இங்கு பலரும் நான் பார்த்த வரையில் கதை எழுதும் ஆசையிருந்தும், விருப்பம் இருந்தும் எழுதும் விதி தெரியாமல் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்..... அவர்களுக்கு ஒரு சின்ன யோசனை சொல்லத்தான் இந்த பதிவு... நம்மைப்போன்ற எண்ணம் உடையவர்களின் கதையை எழுத ஜெயகாந்தனோ, சுஜாதாவோ, பாலகுமாரனோ வரமாட்டாங்க.... நம் உணர்வுகளை அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது.... அதனால் இங்கே நாம் தான் சுஜாதா, பாலகுமாரன் எல்லாமும்..... முதன்முதலில் இந்த தளங்களில் என்னை கதை எழுத தூண்டியது ஒரு கதைதான்.... சுனில் என்ற நபர் எழுதிய, "காதலில் தவித்தேன்" என்ற கதை தான் அது..... அதை படித்ததும் அதைப்போன்ற கதை எழுத எனக்கு ஆசையாக இருந்தாலும், அதை எங்கே எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தவித்தேன்.... ஆனாலும், ஒரு அசட்டு தைரியத்தில் நீச்சல் தெரியாமலே இந்த கடலுக்குள் குதித்துவிட்டேன்.... அப்போது நான் இருந்த மனநிலையில் இப்போது பலரும் இருக்கக்கூடும், அத்தகைய நபர்களை ஊக்குவிக்கத்தான் இந்த பதிவு.... நான் எதையோ சாதித்துவிட்டதாகவும், பெருமை பேசுவதாகவும் கண்டிப்பா நினச்சுடாதிங்க.... என் அனுபவங்களை, நான் கதை எழுதும் முறையை உங்களுக்கு சொல்வதன் மூலம் ஒரு "படைப்பாளி" உருவானால் கூட அது இந்த பதிவால் எனக்கு கிடைத்த வெகுமதிதான்......
முதலில் யாரெல்லாம் கதை எழுதலாம்?..... ஒரு கதையை ரசித்து படிக்கும் அத்தனை வாசகர்களாலும் நிச்சயம் ஒரு கதையை படைக்க முடியும்..... முதலில், உங்களுக்கு இருக்கும் தயக்கத்தை விரட்டி அடியுங்கள்..... முதலில் கதைக்கான கருவை முடிவு செய்துகொள்ளுங்கள்..... "கரு" என்றால் கதையின் ஒன்லைன் என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான்..... முன்னூறு பக்க கதையை, ஒரே வரியில் சுருங்க சொல்வதுதான் ஒன்லைன்.... உதாரணமாக என் "நெஜமாவா சொல்றீங்க?" கதையின் ஒன்லைன் "கிராமத்து இளைஞனின் காதல்.... சமூகத்தின் புறக்கணிப்பால் முதல் காதலை இழக்கிறான், சமூகத்தை புறக்கணித்துவிட்டு இரண்டாம் காதலை வெல்கிறான்"... இந்த ஒன்லைன் உங்கள் மனதில் தோன்றிவிட்டதானால் நீங்கள் அடுத்த நொடியே, கதையை தயார் செய்யனும்..... கதையின் ஒன்லைன் மூலம் கதையோட ஆரம்பமும், முடிவும் உங்கள் கையில் இருக்கிறது, அந்த இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடாக நீங்கள் கதையை செலுத்துவது ரொம்பவே எளிது.....
இரு இளைஞர்களின் காதல் என்பதுதான் பெரும்பாலும் கதைகளாக்கப்படுகின்றன.... என்னை கேட்டால், இந்த ஆடவர்களின் காதல் கான்சப்ட் தான் ரொம்பவும் பாதுக்காப்பான கான்சப்ட்.... மினிமம் காரன்ட்டி கதைகள் என்று சொல்வார்கள் அல்லவா? அது இந்த வகைதான்.... இந்த காதலுக்குள் நீங்கள் திணிக்கும் உணர்வுகள், பிரிவுகள், நகைச்சுவை, எதிர்ப்புகள் எல்லாம்தான் அடுத்து முக்கியமானவை..... இங்கே நீங்கள் தீர்மானிக்க வேண்டிய அடுத்த அம்சம், உங்கள் கதையை நீங்கள் எந்த வழியில் செலுத்த போகிறீர்கள் என்பதுதான்..... காதல் கதையா? காமக்கதையா?.... இரண்டு கதைகளுக்குமே வாசகர் வட்டங்கள் தனியாக இருக்கும்..... காமக்கதைகளுக்கு பெரிதாக யோசிக்க வேண்டாம்.... ஒருவரை எளிதில் கிளர்ச்சி அடைய செய்திட முடியும், ஆனால் அதே நபரை உணர்ச்சிகளால் சிரிக்கவும், அழுகவும் வைப்பது ரொம்ப கடினம்..... அதில் எந்த வகை கதையை கொண்டு செல்ல போகிறீர்கள் என்று தீர்மானிப்பது உங்கள் கையில்..... பெரும்பாலும் நீங்கள் கதைகளுக்குள் வைத்திருக்கும் காட்சிகளுக்கு தேடி அலைய வேண்டாம்.... உங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையோ, உங்கள் கனவில் நீங்கள் நினைத்திருந்த விஷயங்களையோ கொஞ்சம் மெருகேற்றி எழுதினால் போதும்.... கதையோடு வாசகர்களை பயணிக்க இரண்டு விஷயங்கள் முக்கியமானவை..... ஒன்று காட்சிக்கோவைகள்..... "பொன்னியின் செல்வன்" கதை படித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.... அதாவது, அந்த நாவல் பல அத்தியாயங்களாக இருந்தாலும் கூட, உங்களால் ஒரு அத்தியாயத்தை முடித்த கையேடு புத்தகத்தை கீழே வைக்க முடியாது.... காரணம், ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு இணைப்பை கொடுத்திருப்பார் ஆசிரியர்.... உதாரணமாக, "முதல் நாள் இரவு பேசிக்கொண்டிருக்கும்போது, தன் காதலை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்த ராம், மறுநாள் கல்லூரியின் உணவு இடைவேளையின் போது சொல்லிட முடிவெடுத்தான்" இந்த காட்சியை படித்தவர்கள், அடுத்த நாள் உணவு இடைவேளையில் ராம் காதலை சொல்வானா? என்று தெரியும்வரையில் உங்கள் கதையை விட்டு விலக மாட்டார்கள்.... தேவையில்லாமல் எந்த காட்சியையும் இடை சொருகலாக சொருகாதீர்கள்..... கதைக்கும் காட்சி அமைப்புக்கும் தேவைப்பட்டால் ஒழிய எந்த காட்சியையும் செயற்கையாக திணிக்காதீர்கள்..... உதாரணமாக காதலர்கள் இருவரும் கடற்கரைக்கு சென்று ரொமான்ஸ் செய்வதாக காட்சி வைத்தால் கூட, அந்த கடற்கரை காட்சியை நியாயப்படுத்தும் விதமாக அங்கு ஒரு விஷயத்தை வைக்க வேண்டும்.... ஏதோ ஒரு முடிவோ அல்லது ரகசியமோ அல்லது ஏதோ முக்கிய நிகழ்வுக்கு அச்சாரமாகவோ அந்த கடற்கரை காட்சியை வைக்காவிட்டால், நிச்சயம் அது மலயாலப்படத்தில் ஒட்டப்படும் "பிட்டை" போல தனித்து நிற்கும்..... கதையை படிப்பவர்களுக்கு பல காட்சிகளாக உங்கள் கதை தெரியக்கூடாது.... காட்சிகளை கோர்ப்பதன்மூலம் ஒரு நீண்ட கதையை போன்ற உணர்வைத்தான் கொடுக்க வேண்டும்.... இந்த காட்சி கோர்வைக்கு அடுத்த விஷயமாக இன்னொன்று திருப்புமுனைகள்......
என் மானசீக குரு, அமரர் சுஜாதா அவர்களின் கதைகளை படித்த அத்தனை பேருக்கும் இவரின் சஸ்பென்ஸ் காட்சிகள் புரிந்திருக்கும்..... வாசகர்களால் யூகிக்க முடியாத, அதே நேரத்தில் எதார்த்தத்தை மீறாத திருப்புமுனைகள் பல இடங்களிலும் இவர் கதைகளில் காணப்படும்..... கதையின் கடைசி காட்சியில், கடைசி வரியில் கூட இவரின் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு அவிழும் அளவிற்கு திருப்புமுனைகளால் தமிழ் இலக்கியத்தில் திருப்புமுனை உண்டாக்கிய மந்திரவாதி சுஜாதா.... வாசகர்களால் யூகிக்க முடியாதபடி வியூகம் அமைப்பதுதான் உங்கள் திறமை... கதையின் தொடக்கத்தை எப்போதும் கவனமாக கையாளுங்கள்..... கதையின் ஆரம்பம் எப்போதும் உங்கள் உச்சபட்ச திறமையாக இருக்க வேண்டும்.... ஒரு தொடர் கதையின் முதல் மூன்று பதிவுகள் ஒருவரை கவர்ந்துவிட்டால், அதற்கு பிறகு நீங்கள் கதையை கொண்டுசெல்வது ரொம்பவே எளிதான விஷயம்..... அதாவது, முதல் காட்சிகள் வாசகர்கள் வழியை நீங்கள் பின்பற்றினால், கதையின் இறுதிவரை அவர்கள் உங்களை பின்பற்றுவார்கள்..... கதை எழுதும்போது ஒரு விஷயத்தை முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..... உங்கள் கதை எத்தனை பேரையா யோசிக்க வைக்க போகிற ஒன்று.... அதனால், சமுதாயத்திற்கான ஒரு "மெசேஜ்" இடையில் வைத்தால், அது ரொம்ப எளிதாக நம்ம மக்களை சென்றடையும்.....
அதிகமான ஆங்கில கலப்பு இல்லாமல் எழுதுங்கள்.... ஹாஸ்பிட்டல் சென்று சொல்ல வேண்டுமானால் அதை தமிழில் "ஹாஸ்பிட்டல்" என்று சொல்லுங்க போதும்.... மாறாக இடையில் ஆங்கிலத்தில் hospital என்று இருந்தால் பார்க்க கொஞ்சம் நெருடலாக இருக்கும்.... அதிகமாக உரையாடல்களை வைக்காதீர்கள்..... அதிகமான உரையாடல்கள், கதையை நாடகத்தன்மை இருப்பதை போல காட்டிவிடும்.... கொஞ்சம் உருவகம், உவமைகள் செய்து பழகுங்கள்.... "ஆரஞ்சு சுளைகள் உதடுகள், தேன் போன்ற சுவை" போன்ற வழக்கமான உருவகங்களை விடுத்து கொஞ்சம் புதிதாக யோசியுங்கள்..... கதையின் தலைப்பே, வாசகர்களை படிக்கும் ஆர்வம தூண்டும்படி செய்ய வேண்டும்.... வழக்கமான திரைப்படங்களில் வரும் பாடல்களின் முதல் வரியை, தலைப்பாக வைத்துவிட்டு இருக்காமல், கொஞ்சம் யோசித்து பொருத்தமான பெயர் சூட்டுங்கள்..... கதாபாத்திரங்களின் பெயர்களிலும் கொஞ்சம் கவனம் தேவை.... "அஜய், விஜய்" என்று கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்து இடையில் படிப்பவர்களை குழப்பாதிங்க.... இரண்டு பெயர்களும் காண்ட்ராஸ்டாக இருக்கும்படி பெயர் வைக்கவும்..... கதையின் களம் பெரும்பாலும் சென்னை கல்லூரியாகவே இருக்கிறது..... அதை மாற்றி, உங்கள் ஊர்களையும் கதை களங்கள் ஆக்கி உங்கள் ஊர் பெருமைகளும் இடையில் சேர்த்து விடுங்க.....
ஒருசில பதிவுகளில் உங்கள் திறமை உங்களுக்கு புரியும்.... எந்த விஷயம் வாசகர்கள் மத்தியில் உங்களை நிலைபெற செய்கிறது என்று கண்டுபிடித்து, அதே வகையில் உங்கள் கதையை கொண்டு சேருங்கள்.... உதாரணமாக உங்களுக்கு காதல் காட்சிகள் சிறப்பாக வருகிறது என்றால், நீங்கள் அதை அதிகமாக்கி கவனம் செலுத்துங்கள்..... சிலருக்கு நகைச்சுவை நன்றாக வரலாம், அவர்கள் நகைச்சுவை பாணியில் கதையை செலுத்தலாம்.... உங்களுக்கென்று ஒரு நடை உருவாகும், அதே நடையை பின்பற்றி அதை மெருகேற்ற முயலுங்கள்.... மாறாக, மற்றவர்களை பார்த்து அவர்களின் முறையை பின்பற்ற முனைந்தால், உங்கள் தனித்துவம் அங்கு இல்லாமல் கதையை உங்களால் சிறப்பாக கொண்டுசெல்ல முடியாது..... நல்லா இருந்தா எந்த விதத்தில் உங்கள் கதை இருந்தாலும் வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்..... தேவையின்றி அதிக கதாபாத்திரங்களை உருவாக்காதீர்கள்.... பெயர் குழப்பமும், கதையில் குழப்பமும் வர வாய்ப்பிருக்கிறது.... சில பாத்திரங்களை கதையின் சுவாரசியத்துக்காக சேருங்கள், வாசகர்களுக்கு அது பிடித்திருந்தால் அந்த பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க..... என் கதையில் "மாணிக்கம் மாமா" பாத்திரம் கூட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வாசகர்களின் விருப்பம் அறிந்துதான்..... முக்கியமாக ஒன்றை மறந்துடாதிங்க, வாசகர்களின் ஒவ்வொரு கருத்தையும் முக்கியத்துவம் கொடுத்து யோசியுங்கள்..... வாசகர்களையும், அவர்களின் கருத்துக்களையும் மதித்தால் நிச்சயம் நல்ல முன்னேற்றம் பெறலாம்.... குறிப்பாக அவர்கள் தெரிவிக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை, கோபப்படாமல் ஆக்கப்பூர்வமாக யோசித்து பார்த்தால் கதைக்கான முன்னேற்றத்தை நீங்கள் எளிதில் பெறலாம்..... சில நேரங்களில் கள ஆய்வும் முக்கியமாகும்.... உதாரணமாக குறிப்பிட்ட பகுதியின் வட்டார வழக்கு, உணவுகள், இடங்கள் என்று கதையின் களம் பற்றி சரியான தகவல்களை கொடுக்க வேண்டும்..... இந்த விஷயமெல்லாம் நான் என் முதல் கதை எழுதும்போது அறிந்திருக்கவில்லை.... இன்னும் நான் கற்க வேண்டிய விஷயங்களும் எவ்வளவோ இருக்கு..... கதை எழுதுவது ஒன்றும் “கம்ப சூத்திரம்” இல்லை என்பதை உணர்த்தவே இவ்வளவையும் கூறினேன்.....
இதுவரை நான் சொன்னது நான் இதையல்லாம் யோசித்து கதை எழுதுகிறேன் என்பதை வைத்து தான்..... இது எழுத்தாளருக்கு எழுத்தாளர் மாறுபடலாம்..... உங்களுக்கும் சில நாட்கள் கழித்து தனி ஐடியா கிடைக்கலாம்.... அதனால் இப்போதைக்கு இந்த சில விஷயங்களை நினைவில் வைத்து கதை எழுதுங்க, பெரிய ஹிட் அடிக்கலாம்..... மற்ற எழுத்தாளர்களும் அவர்கள் பாணி கதை எழுதுவதை கூறுவார்களேயானால், நிச்சயம் இங்கு பல படைப்பாளிகள் உருவாகுவார்கள்..... இன்னும் எதற்கு தாமதம்?... இப்போவே, ஒன்லைன் யோசித்து கதை எழுத தொடங்குங்க நண்பர்களே...... வாழ்த்துக்கள்.....
Super
ReplyDeleteBut one small doubt.
Why you are mentioning that no one should use my name along with your name?
ha ha ha