறும் செக்ஸ் மட்டும்தான் காதல் என்ற எண்ணம் கொண்டவனுக்காகவா இவ்வளவு காலம் மனம் நொந்து கவலைப்பட்டேன்” என்று என்னையே நொந்துகொண்டேன்.... அடுத்த மாடலை பார்த்த பிறகு, ஆளை மாற்றும் அலைபேசி போன்றதாக காதலை நினைத்துவிட்டான் அவன்.... செக்ஸ்’க்காக காதலை விலைபேசியதில் அவனுக்கு பலி கடவாக நானே கடைசியாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்..... அந்த நிமிடமே அவனை என் மனதை விட்டு குப்பையென கசக்கி எறிந்தேன்.....
நாட்கள் உருண்டோடியது..... இன்னும் பதினைந்து நாட்களில் நான் பயிற்சி மருத்துவத்தை நிறைவு செய்ய போகிறேன்.... இறுதி போஸ்டிங்’ஆக சைக்காட்ரி போஸ்டிங் போடப்பட்டிருந்தது.... எனக்கு ரொம்பவும் பிடித்த டிப்பார்ட்மெண்ட்..... இப்போது விஷால் பற்றிய நினைவுகளை முழுவதும் துறந்துவிட்டேன் என்றே சொல்லலாம்....
சைக்கியாட்ரி போஸ்டிங் எப்போதுமே கலகலப்பான போஸ்டிங்.... ஏற்கனவே நன்கு பரிச்சயமானதால், தயக்கமின்றி அமர்ந்திருந்தேன்.... போஸ்டிங் வந்த மாணவர்களுக்கு எங்கள் ப்ரொபசர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்....

“டெல்யுசன் (delusion), இல்லுசன்(illusion) இரண்டுக்கும் என்ன வேறுபாடுன்னா, ஒரு கயிறை பார்த்து அது பாம்புன்னு அடிச்சு சொல்றது டெல்யுசன்.... எதுவுமே அங்க இல்லாதப்போ , பாம்பு வருதுன்னு நெனக்கிறது இல்லுசன்.... எஸ்.ஜே சூர்யா சொல்ற மாதிரி, ஒரு இல்லாத பொருளை இருக்குற மாதிரி நினைக்கிறது இல்லுசன், இருக்குற பொருளை வேற மாதிரி நினைக்கிறது டெல்யுசன்” எப்போதும் போல தன் பாணியில் நகைச்சுவை கலந்து எங்கள் ப்ரொபசர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.... இதை கேட்டு நான் உட்பட மாணவர்கள் எல்லோரும் சிரிக்க, சிரிப்பொலி அடங்கும் முன்னர் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியாக்கியது.... நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், அந்த பெண்ணுடன் ஒரு இளைஞனும் உள்ளே வந்தனர்.... என் அதிர்ச்சிக்கு காரணம், அங்கு நின்ற இளைஞன் தான்.... அவன் பார்ப்பதற்கு, முத்துவை போலவே இருந்தான்.... முத்துவை “போலவே” என்று சொல்ல காரணம் இருக்கிறது.... அப்போ வந்த முத்து, நல்ல வளமாகவும், செழிப்பாகவும், இளமை ததும்பும் அழகுடனும் இருந்தான்.... இப்போ வந்திருக்கிற முத்து போன்றவனுக்கு தேகமெல்லாம் இளைத்து, கண்கள் சுருங்கி, உதடுகள் வெடித்து என்று கிட்டத்தட்ட பரதேசம் சென்று வந்தவனைப்போல காணப்பட்டான்... வந்திருப்பவன் முத்துவா? முத்துவை போன்றவனா? அல்லது, டெல்யுசன், இல்லுசன் போன்று எதாவது கருமமா?.... ஒன்னும் புரியல.... வந்து நின்ற பெண்மணி, கையில் வைத்திருந்த அட்டையை காண்பித்தாள்..... அதில் தெளிவாக “முத்து” என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.... அவன் முத்துவே தான்.... அந்த அட்டையில், அவன் தற்கொலை முயற்சி செய்திருப்பதாகவும், உளவியல் கலந்தாய்வுக்கு பரிந்துரைத்தும் இன்னொரு மருத்துவர் எழுதி இருந்தார்.... எனக்கு இதயம் ஒரு கனம் நின்று போனதைப்போல உணர்ந்தேன்.... முத்துவை, எங்கள் ப்ரொபசர் அருகில் இருந்த இருக்கையில் அமர சொன்னார்.... இப்போது அவன் என் நேரெதிரில் அமர்ந்திருந்தான்.... தலையை குனிந்தபடியே அமர்ந்திருந்தான்.... நிமிர்ந்தால் எதாவது கேட்கலாமா? என்று காத்திருந்தேன், என்னை தவிர்க்கவே அவன் அப்படி தலையை குனிந்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.....

“என்ன ப்ராப்ளம் உனக்கு?..... எதுக்காக தற்கொலை பண்ணிக்கனும்னு நினைக்குற?” ப்ரோபசரின் முதல் கேள்வியே எனக்குள் எரிச்சலை உண்டாக்கியது....
அவரை பொருத்தவரை அங்கு வரும் அனைவரும் “கேஸ்”கள் தான்.... முத்துவை தவிர்த்து அங்கு வேறு யாரும் இருந்திருந்தால், என்னை பொருத்தவரை கூட அந்த நபர் வெறும் “கேஸ்”தான்.... அதனால் ப்ரொபசரை குற்றம் சொல்வது தவறென்று உணர்ந்தேன்....
முத்து வாயை திறப்பதாக இல்லை.... மறுபடியும் ப்ரொபசர், கொஞ்சம் கோபத்துடன் கேட்க, மெல்ல வாயை திறந்து, “வயித்து வலி” என்றான்.....
“என்னது?” என்றார் ப்ரொபசர்....
இப்போ கொஞ்சம் சத்தத்துடன், “வயித்து வலி” என்றான்....
“வயித்து வலினா பூச்சிக்கு மருந்து சாப்பிடனும், இப்படி பூச்சி மருந்து சாப்பிட கூடாது” என்று கோபத்துடன் கூறினார் ப்ரொபசர்...
அவர் கோபத்தில் உண்மையான காரணம் இருக்கிறது.... எந்த காரணத்திற்காக தற்கொலை முயற்சி செய்தாலும், உண்மையை மறைத்து இப்படி மருத்துவர்களிடம் பலரும் கூறும் காரணம் வயித்து வலி....

சிறிது நேரம் கழித்து, அங்கு நின்ற மருத்துவ மாணவர்களை அழைத்து, “ஸ்டூடண்ட்ஸ், இவர் கேஸ் ஹிஸ்டரி எடுத்து ப்ரெசன்ட் பண்ணுங்க” என்றதும், அந்த மாணவர்கள் முத்துவை அருகில் இருந்த இன்னொரு அறைக்கு அழைத்து சென்றனர்....
அவர்கள் சென்றதும் என்னை பார்த்த ப்ரொபசர், “இவனுக்கல்லாம் என்ன வயசு, அதுக்குள்ளையும் வாழ்க்கையை வெறுத்துட்டான் பாரு.... என்ன பெருசா காரணம் இருக்க போகுது? லவ் பெய்லியரா இருக்கும்.... கஷ்டம்னாலே என்னன்னு தெரியாம அவங்க பேரன்ட்ஸ் வளர்க்குரதுதான் முதல் தப்பு.... அவன் ஒரு சின்ன காரணத்துக்காக செத்துட்டா, அவன் குடும்பத்தை பற்றி நெனச்சிருப்பானா அந்த இடியட்... வாழ்க்கை முழுசும் அதை நெனச்சு ஒவ்வொரு நாளும் செத்துகிட்டு இருப்பாங்கன்னு அந்த யூச்லஸ்’கு புரியல பார்த்தியா?” என்று ஒரு தந்தை ஸ்தானத்தில் தன் கவலைகளை கொட்டினார்....
நான் அதையல்லாம் கவனிக்க மறந்தவனாக, முத்துவின் இந்த நிலைமைக்கு என்ன காரணமாக இருக்கும்? என்று யோசித்தேன்.... “ஒருவேளை ப்ரொபசர் சொல்றது போல, காதல் தோல்வியா?... அப்படின்னா, அந்த பாவி இவனையும் ஏமாத்திட்டானா?.... அவன் அழறதுக்கு வேற மார்பு தேடி போய்ட்டானா?.... இதை முன்பே அவனிடம் சொல்லி எச்சரிக்காமல் விட்டது என் தப்பா?.... என்னால்தான் முத்து இப்படி ஆனானா?” என்று என் மனதிற்குள் முத்துவை பற்றிய கேள்விகள் என்னை துளைத்து எடுத்தது.... ப்ரொபசரிடம் கேண்டீன் செல்வதாக கூறிவிட்டு, அவசரமாக அடுத்த அறையை நோக்கி ஓடினேன்.... அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது.... லேசாக திறந்திருந்த கதவின் விளிம்பின் வழியே, அந்த பெண்மணி உள்ளே நடப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.... என்னை கண்டதும், அவசரமாக அங்கிருந்து விலகி சென்றார்... கதவை இன்னும் கொஞ்சம் திறந்தேன்.... உள்ளே மாணவர்கள் விடுத்த கேள்விக்கணைகளை, முத்து எவ்வித சலனமும் இன்று தன் மௌனத்தால் மழுங்கடித்துக்கொண்டிருந்தான்......
“எத்தனை வருஷமா தற்கொலை முயற்சி பண்ணுனீங்க?”
“கடைசியா எப்போ அப்டி முயற்சி பண்ணிங்க?”
“என்ன விஷம் சாப்டிங்க?”
இந்த கேள்விகளை எதிர்கொள்ள நேர்ந்தால், சாமானியனும் தற்கொலை முடிவெடுப்பானோ? என்று தோன்றியது... தற்கொலை செய்து கொள்வதை முத்துவின் பரம்பரை தொழிலாக அவர்கள் நினைத்து விட்டார்களோ? என்று தோன்றியது....
இதற்கு மேலும் இந்த மாணவர்களின் பொறுப்பில் முத்துவை விட்டால், அநேகமாக அடுத்த தற்கொலை முயற்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுப்பதை போல ஆகிவிடும் என்று உணர்ந்து, ஏதேதோ காரணம் சொல்லி, அவர்களை அங்கிருந்து அப்புரப்படுத்தினேன்.... அவர்கள் சென்றதும், அந்த அறையின் கதவை அழுத்தி சாத்தினேன்.... நான் அங்கு வந்தது, மாணவர்களிடம் பேசியது, இப்போ கதவை சாத்தியது என்று எதையுமே பொருட்படுத்தாமல், அந்த இருக்கையில் இறுக்கத்துடன், தலையை கவிழ்த்தியபடி அமர்ந்திருந்தான்.....
“முத்து..... என்னை ஞாபகம் இருக்கா?”
“......” இந்த மௌனம் இன்னும் என்னை கோபமூட்டியது....
அதட்டல் கலந்த சத்தத்துடன், “இருக்கா இல்லையான்னு சொல்லு....” என்றேன்....
“ஹ்ம்ம்.... இருக்கு” என்றான்....
“எதுக்காக இப்டி தப்பான முடிவெடுத்த?”
“வயித்து வலி.... அதான்” அவன் பதிலால் நான் பொறுமை இழந்தேன்.... இன்னும் என்னை அவன் நம்பவில்லை, அவனுக்காக நான் சீதையைப்போல தீக்குளித்தா நிரூபிக்க முடியும்.... ஆனாலும், அவனை அப்படியே விட்டு செல்ல மனமில்லை...
அவன் கைகளை பிடித்தேன்.... இன்னும் அதிக நடுக்கத்துடன், சில்லிட்டது....
கைகளை பிடித்தவாறே, “என்ன ப்ராப்ளம் உனக்கு?.... விஷால் எதாவது.......” என்று நான் முடிப்பதற்குள், அவன் கண்கள் அதை ஆமோதிப்பதை போலகசிய தொடங்கியது.... கண்கள் சொல்லும் பதிலை, இன்னும் அவன் வாய் சொல்லவில்லை.....
“தைரியமா சொல்லுப்பா.... உன் கவலை எனக்கு புரியுது.... ஒரு அண்ணன் கிட்ட சொல்ற மாதிரி சொல்லு” இந்த பேச்சு அவனை மனமிழக வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது....
கண்களை துடைத்துக்கொண்டு, “ஆமாம் அண்ணே.... என்னைய ஏமாத்திட்டான் அவன்... ஆறு மாசத்துக்கு முன்னாடிலேந்து, தேவையில்லாம சண்டை உருவாக்குனான்.... கொஞ்சம் கொஞ்சமா பேச்சை நிறுத்தினவன், மூணு மாசமா எந்த தொடர்பும் இல்லாம இருந்தான்.... அவனை பலதடவை தேடிப்போனபோதும், என்னை கண்டுக்காம இருந்தான்.... விடாப்பிடியா நான் காரணம் கேட்டேன், நான் ரொமான்சா இல்லையாம், அவனுக்கு பிடிச்ச மாதிரி இல்லையாம்.... அதனால, என்னைவிட்டு விலகிட்டானாம்.... இதை கேட்டதும் என்னால என்ன பண்றதுன்னே புரியல.... இவ்வளவு நாளும் வெறும் செக்ஸ் மட்டும்தான் அவனுக்கு பெருசா தெரிஞ்சுதா?... செக்ஸ் தான் வேணும்னா, அதுக்கு பல பேர் இருக்குறப்போ, எதுக்காக லவ்’ங்குற பேர்ல என்னைய ஏமாத்துனான்.... புதுசா ஒரு பொம்மையை பார்த்ததும், பழைய பொம்மையை தூக்கி போடுற குழந்தை மாதிரி, என்னைய தூக்கி போட்டுட்டு அவன் அடுத்த தேடலை ஆரமிச்சுட்டான்.... அவனை பழிவாங்கவோ, திருத்தவோ எனக்கு தைரியம் இல்ல.... அதனாலதான் என்ன பண்றதுன்னு தெரியாமல் என்னையே........” என்று வார்த்தையை முடிப்பதற்குள் அவன் விசும்பல் அவனை தடுத்து நிறுத்தியது..... முத்துவின் அத்தனை கேள்விகளும், இத்தனை நாட்களாக என்னையும் உருத்திக்கொண்டிருந்தவைதான்.... பதில் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.... நிச்சயமாக எல்லோரும் என்னை போன்று ஏமாற்றத்தை தாங்குபவர்களாகவும், முத்துவை போன்று தங்களை மாய்த்துக்கொள்பவர்கலாகவும் இருக்க மாட்டார்கள்.... என்றைக்காவது, அவன் யார் மூலமாவது இதை உணரும் சமயம் முத்துவின் கண்ணீருக்கு அவன் பதில் சொல்வான்.....
என்னை பற்றி இனியும் நான் முத்துவிடம் எதுவும் சொல்லப்போவதில்லை.... அவனுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி, கொஞ்சம் மனதை தேற்றினேன்.... விசும்பல் நிற்காத அழுகை அவனை ஆட்கொண்டிருந்தது, அப்படியே என் மார்பில் சாய்ந்து அழத்தொடங்கினான்..... கண்ணீரால் அவன் கவலைகளை கரைத்துக்கொண்டிருந்தான்..... ஒரு அன்னையின் அரவணைப்பை அந்த நேரத்தில் முத்து என் மார்பில் கண்டிருக்கக்கூடும்....


2 comments:

  1. ithu oru echarikai pola..................

    ReplyDelete
  2. Anna, oru nalla climax (nan nenacha mathiri avlo sogama illa), ana vishalai pali vangina madhiri mudisu irukkalamla appa konjam themba irunthirukkum...

    ReplyDelete