காவிரி நீர்
கிடைக்காததால் “விவசாயிகள் தற்கொலை”, கந்துவட்டி கொடுமையால் “தொழிலாளி தற்கொலை”,
குடும்ப தகராறில் “மனைவி தற்கொலை”, நண்பர்களுடன் பிரச்சினையால் “கல்லூரி மாணவர்
தற்கொலை” இப்படிப்பட்ட தற்கொலைகளை பற்றி நாம் நாளும் கேள்விப்பட்டிருப்போம்....
“பால் ஈர்ப்பு
காரணத்தால் நடக்கும் தற்கொலைகள்” பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?....
அப்படிப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கைத்தான் உலகில் அதிகம் நடக்கிறது என்பதை
உங்களால் நம்பமுடிகிறதா?....
நம்பித்தான்
ஆகவேண்டும்..... அமெரிக்காவில், தற்கொலைகள் பற்றிய ஒரு ஆய்வில் பலரும் அதிரும்
வண்ணம் ஒரு உண்மை வெளியானது.... அதாவது வறுமை, பொருள் இழப்பு
போன்ற விஷயங்களைவிட தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும்
அதிகமாக பாலின புறக்கணிப்பின் காரணமாக நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகிறது.... அதுவும்,
எதிர்பால் ஈர்ப்பினரைவிட, ஒருபால் ஈர்ப்பு
எண்ணம் கொண்டவர்கள் இத்தகைய நிலைக்கு அதிகம் ஆளாவதாக ஆய்வில்
சொல்லப்பட்டிருக்கிறது.... அதே போல திருனர்களும் அதிக அளவில் தற்கொலை சார்ந்த
விஷயங்களில் அதிகம் ஈடுபடுவதாக கூறுகிறார்கள்.... ஒருபுறம் தங்கள் பாலின
அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத இயலாமை, மறுபுறம் சமூகம்
தன்னை புறக்கணிக்குமா என்கிற அச்சம்..... விளைவு, மன
அழுத்தம் அதிகமாகி தற்கொலை எண்ணங்கள் மேலோங்குகிறது..... சமூக புறக்கணிப்புதான்
இத்தகைய தற்கொலைகளுக்கு மூலக்காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.....
1989ஆம்
ஆண்டு அமெரிக்க சுகாதார துறை சார்பாக வெளியான ஒரு அறிக்கை பலத்த அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தியது.....
அந்த அறிக்கையில்
"எதிர்பால் ஈர்ப்பாளர்களைவிட, ஒருபால்
விரும்பிகள் மூன்று மடங்கு அதிக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.... தற்கொலை
கணக்கெடுப்பில் 30% தற்கொலைகள் இத்தகைய ஒருபால்
ஈர்ப்பாளர்கள் தங்கள் பாலின அடையாளத்தால் இறக்கிறார்கள்" என்று சொன்னது அந்த அறிக்கை....
இந்த அறிக்கைக்கு
பின்புதான் பலரும் இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்தனர்....இந்த ஆய்வின்
அடிப்படையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.... ஆனால் அதற்கு பின்பு சிலர்
செய்த ஆய்வுகளில், அப்படி தற்கொலை செய்துகொண்டவர்களில்
ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் மிகவும் குறைவுதான் என்று கூறினார்கள்....
சுகாதாரத்துறை இதை மிகைப்படுத்துவதாக அவர்கள் கூறினார்கள்.... ஆனால் உண்மையில்
அப்படி ஆய்வு செய்தவர்களின் ஆய்வுகள் நம்பகத்தன்மை மிகவும் குறைவாக இருந்தது....
காரணம், இறந்தவர்களின் இறப்புக்கான காரணங்களை அவர்களின்
பெற்றோர்கள் மறைத்தார்கள்.... ஒருபால் ஈர்ப்புக்காக இறந்ததாக அவர்கள் வெளியில்
கூறுவதை கவுரவ குறைச்சலாக குடும்பத்தினர் கருதினார்கள்.... அதனால் பலரது
இறப்புகளுக்கான காரணமும் மறைக்கப்பட்டது..... இதன்விளைவே முடிவுகள் மாற்றி அமைந்துவிட்டது....
ஒவ்வொரு
ஆய்வாளர்களும் ஒவ்வொரு இடம், மக்கள் மத்தியில்
ஆய்வுகள் செய்ததனால் அப்படி முரண்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியானதையும் நாம் மறுக்க
முடியாது.... பரந்து விரிந்த உலகில் நிகழும் எல்லா தற்கொலைகளின் காரணங்களையும்
ஆய்வு செய்வது என்பது முடியாத காரியம்.... அதே நேரத்தில் இன்னொரு சிக்கலும் இந்த
ஆய்வில் இருக்கிறது.... ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களில் எத்தனை பேர் தங்கள் பாலின
விருப்பத்தை வெளிப்படுத்தினர்?... எத்தனை பேரின் பாலின
அடையாளம் அந்த நபரை சார்ந்த குடும்பத்தினருக்கு தெரிந்திருக்கும்?... இப்படி பல சிக்கல்களுக்கு விடை தெரியாமல், இந்த
ஆய்வுகள் என்பது சிக்கலான விஷயம்தான்...
பாக்லி மற்றும்
ட்ரெம்ப்ளே (bagley and tremblay) என்ற இரண்டு
ஆய்வாளர்களும் 1997ஆம் ஆண்டு கனடாவில் நடத்திய ஆய்வில்
எதிர்பால் ஈர்ப்பினரைவிட ஒருபால் விரும்பிகளின் தற்கொலைகள் 14 மடங்கு அதிகம் என்ற பெரிய அதிர்ச்சியை கூறினர்....
ரசல் மற்றும்
ஜோயனர் (rusell and joyner) இருவரும் 2001இல் நடத்திய ஆய்வில்
அமெரிக்காவின் இளைஞர்களின் தற்கொலைகளில் எதிர்பால் ஈர்ப்பு எண்ணம் கொண்டவர்களைவிட
இரண்டு மடங்கு அதிகமாக ஒருபால் ஈர்ப்பாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறினர்....
ஹெரால் மற்றும்
குழுவினர் (herrell) ஒரு வித்தியாசமான ஆய்வை 1999இல் செய்தனர்.... அதாவது ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு தங்கள் ஆய்வுகளை
செய்தனர்.... அதில் ஒருபால் ஈர்ப்பு கொண்ட இரட்டையர்கள் நான்கு மடங்கு அதிகமாக
எதிர்பால் ஈர்ப்பு நபர்களைவிட அதிக தற்கொலை எண்ணம் உடையவர்களாக இருந்தார்கள்....
இந்த
தற்கொலைகளுக்கும் மன பாதிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை...
மாத்திவ் (matthews) என்பவர் எடுத்த ஆய்வில் இளம் பெண்கள் மத்தியில்
எடுத்த ஆய்வில் 52% லெஸ்பியன் பெண்கள் தற்கொலை எண்ணம்
கொண்டவர்களாகவும், 38% எதிர்பால் எண்ணம் கொண்டவர்கள் தற்கொலை
எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பதாக கூறினார்....
அதே போல மற்றவர்களைவிட திருநர்கள் அதிக தற்கொலை எண்ணம் கொண்டிருந்ததாக
ஆய்வுகள் கூறுகிறது....
இத்தகைய ஆய்வுகள்
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளில் மட்டுமே இதுவரை எடுக்கப்பட்டது....
இந்தியாவில் நிச்சயம் அப்படி ஒரு ஆய்வு நம்மால் எடுக்க முடியாது.... எடுத்தாலும்,
அது நம்பகத்தன்மை இழந்தே காணப்படும்.... அமெரிக்கா போன்ற நாட்டில் கூட முழுமையான
இறப்பிற்கான காரணத்தை இறந்தவரின் குடும்பத்தினர் சொல்ல மறுக்கும் நிலையில், நம் ஊரில்
சொல்வார்களா?.... நிச்சயம் மாட்டார்கள்.... அப்படி இறந்த இளைஞர்கள், “தேர்வில்
தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை”, “காதல் தோல்வியால் மாணவி தூக்கில்
தொங்கினார்”, “பெற்றோருடன் மன வருத்தத்தால் மனமுடைந்த மாணவர் விஷம் அருந்தினார்”
என்று வேறு விதமாக திரிக்கப்படுகிறது.... உண்மைகள் பெற்றோருக்கே கூட பலநேரம்
தெரியாமல் இருக்கலாம்.... உள்ளுக்குள் யாருக்கும் சொல்லிடாமல் புதைத்து வைத்த
சோகங்களும், புறக்கனிப்புகளும், ஏமாற்றங்களும் மட்டுமே அத்தகைய தற்கொலைகளுக்கான
காரணம் என்பது இறந்துபோன அந்த இளைஞர்கள் மட்டுமே அறிவார்கள்....
இப்படி
தற்கொலைகளுக்கு காரணம் நாம் முன்பு சொன்ன மன அழுத்தமும், அந்த மன அழுத்தத்தின் விளைவாக போதைப்பழக்கமும் முக்கிய
காரணமாக தெரிகிறது.... சமூக புறக்கணிப்பும், பாதுகாப்பின்மையும்
இத்தகைய தற்கொலைகளை நோக்கி இந்த மக்களை செலுத்துகிறது..... சமூகத்தின் ஒருபால் ஈர்ப்பை
பற்றிய பயமும், தவறான எண்ணமும் , ஒருபால்
ஈர்ப்பு நபர்களை நோக்கிய எதிர்ப்பாகவும், வன்முறையாகவும்
உருவாகி, அதன் விளைவாக தற்கொலைகள் பெருகியது.... தங்களுக்கென பாதுகாப்பும், ஆதரவும் இல்லாத நிலையில், அத்தகைய நபர்கள் தற்கொலையை
நாடுகிறார்கள்.... எல்லா ஒருபால் ஈர்ப்பு நபர்களும் தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக
இங்கு நாம் சொல்லவில்லை.... பெரும்பான்மை நபர்கள் அத்தகைய எண்ணங்களை உடையவர்களாக
இருப்பதை நாம் காணமுடிகிறது….
இந்த
தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் சமூக புறக்கணிப்பு என்பதை நாம் மறுக்க முடியாது....
ஒருவகையில் இது இந்த சமூகத்தின் “கொலை” என்றுதான் சொல்லவேண்டும்.... உரிமைகள்
பறிக்கப்பட்டு, அவர்களை தற்கொலையை நோக்கி செலுத்துவதும் கூட ஒருவகையில்
“கொலை”தானே...?
இத்தகைய கௌரவ கொலைகளை செய்துவரும் இந்த சமூகம் எப்போது தன் ரத்தக்கறை படிந்த
“கலாச்சாரம்” என்கிற முகமூடியை வீசி எறியப்போகிறது? என்று தெரியவில்லை....
“தற்கொலை செய்வது கோழைத்தனம்” என்பார்கள்.... என்னை பொருத்தவரை தற்கொலை
செய்திடத்தான் அதிக தைரியமும், உறுதியும் வேண்டும்.... உயிரை இழக்க எவருக்கும்
அவ்வளவு எளிதாக எண்ணம் வந்துவிடாது..... நீங்கள் அத்தகைய தைரியமான, உறுதியான
முடிவோடு தற்கொலை செய்வதற்கு பதிலாக, அந்த உறுதியில் ஒரே ஒரு சதவிகிதம் கொண்டு
வாழ்ந்து பாருங்கள்.... சாவையே எதிர்கொள்ள முடிவெடுக்கும் உங்களுக்கு, வாழ்க்கை
ஒன்றும் பெரிய சுமை இல்லை....
உயிர்கள் விலை மதிக்க முடியாத விஷயம்.... அதை விட்டு உங்கள் சோகத்தை போக்க
நினைக்காமல், துணிந்து நின்று போராடுங்கள்.... உங்கள் போராட்டம் நிச்சயம் அடுத்த
தலைமுறையாவது தற்கொலைகள் இல்லா சமூகமாக உருவாக்கும்....
Hai anna, nenga solrathu unmai than nan oru time la tharkolai pannikka remba try pannen ana enakku athukku thairiyam illa luck-m illa ippa enna nane thethikittu valnthuttu irukken, en future enna agum nu enakku innum kavalai irukku....
ReplyDelete