Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Tuesday, 29 January 2013

"சூழ்நிலை கைதி" - மண்வாசனை நிறைந்த சிறுகதை....

குழந்தையின் “வீல்” என்ற அலறலில் திடுக்கிட்டு விழித்தான் பழனிச்சாமி.... அருகில் மனைவி படுத்திருந்ததற்கான அடையாளமாக தலையணையும், போர்வையும் சுருட்டி கிடந்தது.... நான்கடி தூரத்தில் தன் இரண்டரை வயது மகன் அழுதுகொண்டிருப்பதை தூக்க கலக்கத்தில் எரிச்சலுடன் பார்த்தான்...
“அப்பு..... அப்பு...” பாசத்துடன் படுத்திருந்தவாறே பிள்ளையை அழைக்க, அதுவோ தந்தை விழித்திருப்பதை கண்டதும் இன்னும் உச்சஸ்துதியில் அலறியது.... எழுந்து சென்று பிள்ளையை சமாதானப்படுத்த அலுப்புப்பட்ட பழனிச்சாமி, வலது கையை தரையில் ஊன்றி மெல்ல இடது கையால் பிள்ளையை இழுத்து தன் அருகில் அமர்த்தினான்....
“ஏம்பு அழுவுற?.... உங்காத்தா எவுன நின்னு பொரணி பேசுறா?... புள்ளைய பாக்குறத விட மகாராணிக்கு வெட்டிப்பேச்சு முக்கியமா போச்சு போல” குழந்தையால் பறிபோன தூக்கத்தை, மனைவியின் மீதான கோபமாக உருமாற்றினான், அருகில் இருந்த பிளாஸ்டிக் பையில் வாங்கி வைத்திருந்த கடலை மிட்டாயை பிள்ளையின் கையில் திணித்தான்....
அதை பார்த்ததும் அழுகையை மறந்து முகம் மலர்ந்தது குழந்தை...
கன்னங்களை வண்ணம் பூசிய கண்ணீரை தன் உள்ளங்கையால் துடைத்துவிட்டு, மூக்கிலிருந்து வடிந்ததை விரல்களால் எடுத்து சுவற்றில் தேய்த்தான்....
“காலங்காத்தால எங்க போனாளோ!... இவளுக்கு புருசன், புள்ள ஒரு கேடு” பிள்ளைக்கு ட்ரவுசரை மாட்டிவிட்டுக்கொண்டே அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கினான் பழனிச்சாமி.... அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தண்ணீர் குடத்துடன் உள்ளே வந்துவிட்டாள் லெட்சுமி...
“என்ன சத்தம் பைப்படி வரைக்கும் கேக்குது?... சூரியன் உச்சிக்கு வர்ற வரைக்கும் தூங்குறது, நடுராத்திரி பாதி சாமத்துக்கு மேல வீட்டுக்கு வாரதுன்னு இருக்குற உனக்கு என்னத்துக்கு பொண்டாட்டி புள்ளை’னு ஊரே கேக்குது...” தண்ணீர் குடத்தை கீழே வைத்த வேகத்தில் குழந்தை திடுக்கிட்டு நின்றது....
“ஆமா.... மாடு மாதிரி உனக்கு உலச்சு கொட்றேன் பாரு, இதுவும் சொல்லுவ, இன்னுமும் சொல்லுவ....”
“ஆமாமா... கொட்டிட்டாலும்.... ஆயிரக்கணக்கா கொண்டாந்து கொட்டுற பாரு?.... இன்னும் இத்துப்போன கூரைய மாத்துறதுக்கு துப்பில்ல, மழை பேஞ்சா ஒன்டுறதுக்கு எடமில்ல.... இவரு கொட்டித்தான் இங்க வாழுதாம்” அரிசியை களைந்த பாத்திரத்தை அடுப்பின்மீது வேகமாக வைத்தாள்....
“சம்பாதிச்சு கொடுக்குற பணத்துல நல்ல பதூசா சீலையும், ஆடம்பர சாமானும் வாங்க தெரியுதுல்ல?... அத பத்திரப்படுத்தி வீட்டுக்கு எதாச்சும் செய்ய நீதாண்டி சேமிக்கனும்.... பொம்பள பொம்பளையா இருந்தா வீடு வீடா இருக்கும்”
“ஆம்புள ஆம்புள மாதிரி நடந்துகிட்டா, நான் ஏன் பொம்பளையா நடந்துக்க மாட்டேன்?...” இந்த வார்த்தைகள் மட்டும் லெட்சுமியின் வாயில் இருந்து மெல்ல வெளிவந்தது.... ஆனால், இதற்குண்டான வலிமையையும், வலியும் பழனிச்சாமிக்கு நன்றாகவே தெரியும்.... இதற்கு மேல் விவாதத்தை தொடரவிட்டால் அது எங்கு சென்று முடியும்? என்பதை அவன் நன்கு அறிவான்....
இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தை கையில் வைத்திருந்த மிட்டாயை தின்ன மறந்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, தோளில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு வழக்கமாக செல்லும் டீக்கடையை நோக்கி விரைந்தான் பழனிச்சாமி....
பழநிச்சாமிக்கும் லெட்சுமிக்கும் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட இன்னும் பூர்த்தியாகவில்லை.... புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கொரியர் ஆபீஸில் லோடு மேன் வேலை அவனுக்கு.... தன் ஊரான சேரன் புதூர் ஊரிலிருந்து அரைமணி நேர பேருந்து பயணத்தில் புதுகை சென்றுவிடலாம்.... காலை பத்து மணி முதல், மாலை ஆறு மணி வரை வேலை.... ஏழு வருடங்களாக சுமைதூக்கி உடம்பு முறுக்கேறி கிடந்தது.... ஆண்மை கொப்பளிக்கும் உடல்வாகு.... இன்னும் முப்பதுகளை தொடாத வயது... ஆறு மணிக்கு வேலை முடிந்தாலும், இவன் வீட்டிற்கு வருவது நள்ளிரவை நெருங்கும் வேளையில்தான்....
மனைவி லட்சுமியுடன் தாம்பத்ய உறவு வைத்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.... திருமணமான நாள் முதலாக இன்றுவரை வேண்டாவெறுப்பாகத்தான் தன் மனைவியுடன் உறவு கொள்கிறான்... பெரும்பாலும் அத்தகைய உறவுகளை தவிர்க்கவே நள்ளிரவு நேரத்தில் வருகிறான்.... இப்படி உடலுறவில் நாட்டமில்லாமல் போக காரணம் என்ன?... இதே குழப்பமும் கேள்வியும்தான் லெட்சுமிக்கும்... லெட்சுமியின் அழகில் ஊர் மிராசு முதல் கோவில் பூசாரி வரை அசராத ஆட்களே இல்லை... இவள் தண்ணீர் எடுக்க குளத்திற்கு போனால், விலகும் சேலைக்குள் தெரியும் வளமான மார்பை பார்ப்பதற்காகவே இளைஞர் பட்டாளம் மீன் இல்லாத குளத்தில் தூண்டில் போட்டு அமர்ந்திருக்கும்.... மாநிற மேனியும், செதுக்கிய முகவெட்டும், வடிவான உடல் வாகும் என்று அழகாகவே இருப்பாள் லெட்சுமி.... இத்தகைய ஒருத்தியை பிடிக்காமல் இருப்பானா ஒருத்தன்? என்று தனக்குள் நொந்துகொள்வாள் லெட்சுமி.... திருமணமான புதிதில் மட்டும் சம்பிரதாயத்துக்காக உடலுறவை மேற்கொண்ட பழனிச்சாமி, குழந்தை பிறந்தபிறகு ரொம்பவே விலகி சென்றுவிட்டதைத்தான் குத்தலாக “ஆம்புள, ஆம்புள மாதிரி நடக்கணும்” என்று சொல்வாள்.... அதற்கு மேல் நேரடியாக அவளால் கேட்டிட முடியாது, அதைக்கூட புரியாத அளவிற்கு பழனிச்சாமியும் முட்டாள் இல்லை என்பதையும் அவள் அறிந்திருந்தாள்....
ஒரு கையில் கடலை மிட்டாயையும், மறுகையில் அப்பாவின் தலையில் கைவைத்தபடியும் பிள்ளை அப்பாவின் தோளில் சாய்ந்திருக்க, பழனிச்சாமியோ ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்....
திருமணத்திற்கு முன்புவரை எந்த பெண்ணின்மீதும் ஈர்ப்பு கொள்ளவில்லை பழனிச்சாமி... தன் சகவயது நண்பர்கள் ஊர் கண்மாயில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து வேடிக்கை பார்த்ததையும், பம்ப் செட் அறைக்குள் கதிர் அறுக்க வந்த பெண்ணை அழைத்துக்கொண்டு போனதையும் விலகி நின்றுதான் பார்த்தான்... “எல்லாம் கல்யாணம் ஆகிட்டா சரி ஆகிடும்” என்ற தனக்குள் உண்டான சமாதானத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வான்....
“நம்ம சேரம்புதூர் கருப்பையா மவன் பழனிச்சாமி இருக்கான்ல, தங்கமான பையன்யா.... புதுக்கோட்டைல நல்ல வேல, பத்து மா சொந்த நெலம்... அதெல்லாம் விட எந்த பொண்ணையும் இதுவரைக்கும் நிமுந்து கூட பாத்ததில்ல.... அம்புட்டு சொக்கத்தங்கம்யா” பழனிச்சாமியை பற்றி உறவினர் ஒருவர் தன் அப்பாவிடம் சொன்ன இந்த வார்த்தைகள்தான் அவன் மீது லெட்சுமிக்கு விருப்பத்தை உண்டாக்கியது.... ஆனால், அதே வார்த்தைகள் இன்று பழனிச்சாமி மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டது.... ஆம், மற்ற பெண்களை நிமிர்ந்து பார்ப்பதற்கும், மனைவியுடன் இல்லறம் வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கல்லவா?.....
இப்படி ஊருக்கே தெரிந்த பழனிச்சாமியின் முகத்திற்கு நேரெதிரான இன்னொரு முகத்தை அவனும், புதுகை பேருந்து நிலையமும் மட்டுமே அறிவார்கள்.....
அதை வேலைக்கு செல்லும்போது பார்க்கலாம், இப்போது பழனிச்சாமி டீக்கடைக்கு வந்துவிட்டான்... பெஞ்ச்சில் தன் மகனை அமர்த்தி, அவன் கையில் ஒரு பாலை வாங்கி கொடுத்துவிட்டு, பீடியை பற்றவைத்துக்கொண்டு சில அடி தூரம் தள்ளி நின்ற தன் நண்பர்கள் கூட்டத்தை அடைந்தான்....
“இந்தா வந்துட்டாண்டா நம்ம பங்காளி.... அவன்தாண்டா இதுக்கு சரியான ஆளு, கேளுங்கடா” பழனிச்சாமியை பார்த்த ஒருவன் இப்படி சொல்ல, ஒன்றும் புரியாமல் விழித்த பழனிச்சாமி, “என்னங்கடா பேசுறீங்க?....பிட்டல்லாம் பலமா இருக்கு?” என்றான்....
அருகில் நின்ற இன்னொருவன், பழனிச்சாமியின் தோளில் கைபோட்டு, “மச்சான், நம்ம சேகருக்கு கல்யாணமாம்.... கல்யாணம் பண்ணுனதுக்கப்புறம் நடக்க வேண்டிய விஷயங்கள் பத்தி சந்தேகமாம்.... கல்யாணம் ஆகி ஒரே வருஷத்துல புள்ளைய பெத்தவன் நீதான்.... அதான், எதாச்சும் நல்ல ஐடியா கொடுக்கணுமாம்....” என்றான்...
சம்மந்தப்பட்டவன், “ஆமா பழனி.... மொத ராத்திரியிலே எல்லாம் நடக்கனுமா?... நீ என்ன பண்ண மொத ராத்திரியில?” சீரியசாகவே கேட்டான்....
தன் தோள் மேல் கைபோட்டிருந்த மைத்துனனின் கைகளை விலக்கிய பழனிச்சாமி, “பேன் பாத்தேன்.... கேக்குறாணுக பாரு கேள்வி.... காலங்காத்தால, கருமம் பிடிச்ச்சவனுகளுக்கு வேற பேச்சே கெடைக்கல போல....” பீடியை கடைசி இழுப்பு இழுத்துவிட்டு தரையில் போட்டு காலால் மிதித்துவிட்டு டீக்கடையில் அமர்ந்திருந்த பிள்ளையை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான் பழனிச்சாமி....
ஆம், ஊர் மக்களை பொருத்தவரை சிறந்த இல்லறம் நடத்துபவனாக பழனிச்சாமி தெரிந்தான்.... இப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை உருவாக்கத்தான் அவசர அவசரமாக திருமணமான முதல் வருடத்திலேயே பிள்ளையை பெற்றான் பழனிச்சாமி.... தன் ஆண்மையை ஊருக்கு நிரூபித்த திருப்தியில், மனைவியை கண்டுகொள்ளவில்லை....
வீட்டிற்குள் நுழையும்போதும் மனைவியின் கூக்குரல் விடாமல் ஒலிப்பதை கவனித்தான்....
“எங்கப்பா இருந்த இருப்புக்கு, என்னைய காரைக்குடி பக்கம் கேட்டாக.... என்ன பாவம் செஞ்செனோ தெரியல, இவுன வந்து மாரடிக்கிறேன்”
இப்போதும் எந்த பேச்சையும் பேசாமல், குளித்து முடித்துவிட்டு வேலைக்கு கிளம்பினான் பழனிச்சாமி.... எவ்வளவு சண்டை போட்டாலும், மறக்காமல் அவனுக்கு மதிய உணவை டிபன் பாக்சில் எடுத்துவைத்துவிட்டாள் லெட்சுமி.... “அவ நல்லவதான்.... ஆனா கொஞ்சம் பிடிவாதக்காரி” அவ்வப்போது தன் மனைவியை பற்றி மனதிற்குள் பழனிச்சாமி நினைத்துக்கொள்ளும் வார்த்தைகள் இவை....
வெளியே செல்லும் முன் தன் பிள்ளையை பார்த்த பழனிச்சாமி, “அப்பு.... அப்பா வேலக்கி போறேன்.... வர்றப்ப என்ன வாங்கிட்டு வரட்டும்?” என்று கன்னங்களை பிடித்து உருவியவாறே கேட்டான்....
“முத்தாயி, ரொட்டி, பொம்ம” மழலைக்குரலில் தன் விருப்பப்பட்டியலை அடுக்கிக்கொண்டே போனது குழந்தை.....
சாப்பாட்டை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறி புதுகையை அடைந்தான் பழனிச்சாமி....
அரண்மனையும், மதில் சுவரும், பழங்கால கட்டிடங்களும் என தன் பழமையை உலகுக்கு சத்தம் போட்டு சொல்லும் புதுகை நகர்தான் பழனிச்சாமியின் கண்களுக்கு சொர்க்கம் போல தெரியும்... ஏழு வருடங்களாக நித்தமும் வந்து போகும் ஊர்தான் என்றாலும், அரண்மனையை கடக்கும் ஒவ்வொரு முறையும் குழந்தையின் உற்சாகத்துடனும், புதியதை கண்ட வியப்புடனும் கண்களை அகல விரித்து பார்ப்பான்... கைலியும், கட்டம் போட்ட சட்டையும், கையில் சாப்பாடு தண்ணீர் வைத்திருக்கும் ஒயர் கூடையும் என்று வழக்கமான தன் காஸ்ட்யூமில் பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருந்த தான் வேலை பார்க்கும் கொரியர் கம்பனிக்குள் சென்றான்... உள்ளே சென்றதும், கூடையை ஓரத்தில் வைத்துவிட்டு தன் சட்டை மற்றும் கைலியை மாற்றிவிட்டு, “உதயன் கொரியர்ஸ்” விளம்பர சிவப்பு நிற பனியனையும், முட்டிக்கு மேல் நிற்கும் அரைக்கால் ட்ரவுசரையும் போட்டுக்கொண்டு பார்சல்களை மேற்பார்வையாளரின் கட்டளைப்படி இடம் மாற்றினான்....
ஏழு வருடங்களாக அங்கு வேலைபார்ப்பவன் என்பதால் முதலாளி மத்தியில் சிறப்பு சலுகைகள் அவனுக்கு உண்டு... இவன் விரும்பிய நேரத்தில் புகை பிடித்திட உரிமை, கேட்கும் நேரத்தில் கேட்ட தொகை பணமாக கிடைக்கும் உரிமை, தேவைப்படும் நேரத்தில் விடுப்பு என்ற பல உரிமைகள் அவனுக்கு உண்டு... இதை எல்லாவற்றையும்விட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் “உதய குமாரன்” புதுகை மாவட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகராவார்.... அவரிடம் பேசவே தயங்கும் அவருடைய ஊழியர்களுக்கு மத்தியில், வாக்குவாதமே செய்யும் அளவிற்கு பழனிச்சாமிக்கு உரிமையை கொடுத்திருந்தார் முதலாளி.... அந்த அளவிற்கு உழைப்பிலும், உண்மையிலும் மிகவும் நேர்மையாக திகழ்பவன்....
சக ஊழியர்களோடு மதிய உணவை உண்ணும்போது, லட்சுமியின் கைப்பக்குவத்தை பலரும் பாராட்டுவதை மிகவும் பெருமிதத்தோடு நினைத்துக்கொள்வான் பழனிச்சாமி.... இன்று காலை நடந்த “உலகப்போரை” தாண்டியும் அவள் செய்து கொடுத்திருந்த மொச்சக்கொட்டை கருவாட்டு குழம்பு பற்றித்தான் பலரும் சிலாகித்து பேசினார்கள்....
“அவ நல்லவதான்... ஆனா, கொஞ்சம் பிடிவாதக்காரி... அவ்வளவுதான்” மனைவியை பற்றி தனக்குள் சிரித்தவாறே இப்போதும் நினைத்துக்கொண்டான்....
மாலை ஆறு மணியை நெருங்கிய வேளையில் ஒவ்வொருவராக வீட்டிற்கு கிளம்புவதால் ஆயத்தமானார்கள்... பழனிச்சாமி மட்டும் ரொம்பவே பொறுமையாக அங்கு குளித்து, உடைகளை மாற்றிவிட்டு ஒரு ஏழு மணி அளவில் பேருந்து நிலையம் நோக்கி வந்தான்.....
பேருந்து நிலையத்தில் அவ்வளவாக பலராலும் கண்டுகொள்ளப்படாத இலவச சிறுநீர் கழிப்பிடம் நோக்கி நடந்தான்...
உள்ளே சென்றவன், கைலியை தூக்கிக்கொண்டு சிறுநீர் கழிக்கும் தோரணையில் ஐந்து நிமிடங்களாக நின்றான்... ஆனால், சிறுநீர் கழிப்பதாக தெரியவில்லை...  கண்களை அலைபாய விட்டான்.... என்ன செய்கிறான்?.... பொறுத்திருந்து பாருங்க.... ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன், பீடியை பற்றவைத்துக்கொண்டு கழிவறைக்குள் உள்ளே செல்பவர்களை மீண்டும் நோட்டமிட்டான்.... சில நிமிடங்கள் கழித்து மீண்டும் உள்ளே சென்றான்.... அதே தோரணையில் நின்று, அதே “பராக்கு” பார்த்துக்கொண்டு மீண்டும் அதே போல வெளியே வந்தான்....
மூன்றாம் முறையும் உள்ளே சென்றான்.... அவனுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினையா? என்று மருத்துவ காரணங்களை தேடி ஓடவேண்டாம்..... பொதுவாக ஒரு கழிவறைக்குள் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருத்தன் உள்ளே செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தால், நிச்சயம் பார்ப்பவர்கள் காரணம் புரியாமல் குழம்புவார்கள்.... ஆனால், அத்தகைய பரபரப்பான பேருந்து நிலையத்தில் பழினிச்சாமியின் வித்தியாசமான இந்த நடவடிக்கையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.... கண்டுகொண்டாலும் அதை கண்டும் காணாமல் சென்றுவிட்டனர்.... இப்போது மூன்றாம் முறை உள்ளே சென்றபோது, தன் அருகில் நின்ற ஒரு இளம் வயதினனை நோக்கினான்.... பயணக்களைப்பு முகத்திலும் கண்களிலும் அப்பட்டமாக தெரிந்த அந்த இளைஞன் கல்லூரி மாணவனை போல காணப்பட்டான்.... வெகுதூர பயணம் மேற்கொள்பவனைப்போல தெரிந்தான்.... ஜீன்ஸ் டீ ஷர்ட் சகிதம், தோளில் மாட்டிய சிறிய பையுடன் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த அந்த இளைஞனை மேலும் கீழுமாக நோட்டமிட்டான் பழனிச்சாமி..... அதை அந்த இளைஞனும் கவனிக்க, இருவரும் கண்களால் ஏதோ பேசிட, அருகில் இருந்த கழிப்பிட அறைக்குள் நுழைந்து தாழிட்டனர்.... துர்நாற்றம் நாசிகளின் துவாரங்களை சிதைக்கும் அளவுக்கு பலமாக இருந்த அந்த இடத்திலும், தன் உடல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு வெளியே வந்தான் பழனிச்சாமி.... பேன்ட்டை சரி செய்துவிட்டு, திரும்பி கூட பார்க்காமல் வேகமாக கழிவறையை விட்டு வெளியேறினான் அந்த இளைஞன்....
இருவரும் ஒரே கழிவறைக்குள் இருந்து வெளிவருவதை சிலர் ஆச்சரியமாகவும், பலர் முகம் சுளிப்போடும் பார்ப்பதை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், வெளியே வந்து அசாத்தியமாக இன்னொரு பீடியை பற்ற வைத்தான் பழனிச்சாமி.... நாம் முன்பே சொன்னதுபோல இதுதான் பழநிச்சாமிக்கும், புதுகை பேருந்து நிலையத்துக்கும் மட்டுமே தெரிந்த “பழனிச்சாமி ரகசியம்”.... ஆம், நமக்கு புரியும்படி சொல்வதானால் “பழனிச்சாமி ஒரு கே”.... கே என்றால் என்ன?, தனக்கிருக்கும் இந்த வித்தியாசமான உணர்வு சரியா?, இதற்கு தீர்வுதான் என்ன? இப்படி அவனை சுற்றிய கேள்விகள் கூட அவனுக்கு தோன்றவில்லை.... திருமணத்திற்கு முன்பு கூட அவனுக்கு பெண்கள் மீதுதான் ஈர்ப்பு வரவில்லையே தவிர, ஆண்கள் மீதான ஈர்ப்பு பல வருடங்களாகவே அவனுக்குள் இருந்தது.... இந்த பேருந்து நிலைய உல்லாசம் கூட அவனுக்கு ஏழு ஆண்டுகளாக இருக்கும் ஒன்றுதான்....
வாரத்தின் ஐந்து நாட்களின் காமப்பசியை பேருந்து நிலையமும், சனிக்கிழமை மாலை மட்டும் நகரை தாண்டிய “வெங்கடேசா டூரிங் டாக்கிசும்” தீர்த்து வைக்கும்.... “திருமணமானால் சரி ஆகிடும்” என்று நினைத்து திருமணம் செய்துகொண்டு, அந்த எண்ணம்  ஏமாற்றம் ஆனது காலத்தின் சாபமாகத்தான் அவன் நினைக்கிறான்.... இந்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், வாழ்க்கையே ஆச்சரியக்குறி ஆகிவிட்டதை எண்ணி நித்தமும் மனம் நொந்தாலும், மாலை வேளை மன்மத மயக்கத்தை தவிர்க்க முடியாமல் பேருந்து நிலையம் வந்துவிடுகிறான்.....
கழிவறை உல்லாசம் முடிந்த பின்பு, டாஸ்மாக்கில் ஒரு கட்டிங், அருகில் இருந்த பெட்டிக்கடையில் மகன் “அப்பு”வுக்கு ஒரு டைகர் பிஸ்க்கட் பாக்கெட், வாங்கிக்கொண்டு கடைசி பேருந்தில் ஊருக்கு சென்றான்.... வீட்டிற்கு செல்லும்போது மணி வழக்கம்போல நள்ளிரவை நெருங்கிவிட்டது... கதவை தட்டியபோது, களைந்த முடியும், அரைகுறையாக சொருகிய சேலையுடனும் தூக்கம் நிறைந்து காணப்பட்ட முகத்துடன் கதவை திறந்தாள் லட்சுமி.... ஏற்கனவே பழனிச்சாமிக்காக பாத்திரங்களில் இரவு உணவு எடுத்து வைத்திருந்தாள்... அதனால், எதுவும் பேசாமல் தன் படுக்கையில் படுத்துவிட்டாள் அவள்.... உள்ளே நுழைந்த பழனிச்சாமி, உறங்கிக்கொண்டிருந்த தன் மகனை அந்த போதையிலும் தடுமாறாமல் கொஞ்சிவிட்டு, சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றான்.... இதுதான் அவனுடைய ஒருநாள் ரொட்டின் வாழ்க்கை...
இப்படி தன் சுகத்தை தீர்த்துவிட்டு, நள்ளிரவை தாண்டிய நேரத்தில் வீட்டிற்கு வந்து நித்தமும் “இரட்டை வாழ்க்கை” வாழ்வது சங்கடமாக இருந்தாலும், வேறு வழியின்றி சகித்து வாழ்ந்தான்....
மறுநாள் வழக்கமான சண்டை அவர்களிடையே இல்லை... அத்தி பூத்தாற்போல அவ்வப்போது இப்படி “அமைதி” நிலவுவதும் உண்டு.... அன்று சனிக்கிழமை.... சாப்பிட்டுவிட்டு வேலைக்கு கிளம்பும் முன்பு பழனிச்சாமியை அழைத்த லட்சுமி, “யோவ் மொதலாளிகிட்ட பணம் வாங்கிட்டு வா... அடுத்தவாரம் நம்ம காமாட்சி மவளுக்கு கல்யாணம்... கட்டிக்கிட்டு போறதுக்கு நல்ல சீலை இல்ல... திலகராஜ் ஜவுளிக்கடைல ‘அனுஷ்கா’ சீலைன்னு வந்திருக்காம்.... அது வாங்கனும்யா” கொஞ்சி குலாவி தன் கோரிக்கையை முன்வைத்தாள்... அன்றைய அமைதிக்கான காரணம் அவனுக்கு புரிந்தது.....
“அனுஷ்கா சீலையா?... அனுஷ்காவுக்கு என்ன சீலை கட்டினாலும் நல்லாத்தான் இருக்கும்.... அதுக்காக அது கட்டுன சீலையை கட்டுன எல்லாரும் அனுஷ்கா ஆகிட முடியுமா?” சிரித்துவிட்டு சொன்னாலும், லட்சுமிக்கு கோபம் வந்தது.... அவளுடைய முகமாற்றத்தை கவனித்த பழனிச்சாமி, வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு முன்பு, “சரி சரி.... பாக்கலாம்....மொதலாளி கிட்ட கேட்டு பாக்குறேன்” சொல்லிவிட்டு வேலைக்கு ஓடினான்.....
பரபரப்பான வேலைகள் முடிந்த பின்பு, இன்று பேருந்து நிலையம் செல்லாமல் திரையரங்கம் சென்றான்.... நகர்ப்புறம் தாண்டிய “வெங்கடேசா டூரிங் டாக்கிஸ்” திரையரங்கில் ஓடிய “அந்தரங்கமும் அல்லிராணியும்” படத்திற்கு சென்றான்... வழக்கமான சனிக்கிழமைகள் அவனுக்கு திரையரங்கில் தான் கழியும்... மற்றநாட்களில் வெறிச்சோடி கிடக்கும் திரையரங்கம், சனிக்கிழமைகளில் மட்டும் நிரம்பி வழியும்.... படத்திற்கு நடுவில் சேர்க்கப்படும் “நான்கு பிட்’களுக்காக” கல்லூரி மாணவர்கள் படையெடுத்து வருவார்கள்... அப்படி கல்லூரி மாணவர்களை ரசித்து ருசித்திட பல “பழனிச்சாமி”கள் வருவார்கள்... திரையரங்க வாசலில், உதட்டை சுழித்தபடி ஷகீலா ஒரு ஆடவனுடன் போஸ்டரில் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தாள்.... பதினைந்து ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றான் பழனிச்சாமி.... அவ்வளவாக கூட்டமில்லை, எப்போதும் படம் தொடங்கியபிறகுதான் பெரும்பாலான “தலைமறைவு” ஆசாமிகள் உள்ளே வருவார்கள்.... பான்பராக் எச்சில்களுக்கும், காய்ந்து போன விந்தின் தடங்களுக்கும் மத்தியில் ஓரளவு சுத்தமான இருக்கையை பிடித்து அமர்ந்தான்... நெற்றியில் வழிந்த வியர்வையை தன் கைலியின் முனையில் துடைத்தவன், சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை திறந்துவிட்டு வாயால் காற்றை மார்பில் செலுத்தினான்... கண்களை ஆங்காங்கே அலைபாயவிட்டான்....
கல்லூரி மாணவர்களும், சில அடையாளம் மறைத்த பள்ளி மாணவர்களும் ஆங்காங்கே அமர்ந்திருப்பதை கண்டான்... படம் தொடங்குவதற்கான “மணி” அடிக்கப்பட்ட நொடியில், வெளியே நின்ற ஒரு கூட்டம் தடதடவென உள்ளே நுழைந்து இருக்கைகளை ஆக்கிரமித்தது.... அதில் கையில் கல்லூரி பையுடன் மேலே இருந்த காற்றாடிக்கு கீழ் இடம்பிடித்து அமர்ந்த ஒரு இளைஞனை பார்த்தான் பழனிச்சாமி.... அவனும் கண்களை அலைபாயவிட்டதை உணர்ந்து, அவனை “லாக்” செய்து, எழுந்து சென்று அந்த இளைஞனின் அருகில் அமர்ந்தான் பழனிச்சாமி.... இவ்வளவு வேகம் எதற்காக?... அங்கு தாமதித்தால் தன்னைப்போல காத்திருக்கும் வேறு எவனாவது “லாக்” செய்துவிடலாம் என்கிற அச்சத்தில் யோசித்த மறுநொடியில், அந்த இளைஞன் பக்கத்தில் இடம் பிடித்தான்.... படம் தொடங்கிவிட்டது.... “அந்தரங்கமும் அல்லிராணியும்” என்ற பட தலைப்பிற்கு பிறகு நேரடியாக காட்சிகள் போடப்பட்டது.... முதல் காட்சியே ஷகிலாவின் குளியல் காட்சிதான்... சாதாரண குளியலுக்கு கூட அவ்வளவு முக பாவனைகளும், சம்பாஷனைகளும், விளைவுகளையும் காட்டும் ஒரே நடிகை “ஷகிலா” மட்டும்தான்.... நியாயமாக பார்த்தால் ஷகிலாவுக்குத்தான் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கணும், அந்த அளவுக்கு குளியலுக்கு கூட நூறு வித ரியாக்சன் கொடுக்கிறாள்.... உதட்டை சுழித்து, மேலும் கீழுமாக கைகளை படரவிட்டு, கண்களை சொருகி ஒரு சாதாரண குளியலை, அசாதாரண நிகழ்வாக ஆக்கிவிட்டாள் அவள்.... அந்த காட்சியில் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் அருகில் இருந்த இளைஞன்.... பத்து நிமிடங்களுக்கு பிறகு தனது லீலைகளை தொடங்கினான் பழனிச்சாமி... மெல்ல அவன் மீது கைகளை ஊர்திபோல நகர்த்தினான், எதிர்ப்பு வராவிட்டாலே, அது சம்மதத்திற்கான அறிகுறிதான் என்று உணர்ந்த பழனிச்சாமி, அடுத்தடுத்த வேலைகளை “தீயாக” செய்தான்.... அத்தியாவசியமான உடைகளை களைந்து, பரபரப்பாக வேலைகளை செய்த பழனிச்சாமியை சுற்றி இருப்பவர்கள் வேடிக்கை பார்த்தார்கள்... இளைஞனுக்கோ தர்மசங்கடமான நிலைமை என்றாலும், அதை மறுக்க முடியாமல் சுகத்தை அனுபவித்தான்.... சிலர் ஏக்கப்பார்வையோடும், சிலர் முகம் சுளிப்போடும், சிலர் அதிர்ச்சியாகவும் பார்த்தார்கள்....
இடைவேளை விடுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பே முற்றுபெற்றுவிட்டது இருவருக்குமான உல்லாச பயணம்.... வெள்ளை திரவத்தை, திரையரங்கின் சிமென்ட் தரைக்கு தாரை வார்த்த நொடியில், இளைஞன் அவசரமாக திரையரங்கை விட்டு வெளியேறினான்....
சற்று பெருமிதத்தில் பெருமூச்சுவிட்ட பழனிச்சாமி திரையை பார்த்தான்.... மூன்றாவது முறையாக ஷகிலா குளித்துக்கொண்டிருக்கிறாள்.... நடந்த நிகழ்வுகளை மீண்டும் தன் மனதிற்குள் படமாக்கிக்கொண்டு தனக்குள் மகிழ்ந்துகொண்டிருந்தான்.... அந்த நேரம், அவன் அருகில் வந்து அமர்ந்தார் ஒரு நாற்பதை கடந்த நபர்... நடந்தவற்றை வேடிக்கை பார்த்த நபர்களில் ஒருவராகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டான்.... அமர்ந்த வேகத்தில் சிறிதும் தாமதிக்காமல் புதியவன் பழனிச்சாமியை ஆக்கிரமிக்க தொடங்கினான்.... அதுவரை வேறொருவனை இயக்கிய பழனிச்சாமி, இப்போது புதியவனால் இயக்கப்படுகிறான்....
சில மணித்துளிகளில் உச்சம் தொட்ட அவனால், மிச்ச நேரத்தை திரையரங்கில் கழிக்க மனமில்லை.... வெளியே வந்து பீடியை பற்றவைத்துவிட்டு, பேருந்தில் ஏறினான்.... வழக்கமாக சனிக்கிழமைகளில் மட்டும்தான் அவன் பத்து மணிக்குள் வீட்டை அடைவான்... திரையரங்க நிகழ்வுகள் முடிந்தபின்பு, அங்கிருந்து தன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி வீட்டை அடையும்போது இன்று ஒன்பதரை மட்டுமே... இவன் நேரத்திற்கு வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த மனைவி இன்றும் ஏமாறவில்லை... தலையில் கதம்ப பூவும், முகம் முழுக்க மஞ்சள் பூசிய முகத்தில் மிளிர்ந்த பாண்ட்ஸ் பவுடரும், புதுக்கோட்டை டவுனில் தைத்த ஸ்பெஷல் ஜாக்கெட் சகிதம் புடவையும் அணிந்து கதவை திறக்கும்போது “காமநெடி” அவள்மீது அடித்ததை உணர்ந்தான் பழனிச்சாமி.... மனதிற்குள் படபடப்புத்தான் அதிகமானது...
அவளை கண்டுகொள்ளாதவனைப்போல விளையாடிக்கொண்டிருந்த தன் பிள்ளையை வாறி அனைத்து கொஞ்சி, வாங்கி வந்த தின்பண்டங்களை கொடுத்தான்....
“வாய்யா சாப்புட” சிரித்துக்கொண்டே அழைக்கிறாள் லட்சுமி... அந்த சிரிப்பு சாப்பாட்டிற்கு அழைப்பதை போல அவனுக்கு தோன்றவில்லை...
ஆனாலும், பசித்த காரணத்தால் அமர்ந்து சாப்பிட தொடங்கினான்...
நகரை மீன் குழம்பும், இறால் வறுவலும் பழனிச்சாமியின் பசியை இன்னும் தூண்டியது.... வாய்பேசாமல், எதையும் கவனிக்காமல் தீவிரமாக சாப்பிட்டான்... அவன் சாப்பிட சாப்பிட மீன்களை களம் இறக்கினாள் லட்சுமி.... மீன் முட்களை கரிமூட்டம் போடும் விறகைபோல அழகாக அடுக்கி வைத்தான்....
“இதல்லாம் எங்க போய் முடியப்போவுதோ?” மனதிற்குள் பதைபதைத்தான்....
சாப்பிட்டு முடித்து, வீட்டு வாசலில் பீடியை பற்றவைத்தவாறே அமர்ந்தான்....
லட்சுமியும் என்னென்னவோ மறைமுகமாக சொல்லி பார்த்தும் அதை கண்டுகொள்ளாமல், புரியாதவனைப்போல அமர்ந்திருந்தான்....
“நீ போய் படு.... நான் செத்த நேரம் கழிச்சு வாரேன்” சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல், புகையை வானத்தை நோக்கி விட்டான்....
உதட்டளவில் ஏதோ புலம்பியபடியே உள்ளே சென்று படுத்துவிட்டாள்...
அவள் தூங்கிவிட்டதை ஒருமுறை பரிசோதித்த பழனிச்சாமி, மெல்ல சென்று படுக்கையில் படுத்தான்....
கண் அயரப்போகும் நேரத்தில், லட்சுமியின் கைகள் அவன் மீது படர்வதை உணர்கிறான்.... சாதாரண நாட்களிலேயே அவனுக்கு இதில் உடன்பாடு இருந்ததில்லை, இன்றோ திகட்ட திகட்ட திரையரங்க அனுபவம் வேறு கிடைத்த நிலையில், அவனால் எப்படி இதற்கு ஈடுகொடுக்க முடியும்?...  அதை கண்டுகொள்ளாதவனைப்போல படுத்திருந்தான்... அவள் எல்லைகளை மீறுவதை உணர்ந்தவன், இதற்கு மேல் தாமதித்தால் விஷயம் விபரீதம் ஆகிவிடலாம் என்று உணர்ந்து “ப்ச்ச்” என்று உச்சுக்கொட்டியபடி, போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டான்.... அவளுக்கோ எரிச்சலும், கோபமும் மிகையானது... மனதிற்குள் என்னென்னமோ திட்டினாள் பழனிச்சாமியை பற்றி....
ஏக்கங்கள் ஏமாற்றமாகி போனது, ஆசைகள் அவஸ்தைகளாகி போனது... ஆனாலும், எதுவும் சொல்லவோ, கேட்கவோ முடியாத ஆற்றாமையில் கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டாள் லட்சுமி.... எவ்வித குற்ற உணர்வும் பெரிதாக இல்லாத பழனிச்சாமியோ, “அப்பாடா, இப்ப தப்பிச்சேன்” என்ற நிம்மதியோடு உறங்க ஆயத்தமானான்.... ஆனால், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, தனக்கு விடுமுறை வேறு.... வீட்டில் ஒரு பூகம்பமே வெடிக்கப்போவதை எண்ணி கொஞ்சம் பயந்தான்... ஆனாலும், அப்போதைக்கு தப்பித்த நிம்மதியில் உறங்கிப்போனான்....
விடிந்தது.... மனைவியின் பேச்சுக்குரல் கேட்கிறது.... ஆனால், திட்டும் தொனியில் இல்லை... யாரிடமோ பாசமாக பேசுகிறாள்... இரவு நடந்த நிகழ்வின் விளைவை எதிர்பார்த்த பழனிச்சாமிக்கு, இந்த லட்சுமியின் அமைதியான பேச்சு ஆச்சரியத்தை கொடுத்தது... கண்களை திறந்து பார்த்தபோதுதான் அவனுக்கு காரணம் புரிந்தது.... அப்புவை மடியில் வைத்துக்கொண்டு லட்சுமியின் தந்தை அவளுடன் பேசிக்கொண்டிருக்கிறார்....
இன்றைய போர் உருவாகாமல் தடுக்க ஆண்டவனே தன் மாமனாரை அனுப்பியதாக நினைத்துக்கொண்டான் பழனிச்சாமி... வழக்கமாக மாமனாரை அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டான் அவன்...
“எங்கப்பா வர்றப்பதான் உனக்கு வேலை தலைக்கு மேல இருக்கும்... எங்கப்பான்னா உனக்கு இளக்காரம்தான்” அடிக்கடி லட்சுமி சொல்லும் வார்த்தைகள் இவை....
ஆனால் இன்றோ கண்விழித்தது முதலாக மாமனாரை குசலம் விசாரிப்பதில் தொடங்கி, பாய் கடையில் நெஞ்செலும்பு ஈரல் சகிதம் கறி வாங்கி வந்து விருந்து வைப்பதாக இருக்கட்டும், வெற்றிலையை மடித்து வாயில் திணிப்பது வரை மாமனாரின்  அதிதீவிர பக்தனாகவே ஆகிவிட்டான் பழனிச்சாமி..... கத்தக்குறிச்சியாரே வியக்கும் அளவுக்கு மாப்பிள்ளை அவரை வளமாக கவனித்தான்....
மதியம் சாப்பிடும்போது, “மாமாவுக்கு ஈரலை எடுத்து வை லட்சுமி.... நல்ல கறியா பாத்து வை” லட்சுமிக்கே இந்த மாற்றம் அதிசயமாகத்தான் தெரிந்தது... காலையில் கணவன் மீதிருந்த கோபம் கூட இவனது மாமனார் பாசத்தால் லட்சுமிக்கு மறந்து போனது....
“ரெண்டு நாள் இருந்துட்டு போங்க மாமா”
“இல்ல மாப்ள.... இன்னும் வயலுக்கு மருந்து கூட அடிக்கல, புகையான் விழுகுதாம் பயித்துல... வேலை நெறைய கெடக்கு மாப்ள.... தை பொறந்து வாரேன்.... பேராண்டி கண்ணுக்குள்ளேயே நின்னான், அதான் ஒரு எட்டு பாத்துட்டு போவலாம்னு வந்தேன்”
“சரிப்பா.... கெளம்புங்க... பஸ்சுக்கு நேரமாச்சு... அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ... தண்ணி ரொம்ப அடிக்காத”
“சரிம்மா.... ஒத்த புள்ளையோட நிறுத்திட்டிய... இன்னொரு பொம்பள புள்ளைய பெத்தா என்னம்மா?”
“அதுக்குன்னு நேரம் வரணும்பா” என்று சத்தமாக சொல்லிவிட்டு,  முணுமுணுப்பாக “சட்டில இருந்தாத்தானே ஆப்பைல வரும்” என்றாள்... முனுமுனுப்பு சத்தமான பேச்சாக வரும் வாய்ப்பிருப்பதை உணர்ந்த பழனிச்சாமி, மாமனாரை கிளம்புவதற்கு வேகப்படுத்தினான்....
மகளிடம் விடைபெற்று, பேரனுக்கு கன்னம் வீங்கும் அளவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு கத்தக்குறிச்சியார் கிளம்பினார்....
பேருந்தில் ஏற்றிவிட பழனிச்சாமியும் அவருடன் பேருந்து நிறுத்தம் வரை வந்தான்... செல்லும் வழியில் ரமேஷை பார்த்த மாமனார், “நல்லா இருக்கியா தம்பி?” என்றார்....
“இருக்கேன் மாமா.... நீங்க எப்டி இருக்கீங்க?... ஊர்ல விளைச்சல் எப்டி இந்த வருஷம்?”
“பரவால்லப்பா.... ஊர்லேந்து எப்ப வந்த?”
“ஒரு மாசம் ஆச்சு ... வீட்டுக்கு வாங்க மாமா”
“இல்லப்பா... நேரமாச்சு.... இன்னொரு நாள் வாரேன்” சொல்லிவிட்டு விடைபெற்றார் மாமனார்...
ரமேஷ் சேரன் புதூரில் கொஞ்சம் வசதியான குடும்பத்து இளைஞன்.... கோவையில் பணிபுரியும் ரமேஷ், அவ்வப்போது மட்டும்தான் ஊருக்கு வருவான்... அவ்வளவாக அவன் பழனிச்சாமிக்கே பழக்கமில்லை என்ற நிலையில், தன் மாமனார் எப்படி அவனுடன் அவ்வளவு சகஜமாக பேசுகிறார்? எப்படி அவனுடன் மாமனாருக்கு பழக்கம்? போன்ற கேள்விகள் குடைந்தெடுத்தது... பழனிச்சாமி யோசிப்பதை பார்த்த அவன் மாமா, “என்ன மாப்ள யோசிக்கிறீய?.... அந்த ரமேசு எப்புடி எனக்கு தெரியும்னா?... நம்ம லட்சுமிய முதல்ல அவனுக்குத்தான் கேட்டாக... பொண்ணலாம் பாத்தாக, ஜாதகம் சரி இல்லைனதும் விட்டுட்டோம்.... நல்ல புள்ளதான்.... அப்புடி அந்த வரன் தவறுனதுளையும் ஒரு நல்லது இருக்கு” சொல்லிவிட்டு பழனிச்சாமியின் முகத்தை பார்க்க, அவனோ புரியாமல் விழித்தான்....
“அது ஒண்ணுமில்ல.... அந்த வரன் தவறுனதாலதான் உங்க சம்மந்தம் எம்மவளுக்கு கெடச்சுது.... உங்கள மாதிரி தங்கமான மாப்ள எனக்கு கெடச்சிருக்க மாட்டார்ல?” சொல்லி சிரிக்க, பழனிச்சாமியும் சிரித்தான்.... பேசிக்கொண்டே அவர்கள் பேருந்து நிறுத்தத்தை அடைந்துவிட்டனர்.... பேருந்து நிறுத்தம் என்றால் பெரிய அளவில் கற்பனை பண்ணிடாதிங்க.... செம்மண் சாலையும், தார் ரோடும் இணையும் இடத்தில் இருக்கும் வேப்பமரம் தான் பேருந்து நிறுத்தம்.... அடையாளமாக நிறுத்தியிருந்த மைல் கல் மட்டுமே அதற்கு சாட்சி.... அந்த கல்லில் தன் உடைமைகளை வைத்த மாமா,  தன் பையிலிருந்து எதையோ எடுத்து, பழனிச்சாமியின் கைகளில் திணிக்க, அவனோ புரியாமல், “என்ன மாமா?” என்றான்....
“வச்சுக்கோங்க மாப்ள” என்று சொன்னபோதுதான் அது பணம் என்பதை உணர்ந்தான் பழனிச்சாமி....
“ஐயோ வேணாம் மாமா.... என்னத்துக்கு இப்ப இது?”
“ரொம்பவல்லாம் ஒண்ணுமில்ல மாப்ள, சும்மா ரெண்டாயிரம்தான்.... மொதல்ல வீட்டு கூரைக்கு நல்ல கீத்து மாத்துங்க.... செய்முறை எதுவும் உங்களுக்கு நான் மொறையா செஞ்சதில்ல, இருக்குறப்ப குடுக்குறேன், வாங்கிக்கோங்க” கட்டாயமாக பணத்தை பழனிச்சாமியின் கைகளில் திணித்துவிட்டார்.....
“வர்ற தை மாசம் கதிர் அறுத்தோன கீத்த மாத்திக்கறேன் மாமா, பணம் என்னத்துக்கு இப்ப?”
“இப்டி சொல்லி மூணாவது தையும் வந்திடுச்சு மாப்ள.... உங்களுக்கு ஆயிரம் செலவு இருக்கும், அதனால இத வச்சு கீத்த மாத்துங்க” சொல்லிக்கொண்டிருக்கும்போதே பேருந்து வந்துவிட, மாமனாரை பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தான்....
வீட்டிற்கு வந்ததும், மனைவியின் கோபம் தனிந்திருப்பதை உணர்ந்தான்... இனி அடிக்கடி மாமா வரவேண்டும் என்று கடவுளை பிராத்தித்து, அன்றைய பொழுதை பிரச்சினை இல்லாமல் போக்கினான்.... மறுநாள் திங்கள் கிழமை, பரபரப்பாக கிளம்பி வேலைக்கு சென்றான்....
திங்கள் கிழமைகள் எப்போதும் வேலை மிகுந்து காணப்படும்... பீடி பற்றவைக்கக்கூட நேரமில்லாமல் பார்சல்களை இறக்க வேண்டி இருக்கும்... இன்று வேலை முடிந்து பழனிச்சாமி பேருந்து நிலையம் வரும்போது எட்டு மணி ஆகிவிட்டது... திங்கள் கிழமை எப்போதுமே பேருந்து நிலையமும் மக்கள் நெருக்கத்துடன் பரபரப்பாகவே இயங்கும்.... கழிவறையை அடைந்த நேரத்தில் அவனை நிலைகுழைய வைக்கும் அளவிற்கு பலர் உலாவினர்.... மூன்று பேரிடம் முயற்சி செய்தும், முகம் கொடுக்காமல் சென்றுவிட்டனர் அவர்கள்.... நேரமோ ஒன்பதை நெருங்குகிறது, சிறுநீர் கழிக்கும் சாயலில் வழக்கம்போல நின்றபோது அவனருகில் வந்து நின்றார் ஒரு நடுத்தர வயதினர்.... உண்மையான வயது முப்பதை கடந்திருக்கலாம் என்றாலும், தோற்றத்தில் இருபதுகளின் இறுதி போலத்தான் காணப்பட்டார்....
மாநிறமும், டீ ஷர்ட்டில் திமிறிய புஜங்களும், மீசையை லேசாக முறுக்கிய தோரணையும், மொத்தத்தில் ஆண்மை ததும்பிய மன்மதனாக காணப்பட்டார் அவர்.... பழனிச்சாமியின் பார்வை தன்னையும், தன்னுடயதையும் நோக்குவதை உணர்ந்த அந்த புதியவரும் அவனை ஏற இறங்க பார்த்தார்.... அந்த பார்வைக்கான அர்த்தம் அவனுக்கு புரியவில்லை என்றாலும், “கே விதி”யின் படி எதிர்ப்பில்லாதவன் சம்மதிக்கிறான் என்று பொருள் என்பதாக நினைத்துக்கொண்டு அந்த ஆடவனின் வயிற்றில் கைவைத்தான் பழனிச்சாமி.... ஏழு வருட அனுபவத்தில் அவனாக கண்டுபிடித்து உருவாக்கிய விதி இது.... புதியவனோ ஒன்றும் புரியாமல், அவனை மீண்டும் உற்றுநோக்க, எதையும் கண்டுகொள்ளாத பழனிச்சாமி தன் கைகளை கீழ் நோக்கி நகர்த்தினான்....
அடிவயிற்றை தாண்டி அவனுடைய கை எல்லைக்கோட்டை தாண்டி சென்ற நேரத்தில், அவன் எதிர்பாராத விதமாக அவன் நிலைகுழையும்படி கன்னத்தில் அறையப்பட்டான் பழனிச்சாமி.... கைகளை விலக்கி, தன்னை சுதாரிக்கும் முன்பே அடிகள் மேலும் மேலும் அவன் மீது மழையாக பொழிந்தது.... நிலைமையை உணரும் முன்பு, நடப்பதை கிரகிக்கும் முன்பு புதியவனால் பழனிச்சாமியின் உடல் பதம் பார்க்கப்பட்டது.... கன்னத்தில் அறைகள், முதுகினில் குத்து, பின் கழுத்தில் அடிகள் என்று சரமாரியாக தாக்கப்பட்டான்.... பழனிச்சாமியின் தோளில் கிடந்த துண்டால் அவனுடைய கைகள் முதுகோடு சேர்த்து கட்டப்பட்டது.... இதை அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர், சிலர் தடுக்க நினைத்தாலும் அதை பொருட்படுத்தாமல் பழனிச்சாமி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்டான்.... கைலி சட்டையுடன் ஒருவன் அடிக்கப்படுகிறான் என்றவுடன் நிச்சயம் அவன் தவறு செய்திருப்பான் என்று பலரும் தீர்மானித்துவிடுவதன் விளைவாகத்தான் பழனிச்சாமி அன்று யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை, காப்பாற்றப்படவில்லை.....
நிலைமையை கொஞ்சம் சுதாரித்த பழனிச்சாமி, “யாருய்யா நீ?.... என்ன வேணும் உனக்கு?.... விடு....” திமிறினான்.... அதற்கு புதியவன் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதபடி, பழனிச்சாமி அங்கிருந்த காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டான்..... அப்போதுதான் பழனிச்சாமிக்கு தான் எவ்வளவு பெரிய விபரீதத்தில் மாட்டி இருக்கிறோம் என்பது புரிந்தது.....
“ஐயா.... விட்ருங்க.... கால்ல விழுந்து கெஞ்சி கேக்குறேன், விட்ருங்கய்யா” கண்களில் இருந்து எட்டிப்பார்த்த கண்ணீரை சிறிதும் பொருட்படுத்தாமல் கழுத்தோடு இழுத்து காவல் நிலையத்துக்கு உள்ளே இழுத்து செல்லப்பட்டான் பழனிச்சாமி....
அந்த புதியவரை பார்த்த காவலர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.... அருகில் நின்ற ஒரு காவலனால் பழனிச்சாமியின் கைகள் பிடிக்கப்பட்டு, புதியவர் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்....
“என்னங்கய்யா?... என்னாச்சு?.... ஊருக்கு போறதா சொன்னிய, போவலையா?” தலைமை காவலர் அருகில் நின்று பவ்யமாக கேட்டார்....
“போகத்தான் பஸ் ஸ்டான்ட் போனேன், அங்கதான் இந்த கருமம் பிடிச்சவன் இம்சை பண்ணான்”
“என்ன ஆச்சு?... பிக் பாக்கட் கேஸா?”
“இல்லைய்யா.... அசிங்கமான கேஸ் இது....  சொல்லவே வாய் கூசுது.... ஒன்னுக்கு போக பாத்ரூம் போனேன், அங்க இந்த பொட்ட நாய் , எம்மேல தப்பா கை வைக்கிறான்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோபம் அடங்காமல் எழுந்து சென்று மீண்டும் ஒருமுறை பழனிச்சாமியின் கன்னத்தில் அறை விட்டார்....
கைதிகளில் சிலர் அதைக்கேட்டு சிரிக்க, காவலரின் முறைப்பால் காவல் நிலையம் அமைதியானது....
“விடாதிங்க இவன.... நைட்டு முழுக்க சாவடி அடிங்க.... பெண்டிங்க்ல இருக்குற பத்து கேஸை இவம்மேல போட்டு, சாகுற வரைக்கும் ஜெயில்ல இருக்குற மாதிரி செய்ங்க”
இதைகேட்ட பழனிச்சாமியின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.... தலையில் அடித்து அழுத அவனை, யாரும் லட்சியம் செய்யவில்லை....
“சரி, நான் பாத்துக்கறேன்.... நீங்க ஊருக்கு போங்கய்யா” தலைமை காவலர் வந்தவரை வழி அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே வந்து பழனிச்சாமியை பார்த்தார்....
கட்டப்பட்ட கைகளை அவிழ்த்துவிட்டு, “அசிங்கம்புடிச்ச நாயே, ஆம்புள தானடா நீ?... ஒனக்கிருக்கதுதானே அவருக்கும் இருக்கு?.... ஏண்டா இப்டி கேவலமா தோணுது ஒனக்கு?.... “ பூட்ஸ் கால்களால் பழனிச்சாமியை உதைக்க, அவன் நிலை தடுமாறி கீழே விழுந்து அழுதான்....
“அந்தாளு யார் தெரியுமா?... இந்த ஸ்டேசன் எஸ்.ஐ.... சாகுற வரைக்கும் உன்ன விடமாட்டார்.... அப்டி ஆம்புள சொகம் வேணும்னா, பாம்பே’ல ஏதோ ஆப்ரேசன் செஞ்சு அறுத்து விட்ருவாங்கலாம், அதை பண்ணிக்க வேண்டியதுதானே?.... கெரகம் புடிச்ச நாயே...” சல்லடையாக கிழிக்கப்பட்ட பழனிச்சாமியின் உடலில், ஆங்காங்கே ரத்த துளிகள் வடிந்தன.... அதற்கு மேலும் அடித்தால், அது மருத்துவமனைக்கு அலைச்சலை கொண்டுவந்துவிடும் என்ற காரணத்தால் அத்துடன் அவன் விடப்பட்டான்...
நடந்தவற்றை நினைத்து அழுதுகொண்டிருந்தான் பழனிச்சாமி.... அழுவதை தவிர, எதையும் யோசிக்கும் அளவு கூட அவனுக்கு எண்ணங்கள் தோன்றவில்லை.... உடல் வலி பெரிதாக தெரியவில்லை.... கண்ணீர் துளிகள் பட்டபோதுதான், அவன் உதடு கிழிந்து ரத்தம் வருவதை கூட உணர்ந்தான்... அந்த நேரத்தில் ஏனோ தன் மகனின் நினைவு வர, தேம்பி தேம்பி அழுதான்....
நேரம் பத்து ஆனபோது, உள்ளே வந்தார் இன்னொரு காவலர்.... உடல் முழுக்க சிதைந்து காணப்பட்ட பழனிச்சாமியை பார்த்துவிட்டு, நாற்காலியில் அமர்ந்தார்....
“என்ன கேஸ் ஏட்டைய்யா?”
“கீழராஜ வீதில நடந்த நாலு வழிப்பறி, பாரதியார் நகர்ல நடந்த அசால்ட், பஸ் ஸ்டாண்ட்ல சைக்கிள் திருட்டு.... இப்போதைக்கு இதுதான்”
“இவ்வளவையும் இவன்தான் பண்ணானா?...”
“இவன் பண்ணது ஒண்ணுதான், அதுக்கு பரிசா கெடச்சது இந்த கேஸ்’கள்”
“என்ன சொல்றீங்க?... என்ன பண்ணான் இவன்?”
“நம்ம எஸ்.ஐ ரமணா இருக்கார்ல, அவர் பஸ் ஸ்டாண்ட் பாத்ரூம்ல யூரின் போனப்போ, அவர்கிட்ட அசிங்கமா நடந்துகிட்டானாம்”
“ஹ ஹ ஹா...... அவனா நீ?..... “ பழனிச்சாமியை பார்த்து இப்படி சொல்ல, அவனோ அவமானத்தால் தலை குனிந்தான்....
“யோவ் சிரிக்காத.... எவ்வளவு கடுப்பா இருக்கு தெரியுமா?... முன்னல்லாம் பொம்பள புள்ளைய பெத்தவங்கதான் பயப்படனும், இப்ப ஆம்புள புள்ளைய பெத்தாலும், இந்த மாதிரி நாய்களை பாக்குறப்போ பயமா இருக்கு” பல்லை கடித்தபடி பழனிச்சாமியை பார்த்தார்....
“அட விடுங்க ஏட்டைய்யா.... வெளிநாட்ல இதல்லாம் சகஜம்.... ரமணா சாருக்கு லீவ் லேட்டா கெடச்ச கோபத்த, இவன் மேல காட்டிருக்கார்.... விசாரிச்சு, எழுதி வாங்கி அனுப்பி விடுங்க.... இந்த அடியே அவனுக்கு காலத்துக்கும் போதும், இனி அந்த நெனப்பு கூட அவனுக்கு வராது.... செல்லுக்குள்ள எதுவும் அவனை போட்டு, அதை கொரில்லா செல் ஆக்கிடாதிங்க” சொல்லிவிட்டு சிரிக்க, தலைமை காவலருக்கோ எரிச்சல்தான் வந்தது.....
வந்த புதிய காவலர் பழனிச்சாமி அருகில் வந்து, “எங்கடா வேல பாக்குற?” என்றார்...
“உத...உதன்....கொரிய...யர்...” இன்னும் அழுகை கலையாமல், வார்த்தைகளை மென்று விழுங்கினான்....
“என்னடா சொல்ற?.... தெளிவா சொல்லு”
எச்சிலை விழுங்கிவிட்டு, “உதயன் கொரியர்’ல யா”
“உதயகுமார் அண்ணன் கடைலையா?”
“ஆமாம்யா”
தலைமை காவலர் அருகில் வந்த காவலர், “ஏட்டைய்யா, அவன் உதயன் கொரியர் ஆளாம்.... உதயகுமாருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடலாம்... பொங்கல் நேரமா பாத்து, அவரை பகச்சுக்க வேணாம்” என்றார்...
“யோவ், எஸ்.ஐ’க்கு யார் பதில் சொல்றது?....”
“மாசாமாசம் பத்தாயிரம் வாங்குறப்போ நம்ம எஸ்.ஐ யோசிச்சாரா?.... பெரிய ஆள் உதயகுமார், விஷயத்த சொல்லிடலாம்... என்ன சொல்றாரோ அப்டி பண்ணுவோம்”
நீண்ட விவாதத்திற்கு பின்பு, உதயகுமாரனுக்கு அலைபேசி மூலம் விஷயம் சொல்லப்பட்டது... அடுத்த பத்தாவது நிமிடம் அவர் காவல் நிலையத்துக்கு வந்துவிட்டார்....
அவரை பார்த்ததும் பழனிச்சாமிக்கு இன்னும் அவமானம் அதிகமாகி, கூனி குறுகி நின்றான்....
எல்லாம் விலாவரியாக சொல்லப்பட, “சரி, இனிமே அவன் அப்டி பண்ணமாட்டான்... ரமணா கிட்ட நான் பேசிக்கறேன்.... அவனை அனுப்புங்க” தன் கையிலிருந்து சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இருவருக்கும் கொடுத்துவிட்டு, பழனிச்சாமியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார் உதயகுமார்....
“சரி, நீ வீட்டுக்கு போ.... இங்க நடந்தது வேற யாருக்கும் தெரிய வேணாம்... இத்தொட இத மறந்துடு....”
“ஐயா.... அது....”
“இப்ப எதுவும் பேசவேணாம்.... இந்தா காசு, பெரியாஸ்பத்திரி போயி காயத்துக்கு மருந்து போட்டுட்டு வீட்டுக்கு போய் சேரு.... நாளக்கி பேசிக்கலாம்” ஐந்நூறு ரூபாய் தாளை அவன் கைகளில் திணித்துவிட்டு, தன் காரில் பறந்துவிட்டார் முதலாளி...
காயத்திற்கு மருந்து போட மறந்தவனாக பேருந்தில் ஏறி அமர்ந்தான்.... உடல் வலியைவிட அவமானத்தால் மன வலிதான் அதிகமாக காணப்பட்டது... பேருந்தின் ஜன்னலோரமாக தலையை சாய்த்தபடி, அவமானங்களை நினைத்து மனம் நொடிந்தான்... கண்களின் ஓரத்தின் நீர் அவனை அறியாமல் வழிந்து, கீழே விழுந்தது....
“நம்ம வடக்குத்தெரு கணேசன் பொண்டாட்டி புள்ளையல்லாம் பிச்சை எடுக்குதுய்யா”
“அடப்பாவமே!.... நல்லா வாழ்ந்த குடும்பமாச்சே.... ஏன்யா?”
“பங்காளி தகராறு’ல ஜெயிலுக்கு போய்ட்டான்’ல அவன்..... அப்போ புடுச்சுது கெரகம் அவனுக்கு....  சொத்த வித்து, நெலத்த வித்து... இப்போ நடுத்தெருவுல குடும்பம் நிக்குது”
யாரோ ஒரு கணேசன்  பற்றிய பேச்சு பேருந்தில் இருந்த இரண்டு பெருசுகளால் பேசப்பட, பழனிச்சாமிக்கு சுளீர் என்று அடித்தது....
சிறைக்கு தான் சென்றிருந்தால், தன் குடும்பமும் அப்படித்தான் ஆகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டான்....
காவல் நிலைய அனுபவம் பழனிச்சாமியை ஸ்தம்பிக்க செய்தது என்றுதான் சொல்ல வேண்டும்....

“யோவ்... பழனிச்சாமி.... சேரம்புதூர் வந்தாச்சு, எறங்கலையா?” நடத்துனர் சத்தம் போட்ட பின்புதான் சுதாரித்து, நிறுத்தத்தில் இறங்கினான்....
வீட்டை நோக்கி நடக்கும்போதுதான் தன்னிலையை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டான்...
கதவை தட்டியபோது திறந்த மனைவியின் கண்களில் தூக்க கலக்கம் மறைந்து இப்போது அதிர்ச்சி ரேகைகள் அலைபாய்ந்தன....
“என்னய்யா ஆச்சு?.... அய்யய்யோ.... உடம்பல்லாம் காயமா இருக்கு?” அவன் தோள்களை பிடித்து மெல்ல படுக்கையில் அமரவைத்தாள்.....
என்ன சொல்வது? என்று யோசிக்க கூட மறந்தவனுக்கு, இப்போதுதான் யோசிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது....
“பார்சல் ஏத்துறப்ப விழுந்துட்டேன்” எதை சொன்னாலும் லட்சுமி நம்பிவிடுவாள் என்று அவனுக்கு தெரிந்ததால், பெரிதாக யோசிக்காமல், தோன்றியதை சொல்லிவிட்டான்....
அவன் நினைத்ததைப்போல, அதை பற்றி ஆராயாமல் அப்படியே நம்பிய லட்சுமி, “பாத்து வேலை செய்ய மாட்டியா?... இப்டியா ஏனோ தானோன்னு வேல பாப்ப?” சொல்லிவிட்டு மஞ்சளை அரைத்து, அவன் காயங்களில் பூசிவிட்டாள்....
கீழே விழுந்ததனால் உண்டான காயத்துக்கும், அடியால் உண்டான காயத்துக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு அவள் முட்டாள் இல்லை என்றாலும், அந்த நேரத்து யோசனையாக அவளுக்கு காயத்தை ஆற்றவேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக மனதில் இருந்தது... பசியில்லை, சாப்பிடவும் தோன்றவில்லை... அப்படியே கண்களை மூடி உறங்க முயற்சித்தான், பாழாய்ப்போன உறக்கமும் வரவில்லை... சில நிமிடங்களில் அவன் அருகே லட்சுமியும் படுத்து உறங்க தொடங்கினாள்...
இன்னும் வற்றாத ஜீவநதியை போல அவன் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.... “ஒருவேளை முதலாளி வராமல் இருந்திருந்தால்?” இந்த எண்ணம்தான் அவன் மனதில் இப்போதும் படபடப்பை அதிகமாக்கியது...
“இது குற்றமா?” என்று யோசித்தது கூட இல்லை இதுவரை.... அப்படி இருக்கும்போது, இவ்வளவு வன்மம் உண்டாகும் அளவிற்கு இதை மற்றவர்கள் குற்றமாக பார்ப்பதை அவனால் நம்பவே முடியவில்லை... ஏழு வருடங்களாக அதிகபட்சமாக சிலரின் திட்டுகளும், முகம் சுளிப்புகளும் மட்டுமே எதிர்ப்பாய் கண்ட பழனிச்சாமிக்கு, இன்றுதான் புரிந்தது அதற்கு பின்னால் ஒளிந்திருந்த கோபங்களும் வெறுப்புகளும்.... இவ்வளவு வெறுப்பை உமிழும் அளவிற்கு உண்டான செயலை செய்திருப்பதை எண்ணி தன்னையே நொந்துகொண்டான்....
கட்டாயமாக கண்களை மூடிக்கொண்டு உறங்க முயற்சித்து, ஒருவழியாக உறங்கியும் போனான்....
“யோவ்.... எந்திரிய்யா.... இந்தா டீ குடி.... ரவக்கி கூட எதுவும் சாப்புடல.... இத குடிய்யா” மனைவியின் குரல் கேட்டுதான் பழனிச்சாமி விழித்தான்.... வெகுநேரம் தூங்கிவிட்டான்.... மனைவியின் முகத்தை கண்டபோதுதான் முந்தைய நாள் இரவின் நிகழ்வுகள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.... உடலின் காயங்கள் இப்போதுதான் வலிக்க தொடங்கியது... உதடுகள் வீங்கி இருந்தன, முட்டியில் பட்டிருந்த காயத்தின் விளைவாக காலை எளிதாக மடக்க முடியவில்லை... கைகளை தாங்கி எழுந்து அமர்ந்த பழனிச்சாமி, தேநீரை பருகினான்.... பசியின் மிகுதியால், மடமடவென்று குடித்துவிட்டான்....
எப்போதும் மகனுக்கு ஏதேனும் வாங்கி வரும் அவன், முந்தைய நாள் இரவு எதுவும் வாங்கவில்லை என்பதை “அப்பு”வை பார்த்ததும்தான் உணர்ந்தான்... பழனிச்சாமியின் காயங்களை அதிசயமாக பார்த்தபடி நின்றான் அப்பு.... எதுவும் அவனுக்கு புரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாக நடந்திருப்பதை மட்டும் அவனால் உணரமுடிந்தது....
பால் ஆற்றி மகனுக்கும் கொடுத்துவிட்டு, தன் சமையல் வேலைகளை தொடங்கினாள் லட்சுமி....
மெல்ல எழுந்து, முகம் கழுவிவிட்டு வேலைக்கு கிளம்பிய பழனிச்சாமியை பார்த்த லட்சுமி, “யோவ், உனக்கென்ன பைத்தியமா?... ஒடம்பல்லாம் காயமா இருக்கு, கன்னி போயிருக்கு... நீ அவுன போயி என்ன வேல பாக்க முடியும்?... பேசாம போய் படு, நாளக்கி போய்க்கலாம்” என்றாள்....
“இல்ல லட்சுமி, போவனும் இன்னிக்கு... சரக்கெல்லாம் எங்க அனுப்பணும்ன்னு எனக்குத்தான் தெரியும்.... நான் போவலன்னா, எவனுக்கும் அங்க வேல புரியாது...”
“ஆமா, பெரிய கலெக்டர் உத்தியோகம் பாக்குற, சும்மா எதாச்சும் சொல்லு.... நான் சொன்னா கேக்கவா போற, போயிட்டு பத்திரமா வந்து சேரு” சொல்லிவிட்டு கணவனுக்கு மதிய உணவை பக்குவப்படுத்தி எடுத்து வைத்து கொடுத்தனுப்பினாள்....
கொரியர் அலுவலகத்துக்கு சென்ற பழனிச்சாமியை பலரும் உடல் காயம் பற்றி விசாரிக்க, குளத்தில் தவறி விழுந்ததாக அவர்களிடம் கதை விட்டான்... சிலர் நம்பினார்கள், சிலர் நம்பியதை போல நடித்தார்கள், சிலரோ நம்ப மறுத்தார்கள்.... அதைப்பற்றி பழனிச்சாமியும் கவலைப்படவில்லை....
மதியத்திற்கு பிறகு அலுவலகம் வந்தார் முதலாளி.... பழனிச்சாமியை பார்த்ததும், ஆச்சரியப்பட்ட அவர் தன் அறைக்குள் அவனை அழைத்தார்...
“எதுக்குடா இன்னிக்கு வந்த?... காயமல்லாம் ஆறுனப்புறம் வரலாம்ல....”
“நீங்கதானே இன்னிக்கு பேசிக்கலாம்னு சொன்னிங்க” அப்பாவியாக சொன்னான்....
“அட லூசுப்பயலே.... அது சும்மா பேச்சுக்கு சொன்னேன்... அதுக்காக கெளம்பி வந்தியா?... சரி வீட்டுக்கு போ, காயம் சரியானப்புறம் வா... இந்தா காசு.... கறியும், மீனும் தின்னு ஒடம்ப தேத்து” ஒருசில நோட்டுகளை அவனிடம் நீட்டினார்....
அதை வாங்கிய பழனிச்சாமி, “ஐயா, நேத்து மட்டும் நீங்க வராம இருந்திருந்தா!” கண்கள் கலங்கியது....
“டேய் மொதல்ல அழுவய நிறுத்து... நேத்து நடந்தத நேத்தோட மறந்துடு... ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன், நீ பண்ணது ஒன்னும் பெரிய தப்புல்ல... வெளிநாட்ல நெறைய நடக்குறதுதான்... அத நம்ம சனம் புரிஞ்சுக்க இன்னும் நாளாகும்... இப்ப ஒனக்குன்னு கல்யாணம் ஆகி, பொண்டாட்டி புள்ளைனு ஆகிடுச்சு... நீ இனி தனி ஆளு கெடயாது... நீ பண்ற ஒவ்வொரு விஷயமும், உன் குடும்பத்தையும் பாதிக்கும்... இவ்வளவு நாள் ஒனக்காக வாழ்ந்துட்ட, இனி உம்பொண்டாட்டி புள்ளைக்காக வாழு... நான் ரொம்ப சுலபமா சொல்லிட்டேன், நீ அதை கஷ்டப்பட்டு வாழ்ந்து காமி.... இன்னொரு தடவை நீ அப்டி மாட்டுனா, நானே நெனச்சாலும் உன்ன என்னால காப்பாத்த முடியாது... நீ இப்டி எதாச்சும் பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா, உன் பொண்டாட்டி புள்ளைகள நெனச்சு பாத்தியா?.... எல்லாருக்கும் எல்லாமே கெடச்சிர்றது கெடயாது.... கெடச்சத வச்சுகிட்டு நிம்மதியா வாழ்றதுதான் புத்திசாலித்தனம்.... அற்ப சொகத்துக்காக வாழ்க்கைய இழந்துடாத.... எதையும் போட்டு குழப்பிக்காம, போய் புது மனுஷனா வாழு”
சொல்லி முடித்துவிட்டு, பழனிச்சாமியின் தோள்களை தட்டி ஆசுவாசப்படுத்தினார்.... கைகளை கூப்பி நன்றி தெரிவித்த பழனிச்சாமி, புதுகை நகருக்குள் சென்றான்.... திலகராஜ் டெக்ஸ்டைல்ஸ் கடையில் மனைவிக்கு “அனுஷ்கா புடவை”யும், மகனுக்கு இரண்டு உடைகளும் எடுத்துவிட்டு, மகாராஜா பேக்கரியில் அப்புவுக்கு பிடித்த பலகாரங்கள் வாங்கிக்கொண்டு பேருந்து நிலையம் வரும்போது ஐந்து மணி தான்...
தன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறிவிட்டான், எதேச்சையாக அவன் கண்கள் கழிவறையை நோக்கி நகர, வலுக்கட்டாயமாக தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.... இப்போதுதான் அவனுக்கு கழிவறை வாசனை துர்நாற்றமாக தோன்றியது.... சுகம் கொடுக்கும் பள்ளியறையாக தெரிந்தது, இப்போதுதான் சிறுநீர் கழிக்கும் கழிவறையாக அவனுக்கு புரிந்தது....
பேருந்து கிளம்பி சென்றுகொண்டிருக்கும்போது, நினைவுகள் பலவாறும் சுற்றி வந்தது....
“மொதலாளி சொன்ன மாதிரி இனி கண்டபடி திரியக்கூடாது.... சீலைய லட்சுமிகிட்ட குடுத்து, கட்டிக்கிட்டு கோயிலுக்கு போயிட்டு வரணும், எனக்கு புடிச்ச பீடை இன்னையோட ஒழியனும்... நாளைக்கே வீட்டு கூரைய மாத்தணும், ரொம்ப நாளா லட்சுமி சொல்லுது.... தை பொறந்தோன அப்புவுக்கு ஊரல்லாம் சொல்லி மாரியம்மன் கோயில்ல மொட்டை அடிச்சு காது குத்தனும்... இவ்வளவு நாளா நல்ல புருஷனாவும் இல்ல, அப்பனாவும் இல்ல... இனிதான் மொதல்ல மனுஷனா மாறனும்.... ”
பலவாறும் ஒரு குடும்ப தலைவனாக இன்றுதான் யோசிக்கிறான் பழனிச்சாமி.... இதுநாள் வரை அவன் பேருந்தில் வரும்போது யோசிப்பதல்லாம், “இன்னக்கி லட்சிமிகிட்டேந்து எப்டி தப்பிக்கிறது?... எப்டி அதை தவிர்க்கிறது?” என்றுதான்... அவனுடைய பால் ஈர்ப்பு எண்ணத்தை அவனால் மாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியாது... இன்னும் சொல்லப்போனால் அந்த கேள்விக்கான அர்த்தம் கூட அவனுக்கு புரியாது....
“தீ சுடும்” என்பதை அறிவியல் கொண்டும், தத்துவங்கள் கொண்டும் அவன் அறிந்திருக்கவில்லை.... ஆனால், தீயில் கைவைத்தபோது, அது சுட்டதன் வலியை அவன் உணர்ந்தான்....  அதற்கு பின்னால் உள்ள “நியூரான் , ஹைப்போதலாமஸ்” போன்ற விஷயங்கள் போன்ற விளக்கங்கள்  அவனுக்கு தேவைப்படவில்லை....
காவல் நிலைய சம்பவம் சிறிது பிசகி இருந்தாலும், தன் வாழ்க்கை நிர்மூலம் ஆக்கப்பட்டிருக்கும் என்பதை அவன் உணர்ந்ததன் விளைவுதான் இந்த மனமாற்றம்.... அவன் அழுத அழுகைக்கும், சிந்திய கண்ணீருக்கும், பதைத்த மனதிற்கும் மட்டுமே தெரியும் பழனிச்சாமியின் இந்த மாற்றத்திற்கு காரணம்.... இல்லறத்தில் நல்ல கணவனாக இருக்க முடியுமா? என்பது அவனுக்கு தெரியவில்லை... ஆனால், நல்ல பொறுப்புள்ள குடும்ப தலைவனாக அவனால் மாற முடியும் என்று உணர்ந்த உணர்வின் அடையாளம்தான் இந்த திடீர் ஞானோதயம்.....
அந்தி சாய்ந்த நேரத்தில் ஊரை அடைந்துவிட்டான் பழனிச்சாமி.... ஊர் எல்லை ஐய்யனார் கோவிலில் அந்தி கால பூஜைக்கான மணி அடித்தது,....  கோவில் இருக்கும் திசை பக்கம் திரும்பி, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கடவுளை வணங்கினான்..... வழக்கத்தைவிட வேகமாக நடந்தான்... செம்மண் புழுதியில் இறைந்து கிடந்த சரளைக்கற்கள் அவனுடைய கால்களை பதம் பார்த்தன....  அந்த வலிகூட தெரியாமல் வீட்டை நோக்கி முன்னேறினான்.... வீடு கண்ணுக்கு தெரிந்தபோதே மனதிற்குள் ஒரு புதிய உற்சாகம் அவனுக்குள் மிளிர்ந்தது.... வீட்டை அடைந்தபோது, கதவு சாத்தப்பட்டிருக்க, மகன் வீட்டு வாசலில் அமர்ந்து முறுக்கு தின்றுகொண்டிருந்தான்....
“அப்பு..... என்னடா தனியா உக்காந்திருக்க?....உங்கம்மா எங்க தண்ணி தூக்க போயிடுச்சா?”
அப்பாவை பார்த்ததும் அப்பு சிரித்து, அவன் கொண்டுவந்த பைகளை ஆராய்வதில் குறியாக இருந்தான்....
“இருடா... இருடா.... கிழிச்சுடாத....” சொல்லிவிட்டு பலகாரத்தை எடுத்து கையில் கொடுக்க, முறுக்கை கீழே போட்டுவிட்டு இனிப்பை ஆர்வத்துடன் தின்றான்.... அவன் தின்பதை ரசித்து பார்த்து சிரித்தான் பழனிச்சாமி....
அப்புவை வாசலில் அமரவைத்துவிட்டு  ஆங்காங்கே சென்று லட்சுமியை தேடினான், காணவில்லை... கருவேல முற்கள் நிறைந்து காணப்படும் கொல்லைப்புறத்தில் அவள் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அங்கும் சென்றான்... மாட்டு சாணமும், குப்பைகளும், கருவேல மரங்களும் நிறைந்து காணப்படும் அந்த பகுதியில் ஆள் அரவம் எப்போதுமே இருக்காது.... அங்கும் சுற்றி பார்த்தபோது, மரத்தின் மறைவில் ஒரு பைக் நிற்பதை கண்டான்....
“இங்க யார் வந்து பைக் நிப்பாட்டிருக்கது?” குழப்பத்தில் அருகே சென்று பார்க்க, அது ரமேஷ் உடைய பைக்....
ரமேஷின் பைக் எதற்காக முட்புதர்களுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டிருக்கு?.... அருகில் அவன் செருப்பும் கிடந்தது.... கால் தடத்தின் படியே சற்று, முள் பாதைகளை கடந்து சில அடி தூரம் சென்றபிறகு, மரங்களை தாண்டிய இடத்தில் இடிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் கிடந்த பாழடைந்த காளி கோவிலின் அருகே பேச்சுக்குரல் கேட்டது....  இந்த நேரத்தில் இங்கு பேச்சுக்குரலா?.... அருகில் செல்ல செல்ல, அங்கு பேசிக்கொண்டிருக்கும் குரல்களில் ஒன்று தன் மனைவியின் குரல் என்பதை உணர்ந்து, தன்னை காணமுடியாதபடி மறைவாக நின்றபடி பேச்சுக்குரலை கவனித்தான்.... லட்சுமியுடன் பேசிக்கொண்டிருப்பது வேறு யாருமில்லை, ரமேஷ் தான்....
“உண்மைய சொல்லு லட்சுமி, அவன்கூட நீ சந்தோஷமா வாழற மாதிரி எனக்கு தோனல”
“எத்தன தடவ உனக்கு சொல்றது, நான் நல்லாத்தான் இருக்கேன், நிம்மதியாத்தான் வாழறேன்... இனிமே இப்புடி பேசுனா நான் மனுஷியா இருக்க மாட்டேன்”  லட்சுமியின் குரலில் சற்று வேகம் தெரிந்தது....
“சரி, நீ நிம்மதியா வாழ்றன்னு நான் ஒத்துக்கறேன், இனிமே அதை உன்கிட்ட நான் கேக்கவும் மாட்டேன்.... ஒன்னே ஒன்னு மட்டும் பண்ணு, உன் மகன் மேல சத்தியம் பண்ணி நீ நிம்மதியா வாழ்றேன்னு சொல்லு... மொத்தமா நான் போயிடுறேன்”
“....”
“ஏன் அமைதியா இருக்க?.... சத்தியம் பண்ணவேண்டியதுதானே?.... உன் மொகத்துல கொஞ்சமும் சந்தோசம் இல்ல, எப்பவும் ஏதோ கவலையோடவே இருக்குற....”
“ஆமா.... நான் சந்தோஷமா இல்லைதான்.... அதுக்கு நீ சொல்ற மாதிரி அந்தாள அட்தூட்டல்லாம் வரமுடியாது... இதுதான் என் வாழ்க்க... நிம்மதியா இருந்தாலும், இல்லைனாலும் கடைசி வரைக்கும் இதுதான்”
“ஏன் என்னைய புடிக்கலையா உனக்கு?”
“புடிக்கிறது புடிக்காதது இனி பேச முடியாதுய்யா.... நமக்கு ஜாதகம் பொருத்தம் இல்லைன்னதும் நான் அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும்.... அதை இப்போ பேசி புண்ணியமில்லைய்யா”
“நான் பண்ணின பெரிய தப்பு அதான்... உன்ன மறக்க முடியும்னு நம்பி, அப்ப உன்னவிட்டு விலகிப்போனேன்... இப்பதான் புரியுது, என் உசுரு இருக்குற வரைக்கும் உன்னைய என்னால மறக்கமுடியாதுன்னு”
“லூசு மாதிரி பேசாதய்யா.... எனக்கு இதான் இனி வாழ்க்க.... சந்தோசம் நிம்மதி, எதுவுமே இல்லைனாலும் என் வாழ்க்க கடைசி வரைக்கும் இப்புடித்தான்”
“நீயேன் அப்டி யோசிக்குற?.... உனக்கு பிடிக்காத வாழ்க்கைய நீ ஏன் வாழனும்?... இப்ப நீ வந்தாலும் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன்.... இங்க இருக்க வேணாம், கோயம்பத்தூர் போய்டலாம்... சொந்த வீடு, கடைனு வசதியா இருக்கேன்.... அப்புவ இங்க்லீஷ் பள்ளிக்கூடத்துல சேர்த்துடலாம்.... அதுதான் உனக்கும் நல்லது”
“இல்லைய்யா அது தப்பு....”
“ஏன்?... உன் குடும்பம், ஊர்னு பயப்படுறியா?”
“இல்ல.... அதல்லாம் எனக்கு பெருசு இல்ல.... அந்தாளு பாவம்... ரொம்ப அப்பாவி, நல்ல மனுஷன்.... நான் இல்லாட்டி அது தவிச்சு போய்டும்....”
“இதான் உன்னமாறி பொம்பளைங்க கிட்ட பிரச்சினையே.... அவனுக்காக நீ வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுவியா?... இன்னும் பல வருஷம் நீ இப்படியே நிம்மதி இல்லாம வாழப்போறியா?... “
“நீ என்ன சொன்னாலும், என் முடிவு இதான்... அந்தாளுக்கு துரோகம் பண்ணிட்டு நான் நிம்மதியா வாழமுடியாது.... தெனமும் அந்த குத்த உணர்ச்சியே என்ன கொன்னுடும்.... என்ன மறந்துட்டு நீ கல்யாணம் பண்ணிட்டு வாழு”
“உன்ன மறக்க சொல்ல உனக்கு உரிமை இல்ல.... நீ ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலைனாலும் இன்னொரு பொம்பள என் வாழ்க்கைல இல்ல...”
“அந்தாள விட்டுட்டு என்னால வரமுடியாதுய்யா.... புரிஞ்சுக்க...”
“உன்ன நான் அவசரப்படுத்தல.... ஒன்னும் அவசரம் வேணாம், ஒரு வாரம் யோசி...  அடுத்த வாரம் நான் கோயம்பத்தூர் கெளம்புறதுக்கு முன்னாடி உன் முடிவை சொன்னா போதும்... நல்ல முடிவா சொல்லுவன்னு நம்புறேன்.... வாழ்க்க முழுசும் பொய்யா பழனிச்சாமியோட வாழப்போறியா, இல்ல நிம்மதியா என்னோட வாழப்போறியான்னு நல்லா யோசிச்சு சொல்லு”
பேச்சு முற்றுப்பெற்று, தண்ணீர் குடத்துடன் அங்கிருந்து வீட்டை நோக்கி நடந்தாள் லட்சுமி....
பழனிச்சாமி இதுவரை தன்னையே மறந்து நின்றான்.... மனம் படபடக்க, கைகள் நடுங்கி, உடல் முழுக்க வியர்த்து கொட்டியது....
தான் வந்த தடம் யாருக்கும் அறியாமல் ஊரை தாண்டிய எல்லை கோவிலை அடைந்தான்....
ஆளுயர நின்ற குதிரையும், அருகில் நின்ற ஊர் காவல் தெய்வமும் அவனுக்கு எவ்வித ஆறுதலையும் சொல்ல முன்வரவில்லை..... பூஜை செய்து முடித்ததன் அடையாளமாக சாம்பிராணி புகையின் வாசம் கூட இன்னும் அகலவில்லை....  குதிரையின் காலில் தன் தலையை சாய்த்து, கண்கள் வானத்தை நோக்கி பார்க்க, எதை யோசிப்பது? என்று குழம்பிய மனதுடனும்  பதைபதைத்தான்....
இப்போது கும்மிருட்டு சூழ்ந்துவிட்டது... ஊருக்குள் மட்டுமல்ல, தன் உள்ளத்துக்குள்ளும் தான்....
நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டபோதுதான் நினைவுக்கு வந்தான்.... நிலவொளி சாய்கோணத்தை அடைந்தது, மணி எட்டுக்கு மேல் இருக்கும்.... நடந்தது நிஜம்தானா? என்பதை இன்னும் அவனால் ஏற்கவும், நம்பவும் முடியவில்லை.... ஆனாலும், நம்பித்தான் ஆகவேண்டும்... நடந்த விஷயங்களை அவன் கண்ணால் பார்த்தான், காதால் கேட்டான்.... நம்பித்தான் ஆகவேண்டும்.... அருகில் கிடந்த பையில் அனுஷ்கா சீலை மெல்ல எட்டி பார்த்தது, இனிப்பு பலகாரத்தில் எறும்புகள் மொய்த்தது.... கண்கள் எல்லாவற்றையும் பார்த்தாலும், எதையும் யோசிக்கவோ, செய்யவோ முடியாமல் பழனிச்சாமி செயலிழந்து கிடந்தான்....
மேலும் ஒருமணி நேரம் கழித்து, மெல்ல எழுந்து வீட்டை நோக்கி நடந்தான்.... இது அவனாக நடக்கவில்லை, அணிச்சையாகத்தான் இதுவும் நடக்கிறது.... ஆமைபோல ஊர்ந்து நகர்ந்தான்.... எதிரில் வந்த சில நண்பர்களை கூட பார்க்க மறந்தவனாக, பேச முடியாதவனாக கடந்து வீட்டை அடைந்தான்....
வீட்டு வாசலில் அமர்ந்து பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் லட்சுமி.... பழனிச்சாமியை பார்த்ததும் மெல்லிய சிரிப்பை உதிர்த்து, “என்ன இன்னிக்கு சாமகோடாங்கி பத்து மணிக்கே வந்துருக்கு?” என்றாள்... அதற்கு சிரிக்க கூட முடியாதவனாக, அவளை கடந்து உள்ளே சென்றான்...
உணவை ஊட்டிமுடித்துவிட்டு கைகளை கழுவிவிட்டு உள்ளே வந்தவள், “என்னய்யா ஒரு மாதிரி இருக்க?... உடம்புக்கெதுவும் நோவா?” கைகளை சேலையில் துடைத்துவிட்டு, அவனுடைய நெற்றியிலும், கழுத்திலும் கைவைத்து பார்த்தாள்....
“அதல்லாம் ஒண்ணுமில்ல.... ரொம்ப அசதியா இருக்கு” மனைவியின் கைகளை விலக்கியவன் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்தான்....
“நான்தான் அப்பவே சொன்னேன்ல, வேலக்கி போவாதன்னு.... சரி, இரு சோறு போட்டு எடுத்துட்டு வாரேன்”
“அதல்லாம் வேணாம்... பசி இல்ல.... அந்த தலவானிய எடு, நான் படுக்குறேன்”
அதற்கு மேலும் அவனை பேசி இம்சிக்க விரும்பாத லட்சுமி, தலையணையை எடுத்து கொடுத்துவிட்டு தன் கடைசி கட்ட வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படுத்தாள்.... வாங்கி வந்த புடவை இன்னும் அவளுக்கு கொடுக்கப்படாமல், கூடையில் ஒளிந்திருக்கிறது....
இப்போதுதான் அவனுக்கு புதுவித எண்ணங்கள் தோன்றின.... அவனுக்கும் அவனுடைய மனசாட்சிக்கும் இடையில் ஒரு கருத்து யுத்தம் பலமாக படந்தது....
“எனக்கு லட்சுமி துரோகம் பண்ணிட்டா... என்னை மீறி அவளுக்கு இன்னொரு வாழ்க்கை மேல ஆச வந்திருக்கு...”
“லட்சுமி உனக்கு பண்றது  துரோகம்னா, இத்தன நாள் நீ அவளுக்கு பண்ணதுக்கு பேர் என்ன?... ஆம்புள பண்ணினா அது சாதாரணம், பொம்பள பண்ணா அது துரோகமா?... அவ யோசிக்குறதையே நீ துரோகம்னு சொன்னா, நீ செஞ்சதுக்கு பேர் என்னனு சொல்வ?”
“ஆமா... ஒரு சாதாரணமான அவளோட ஆசைய கூட நிறைவேத்த முடியாத நான், அவளை எப்டி குறை சொல்ல முடியும்.... நாலு வருஷம் எனக்காக அவ சகிச்சுக்கிட்டு வாழ்ந்ததே பெரிய விஷயம்... ஆனாலும், இப்போவரை என்னை அவ ரொம்பவே தாங்குறா... இப்பவும் அவளுக்கு கெடக்கிற வாழ்க்கைய எனக்காக மறுக்குறா”
“ஹ்ம்ம்.... இப்போ என்ன பண்ண போற அவளுக்காக?”
“என்ன பண்றது?”
“ரமேஷோட அவ வாழறதுக்கு அவ ஆசப்படுறா, நீதான் அதுக்கு இப்ப தடையா குறுக்க நிக்குற... உனக்காகத்தான் அவ இவ்வளவு நாள் யோசிக்குறா”
“அது தப்பில்லையா?”
“இன்னும் எத்தன காலம் நீ உன்னையும் ஏமாத்திட்டு, அவளையும் ஏமாத்த போற?... இதனால உனக்கோ, அவளுக்கோ, ரமேஷுக்கோ நிம்மதி இருக்குமா?... ரமேஷ் நல்ல பையன்னு உனக்கே தெரியும்... உனக்கு முன்னாடியே அவளுக்கு தெரிஞ்சவன்... லட்சுமியையும், உன் மகனையும் நல்லபடியா நிச்சயம் பாத்துக்குவான்.... உன்னால கொடுக்க முடியாத சந்தோஷத்த அவன் கொடுக்க முடியும், ஆனால் அந்த வாய்ப்பும்  நீ இருக்குற வரைக்கும் அவளுக்கு கிடைக்காது ”
“புரியுது.... அதுக்கு நான் என்ன பண்ணனும்?”
“நீ அவங்கள விட்டுட்டு போகணும்.... இனி நீ வரவே முடியாத இடத்துக்கு போனாத்தான் லட்சுமியும் நிம்மதியா அவனோட வாழமுடியும், ஊரும் அவளை வாழவிடும்.... ஒரு வாரத்துல உன்னைவிட்டு ரமேஷோட அவ ஓடிப்போன பிறகு, உன் வாழ்க்கையே சூனியமா போயிடும்... அவளுக்கும் ஓடிப்போனதால கெட்ட பேரு, உனக்கும் ஊருக்குள்ள அசிங்கம்.... உன்னோட வாழ்றதா இருந்தாலும், கடைசி வரைக்கும் அவ நிம்மதி இல்லாமதான் வாழனும்.... ஒருவேளை நீ இறந்தபின்னாடி அவ ரமேஷோட போனான்னா, பழனிச்சாமி பொண்டாட்டிக்கு மறுவாழ்க்கை கெடச்சிருக்கு’னு பெருமையா சொல்வாங்க....  உனக்காக அவளோட வாழ்க்கையை சகிச்சு வாழ முன்வந்த அவளுக்காக உன்னால கொடுக்க முடிஞ்சது அது மட்டும்தான்... இனி முடிவெடுக்க வேண்டியது நீதான்”
மனப்போராட்டங்கள் முடிந்து திடுக்கிட்டு விழித்தான்.... அருகில் மனைவியும், பிள்ளையும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தனர்.... அருகில் இருந்த தன் கூடைக்குள் இருந்த அனுஷ்கா புடவையை கையில் எடுத்தான், வீட்டின் கொல்லைப்புறம் சென்றான்....
தன் தந்தை நட்டுவைத்த வேப்பமரம், காற்றில் மெல்ல அசைந்துகொண்டிருந்தது.... சிறுவயதில் ஊஞ்சல் கட்டி ஆடியதும், அம்மா துரத்தும்போது ஏறி ஒளிந்ததும் அவன் நினைவில் நிழலாடின... மரத்தின் அருகில் சென்று ஒருமுறை அதை தடவி பார்த்தான்.... சட்டென்று புடவையின் ஒரு முனையை அந்த மரத்தின் கிளையில் மாட்டி, சுருக்கு வைத்தான்......

மறுநாள் மாலை.....

“மாலை முரசு” நாளிதழை படித்துக்கொண்டிருந்த “உதயன் கொரியர்ஸ்” உதயகுமாரிடம் டீயை கொண்டுவந்தான் வேலைக்கார சிறுவன்....
தேநீர் கொண்டுவந்த சிறுவனிடம், “பழனிச்சாமி வந்ததும் அவனை கீரனூருக்கு போயி, லோடு ஏத்திட்டு வர சொல்லிடு”  என்றார் உதயகுமார்...
“சரிங்கய்யா” பேச்சில் கவனமாக இருந்த சிறுவனின் கையில் இருந்த தேநீர், மேசையில் இருந்த ஏதோ ஒரு கடிதத்தின் மேல் சிந்தியது...
பதறிய உதயகுமார், “டேய் முட்டாப்பயலே.... பாத்து குடுக்க மாட்டியா?... அரசாங்க டெண்டர் லெட்டர் அது, பத்து லட்சம் அதுல இருக்கு....” சொல்லிவிட்டு படித்துக்கொண்டிருந்த நாளிதழில் ஒரு பக்கத்தை கிழித்து, அந்த கடிதத்தை துடைத்துவிட்டு , அந்த நாளிதழ் கிழிசலை குப்பை கூடையில் போட்டார்....
தேநீர் கரை படிந்த அந்த கடிதத்தை கையில் வைத்து மேலும் துடைத்தவாறே, அறையை விட்டு வெளியேறினார் உதயகுமார்....
கிழித்துபோடப்பட்டு குப்பை கூடையில் கிடந்த  அந்த தாள் காற்றில் தடதடத்தது....  மரணத்தின் பிடியில் இருப்பவன், ஏதோ சொல்ல துடிப்பதைப்போல அந்த பேப்பர் ஓசை எழுப்பி படபடத்தது....  அந்த பேப்பர் எதுவும் சொல்ல வருகிறதா? என்று கூட கவனிக்க முடியாத அளவுக்கு பரபரப்பாக இயங்கியது அலுவலகம்.....
முதலாளி அந்த அறையை விட்டு வெளியே சென்றதும், மூச்சு நின்ற சடலம் போல, நிசப்தமாக போனது அந்த பேப்பரும்.....
“புதுக்கோட்டை மாவட்டம் சேரன்புதூரில் கூலித்தொழிலாளி கடன் சுமையால் தற்கொலை” என்ற செய்தியை தாங்கிய அந்த பேப்பரின் மேல் இப்போது விழுந்தது முந்தைய நாள் சாமி புகைப்படங்களுக்கு வைக்கப்பட்ட காய்ந்த பூ..... இறந்த பழனிச்சாமிக்கு அந்த அலுவலகம் இறுதி மரியாதை செலுத்திவிட்டது..... (முற்றும்).....

இது ஏதோ ஒரு பழனிச்சாமியின் கதை இல்லை.... நாம் நித்தமும் கழிவறைகள், பொது இடங்கள், திரையரங்கம் என்று பார்த்து முகம் சுளித்த பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒற்றை பிரதிநிதி தான் இந்த பழனிச்சாமி..... பிளானட் ரோமியோவில் டேட்டிங் செய்து, பேஸ்புக்கில் பிங் செய்யும் வித்தை எதுவும் தெரிந்திடாத ஒரு ஏழை கடைநிலை ஊழியன்....
அவர்கள் செய்வதை சரி என்று நான் சொல்லவில்லை, அந்த தவறுக்கு பின்னால் ஒரு நியாயமும் இருக்கிறது என்றுதான் சொல்கிறேன்.... தவறுதான் செய்கிறார்கள், அது தவறென்றே தெரியாமல் செய்கிறார்கள்.... இந்த கதை மூலம் நான் பழனிச்சாமியின் மரணத்தை நியாயப்படுத்தவில்லை... பழனிச்சாமியும், அவன் மனைவியும் நிம்மதியாக வாழ்வதாக கதையை என்னால் சுபமாக முடித்திருக்க முடியும்..... கதையின் வெற்றிக்காக நான் பொய் கூற விரும்பவில்லை..... பழனிச்சாமிபோல பலரும் இருக்கிறார்கள், அவர்கள் அடிப்படை தெளிவு கூட இல்லாமல் ஒருபால் ஈர்ப்பில் நாட்டம் கொண்டுள்ளார்கள் என்பதைத்தான் சொல்கிறேன்.... அவர்கள் மரணத்தின் பிடியில் ஊசலாடுகிறார்கள் என்றுதான் சொல்கிறேன்.... இங்கே இறந்துள்ள பழனிச்சாமி, இப்படி பாலின ஈர்ப்பு வெறுப்பால் இறக்கும் கடைசி தற்கொலையாக இருக்கும் என்று நம்புவோம்..... அதற்காக என்ன செய்ய போகிறோம்?  இப்படிப்பட்ட பழனிச்சாமி’களுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்?????....
இப்படி பாலின காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்ட அத்தனை நபர்களுக்கும் இந்த கதை “சமர்ப்பணம்”....
கதையின் முடிவைப்போல இனி யாருடைய வாழ்க்கையும் முடியக்கூடாது என்பதுதான் என் எண்ணமும், கோரிக்கையும்....

7 comments:

 1. //இப்ப ஒனக்குன்னு கல்யாணம் ஆகி, பொண்டாட்டி புள்ளைனு ஆகிடுச்சு... நீ இனி தனி ஆளு கெடயாது... நீ பண்ற ஒவ்வொரு விஷயமும், உன் குடும்பத்தையும் பாதிக்கும்... இவ்வளவு நாள் ஒனக்காக வாழ்ந்துட்ட, இனி உம்பொண்டாட்டி புள்ளைக்காக வாழு... நான் ரொம்ப சுலபமா சொல்லிட்டேன், நீ அதை கஷ்டப்பட்டு வாழ்ந்து காமி.... இன்னொரு தடவை நீ அப்டி மாட்டுனா, நானே நெனச்சாலும் உன்ன என்னால காப்பாத்த முடியாது... நீ இப்டி எதாச்சும் பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டா, உன் பொண்டாட்டி புள்ளைகள நெனச்சு பாத்தியா?.... எல்லாருக்கும் எல்லாமே கெடச்சிர்றது கெடயாது.... கெடச்சத வச்சுகிட்டு நிம்மதியா வாழ்றதுதான் புத்திசாலித்தனம்.... அற்ப சொகத்துக்காக வாழ்க்கைய இழந்துடாத.... எதையும் போட்டு குழப்பிக்காம, போய் புது மனுஷனா வாழு///

  ReplyDelete
 2. very touching story.. You always express the different dimensions of a gay.. i really feel sorry for palanisamy..

  ReplyDelete
 3. nicenu solla mattaen.but edu than unmai..enakula eruntha matrathuku entha valaithalam than theliva kuduthuruku...thanks...nicenu soldrada veda yosika vaendiya visayam..

  ReplyDelete
 4. emaku enn solurathune theriyala.............

  kadicila kaneer than............

  onu mattum theilva solla mudiyum

  palankisami eduthathu thapana mudivu............

  antha mudiva ini yarum edukakoodathu naaan kadavula vendikuren............

  ReplyDelete
 5. Vijay, as usual, very excellent narrating. I Belive Jayakanthan is living in u :)
  But one thing i want to express with you. The story shows that Palanisamy is not able to have sex with his wife. u have shown like its impossible for him.
  Our guyz who reading this may misunderstood like, they will be also became like Palanisamy after marriage.
  The truth is once you are able to have sex with the girl , u can do it till ur life time. So the impact of the story may create the fear on marriage.

  ReplyDelete
 6. Hai anna, remba emotional and real story, oru daily salary person eppadi react pannuvannu nalla explain panni irukkenga, ana athukkaka sagila va aga ogo nu pukalnthu thallunathu too much na, ok ok adikka varathenga free a vidunga...

  ReplyDelete
 7. Romba kodumaiyana vazhkai ithu... Oru vagaila Pazhanisamy mudivu avarukkum, Lakshmikkum oru vidivuthaan... Innum ippadi yethanai Pazhanisamigalo... yethanai lakshmigaloo...

  ReplyDelete