Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday, 6 January 2013

“தொடர்பு எல்லைக்கு வெளியே..... “ – சிறுகதை....




"இங்க பாரு தருண், எனக்கு சுத்தமா விருப்பமே இல்லைனாலும் உன் விருப்பத்துக்காகத்தான் அந்த பொண்ணை ஒத்துக்கிட்டேன்.... கல்யாணத்துக்கு அப்புறம் மாடலிங், சினிமான்னு போகக்கூடாதுன்னு தெளிவா சொல்லிடு... வடநாட்டுக்காரி மாதிரி பேரல்லாம் இருக்கு, பத்திரிகைல நான் சொல்ற பேர்தான் போடணும் சொல்லிட்டேன்.... அப்புறம்..." சொல்ல வாயெடுத்த மகாதேவனை இடைமறித்தான் தருண்....

"அப்பா, போதும்..... எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்... உங்களுக்கு மீட்டிங்'க்கு லேட் ஆச்சு, நீங்க கிளம்புங்க" என்று கூறிவிட்டு, அவர் கிளம்பும் முன் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டான் தருண்....


அவன் காரில் கிளம்புவதற்கு முன்னால், ஒரு இன்ட்ரோ கொடுத்துவிடுகிறேன்.... தருண் மகாதேவன், இந்த பெயரின் பிற்பாதிக்கு கிடைக்கும் மதிப்பில் காற்றில் மிதக்கும் ஒரு மோஸ்ட் வான்டட் பாச்சிலர்.... மகாதேவன் என்று ஆரம்பத்திலிருந்து சொல்லிவிட்டேன், இது தெரிந்தால் அவர் தொண்டர்கள் என் உருவ பொம்மையை எரித்துவிடுவார்கள்... மாண்புமிகு அமைச்சர் மகாதேவன் என்று அரசு கெஜட்டில் சொல்வதைப்போல சொல்லவேண்டும்.... "மந்தைவெளி மகாதேவன்" என்ற அடைமொழியை தாங்கி, இருபது வருடங்களுக்கு முன்புவரை இவர் ஏறாத காவல் நிலைய வாசலே இல்லை, எண்ணாத சிறைக்கம்பிகளே இல்லை.... அந்த அளவுக்கு சிறு ரவுடியாக இருந்து, இருபது வருடமாக உழைத்து (?) இந்த அமைச்சர் பதவியை பெற்ற கதையை சொல்லவேண்டுமானால் அது தனியொரு தொடர்கதையாக நீண்டுவிடும் என்பதால் மகாவின் அரசியல் வாழ்க்கையை இத்துடன் இங்கு முடித்துக்கொள்வோம்.... அமைச்சர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கிண்டர் கார்டன் பள்ளி முதல் மருத்துவ கல்லூரி வரை கிளைபரப்பி இருக்கும் நாற்பது நிறுவனங்களை நிறுவிய ஒரு மாபெரும் கல்வி வள்ளலாக உருவெடுத்து உள்ளார்.... இந்த அத்தனை சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு நம் தருண் தான்.... இப்போ புரியுதா, தருணிண் பிற்பாதி பெயருக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்று?.... அப்பா இப்படி உழைக்கும்போது, மகன் அதை ஊதாரித்தனமாக செலவு செய்வதுதானே உலக நியதி.... அதன்படி தருணும் சென்னையின் அத்தனை பப், மற்றும் டிஸ்கோத்தே'க்களின் செல்ல பிள்ளையாகி விட்டான்.... அப்படி பழக்கமானவள்தான் உபாசனா ராய்.... பிரபல மாடல் அழகி...

முதன்முதலில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடிக்க தமிழகம் வந்தவர், அதன்பிறகு தொடர்ந்து வந்த வாய்ப்புகளால் மூன்று வருடமாக சென்னை வாசியாக மாறிவிட்டார்..... இந்த உபாசனாவை கடந்த ஒருவருடமாக துரத்தி துரத்தி காதலிக்கிறான்.... காதல் ஒத்துவராததால், தன் அப்பாவைவிட்டு அவள் குடும்பத்தாரிடம் பேசவைத்து திருமண நாளும் குறித்தாகிவிட்டது.... சினிமா வாய்ப்புகள் நித்தமும் அவள் பிளாட் தேடி வந்தாலும், மாதக்கணக்காக ஒரே படத்தில் நடிக்கவும், ஒரே முகங்களை பார்க்கவும் விரும்பாததால் அந்த வாய்ப்புகளை உதறிவிட்டாள்.... ஆனால், அதற்கு காரணமாக வேறு சில விஷயங்களையும் விவரம் அறிந்த நபர்கள் சொல்கிறார்கள், அதைப்பற்றி நாம் பின்னர் பார்ப்போம்.....

வீட்டிற்கு வெளியே வந்த தருண், வாசலை தாண்டி கேட் வரை நீண்டிருந்த வெள்ளை வேட்டி தொண்டர்களை பார்த்து கொஞ்சம் அலுத்துக்கொண்டான்.... எல்லோருக்கும் வணக்கம் சொல்லி ஒருவாராக காரை அடைவதற்குள் போதும் என்றாகிவிட்டது அவனுக்கு.... யாரோ ஒரு விசுவாசமான தொண்டன் ஒருவன், தருணின் ஸ்கோடா காரின் பின்புறம் "அண்ணன் மந்தைவெளியாரின் வீர முழக்கம் கேட்க வாரீர்! அலைகடலென ஆர்ப்பாட்டமாக வாரீர்!" என்ற போஸ்டர் ஓட்டப்பட்டதை கண்டதும், மேலும் எரிச்சலான தருண் வாட்ச்மேனை அழைத்து கண்டித்துவிட்டு, ஒரு சூவிங்கத்தை எடுத்து வாயில் போட்டவாறு காரில் ஏறி அமர்ந்தான்....  வாட்ச்மேன் கதவை திறக்க, தருணின் கார் வெளியே செல்கையில் வெளியில் நின்ற தொண்டர் ஒருவர் "இளம் சிறுத்தை அண்ணன் தருண் வாழ்க" என்று சொன்னதும் கூட்டம் சேர்ந்து ‘வாழ்க’ கோஷம் போட்டது.... இருபத்தி நான்கு வயது தருணை அண்ணன் என்று சொன்ன அந்த தொண்டர் தம்பியின் வயது நாற்பதை கடந்திருக்கும்..... ஒருவழியாக இந்த அரசியல் கலவரங்களை தாண்டி, அவன் கார் பிரதான சாலையில் சீறிப்பறந்தது...

காருக்குள் இருந்த டி.வி.டி ப்ளேயரில் "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், அதை காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்" என்ற கருத்தாழமிக்க பாடல் ஒலிக்க, அதை நர்சரி பள்ளியின் குட்டி குழந்தை போல தருணும் பின்னணி பாடினான்.... எரிச்சல் மறைந்து, குதூகலம் மிதந்த நேரம் தருணின் கார் புரசைவாக்கம் வந்துவிட்டது.... பச்சைநிற வண்ணம் பூசப்பட்ட ஒரு வீட்டின் முன்பு நின்ற தருண், தன் அலைபேசியை எடுத்து "உபாஸ்" என்று பதிவு செய்திருந்த எண்ணை அழைத்தான்....
"ஹலோ உபாஸ், நான் உங்க பிளாட்டுக்கு வெளிலதான் இருக்கேன்... ரெடியா?"
"யா தருண்.... இந்தா வந்துட்டேன்"
இரண்டு நிமிடங்களில் அந்த வீட்டிலிருந்து ஒரு இளம்பெண் தருணை பார்த்து புன்னகைத்தபடியே காரை நோக்கி வந்தாள்.... அவளை பார்த்ததும் சொல்லிவிடலாம், பிரபல மாடல் உபாசனா இவள்தான் என்று...வெளிர் மஞ்சள் நிற மேனி அத்தனை பளபளப்பாக இருந்தது.... லவ்லி சோப் விளம்பரத்தில் அந்த மேனியில் சோப் வழுக்கி செல்வதை பார்ப்பதற்காகவே பலர் தொலைக்காட்சியில் விளம்பரம் மட்டுமே பார்ப்பதுண்டு....  சிகப்பு நிற சல்வார் அணிந்திருந்தாள், ஸ்ட்ரைட்டன் செய்யப்பட்டு விரிந்திருந்தது தலைமுடி, உதட்டின் கீழ் திருஷ்டிக்காக அமைந்திருந்ததைப்போல இருந்த மச்சம் கூட அத்தனை அழகாக இருந்தது....காரின் உள்ளே அமர்ந்த உபாசனாவை கண்கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான் தருண்... அவ்வளவு பேரழகியை, இத்தனை காலம் தூரத்தில் இருந்து ரசித்தவளை இவ்வளவு அருகில் தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணாக பார்த்தது அவனால் நம்பமுடியவில்லை.... பின்னர், சுயநினைவுக்கு வந்த தருண், சுதாரித்தபடியே காரை எடுத்தான்... "வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு" பாடல் ஒலிக்க, பதறிப்போய் டி.வி.டி பிளேயரை அணைத்து வைத்தான்...
உபாசனா முகம் சுளித்ததை கண்டு அவன் அந்த பாடலை நிறுத்தவில்லை, முதன்முதலாக தன் காதலியுடன் பேசப்போகும் நேரத்தில் இப்படி அபசகுனமாக "காதலை வேண்டாம்"னு சொல்லும் பாடலை கேட்க வேண்டாம் என்று நினைத்தே அதை அனைத்துவிட்டான்... உபாசனா காரில் ஏறியது முதலே எதுவும் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தாள்.... தருணோ இப்போதுதான் பதட்டம் கலைந்தவனாக "என்ன உபாஸ், அமைதியாவே வர்ற?... ஏதோ பேசனும்னு சொன்னியே?" என்று கூறிவிட்டு அவள் கையை பிடித்தான்.... அவன் கையிலிருந்து தன் கையை விலக்கிவிட்டு, அதை காட்டிக்கொள்ளாதவளாக "ஒண்ணுமில்ல தருண், எங்கயாச்சும் போய் ப்ரீயா பேசலாம்" என்றாள்.....

கையை விலக்கியதால் எரிச்சலானான் தருண், தன் நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது....
“அவ சரியா வரமாட்டாடா.... ரொம்ப திமிர் பிடிச்சவளாம்... ஒரு விளம்பரத்துல நடிக்குறப்போ அவளுக்கும் ,நடிகர் சஞ்சய்க்கும் ஏதோ கசமுசா’வல்லாம் நடந்திருக்காம்... உங்க அப்பா சொல்றபடி யாரையாச்சும் கல்யாணம் செஞ்சுகிட்டு, பிஸ்னசை கவனிச்சுக்கடா”
இப்படி சொன்ன நண்பனின் உறவை அன்றோடு அத்துவிட்டது தவறோ! என்று இப்போ யோசித்து என்ன பயன்?...
“நான் கையை புடிச்சதும் புடிக்காத மாதிரி ஒதுங்குறவ, அன்னிக்கு அந்த சஞ்சய் கூட மட்டும் தோள்ல கைய போட்டுட்டு போறப்ப இனிச்சுதோ?... “ இந்த கோப வார்த்தைகளை உபாசனாவிடம் நேராக கொட்டியிருந்தால், அவர்கள் உறவு அந்த கிழக்கு கடற்கரை சாலையோடு முடிந்திருக்கும்... நல்லவேளையாக அதை மனதிற்குள் மட்டும் நினைத்துக்கொண்டான்....
ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட் முன்பு வண்டி நின்றது.... கடற்கரையை ஒட்டினாற்போல தனியான ஒரு மேசை இவர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு அது அலங்கரிக்கப்பட்டிருந்தது.... இந்த ஒரு நாள் சந்திப்பிற்காக தருண், பல நாள் களப்பணி செய்திருப்பதை நாம் பார்த்ததும் உணரும் அளவுக்கு அட்டகாசமான அமைப்பாக இருந்தது அந்த இடம்.... இருவரும் அந்த இடத்தில் இருந்த மேசைகளின் இருக்கைக்கு சென்றனர்... கடல் அலைகளின் சத்தம் தவிர வேறு தொந்தரவு இல்லாத அமைதியான இடம்.... ஆர்டர் செய்த ஸ்காட்ச் வந்தது, உபாசனா குளிர்பானத்தோடு நிறுத்திக்கொண்டாள்... அதற்காக இந்த பழக்கம் அவளுக்கு இல்லை என்று நினைத்திட வேண்டாம், அந்த நேரத்தில் நிதானம் தவறினால் பிரச்சினை என்று ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்காட்ச்சை தவிர்த்தாள்....

பெரியவர்கள் சேர்ந்து திருமணத்திற்கான தேதி கூட குறித்துவிட்டார்கள், இந்த நேரத்திலாவது தன் நிபந்தனைகளையும், அப்பாவின் கட்டளைகளையும் பற்றி உபாசனாவிடம் சொல்லிவிட தீர்மானித்தவனாக இருந்தான் தருண்....
“சொல்லு உபாஸ், என்ன பேசனும்?”
“தப்பா நினைச்சுக்காத தருண், எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல”
இது ஒன்றும் புதிதாக அவள் சொல்லவில்லை... ஒரு வருடமாக தருண் தன் காதலை சொல்லும்போதெல்லாம் அவளின் பதில் இதுதான்.... திருமண தேதி குறித்தபிறகும் அவள் இதை சொல்வதில் கொஞ்சம் கோபமானான் தருண்...
“என்ன பேசுறன்னு புரிஞ்சுதான் பேசுறியா?... நமக்கு வர்ற அக்டோபர் எய்ட்டீன் கல்யாணம்.... ப்ரைம் மினிஸ்டர் வரைக்கும் இன்விட்டேசன் போயாச்சு, இன்னும் நீ சொன்னதையே சொன்னா எப்படி?”
“ஐயோ ப்ளீஸ் தருண்.... நானும் உன்கிட்ட இதை ரொம்ப நாளா சொல்றேன், நீதான் புரிஞ்சுக்க மாட்ற.... நான் ஷூட்’க்காக டெல்லி போனப்போ, நீ எங்க வீட்ல பேசி அவங்களும் அதை வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டாங்க.... நான் வந்து பார்த்தா எல்லாம் என்னை மீறி நடந்துடுச்சு..... நானும் உனக்கு போன்ல எவ்வளவோ சொன்னாலும் நீ புரிஞ்சுக்க மாட்ற, அதான் உன்னை நேர்ல பார்த்து பேச உன்னை வரசொன்னேன்.... எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல தருண்”
“என்ன ப்ராப்ளம் உனக்கு?..... எதனால கல்யாணம் வேணாங்குற?”
“நான் மாடலிங்’ல இன்னும் நிறைய சாதிக்கணும்.... எனக்கு கல்யாணம்’லாம் இப்போ சரியா வராது”
“அவ்ளோதானே?.... கல்யாணத்துக்கு அப்புறம் நீ மாடலிங் பண்ணிக்கோ... நான் அதை அப்ஜக்ட் பண்ண மாட்டேன்.... குழந்தை கூட இப்போ வேண்டாம்... ஓகே தானே?” எந்த விஷயத்தை அவளிடம் சொல்லி உபாசானாவை முடிவை மாற்ற சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ, அந்த விஷயத்தில் தன் நிலைப்பாட்டையே மாற்றுவான் என்று நினைக்கவில்லை தருண்..... எல்லாம் அந்த அழகு படுத்தும் பாடு....
“ப்ளீஸ் தருண்.... அது மட்டுமில்லாம, எனக்கு கல்யாணம், கமிட்மன்ட் இதல்லாம் சுத்தமா பிடிக்கல...”
அருகில் இருந்த ஸ்காட்ச்சை எடுத்து ஒரே மூச்சாக குடித்தான் தருண்... “அப்போ அந்த சஞ்சய் கூட சுத்தும்போது மட்டும் இந்த கருமமெல்லாம் புடிச்சுதாடி?....”
“தருண், மைன்ட் யுவர் வேர்ட்ஸ்.... ஏன் எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க?... மாடலிங்’ல இருந்தா அவ நடத்தை கெட்டவளா?.... ஒரு பொண்ணு தப்பு பண்ணனும்னு நெனச்சா, அவள எவ்வளவு பாதுகாப்பா வச்சாலும் அதை செஞ்சிடுவா.....இவ்ளோ டீசன்ட்டா இருக்குற உனக்குள்ளையும் இவ்வளவு கேவலமான தாட்’தான் இருக்கு”
தன் நிலை தடுமாறிய வார்த்தைகளை உணர்ந்தான் தருண்.... உபாசனாவின் வெளிர் மஞ்சள் முகம் இப்போது இளஞ்சிவப்பாய் மாறியதை கண்டதும்,கோபமெல்லாம் தணிந்து தன்னிலையை உணர்ந்தான் தருண்....
“ஐயோ சாரி உபாஸ், நான் அந்த அர்த்தத்துல சொல்லல... நீ ஏன் என் லவ்வை புரிஞ்சுக்க மாட்ற?... என்னை அவாய்ட் பண்றதுக்கு ஒரு வேலிட் ரீசன் சொல்லு...”

உபாசனா ஏதோ யோசித்தபடி அமைதியாக இருந்தாள்.... ஏதோ ஒன்று சொல்ல நினைத்தும், அதை சொல்ல முடியாமல் அவள் தவிப்பதை உணர்ந்தாள் உபாசனா...
“தயங்காம சொல்லு உபாஸ், எதுவா இருந்தாலும் நம்ம ரெண்டுபேருக்குள்ள மட்டும்தான் இருக்கும்”
தயக்கம் களைந்து சொல்ல தொடங்கினாள் உபாசனா, “நான் இதை வேற யார்கிட்டயும் சொன்னதில்ல தருண்... இப்போ பிரச்சின தலைக்கு மேல போறதால சொல்றேன், உன்மேல இருக்க நம்பிக்கைல சொல்றேன்” என்று தருணின் கைகளை பிடித்தாள்..... ஆயிரம் வாட் மின்சாரம் தாக்கியதை போல ஒரு இன்ப அதிர்ச்சி அவனுள் எழுந்தது....
“சொல்லு உபாஸ்... வேற யாரையாவது லவ் பண்றியா?” வார்த்தைகளில் தேன் கலந்து விழுந்தது......
“ஆமா தருண்”
“நான் கேட்டதால சொல்லாத, உண்மைய சொல்லு.... “
“சத்தியமா அதான் உண்மை.... நான் ஒருத்தரை லவ் பண்றேன்?”
“யார் அந்த சஞ்சய்யை சொல்றியா?” சஞ்சய் என்று சொல்லும்போது தருண் முகம் கோபத்தில் வெடித்தது....
“இல்ல தருண், அவன் இல்ல.... வேற ஒரு ஆள், அதை எப்டி சொல்றதுன்னுதான் தெரியல”
“நெஜமாவா சொல்ற?... உன்னை ஒருவருஷமா பாலோ பண்றேன், எனக்கு தெரியாம எப்படி?... சஞ்சய் தவிர வேற எந்த பசங்களோடையும் உன்ன நான் பார்த்ததில்லையே?”
“உண்மைதான்... நான் லவ் பண்றது எந்த பையனையும் இல்ல”
“வாட் டூ யூ மீன் உபாஸ்?.... அப்போ யாரை லவ் பண்ற?...”
“என்னோட காஸ்ட்யூம் டிசைனர் ஷர்மி”
“ஆர் யூ மேட்?... என்ன சொல்ற?...அவ பொண்ணாச்சே?” இருக்கையை விட்டு எழுந்தவாறே அதிர்ச்சியில் கேட்டான் தருண்....
“இல்ல தருண், உண்மைதான்.... நான் ஷர்மிய லவ் பண்றேன், நான் ஒரு லெஸ்பியன்.... என்னால ஒரு பையனோட சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழமுடியாது.... சஞ்சய் என்னைய லவ் பண்றதா சொன்னப்போ கூட இதை நான் அவன்கிட்ட சொல்லாமத்தான் நான் அவனை அவாய்ட் பண்ணேன்.... பட், உன் விஷயத்துல இப்போ இந்த உண்மையை சொல்றத தவிர வேற வழி தெரியல.... நீயும் புரிஞ்சுப்பன்னு நம்புறேன்” உபாசனா சொல்லி முடித்ததும், எழுந்து நின்றவன் எந்த பதிலும் சொல்லாமல் அப்படியே கடலை நோக்கி நடந்தான்.... உபாசனா சொல்லிவிட்டு மனம் படபடக்க நகத்தை கடித்தபடியே அமர்ந்திருந்தாள்.... கண்களின் ஓரமாக விழியை நகர்த்தி தருணை கவனித்தாள்.... தருண் கடலை பார்த்தபடியே, தன் சிகரட்டை பற்ற வைத்து புகைவிட்டுக்கொண்டிருந்தான்.... ஐந்து நிமிடங்கள் விடை தெரியாமல் பதறிக்கொண்டிருந்தாள் உபாசனா... நேற்றைய பேஷன் ஷோ’க்காக கையில் போட்டிருந்த நெயில் பாலிஷை, கிட்டத்தட்ட அதற்குள் கடித்தே நீக்கிவிட்டாள் உபாசனா.... கூட ஐந்து நிமிடங்கள் தருண் தாமதித்திருந்தால் விரலை கூட தின்றிருப்பாள்.....  மெல்ல நடந்து வந்து மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான் தருண்.... என்ன சொல்லப்போகிறான்? என்ற எதிர்பார்ப்பில் அவன் முகத்தை கஷ்டப்பட்டு ஏறிட்டு பார்த்தாள்.....
“லுக் உபாசனா, நீ சொல்றது மாதிரி விஷயங்கள் நான் மும்பை’ல ஹாஸ்டல்ல இருந்தப்போ எனக்கும் ஒரு பையனோட நடந்திருக்கு.... அது அப்போ வேற வழி இல்லாததால நடந்துவிடுற விஷயங்கள்... மத்தபடி சேம் செக்ஸ் ரிலேஷன்ஷிப்’லாம் சுத்த ஹம்பக்.... நடந்த விஷயங்களை நீயும் மறந்திடு, நானும் மறந்திடுறேன்.... உனக்கு சைக்காலஜிக்கள் ட்ரீட்மென்ட் வேணும்னு நினைக்குறேன்.....எல்லாம் போகப்போக மாறிடும், ஐ ஸ்டில் லவ் யூ உபாஸ்” தருண் மீண்டும் உபாசனாவின் கையை பிடிக்க முயல, அதை மறுத்த உபாசனா, “அய்யோ தருண், ஏன் பைத்தியம் மாதிரி பேசுற? நான் சொல்றத புரிஞ்சுக்கோ.... இது டிசிஸ் இல்ல, இது ஹம்பக்கும் இல்ல.... நீதான் புரிஞ்சுக்கணும்... என்னால நீங்க சொல்றமாதிரி அதை மாத்தி கல்யாணம் பண்ணிக்கலாம் முடியாது.... உனக்குத்தான் ட்ரீட்மென்ட் வேணும் இப்டி பேசுறதுக்கு”....
தான் லெஸ்பியன் என்று சொன்னதும், மீண்டும் அவன் தன்னையே காதலிப்பதாக சொல்வான் என்று உபாசனா சற்றும் எதிர்பார்க்கவில்லை.....
“இதோபாரு உபாசனா, என் முடிவுல நான் தீர்மானமா இருக்கேன்.... உன்னை நான் ரொம்ப ரொம்ப டீப்பா லவ் பண்றேன்... உன்ன எந்த காரணத்துக்காகவும் நான் இழக்க விரும்பல... நல்லா யோசி, நாளைக்கு காலைல ஏழு மணி வரைக்கும் உனக்கு டைம் தரேன்.... அந்த டைம் கூட நீ டிசைட் பண்றதுக்காக இல்ல, உன் முடிவை நீ மாத்திக்க நான் கொடுக்குற டைம்... இதை நீ ஒத்துக்கலைனா அப்புறம் நீ வேற மாதிரி விளைவுகளை சந்திக்கணும்.... இதை மிரட்டலா வேணாலும் நீ நினைச்சுக்கோ..... அந்த மிரட்டல் கூட உன்மேல நான் வச்சிருக்கிற லவ்’னாலதான் உபாஸ்... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” சொல்லிமுடித்துவிட்டு கண்கள் கலங்கியபடியே உபாசனாவின் கைகளை தன் கண்களில் ஒத்திக்கொண்டான்....

“தருண்... நான் சொல்றத....” உபாசனா சொல்ல தொடங்கும் முன்பே அவளை இடைமறித்த தருண், “போதும் உபாஸ்.... இனி நீ சொல்றதுக்கு எதுவும் கிடையாது.... நாளைக்கு காலைல வரைக்கும் யோசிச்சு நான் சொல்றதை அக்சப்ட் பண்ணிக்கோ, நாளைக்கு பத்து மணிக்கு நாம ரெண்டுபேரும் சினி இன்டஸ்ட்ரி ஆளுங்க வீட்டுக்கு இன்விட்டேசன் குடுக்க போகணும்.... ஓகே, டைம் ஆச்சு, லெட்ஸ் கோ உபாஸ்” என்று சொல்லிவிட்டு அவளுடைய கைகளை இழுத்து அங்கிருந்து கிளம்பினான்....
இப்போது அந்த ரிசார்ட்டிலிருந்து வீட்டுக்கு போகும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... உபாசனா தருணை எதிர்கொள்ள தயங்கி, தன் இடது புறத்தில் கண்ணாடி வழியில் வெளியே வெறித்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.... ஒருவழியாக உபாசனா வீட்டை கார் அடைந்தது.... காரிலிருந்து இறங்கிய உபாசனாவை பார்த்து, “குட் நைட் உபாஸ்.... நாளைக்கு மார்னிங் செவன்’க்கு நீ கால் பண்ணனும் பாத்துக்கோ....” என்றான்... தருணின் பேச்சை கண்டுகொள்ளாதவளாக எந்த பதிலும் சொல்லாமல் வீட்டிற்குள் நுழைந்தாள்.... அவளுக்காக காத்திருந்தபடியே அவளை வரவேற்று உள்ளே அழைத்து சென்றாள் ஷர்மி.... ஷர்மியை பார்த்ததும் ஏனோ ஒரு கோபம் தருணுக்கு, அந்த கோபத்தை கார் ஓட்டுதலில் காட்டினான் தருண்.... புழுதி பறக்க தருணின் கார் அந்த தெருவை கடந்தது..... வீடு அமைதியாக இருந்தது, நல்ல வேலையாக அப்போது அவன் அப்பா வந்திருக்கவில்லை, அவருக்கும் அவர் அடிப்பொடிகளுக்கும் பதில் சொல்வதில் தப்பித்த நிம்மதியில் தன் அறைக்கு சென்று படுத்தான் தருண்....
சிறிது நேரத்தில் தருணின் நண்பன் சரண் போன் செய்தான், “ஹலோ மச்சான், என்னாச்சு?..... ஈ.சி.ஆர் ரிசார்ட் ஒரு வழி ஆகிடுச்சு போல.... பீச்ல ஒரே ஜலபுல ஜல்சாவா?”....
“அட ஏண்டா மாப்ள நீ வேற..... ஒரு யுத்தமே நடந்திடுச்சு.....”
“முத்தம் கொடுக்க வேண்டிய எடத்துல ஏண்டா யுத்தம் நடந்துச்சு”
“அவ ஒரு பொண்ணை லவ் பண்றாலாம்....”
“என்னடா சொல்ற?.... ‘அவளா நீ’னு கேட்டிருக்கலாம்ல”
“ஏய் என்ன கொழுப்பா?.... என் கஷ்டம் உனக்கு காமடியா இருக்கா?”
“அப்டி இல்ல மச்சான், அத்தோட அவளை விட்ற வேண்டியதுதானே?”
“முடியல மாப்ள, அவமேல பைத்தியமா இருக்கேன்..... என்ன ஆளு, என்ன பிகரு, என்ன ஸ்ட்ரக்ச்சர்..... நிச்சயமா அவளை விட ஒரு அழகிய பாக்க முடியாதுடா..... எல்லாம் கல்யாணம் ஆனப்புறம் சரி ஆகிடும்.... ஹாஸ்டல்ல நாம பண்ணாததா?”
“ஐயோ அதல்லாம் ஏண்டா கிளருற?.... என் பொண்டாட்டி கேட்டா நான் செத்தேன்.... ஆனால், உனக்கு இதுல ஒரு பெனிபிட் இருக்குடா”
“என்ன?”
“உபாசனாவ நம்பி நீ எங்க வேணாலும் போகலாம்.... அவ மேல சந்தேகப்படவே அவசியம் இல்ல.... ஆனால், ஒன்னே ஒன்னு, வீட்ல எல்லா வேலக்காரங்களையும் ஆம்பிளைகளா மாத்திடு.... இல்லைனா.....”
“செருப்பு பிய்யப்போகுது..... வைடா போனை.... நாளைக்கு உன்ன என்ன பண்ணபோறேன்னு பாரு” சொல்லிவிட்டு கடுப்புடன் அலைபேசியை துண்டித்தான் தருண்..... காலை ஏழு மணியை எதிர்பார்த்தபடியே கண் அயர்ந்தான் தருண்....

காரில் இருந்து இறங்கிய உபாசனாவை பதற்றத்துடன் உள்ளே அழைத்து சென்று காபி கொடுத்தாள் ஷர்மி.... உபாசனாவின் முகத்தை பார்த்ததும், ஏதோ எதிர்மறை விஷயம் நடந்ததாக உணர்ந்தாள் ஷர்மி.... ஷர்மியின் வீடு அது, முகப்பில் மாட்டியிருந்த புகைப்படத்தில் இருவரும் சிரித்தபடியே கட்டிப்பிடித்ததை பார்த்து தன்னை அறியாமல் கண்ணீர் விட்டாள் உபாசனா....  களைப்பாக சோபாவில் படுத்திருந்த உபாசனாவின் தலையை எடுத்து தன் மடியில் வைத்தவாறே, முடியை கோதிவிட்டாள் ஷர்மி...
“என்னடா ஆச்சு?”
“எல்லாம் போச்சுமா.... அவன் எதையும் புரிஞ்சுக்க மாட்றான்”
“எத புரிஞ்சுக்க மாட்றான்.... நம்ம விஷயத்தை சொல்லிட்டியா?”
“சொல்லிட்டேன்மா... அவன் அறிவில்லாம பேசுறான்....எதையும் புரிஞ்சுக்க மாட்றான்... என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றான்” உபாசனாவின் கண்களில் நீர் கசிய, அதை தன் விரல்களால் துடைத்துவிட்டு, அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தாள் ... அந்த முத்தம் உபாசனாவை இன்னும் அழ செய்தது...
“அழாதடா.... அவனை மட்டும் தப்பு சொல்லி யூஸ் இல்ல.... நம்மள புரிஞ்சுக்கற அளவுக்கு இந்த சொசைட்டி இன்னும் மாறல.... இதை யாரும் அக்சப்ட் பண்ண போறதுமில்ல.... ஒரு பையன் கே’யா இருந்தா அவனை புரிஞ்சுக்கற மக்கள் கூட நம்மள புரிஞ்சுக்க மாட்டாங்க.... பசங்களை போல நம்மால குடும்பத்தையும், சொசைட்டியையும் பகச்சுகிட்டு வாழமுடியாது.... கே மாதிரி வேற கண்ட்ரி’ல போய் வாழற அளவுக்கு நாம பழக்கப்படவும் இல்ல.... ஆனாலும், நீ என்ன முடிவெடுத்தாலும் நான் அதை அக்சப்ட் பண்ணிக்கறேன், எனக்கு உன் லைப் தாண்டா முக்கியம்....”
“என்ன முடிவு எடுக்க சொல்றமா?.... அவன் கை என்மேல பட்டாலே கம்புளிப்பூச்சி ஊருற மாதிரி இருக்கு.... அவன் கூட நான் எப்டி வாழ்க்கை முழுசும் வாழ முடியும்னு நம்புற?... ஏம்மா நமக்கு மட்டும் இப்டி நடக்குது?” எழுந்து அமர்ந்து ஷர்மியை கட்டிப்பிடித்து அழுதாள்.... ஷர்மியால் இப்போது உபாசனாவை சமாதானப்படுத்த முடியவில்லை, தன் அழுகையை கூட தன்னால் கட்டுப்படுத்த முடியாதபோது உபாசனாவின் அழுகையை எப்படி அவளால் கட்டுப்படுத்த முடியும்.....
ஒருவாராக சில மணித்துளிகளில் இறுக்கமான சூழல் சற்று தணிந்தது....
“உபாசனா, நான் இன்னைக்கு நைட் டிசைனிங் பெஸ்டிவல்’க்கு பூனே போகணும்.... நீ இருக்குற நிலைமைல உன்ன தனியா விட்டுட்டு போக மனசில்ல, நான் இருந்திடவா?”
“வேணாம்மா..... உனக்கு இது ரொம்ப முக்கியமான ப்ராஜக்ட்..... நீ போ.... நான் யோசிக்கிறேன்.... நான் என்ன முடிவெடுத்தாலும் நீ அதை புரிஞ்சுப்பனு நம்புறேன்..... நீ கிளம்புமா” இருவரும் பிரிய நேரம் வந்துவிட்டது..... ஷர்மி பூனே பறந்தாள்.....
காலை 6.50க்கு அன்று அலாரம் வைத்திருந்தான் தருண்.... வழக்கமாக அவனுக்கு பொழுது விடிவது நண்பகலில் தான் என்றாலும் , அன்று ஏழு மணிக்கு உபாசனாவிடமிருந்து தகவல் வருமென அவ்வளவு சீக்கிரமாக எழுந்து முகம் கழுவி காத்திருந்தான்.... ஏழு மணி ஆக இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தது.... அந்த இரண்டு நிமிடங்களும் அவசரம் தாங்காமல் தன் அலைபேசியை எடுத்து உபாசனாவை அழைத்தான்....
தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக பதிவுசெய்யப்பட்ட பெண் குரல் சொன்னது.....

அதை ஆட்டோமேட்டிக் ரீடையலில் போட்டுவிட்டு, லவுட் ஸ்பீக்கரை ஆன்  செய்துவிட்டு அருகிலிருந்த அன்றைய காலை தினசரி நாளிதழை எடுத்தான்.... காலையில் ஒலிக்கும் சுப்ரபாதம் போல தருணின் கைப்பேசி, தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதை மீண்டும் மீண்டும் சொன்னது....
நாளிதழில் முதல் பக்கத்தில், அவன் அப்பாவின் ஆவேச அறிக்கையாக “விலைவாசி அதிகரித்ததற்கு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிதான் காரணம், அந்நிய நாடுகளுடன் எதிர்க்கட்சிகளுக்கு தொடர்பிருப்பதை விரைவில் நிரூபிப்போம்....” என்று இருந்தது, சிரித்தவாறே அடுத்த பக்கத்தை புரட்டினான் தருண்.... புரட்டிய கைகள் நடுக்கம் கண்டன, ஏசி அறையிலும் உடல் வியர்க்க தொடங்கின, மார்பின் ரோமங்கள் இதயத்துடிப்பினால் எழுந்து எழுந்து படுத்தது.... அவன் இரண்டாம் பக்கத்தில் பார்த்த செய்தி, “பிரபல மாடல் உபாசனா ராய் தற்கொலை, குடும்ப பிரச்சினையால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்”.....

இப்போதும் அவன் கைபேசி, “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்” என்றது......

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Its really good.....lovely story.....

    ReplyDelete
  3. Nice story Vijay. Even the fate of gays are also like this only...

    ReplyDelete
  4. thank u very much vikram, senny, raju........

    ReplyDelete
  5. Really no words to appreciate u.... nice short story...hats off

    ReplyDelete
  6. i dont like lesbians.... dont kno why... but this story made me like lesbians also!!!

    ReplyDelete
  7. anna, nan gay, athanala enakku girls a pidikkathu, lesbians a suthama pidikkathu, ana athuvum oru love than nu nenga solli irukkara story super...

    ReplyDelete