Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday 22 January 2013

மறைக்கப்படும் எழுத்துகள்....



ஒரு எழுத்தாளர் கதை, கவிதை, கட்டுரை என்று எதை எழுதினாலும், அந்த எழுத்தின் முக்கிய நோக்கம் அந்த எழுத்திற்கான அங்கீகாரம்.... அந்த அங்கீகாரத்தின் மூலம் கிடைக்கும் பெயர், புகழ் என்று எதையும் மறுப்பவர்கள் எவரும் இருக்கிறார்களா?.... அப்படி அங்கீகாரம் கிடைக்காத எழுத்துகளை எழுத எந்த எழுத்தாளராவது முன்வருவார்களா?.... தங்கள் சுய அடையாளத்தையும், நிஜ முகத்தையும் காட்டாமல் எவ்வித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் எழுதும் சில எழுத்தாளர்கள் நம் தமிழ்நாட்டில் கூட இருக்கிறார்கள்..... எங்கு? எதற்காக? யார்? இப்படி எழுதுகிறார்கள் என்றால், அது இந்த கே உலகில் தான்.... பல சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்கள், இணையங்கள் என்று ஒருபால் ஈர்ப்பு  தொடர்பான கதைகள் எழுதுபவர்களைத்தான் சொல்கிறேன்....

ஒருபால் ஈர்ப்பு  கதைகள் என்றதும் அதை காம இச்சைகள், வர்ணனைகள் நிறைந்த கதைகளாக நினைத்துவிடாதீர்கள்..... இப்போதெல்லாம் நிறைய கதைகள் துளியும் ஆபாசம் இல்லாமல், ஓரின விரும்பிகளின் உணர்வுகள், காதல்கள், சமூக பார்வைகள்  என்று பிரதிபலிக்க தொடங்கி இருப்பதை பார்க்க ஆச்சரியமாகவே உள்ளது.... இது சமீப காலத்தில் உருவான ஒரு இலக்கிய முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.... பொதுவான எழுத்தாளர்களின் எந்த கதைக்கும் சற்றும் குறையாத வகையில் நடைகளையும், உணர்வுகளையும் காட்டும் பல கதைகள் அது ஒருபால் ஈர்ப்பு தொடர்பான கதை என்ற ஒரே காரணத்தால் பொதுமக்களால் புறக்கணிக்கப்படுகிறது....

எல்லா நாட்டிலும் அப்படித்தானே? என்று நீங்கள் நினைத்தால் அது முட்டாள்த்தனம்.... நான் இப்போ சொல்லப்போவது மேற்குலகம் தங்கள் இலக்கியத்தின் ஒரு பகுதியாக எப்படி ஓரின விருப்பத்தை அங்கீகரிக்கிறது என்பதை பற்றித்தான்....
இருபதாம் நூற்றாண்டு மேற்குலக நாடுகளில் ஓரின விருப்பம் கொண்ட நபர்களுக்கான இலக்கிய ரசனைக்கு விருந்து வைத்த நூற்றாண்டு என்று சொல்லலாம்.... அதில் முதன்முதலில் மிகப்பெரும் இடத்தை பிடித்தவர், ஆங்கில எழுத்தாளர் ஈ.எம்.போர்ஸ்டர்..... இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் படைப்பு முழுமை பெற்றுவிட்டாலும், அது புத்தக வடிவில் வந்தது இவர் இறந்த பின்னர்தான் என்பது வேதனையான உண்மை.... ஓரின விரும்பிகளின் கதையை பிரித்தானிய சாமானிய மக்களும் வாசிக்கும்படி செய்தது போர்ஸ்டர் எழுத்து.... மேற்குலகம் அப்போதுதான் அறிவியலின் படியும், விழிப்புனர்வுகளின் படியும் ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்க தொடங்கிய காலம்.... அப்படிப்பட்ட அங்கீகாரம் போர்ஸ்டரின் எழுத்தை இன்னும் அனைத்து மட்டத்தினரையும் சென்றடைய வைத்தது.... புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்களான ஜேம்ஸ் பால்ட்வின், கிறிஸ்டோபர் ஐஷர்வுட், எட்மண்ட் வைட், நோபல் பரிசு வென்ற ஆண்ட்ரே கைடே போன்றவர்கள் தங்கள் இயல்பான கதைகளுக்கு மத்தியில் ஒருபால் ஈர்ப்பு  மையப்படுத்திய கதைகளையும் எழுதினர்.... அதனால், மக்கள் இன்னும் இயல்பான ஒரு விஷயமாக இத்தகைய பாலீர்ப்பு விஷயத்தை  ஏற்க தொடங்கிவிட்டார்கள்....
ஒருபால் ஈர்ப்பு கதைகள் என்றால் ஒரே விதமான கதைகளை அவர்கள் எழுதவில்லை.... நகைச்சுவை, காதல், திகில், துப்பறியும் கதை என்று பல விதங்களையும் மையமாக வைத்த கதைகள் வெளிவந்தன... 1990 முதல் இதன் அடுத்தகட்டமாக காமிக்ஸ் கதைகள் ரூபத்திலும் ஓரின விருப்பம் சார்ந்த கதைகள் வெளிவர தொடங்கின (1989வரை சிறுவர்கள் அதிகம் படிப்பதால் காமிக்ஸ் கதைகளில் இத்தகைய ஓரின கதைகளை புகுத்த கூடாது என்ற சட்டம் இருந்தது.... அது நீக்கப்பட்டு பல காமிக்ஸ் ஓரின கதைகள் வெளிவர தொடங்கின).... ஆனால், பின்பு இது மிகப்பெரும் சிறப்பை பெற்று அதற்கென விருதுகள் கொடுக்கும் அளவிற்கு மக்களை சென்றடைந்தது ஓரின காமிக்ஸ் கதைகள்.... gaylactic Spectrum Award  மற்றும்  GLAAD Media Awards என்ற விருதுகள் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விருதுகள்.....  அது அல்லாமல் இலக்கிய உலகில் பிரபலமான விருதுகளான Lambda Literary Award, Stonewall Book Award, Dayne Ogilvie Prize போன்ற விருதுகள் ஓரின விருப்பம் சார்ந்த கதைகளுக்காக கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருதுகள் ஆகும்....
Lambda Literary Awards என்பதை லாமி விருதுகள் என்று சொல்வார்கள்... காதல், நகைச்சுவை, உண்மை கதைகள் என்று குறிப்பிட்ட தளங்களில் இந்த விருது வழங்கப்படும்.... இந்த அளவிற்கு மேற்குலகத்தின் அங்கமாக அவர்களின் இலக்கியத்தின் முக்கிய ஒரு பகுதியாக சமபால் ஈர்ப்பு கதைகள் இடம்பெற்றிருப்பது நமக்கு ஆச்சரியத்தை தந்தாலும் அதிசயமான உண்மை இது.....
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மேற்குலக இலக்கியங்கள் மட்டுமல்லாது ரசியா, ஜப்பான் போன்ற நாடுகளும் தங்கள் இலக்கியங்களில் ஒரு பகுதியாக ஓரின விருப்பம் தொடர்பான இலக்கியங்களை கொண்டுள்ளது.... உலகின் மிகப்பழமையான மொழி, செம்மொழி என்று புகழப்படும் நம் மொழியின் இலக்கிய வட்டத்தில் இன்னும் இதைப்போன்ற புதுமை முயற்சிகளுக்கு தளம் அமைத்துக்கொடுக்கப்படவில்லை.... இன்னொரு மிகவும் தவறான எண்ணமும் இங்கே நம் மக்கள் மத்தியில் புதைந்துள்ளது, ஓரின விருப்பம் தொடர்பான கதைகள் என்றால் அது காமக்கதைகள் என்ற அளவில் அதை சுருக்கி பார்க்கிறார்கள்... அது மிகவும் தவறான எண்ணம்... இங்கே ஓரின கதை எழுதுபவர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி நிறைய காதல், உணர்வுகள், நகைச்சுவை, சமூகம் சார்ந்த  என்று இலக்கிய தரமான படைப்புகளை கொடுக்க வேண்டும்....
 இப்போது வேண்டுமானால் உங்கள் எழுத்துக்கும் படைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கலாம்.... நிச்சயம் ஓரின விருப்பம் தொடர்பான மக்களின் மனநிலை மாறும் நாளில் உங்கள் படைப்புகள் பொக்கிஷமாக கருதப்படும்.... காமக்கதைகள் என்பது அந்த நேரத்து கிளர்ச்சியை உண்டாக்க மட்டுமே, இதைப்போன்ற இலக்கிய தரமிக்க கதைகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்.... பாரதி இறக்கும் வரை அவரின் கவிதைகளையும், கதைகளையும் எத்தனை பேர் மதித்தார்கள்?.... காலம் கடந்து மக்களின் மனநிலை பாரதியின் கருத்தை ஏற்கும் நிலைக்கு வந்தவுடன் இன்று “பாரதி”:யை விடுத்து தமிழ் பற்றி பேச எவராலும் முடியாத அளவிற்கு தாக்கத்தை ஏற்ப்படுத்தியது அவர் எழுத்துகள்.... அதனால் நிச்சயம் ஒருநாள் உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பி நீங்கள் எழுதலாம்.... இன்னொரு முக்கியமான மாற்றமும் நிகழவேண்டும்....

தமிழின் இப்போதைய நட்சத்திர எழுத்தாளர்கள் ஓரின விரும்பிகளை நாயகர்களாக கொண்ட கதைகளை எழுத வேண்டும், ஓரின விரும்பிகளின் உணர்வுகளை வெளிக்காட்ட வேண்டும்.... அவர்களின் படைப்புகள் மட்டுமே இலக்கிய வட்டத்தில் ஓரின விருப்பம் தொடர்பான மக்களின் மனநிலையை மாற்றும் வல்லமை பெற்றது.... எழுத்தாளர் சுஜாதா கதைகள் எழுதும்வரை கதைகளுக்கான வரையறை என்று ஒன்று இருந்தது.... அவர் விஞ்ஞானத்தையும், அறிவியலையும் கதைகளில் புகுத்தி தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.... அத்தகைய புது முயற்சிகளை இப்போதைய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இந்த பாலின ஒடுக்குமுறை விஷயத்தில் செய்ய வேண்டும்.... எந்த ஒரு அடக்குமுறையையும் எதிர்த்து தங்களை ஒரு முற்போக்குவாதிகளாக காட்டிக்கொள்ளும் நீங்கள் இத்தகைய ஒரு விஷயத்திலும் உங்கள் முற்போக்கு சிந்தனையை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..... இந்த அங்கீகரிக்கப்படாத எழுத்துகளுக்கு அங்கீகாரமாக விருதெல்லாம் கொடுக்க வேண்டாம்.... இதை சாமானிய மக்களும் படிக்கும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி கொடுத்தாலே போதும், அதுவே பெரிய வெற்றியாகும்....
எல்லாம் உணர்ந்து , எல்லாரும் உணரும் நாள் வரும் போது இத்தகைய உயரிய அங்கீகாரம் இந்த கதைகளுக்கும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம் பயணத்தை தொடருவோம்.....

2 comments:

  1. உங்களது ஓரினமும் ஓர் இனம் தான் என்ற சிறுகதையைப் படித்தேன். என் வாழ்வில் நடந்தது போன்ற சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல இருந்தது. கிளைமக்ஸ் உம் அப்படியே நடந்தால் மிக மிக மகிழ்ச்சியடைவேன். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. காரணம் சமுதாய கட்டாயத்தின் பேரில் பெண்ணைத் திரும்ணம் செய்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தின் நாம் உள்ளோம். எனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை. என் நண்பனுக்கு நாட்டம் உண்டு. திருமணம் ஆனவுடன் அவன் என்னை விட்டு நீங்கி விடுவானா என்ற அச்சம் எனக்குள் 7 வருடங்களாக உண்டு. கடவுளுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  2. please check ur email inbox and give me any advice my dear fren. i sent u something personal issue regards my life. really need ur advice. thank u so much.

    ReplyDelete