Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Wednesday, 9 January 2013

"கதிர் ஒளியாய் அவன், பனித்துளியாய் நான்"- சிறுகதை

தஞ்சாவூரிலிருந்து அந்த சென்னைக்கு செல்லும் தனியார் பேருந்து தஞ்சை நகரை தாண்டி திருச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தது.... எனக்கு அருகில் வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் கையில் சாரதாஸ் ரெடிமேடஸ் மஞ்சள் பையுடன், பார்த்தவுடன் ஏனோ என் அப்பாவை ஞாபகப்படுத்தினார் அந்த நபர்.... என்னை பார்த்து சிரித்தவர், “தம்பி, மெட்ராஸுக்கு தானே போற?” என்றார்....
“ஆமாய்யா”
“மெட்ராஸ்ல கிண்டி’னு எடம் இருக்குமாமே, பஸ் அங்க போவையில சொல்லுப்பா”
“சரி சொல்றேன்”
காலையில் இறங்கப்போகும் இடத்துக்கு, இப்போதே திட்டமிட தொடங்கிவிட்டார்.... அவரை பார்க்க பார்க்க அப்பாவின் நினைவே வந்தது.... இன்றைக்கு காலை வரை அவர் அப்பாவாகத்தான் இருந்தார்.... இருபத்தி மூன்று வயது வரை, என்னை அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசாதவர்.... திருமணமாகி ஏழு வருடங்களுக்கு பிறகு பிறந்தவன் என்பதால், என் எதிர்பார்ப்புகளை அறிந்து அதிகமாகவே செய்வார்..... இன்றைக்கு காலையில் நான் “விக்ரமை காதலிக்கிறேன், அவனோடதான் வாழப்போறேன்” என்று சொல்லும்வரை அப்படித்தான் இருந்தார்....
“நீ பொறந்ததுக்கு பொறக்காமலோ இருந்திருக்கலாம்.... எங்கயாவது தொலஞ்சு போடா.... நான் சாயந்திரம் வர்றப்போ நீ இங்க இருந்தின்னா, நான் நாண்டுகிட்டு செத்துப்போவேன்” காலை முதல் எவ்வளவோ என் நிலைமையை கூறியும், அப்பாவிடமிருந்து வந்த கடைசி வார்த்தைகள் இவைதான்.... கோபத்தின் வேகத்தில் என்னை அறைந்ததில் என் உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது...... அப்பாவாக இருந்தாலும் கூட, அவருடைய எதிர்பார்ப்புக்கு முரணாக இருந்தால், என்னை தூக்கி எறிந்துவிடுவதுதான் உலகம் போல...
எனக்கும் அப்பாவுக்குமான உரையாடல் தொடங்கியது முதல் அழுவதைத்தவிர ஒன்றும் செய்யவில்லை அம்மா.... அம்மா என்னை சமாதானப்படுத்தும் என்ற என் எண்ணம், கடைசிவரை கனவாகவே போனது.... என் உடைகளை எடுத்துவைத்துக்கொண்டு கிளம்பும்போது கூட, ஒரு வார்த்தைகூட பேசவில்லை.... “எம்.பி.பி.எஸ் படிச்சு முடிச்சிட்டான்... அவன் சொந்த கால்ல நிக்கிறான், எங்க போனாலும் பொழச்சுக்குவான்” என்ற நம்பிக்கை அம்மாவின் மனதிற்குள் இருந்ததால் மட்டுமே, என்னை தடுக்கவே இல்லை....
என்னை யாரோ அழைப்பது போல உணர்ந்தேன்.... பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த பெரியவர்தான் கூப்பிடுகிறார்..... என்னை அறியாமல் வழிந்த கண்ணீரை  அவர் அறியாமல் துடைத்துக்கொண்டு அவரை பார்த்து, “என்னய்யா?” என்றேன்...
“உன் போன் ரொம்ப நேரமா அடிச்சுகிட்டு இருக்குப்பா.... தூங்கிட்டியா?”
அப்போதுதான் என் அலைபேசியை கவனித்தேன், அது அலறிக்கொண்டிருந்தது..... அதன் திரையில் “விக்ரம்” என்ற பெயர் பளிச்சிட்டது.... அதனை பார்த்ததும் என்னை அறியாமல், என் முகம் மலர்ந்தது.....
“ஹலோ வருண்”
“சொல்லு விக்கி”
“தூங்கிட்டியா?.... பஸ் கெளம்பிடுச்சா?”
“தூங்கலடா.... வந்திட்டு இருக்கேன்.....”
“சரிடா..... அழுதியா?”
“......”
“அழாத புஜ்ஜி.... டீ நகர்ல இறங்கிடு.... எதையும் போட்டு குழப்பிக்காம வந்து சேரு”
“சரிடா..... குட் நைட்”
“குட் நைட்... லவ் யூ டியர்”
பேசி முடித்ததும் என்னை அறியாமல் மனதிற்குள் ஒரு தைரியம் வந்தது.... எனக்குள் சிரித்துக்கொண்டேன்..... “விக்ரம்”.... எப்போ அவனை முதல்ல பார்த்தேன்?.... பொதுவா காதல் எப்பவும் பார்த்து, பேசி, பழகி அப்புறம் வரும்.... எங்க அறிமுகமே ஒரு “செக்ஸ் டேட்” மூலம் தான் தொடங்குச்சு.... வழக்கமா பேஸ்புக்’ல சந்திக்கிற செக்ஸ் மேட்’கள் போலத்தான் அவனும் அறிமுகமானான்.... வழக்கமான, “hi, asl, likes, do u hav place?” இந்த உரையாடல் தான் எங்கள் முதல் பேச்சு.... முதல் சந்திப்பின்போது எல்லாம் முடிந்தபிறகு அவன் ஒரு “பாய், கீப் இன் டச், தாங்க்ஸ்” என்ற வழக்கமான விஷயங்கள் கூட சொல்லவில்லை.... அதில் எனக்கு கொஞ்சம் எரிச்சல்தான் அவன் மீது.... ஆனாலும், அடுத்தடுத்த நாட்கள் அவனோடு பேசனும், சந்திக்கணும் என்ற எண்ணங்கள் எனக்குள் எழுந்தது.... ஆனாலும், “அவன் திமிர் பிடிச்சவன்” என்று எனக்குள் இருந்த அவனை பற்றிய எண்ணத்தால் அவனை தொடர்புகொள்ள நான் முயற்சிக்கவில்லை....
ஒரு வாரம் கழித்து, அவனிடமிருந்து ஒரு நல விசாரிப்பு குறுந்தகவல் வந்தது.... சைக்கிள் கேப் கிடைக்க காத்திருந்த எனக்கு, ஒரு நான்கு வழி சாலையே கிடைத்தது போல உணர்ந்தேன்.... அதற்கு பின் நானே அவனுடனான பேச்சுக்களை வளர்த்தேன்.... நிறைய பேசினோம், சுற்றினோம், பழகினோம்.... செக்ஸ் தாண்டிய பல விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தோம்.... செக்ஸ் மட்டுமே நோக்கமாக இருக்கும் இந்த கே உலகில், எனக்கு அவனும், அவனுக்கு நானும் ஆறுதலாக பேசினோம்..... ஆறு மாத பழக்கத்தில், ஒரு மாதத்திற்கு முன்புதான் என் காதலை அவனிடம் சொன்னேன்....  ஆறு மாதம் பழகிய அவனுக்காக, இருபத்தி மூன்று வருட உறவுகளை தூக்கி எரிந்தது எனக்கே ஆச்சரியமான ஒன்றுதான்.... இனி எனக்கு அவன்தான் சொந்தம், அவனுக்கு நான்தான்... இனி எனக்காக நான் வாழப்போறேன்.....
அப்படியே அவனுடன் பழகிய நாட்களை நினைத்தபடியே உறங்கிவிட்டேன்.....
விழித்தபோது சென்னையின் புறவழியை அடைந்துவிட்டது பேருந்து..... இன்னும் முழுதாக விடியவில்லை.... ஒரு வாரத்திற்கு முன்புதான் விக்ரமை பார்த்தேன் என்றாலும், இப்போது அவனை பார்க்கும் ஆவல் எனக்குள் அதிகமானது..... இப்போது அவன் முழுமையாக எனக்கான “விக்ரம்” என்ற உரிமையிலாக கூட இருக்கலாம்..... கிண்டியை பேருந்து அடைந்ததும், பக்கத்திலிருந்த பெரியவரை எழுப்பினேன், “ஐயா, கிண்டி வந்தாச்சு” என்றேன்.... நான் சொன்ன அதே நேரம் அந்த பேருந்தின் நடத்துனர், “கிண்டி, கத்திப்பாரா இருக்கிங்களா?” என்றார்.... தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக எழுந்த அவர் என்னை பார்த்து, “போயிட்டு வரேன்.... நல்லா இருப்பா” என்றார்.... என் அப்பாவே என்னை ஆசிர்வதித்தது போல எனக்குள் ஒரு சந்தோசம் அதனால்.... சென்னையின் என்னிடம் வந்து சேர்ந்த முதல் வார்த்தையே, என் வாழ்க்கைக்கான வெளிச்சமாக எனக்கு தெரிந்தது....  டீ நகர் அடைந்துவிட்டது பேருந்து.....
பேருந்திலிருந்து இறங்கியபோது எனக்காக பைக்கில் காத்துக்கொண்டிருந்தான் விக்கி.... அந்த விடியற்காலையில் கூட அவன் ஸ்டைல் குறையாமல் கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டும், காதில் ப்ளூ டூத் ஹெட்செட் மாட்டி இருந்ததும் எனக்குள் சிரிப்பை வரவழைத்தது... ஆனாலும், எதுவும் பேசாமல் அவனுடன் பைக்கில் ஏறி வீட்டை அடைந்தோம்.... ஒரு மாதமாக நான் தங்கி இருக்கும் வீடு, இன்று என்னுடைய வீடாக தெரிந்தது எனக்கு.... உள்ளே செல்லும்வரை எதுவும் அவன் பேசவில்லை.... உடைகளை மாற்றிவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட ஹாலில் இருக்கையில் அமர்ந்தேன்.... என் அருகில் வந்து அமர்ந்தான்.... எதுவும் பேசாமல், என் கன்னங்களை வருடினான்.... அழுததில் முகம் வீங்கி, கண்ணீர் வடிந்த அடையாளத்தை பார்த்த அவன், “ரொம்ப அழுதியா?..... கஷ்டமா இருக்கா?” என்றான்.....
“இல்லடா.... இனி அழமாட்டேன்”
கன்னங்களை தடவிய அவன் கைகள் இப்போது என் உதட்டின் காயத்தின் மீது பட, வலியால் “ஆஹ்....” என்றேன்.....
“அடிச்சாரா அப்பா?...”
“ஹ்ம்ம்”
“நேத்து கேட்டப்போ ஏண்டா சொல்லல?.... ரொம்ப வலிக்குதா?” சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கியது.... அவன் கண்கள் கலங்கியதும் நான் துடித்துப்போனேன்...
“அதல்லாம் இல்லடா.... இனிமே அதைப்பத்தி பேசவேணாம்.... இனி நம்ம வாழ்க்கை பத்தி பேசலாம்”
“சரிடா.... நீ ரெஸ்ட் எடு.... அப்புறம் பேசிக்கலாம்” என்னை அறைக்குள் அழைத்து சென்று தலையணை வைத்து, படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவன் வெளியே சென்றுவிட்டான்....
அவன் அக்கறை என்னை நெகிழ வைத்தது..... அப்பா, அம்மா, உறவுகள் எல்லாம் பிரிந்த வருத்தத்தை அவன் ஒருவனுடைய இருப்பு காணாமல் போகவைக்கிறது....
நான் என் வீட்டில் சொன்னதும் உண்டான கலவரம் அவனுக்கு அதிசயமாக தோன்றுகிறது.... காரணம், அவன் எங்கள் விஷயத்தை அவனுடைய குடும்பத்தினரிடம் சொன்னபோது ஒரு சிறிய சலனம் கூட உண்டாகவில்லை.... “சினிமாக்கு போறேன்” என்று சொல்வதைப்போல, அவன் “நான் வருண் கூட வாழப்போறேன்” என்று சொல்லிவிட்டு அவன் வெளியேறிவிட்டான்..... தக்காளி நறுக்கிக்கொண்டிருந்த அம்மா ஒரு லேசான அதிர்ச்சிக்கு மேல் ஒன்றும் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை..... “இந்தியன் எக்ஸ்பிரஸ்” பேப்பரின் வணிக செய்திகளை வரி பிசகாமல் படித்த அப்பாவும், இதை பெரிய அதிர்ச்சியோடு அணுகவில்லை... அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்..... வடநாட்டிலிருந்து வந்த குடும்பம், பிறப்பு வளர்ப்பு எல்லாமே “சென்னை”தான்... பிரபல கார்ப்பரேட் கம்பெனியில் வேலை, கைநிறைய சம்பளம்.... இந்த விஷயங்கள் கொடுத்த தைரியம் அவனை எதையும் பேசவைக்கும்....
தஞ்சை கிராமத்திலும் இதே அணுகுமுறையை அவன் என் குடும்பத்தினரிடம் எதிர்பார்த்தது விக்கியின் முட்டாள்த்தனம் தான்... என்றைக்காவது சொல்லவேண்டிய விஷயம், இன்றைக்கே சொல்லிடலாம்னு நேற்று நான் சொன்னதன் விளைவு இவ்வளவும்....
தூக்கம் வரவில்லை, சில நேரத்து யோசிப்புகளுக்கு பின்பு எழுந்து குளித்து உடைகளை மாற்றினேன்.... எனக்கும் அவனுக்கும் விக்கியே சாப்பாடு வாங்கி வந்துவிட்டான்....
“சாப்டுட்டு ஒரு இடத்துக்கு போகணும், கிளம்புடா” என்றான்....
“எங்க?”
“சஸ்பென்ஸ்.... போன பிறகு நீயே தெரிஞ்சுக்கோ” கண்ணடித்து சிரித்தான்.... அவன் சிரிப்பை நான் ரசித்தேன்.... சாப்பிட்டு முடித்துவிட்டு அவன் பைக்கில் இருவரும் கிளம்பினோம்....
பைக் வடபழனி முருகன் கோவிலில் நின்றது.... எனக்கு ஆச்சரியம்!.... கடவுள் நம்பிக்கையே இல்லாத அவன், கோவிலுக்கு என்னை அழைத்து வருவது ஆச்சரியமாகத்தானே இருக்கும் எனக்கு.... அதிசயமாக அவனை அழைத்த நான், “என்னடா கோவிலுக்கெல்லாம் வந்திருக்க? அதிசயமா இருக்கே?” என்றேன்.... அர்ச்சனை வாங்கலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவன் “உள்ள வா சொல்றேன்” என் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்.... அங்கு அவன் நண்பர்கள் இருவர் நின்றனர்.... அவர்களிடம் ஏதோ பேசிய அவன், சந்நிதிக்கு முன்பு என்னை அழைத்தான்.... என் கையை பிடித்த அவன் இன்னொரு கையால் ஒரு மோதிரத்தை மாட்டிவிட்டான்.... எனக்கு ஒன்றும் புரியவில்லை, அதிசயத்தில் அப்படியே நின்றேன்.... இன்னொரு மோதிரத்தை என் கையில் கொடுத்து, அவன் விரலில் போட்டுவிட சொன்னான்.... அருகில் நின்ற நண்பர்கள் எங்கள் இருவருக்கும் கை கொடுத்தனர்.... எங்கள் நால்வருக்குமிடையில் என்ன நடக்கிறது? என்று புரியாமல் கோவிலுக்கு வந்த சிலர் வேடிக்கை பார்த்தனர்.... அவர்களுக்கு மட்டுமா புரியவில்லை?, எனக்கும்தான் புரியவில்லை....
“என்னடா நடக்குது?.... என்ன மோதிரம் இது?” அதிர்ச்சி விலகாமல் அவனை பார்த்து கேட்டேன்....
“புரியலையா?... நமக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு.... அதுக்கு அடையாளம்தான் இந்த மோதிரம்.... உனக்கு பிடிச்ச கடவுள் முருகன் சாட்சியா நம்ம கல்யாணம் சுபமா முடிஞ்சிடுச்சு...” அவன் சாதாரணமாக சொன்ன இந்த வார்த்தைகள் எனக்குள் கலவையான உணர்வுகளை உண்டாக்கியது..... எதுவும் பேசமுடியவில்லை.... வார்த்தைகள் வரவில்லை.... எவ்வளவு பெரிய விஷயம், இவ்வளவு எளிதா முடிஞ்சது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.... ஆனாலும், சொல்ல முடியாத மகிழ்ச்சியை, இன்பத்தை, மனநிறைவை அந்த நிகழ்வு எனக்குள் உண்டாக்கியது...
என்னை பார்த்த அவன், “என்னடா ஆச்சு?.... ரொம்ப எமோஷனல் ஆகாத.... இவங்களுக்கு ட்ரீட் வேணுமாம், கொடுத்திட்டு போகலாம் வா” சொல்லிவிட்டு என் கைகளை பிடித்து அழைத்தான்.... எல்லாமே அவனை பொருத்தவரை சகஜமான விஷயங்கள்.... மோதிரத்தை பார்த்தபடியே, திகைத்தபடி நின்றேன்..... கோவில் மணி ஓசை கேட்டபோதுதான் நான் சுயநினைவுக்கு வந்தேன்.... முருகன் இருக்கும் திசையை பார்த்து கைகூப்பி நன்றி சொன்னேன் அவருக்கு..... விக்கியுடன் பைக்கில் சென்று, அவன் நண்பர் இருவருக்கும் ட்ரீட் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றோம்.... திருமணம், விருந்து என்று எல்லா சடங்குகளும் இவ்வளவு எளிமையாக முடிந்ததை எண்ணி வியந்தேன்.... வீட்டிற்கு செல்லும்போது மாலை நேரம் ஆகிவிட்டது.... இன்னும் என்னால் நடந்ததை, நடப்பதை நம்பமுடியவில்லை.... அன்று மாலை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... பேசும் நிலையில் நான் இல்லாததால், அவன் என்னை தொந்தரவு செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்... அன்று இரவு எனக்கு ஒருவித குழப்பத்தை உண்டாக்கியது....
“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதலிரவு” என்ற கவிஞரின் வரிகள் என்னை குழப்பியது.... இது எங்கள் இருவருக்குமிடையில் நடக்கும் முதல் நிகழ்வு கிடையாது, என்றாலும் இன்று இரவுக்கு ஒரு சிறப்பிருக்கிறது.....
இன்னும் நான் முழுமையாக நேற்றைய அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.... அது அவனுக்கும் தெரியும்... அதனால் என்னை தொந்தரவு செய்யவேண்டாமென்று நினைத்த அவன், படுக்கையில் படுத்தவாறு அவனுடைய லேப்டாப்பை நோன்டிக்கொண்டிருந்தான்.... எனக்கு அவ்வளவாக அன்றைய இரவு உறவில் விருப்பம் இல்லாவிட்டாலும், அவனுக்காக அதற்கு தயாராக இருந்தேன்.... அவன் அருகில் சென்று படுத்தேன், என்னை பார்த்து சிரித்த அவன், “லேட் ஆச்சு, தூங்கு புஜ்ஜி.... நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகணும்ல” என்றான்...
மெல்ல நகர்ந்து அவன் தோளில் சாய்ந்து, அவன் கையை என் கையேடு இணைத்து முத்தம் கொடுத்தேன்.... அவன் நெளிந்தான்.... தோளில் சாய்ந்திருந்த நான் மெல்ல முகத்தை நிமிர்த்தி அவன் காதில் முத்தம் கொடுத்தேன்.... அதற்கு மேல் அவனால் அதை ரசிக்காதது போல நடிக்க முடியாமல், என் முகத்தோடு முகம் பதித்து முத்தத்தை மொத்தமாக கொடுத்தான்.... என் உதட்டின் காயத்தின் அளவை அறிந்த அவன் உதடுகள் கூட, ஒத்தடம் கொடுப்பது போலத்தான் முத்தங்களை கொடுத்தது....
விளக்கை அணைக்க மறந்தோம், லேப்டாப்பை அணைக்க மறந்தோம், அறையின் கதவை கூட சாத்திட மறந்தோம்.... அவன் அணைப்பில் நான் இருந்தபோது, இந்த அணைப்புகள் எனக்கு தோன்றவே இல்லை....
விடிந்தது.... ஏன்தான் விடியல் வருகிறதோ? என்ற கோபம்தான் சூரியன் மீது வந்தது.... எழுந்து குளித்துவிட்டு இருவரும் அவரவர் பணிக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தோம்.... கிளம்பும் நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க, கதவை திறந்தேன்.... கையில் குறிப்பேட்டுடன், தலையில் தொப்பியுடன் நின்றார் ஒருவர்....
“யார் வேணும்?” என்றேன்...
“மாநகராட்சி’லேந்து வந்திருக்கேன்.... சென்சஸ் எடுக்கணும்.... டீட்டைல்ஸ் சொல்லுங்க... எத்தனை பேர் தங்கிருக்கிங்க இங்க?”
“ரெண்டு பேர்” நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது விக்கியும் அருகில் வந்து நின்றான்....
“பேச்சிலர்சா? பேமிலியா?” குறிப்பேட்டில் குறித்துக்கொண்டே கேட்டார்....
இடைமறித்த விக்கி, “நேத்து வரைக்கும் பேச்சிலர்ஸ், இன்னைக்கு பேமிலி” என்றான் சிரித்தபடியே....
“ஓ அப்படியா?.... உங்கள்ல யாருக்கு கல்யாணம் ஆகிடுச்சு?”
“எங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆச்சு” என்ற விக்கியின் கைகளை கிள்ளி, அவனை உள்ளே தள்ளினேன்....
“புரியுற மாதிரி சொல்லுங்க சார்” தலையை சொறிந்தபடி கேட்டார் அந்த நபர்.....
“புரியலையா?... எங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆச்சு” சொல்லி முடித்துவிட்டு, என் கன்னத்தில் முத்தம் கொடுத்ததை அந்த நபர் பார்த்துவிட்டார்.... எனக்கோ குழப்பமான நிலைமை... இதை பார்த்த அந்த நபர், அதிர்ச்சியில் வாயை பிளந்தபடியே சென்றார்... அநேகமாக இனி இவர் இயல்பு நிலைக்கு வர சில பல நாட்கள் ஆகலாம் என்று எனக்கு தோன்றியது.... கதவை சாத்திவிட்டு உள்ளே சென்று விக்கியை தேடினேன்.... என்னை பார்த்த சிரித்தவன், “என்னடா பண்ணார் அந்த ஆளு?” என்றான்....
அவன் கன்னத்தை கிள்ளிய நான், “டேய், அந்த ஆளு பேய் அறைஞ்ச மாதிரி போறார்.... சும்மா இருடா... வீட்டு ஓனருக்கு தெரிஞ்சா, காலி பண்ண சொல்லிடுவான்” என்றேன்....
“வீட்டு ஓனருக்கு தெரிஞ்சா அவரையே காலி பண்ணிடலாம் விடு” என்று சொல்லிவிட்டு எனக்கு முத்தம் கொடுத்துவிட்டு அவன் பேகை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பிவிட்டான்.....
சிரித்துக்கொண்டே நானும் மருத்துவமனையை நோக்கி விரைந்தேன்....
ஒருவார விடுப்புக்கு பின்பு இன்றுதான் மீண்டும் மருத்துவமனைக்கு செல்கிறேன்... உள்ளே நுழையும்போதே என் நண்பன் பிரகாஷ் கழுத்தில் மாட்டிய ஸ்டெத் உடன், “என்னடா தஞ்சாவூர் எப்டி இருக்கு?” என்றான்....
“ஹ்ம்ம்... அதுக்கென்ன, வழக்கம்போல சூப்பரா இருக்கு.... எப்டி போயிட்டு இருக்கு ஹாஸ்பிட்டல்?”
“அதுக்கென்னடா..... டெங்கு சீசன் முடிஞ்சு, இப்போ டைபாய்ட் சீசன் வந்தாச்சு.... வழக்கம்போல ஹவுஸ் புள் போர்டு மாட்டாததுதான் குறை” சிரித்தான், நானும் சிரித்தேன்... இருவரும் வெளிநோயாளிகள் பிரிவை நோக்கி நடந்தோம்....
கல்லூரி தோழன்தான் இவன்... நல்ல ஆழமான நட்பு கொண்டவன்... ஆனாலும், என் விக்கியுடனான எந்த விஷயமும் இவனுக்கு தெரியாது.... விக்கியின் ஒருசில நண்பர்களை போல, இதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் தெளிவு இவனுக்கு இல்லை.... என்றைக்காவது சொல்லலாம் என்று இந்த விஷயத்தை மறைத்தே வைத்திருக்கிறேன்....
வெளிநோயாளிகள் பிரிவில் எங்களுக்கு முன்பே வந்துவிட்டார் எங்கள் சீப் டாக்டர்....
“வாங்க டாக்டர் வருண்.... தஞ்சாவூர்லேந்து என்ன வாங்கிட்டு வந்த?” என்றார்.... இவரை பொருத்தவரை அந்தந்த ஊர் ஸ்பெஷல் சாப்பிடும் ஐட்டங்கள் அவருக்கு கொண்டுவரணும்... பிரகாஷ் நெல்லை சென்று வரும்போது கிலோ கணக்கில் அல்வா வாங்கி வரவேண்டும்... வாங்கும் சம்பளத்தில் பாதியை இவருக்கு அல்வா வாங்கியே செலவழிப்பதாக சொல்வான் பிரகாஸ்..... தஞ்சையில் இருந்து அவருக்கு நான் என்ன வாங்கி வருவது?....
“தஞ்சாவூர்ல அப்டிலாம் ஒன்னும் ஸ்பெஷல் இல்ல சார்.... தலையாட்டி பொம்மையை சாப்பிட முடியாதே?” என்றேன்....
என் காதருகே வந்த பிரகாஸ், “அப்டி சொல்லாதடா... அதையும் தின்னாலும்  தின்னுவார்” என்றான்....
ஒருவழியாக அவரை சமாளித்து வரும் கேஸ்களை பார்க்க தொடங்கினோம்.... அப்போது என்னை பார்த்த சீப், “உனக்கு என்கேஜ்மன்ட் ஆகிடுச்சா வருண்?” என்றார்... எனக்கோ அதிர்ச்சி ஆகிவிட்டது.... “ஒருவேளை வடபழனி கோவிலுக்கு நேற்று வந்திருப்பாரோ? வேறு யார் மூலமாகவும் தெரிந்திருக்குமோ?” என் எண்ணமெல்லாம் பலவிதமாக யோசித்து குழம்பியது....
“என்ன சார் சொல்றீங்க?.... இல்லையே.... ஏன் கேட்குறீங்க?” வார்த்தைகளை மென்று விழுங்கினேன்....
“உன் விரல்ல வெட்டிங் ரிங் போட்டிருக்கியே, அதான் கேட்டேன்” என்றார்....
ஆம், அதை நான் கவனிக்கவே இல்லை.... அவசரமாக பதிலை தேடினேன்....
“நல்லா இருந்துது மாடல்... அதான், வாங்குனேன்... அப்புறம்தான் தெரிஞ்சுது, அது வெட்டிங் ரிங்’னு” என்று ஏதோ சமாளித்தேன்....
“நல்ல வேலையா நீ ரிங் வாங்குன.... செயின் வாங்க போயி, நல்ல மாடலா இருக்குன்னு தாலி வாங்காம வந்தியே, அதுவரைக்கும் நல்லதுதான்” கட்டிடம் அதிரும் அளவுக்கு சிரித்தார்..... அங்கு அமர்ந்திருந்த பெண்ணின் குழந்தை, அந்த சிரிப்பால் பயந்து அழுதேவிட்டது.... பக்கத்து அறையில் இருந்த தோல் நிபுணர் எழுந்து எங்கள் அறைக்கே வந்துவிட்டார்.... அந்த அளவுக்கு இடிபோல சிரித்தார்....
ஒருவழியாக எல்லோரையும் சமாளித்து அனுப்பிவிட்டு, அடுத்தடுத்த கேஸ்’களை பார்க்க தொடங்கினோம்....
ஒரு இளைஞனை பரிசோதித்த சீப், என்னை பார்த்து, “வருண், இது ஹெர்னியா கேஸ்.... இன்ஸ்பெக்சன், இம்பல்ஸ் ஆன் காப் எல்லாம் பாத்துட்டு, சர்ஜரி டிப்பார்ட்மெண்ட்க்கு ரெபர் பண்ணி அனுப்பிடு” என்றார்....
அந்த இளைஞரை அழைத்துக்கொண்டு அருகில் பரிசோதிக்கும் அறைக்கு சென்றேன்....
கல்லூரி மாணவரைப்போல தெரிந்தார், நான் எதுவும் அதைப்பற்றி கேட்டுக்கொள்ளவில்லை.... அறைக்குள் சென்றதும், அவன் பேன்ட்டை கழற்ற ஏனோ ரொம்பவும் தயங்கினான்... சுற்றியும் முற்றியும் பார்த்து அசடுவழிய சிரித்தான்.... கதவை சாத்தியபிறகு கொஞ்சம் வெட்கம் தணிந்தவனாக பேன்ட்டை கழற்றினான்... பார்வையை ஆங்காங்கே அலைபாயவிடாமல், குடலிறக்கம் வந்த பகுதியை கவனித்து, குறித்துக்கொண்டேன்.... திடீரென்று அந்த கதவு வேகமாக திறக்கப்பட, திடுக்கிட்டு நான் திரும்பினேன்.... அந்த இளைஞனோ பயத்தில் பதறிப்போய்விட்டான்... அவசரத்தில் அவன் பேன்ட்டை மாற்றி ஜிப்பை போட முயல, அது மாட்டக்கூடாத இடத்தில் மாட்டிக்கொண்டு துடித்தான் அவன்.... கதவை திறந்து வந்தவன் வேறு யாரும் இல்லை, என் விக்கிதான்....
ஜிப்பிலிருந்து அந்த இளைஞன் தன் எதிர்காலத்தை மீட்க ஓரமாக நின்று போராட, விக்கியை அழைத்துக்கொண்டு நான் வெளியே வந்துவிட்டேன்....
“என்னடா இங்க வந்திருக்க?.... என்ன விஷயம்?” என்றேன்....
“உன்ன பாக்கணும் போல தோனுச்சு, நீ ஊர்ல நடந்ததை நெனச்சு கவலைப்படுறியோன்னு நினச்சேன், வந்து பார்த்தா..... ஹா ஹா ஹா” சிரித்தான்....
“டேய் லூசு சிரிக்காத.... கேஸ் பார்த்துட்டு இருக்கப்போ, இப்டியா உள்ள வருவ?.... அந்த பையனுக்கு ப்ராப்ளம் ஆச்சு இப்போ”
“டேய் பாக்க வேண்டியவனுக்கு இதல்லாம் பாக்காம, இப்டி கண்டவனுக்கும் பாக்குறியேடா” சினுங்கினான்.... அதற்கு மேலும் அவனை அங்கு இருக்காவிட்டால் என் பிழைப்பை நாறடித்துவிடுவான் என்ற எண்ணத்தில் அவனை எப்படியோ அவனுடைய அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன்....
அப்போதான் எனக்கு அந்த அறைக்குள் இருந்த “ஹெர்னியா”ஆசாமியே நினைவுக்கு வந்தான்.... ஓடிசென்று உள்ளே பார்த்தேன், நிலைமையை சமாளித்து பேன்ட்டை மாட்டிக்கொண்டு என்னை பார்த்து பழையபடி சிரித்தான்.... அரைகுறையாக எழுதிய குறிப்போடு, அவனை அறுவை சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்தேன்....
அன்று முழுக்க விக்கி அந்த அறைக்குள் நுழைந்ததை நினைத்து சிரித்ததை, அவ்வப்போது பிரகாஸ் என்னை அதிசயமாக பார்த்தான்.... ஏதோ எண்ணங்கள் எனக்குள் ஓடுவதை அவன் அறிந்தாலும், அதைப்பற்றி கேட்டுக்கொள்ளவில்லை.... இங்கிதம் தெரிந்தவன் என்பதால், எப்போதும் நட்பிற்கும் ஒரு எல்லை வகுத்திருப்பான்....
மாலை அவனுக்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்டேன்.... குளித்து, உடைகளை மாற்றி அவனுக்காக காத்திருந்தேன்.....
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தான்... கதவை திறந்ததும், என்னை பார்த்து சிரித்தான்.... விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது....
“எதுக்குடா லூசு மாதிரி சிரிக்குற?”
“காலைல ஹாஸ்பிட்டல்ல ரூம் கதவை திறந்தப்போ, ஒருத்தன் பேன்ட்டை கழட்டிட்டு நிக்குறான், நீ முட்டி போட்டு என்னமோ பண்ணின..... எனக்கு அத நெனச்சா இப்பவும் சிரிப்பா வருது.... இப்ப கதவ தொறக்கைல கூட, எனக்கு அந்த ஞாபகம்தான் வந்துச்சு புஜ்ஜி” மீண்டும் சிரித்தான்...
எனக்கு கோபம் இன்னும் அதிகமானது.... எதுவும் அவனுக்கு பதில் சொல்லவில்லை.... என் முகத்தை பார்த்து சூழலை புரிந்துகொண்ட அவன், என் அருகே அமர்ந்தவாறே, “சாரிடா.... சும்மா ஜோக்குக்கு தான் சொன்னேன்... உடனே நீ உம்முனு ஆகிடாத.... சிரிடா” சொல்லிவிட்டு என் கன்னங்களை பிடித்து இழுத்து, சிரிப்பதை போல ஆக்கினான்....
அவன் செய்கைகள் என்னையும் சிரிக்க வைத்துவிட்டது....
“அப்பாடா! சிரிச்சுட்டியா?.... சரி நான் குளிச்சுட்டு வரேன், நாம ரெண்டு பேரும் வெளில போறோம், நீ கிளம்பு”
“எதையாவது என்னிக்காவது நீ தெளிவா பேசுறியா?.... எங்கடா போறோம்?”
“என் ப்ரெண்ட்ஸ் நமக்கு பார்ட்டி தராங்களாம்... அதுக்குத்தான் போறோம்.... இதுக்கு மேலையும் சாருக்கு தெளிவா சொல்லணுமோ?” சிரித்துவிட்டு குளிக்க சென்றான் அவன்... நானும் உடை மாற்றி காத்திருந்தேன்.... அறைக்குள் சென்றவன், வழக்கம் போல அரைமணி நேர ஒப்பனைக்கு பிறகு வெளியே வந்தான்...
“வெளியே வந்தவன் என் விக்கிதானா?” என்று நான் புருவம் உயர்த்தும் அளவிற்கு பேரழகனாக தெரிந்தான்... அவன் நிறத்துக்கு எப்போதும் கருப்பு நிற ஆடைகள் “பளிச்” என்று இருக்கும்.... அதுவும் அவன் கருப்பு சட்டையில், முதல் இரண்டு பட்டன்களை போடாமல் கழற்றி இருப்பான்.... அந்த இடைவெளியில் அவன் மார்பின் ரோமங்கள் கிளர்ச்சியூட்டும் விதமாக இருக்கும்... ரோமங்களுக்கு மத்தியில் கழுத்தை ஒட்டி போட்டிருக்கும் தங்க சங்கிலி இன்னும் அவன் அழகை கூட்டி சொல்லும்... காற்றடிக்கும்போது அவன் கழற்றிய பட்டன்களின் வழியே, சட்டை நகர்ந்து அவன் மார்பின் அழகை அவ்வப்போது திறந்து காட்டும்.... அவனை வைத்த கண் விலகாமல் நான் பார்ப்பதை கவனித்தவன், “என்னடா, உன் பார்வைல ஒரு காமவெறி தெரியுதே?.... நீ பாக்குற பார்வையை பார்த்தா இன்னக்கி வெளில போகமுடியாது போலயே?” என் அருகில் வந்து கட்டி அணைத்தான்.... அந்த நேரத்தில் அவன் சட்டையில் கழற்றப்பட்ட ஒரு பட்டனை அவன் அறியாமல் மாட்டிவிட்டேன்.... அது நான் மட்டும் ரசிக்க வேண்டிய உடல் அல்லவா?... அதனால்தான்....
ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல், “ஆமா, நீ பெரிய மன்மதன் பாரு.... சரி, வா போகலாம்” என்று என் செய்கைகளை அவன் அறிவதற்கு முன்பு, அவனை திசைதிருப்பி வெளியே அழைத்து சென்றேன்....
குறிப்பிட்ட உணவகத்தின் முன்பு நாங்கள் சென்றபோது, வெளியே எங்களுக்காக காத்திருந்தனர் அவனுடைய நான்கைந்து நண்பர்கள்.... என்னை கை குளுக்கியும், அவனை கட்டிப்பிடித்தும் வரவேற்றனர்... வெளியே நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கையில் எனக்கு ஒருவனுடைய செய்கை மட்டும் உறுத்தலாகவே இருந்தது... அவன்தான் ப்ரனேஷ்... ப்ரனேஷ் விக்கியுடைய கல்லூரி கால தோழன், இப்போதும் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்.... விக்கிக்கு நெருங்கிய நண்பன்.... வடபழனி கோவிலில் நானும் விக்கியும் மோதிரம் மாற்றியபோது, உடனிருந்த இருவரில் ப்ரனேசும் ஒருவன்.... நேற்றுவரை அவன் செய்கைகளை பற்றி நான் கண்டுகொண்டதில்லை.... இன்றைக்கு வந்தது முதல் அவன் ஒவ்வொரு செயலுமே என்னை எரிச்சல் ஆக்கியது... சம்பிரதாயத்துக்காக அவனை அவன் மற்ற நண்பர்கள் கட்டிப்பிடித்ததற்கும், ப்ரனேஷ் அவனை கட்டிப்பிடித்ததற்கும் வித்தியாசம் இருந்தது.... நேற்றுவரை விக்கியை கற்பழித்தால் கூட நான் இவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன், இன்று அவனை கட்டிப்பிடித்ததற்கே இவ்வளவு யோசிக்கிறேன்.... இன்றைய நிலை அவன் மட்டும்தான் எனக்கு.... அதே போல “எனக்கு மட்டும்தான் அவன்” என்கிற எண்ணமும் அதற்கு காரணம்....
நான் மாட்டிவிட்ட விக்கியின் சட்டை பட்டனை, ப்ரனேஷ் கழற்றி விட்டான்... அவன் பார்வையால் விக்கியை அங்குலம் அங்குலமாக அளந்தான்... அவ்வப்போது அவன் உடலை வருடுவதும், அவன் மேல் சாய்வதும் என்று என் கண் முன்னால் விக்கியுடன் அதிக நெருக்கம் காட்டினான்....
இது நட்பின் அணுகுமுறையாக எனக்கு தெரியவில்லை.... நட்பின் வெளிப்பாடாக இருந்தால், எனக்கு மற்ற நால்வரின் செயலுக்கும் நான் அதே அளவு கோபப்பட்டிருக்க வேண்டும்... ஆனால், ப்ரனேஷ் மட்டும் என்னை யோசிக்க வைக்கிறான் என்றால், அந்த சந்தேகத்தில் நியாயம் இருக்க வேண்டும்தானே?....
நல்லவேளையாக அந்த நண்பர்களில் ஒருவன், “சரி வாங்கப்பா லேட் ஆச்சு, சாப்பிட போகலாம்” என்று அந்த எரிச்சலுக்கு தற்காலிக தீர்வை கொடுத்தான்....
அனைவரும் குளிர் சாதன அறையில் அமர்ந்தோம்... விக்கியின் ஒரு பக்கம் நான், மறுபக்கம் ப்ரனேஷ்.... இருக்கை கூட எனக்கு எதிராக சதி செய்தது... விக்கியின் நண்பர்கள் எங்கள் திருமண வாழ்க்கையை பற்றி ஆர்வத்துடனும், விளையாட்டாகவும் நிறைய பேசினார்கள்.... இத்தகைய விஷயங்களை இவ்வளவு எளிதாக அவர்கள் பேசும் அளவிற்கு நம் நாடு வளர்ந்துவிட்டதா? என்று ஆச்சரியமாக இருந்தது எனக்கு.... ஆனால், இந்த உரையாடல்களில் தனக்கு சம்மந்தமே இல்லாதவனாக ப்ரனேஷ், விக்கியை பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்தான்.... விதவிதமான உணவுகள் என் முன் விரிந்து அடுக்கப்பட்டிருந்தாலும், என் மனம் அதில் நாட்டமில்லாமல் ப்ரனேஷின் செய்கைகளில் கவனம் கொண்டிருந்தது.... என் பதற்றம், கோபம், எரிச்சல், ப்ரனேஷின் செய்கைகள் எதுவும் புரியாமல் “எருமைமாடு மேல் பெய்த மழை” போல சாப்பாட்டில் கவனமாக இருந்தான் விக்கி....
விக்கி சாப்பிடும்போது ஸ்பூனிலிருந்து விழுந்த சிக்கன் துண்டு அவனுடைய பேண்ட்டில் தவறி விழுந்தது... விக்கி அதை சுதாரித்து டிஸ்யூ பேப்பர் எடுத்து துடைக்கும் முன்பே, ப்ரனேஷ் அவன் தொடைகளில் கை வைத்து துடைத்துவிட்டான்.... அல்சர் உண்டாகும் அளவிற்கு என் வயிறு எரிந்தது....
“எப்படியும் இவன் என் உணர்வை புரிந்துகொள்ள மாட்டான்” என்று உணர்ந்த நான், வேறு வழி யோசித்தேன்....
அதை கவனித்த விக்கி, “என்னடா?.... ஏன் ஒரு மாதிரி இருக்க?... சாப்பிடாம என்ன யோசிச்சிட்டு இருக்க?” என்று என் யோசனைகளுக்கு வழி செய்து கொடுத்தான்....
அதையே நூலாக பிடித்து என் கற்பனைகளை அதில் கரைத்தேன்... “உடம்பு ஏதோ சரி இல்லை... லேசா மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.... வாமிட்டிங் சென்சேஷன் வேற இருக்கு” என்றேன்....
அவன் நண்பர்களில் ஒருவன், “டேய் விக்கி.... மேரேஜ் ஆகி ஒரு வாரத்துக்குள்ள வருணை வாமிட் எடுக்க வச்சிட்டியே?” என்று சிரிக்க, நானும் சிரித்துவிட்டேன்.... விக்கி மட்டும் என் உடல்நிலையை யோசித்தவாறே, “சரி வா வீட்டுக்கு போகலாம்” என்று என்னை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்...
என்னை படுக்கையில் படுக்க வைத்த அவன், “இப்போ எப்டி இருக்கு?... டாப்லட் சாப்பிடுறியா?” என்றான்....
“இல்லடா வேணாம்... ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்”
“ஓகே நீ தூங்குடா” சொல்லிவிட்டு அவனும் உடைகளை மாற்றிவிட்டு என் அருகில் படுத்தான்... அக்கறையுடன் போர்வையை போர்த்திவிட்டான் எனக்கு.... ரொம்ப ஆசையோடு இருந்தேன், இன்று அந்த ப்ரனேஷ் செய்கைகளால் நானும் பட்டினியாக கிடக்குறேன்.... பக்கத்தில் படுத்திருக்கும் அவனை தொட கூட முடியவில்லை என்று என் ஆற்றாமையை நினைத்து நொந்துகொண்டேன்....
என் ஏக்கங்களை தீர்க்க முடியவில்லை என்றாலும் அவன் கையை பிடித்தவாறே அன்றைய இரவை தூங்கி கழித்தேன்....  
காலை எழுந்தது முதல், முந்தைய இரவின் நிகழ்வுகளை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.... விக்கியின் நெருங்கிய நண்பனான ப்ரனேஷ் பற்றி நான் அவனிடம் குறை சொல்வதை அவன் ரசிக்க மாட்டான்.... ஆனாலும், ப்ரனேஷின் செய்கைகள் என்னை கலவரப்படுத்தும் விதமாகவே இருக்கிறது.... இதே யோசனையில் கிளம்பிக்கொண்டிருந்தேன்....
“ஓகே பைடா.... நான் கிளம்புறேன்” விக்கி கிளம்பும்போதுதான் நான் அவனையே கவனித்தேன்....
அன்று மருத்துவமனையில் கூட அதைப்பற்றிய யோசனையில் இருந்தேன்...
“என்னடா ஒரு மாதிரி இருக்க?... ஒரு வாரமா ஏதோ சம்திங் ராங்.... எதையோ நீ என்கிட்ட மறைக்குற?” பிரகாஷ் என்னிடம் நேரடியாகவே கேட்டுவிட்டான்... அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் கூட அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டான்... ஆனால், இப்போதைய சூழலை நான் அவனிடம் சொன்னால் மட்டுமே எனக்குள்ள குழப்பங்கள் கொஞ்சமாவது குறையும்... என்றோ ஒருநாள் நிச்சயம் அவனுக்கு தெரிய போறத, இன்றே சொல்லிடலாம்னு முடிவு பண்ணி சொல்ல தொடங்கினேன்....
எல்லாவற்றையும் அதிர்ச்சியுடன் கேட்ட பிரகாஷ், சில நிமிடங்கள் பதில் எதுவும் பேசவில்லை... இத்தகைய விஷயங்களை என்னிடத்தில் அவன் எதிர்பார்த்திருக்கவே மாட்டான்....
“என்னடா சொல்ற?... இவ்வளவு நடந்திருக்கா?... அப்பா, அம்மா, ஊர் எல்லாத்தையும் விட்டுட்டு வந்திட்டியா?... இது தப்பில்லையா வருண்?” என்றான்....
“தப்புதான் பிரகாஷ்... இப்போ வேற வழி இல்ல... நான் நானா இருக்கணும்னு நினைக்கிறேன், போலி வாழ்க்கை வாழ விரும்பல....”
“எனக்கு எதுவும் சொல்ல தெரியலடா.... சரி, நடந்ததை பற்றி இனியும் ஆராய வேணாம்... இப்போ ப்ரனேஷ் பற்றி நீ சொன்னதுக்கு வரலாம்... உனக்கு விக்கி மேல இருக்குற பொசசிவ்னஸ் தான் எல்லாத்துக்கும் காரணம்... உனக்கு மட்டுமே சொந்தமான ஒருத்தனை அவன் உரிமையோட பழகுறதை உன்னால ஏத்துக்க முடியல.... மத்தபடி நீ யோசிக்குற மாதிரி எதுவும் தப்பா இருக்காதுடா”
“இல்லடா.... அவன் செயல் ஒவ்வொன்னும் அப்படித்தான் இருக்கு.... அதான் பயமா இருக்கு”
“நீயும் விக்கியும் ஒண்ணா சேர்ந்து வாழ ஆரமிச்சு ஒருவாரம் தான் ஆகுது.... அதுக்குள்ள இப்டி ஒரு விஷயத்தால உங்களுக்கு சண்டை வர வேணாம்.... போகப்போக சரி ஆகிடும் வருண், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காத” பிரகாஷ் சொல்வதில் ஒரு உண்மை இருக்கிறது.... எப்போதும் நான் பல விஷயங்களில் எடுக்கும் அவசர முடிவுகள் பல நேரங்களில் என்னை பெரிய பிரச்சினைக்கு ஆளாக்கி இருக்கிறது.... இதுவரை இழந்தவைக்கு ஈடு செய்ய வேறு விஷயங்கள் இருந்தன.... விக்கி விஷயத்தில் அவனை இழந்தால், அதற்கு ஈடு செய்ய ஒன்றுமில்லை... அதனால், பிரகாஷ் சொல்வதைப்போல அமைதியாக யோசிக்க முடிவு செய்தேன்....
பிரகாஷிடம் என் மொத்த கதையையும் சொன்னது எனக்கு மன சுமையை குறைத்தது போல உணர்ந்தேன்...
மாலை வீட்டில், தெளிவான மனதுடன் அவனுக்காக காத்திருந்தேன்.... கதவை திறந்து உள்ளே வந்தவன், என்னை பார்த்ததும் வழக்கமான புன்னகைகை உதிர்த்தான்.... அப்போதுதான் அவன் அணிந்திருந்த புது சட்டையை கவனித்தேன்...
“டேய் ஷர்ட் ரொம்ப அழகா இருக்கு.... உனக்கு ரொம்ப சூப்பரா இருக்குடா” என்றேன்.... அதை பெரிதாக பொருட்படுத்தாதது போல அவன், “இப்போதான் உனக்கு தெரியுதா?... காலைல உன் கண் என்ன காணாமல் போயிருந்துச்சா?”என்று உரிமையுடன் என் மீது கோபப்பட்டான்....
அவன் அருகில் சென்று, அவன் பின்புறமாக கட்டிப்பிடித்த நான், “சாரிடா, நான் கவனிக்கல.... அதான் இப்போ சொல்லிட்டேன்ல?” என்றேன்....
“உனக்கு முன்னாடி ஆபிஸ்’ல அவனே சொல்லிட்டான்”
யார் அந்த ‘அவன்’? என்று எனக்கு புரியவில்லை... ப்ரனேஷாக இருக்குமோ என்ற எரிச்சலில், “யார் சொன்னது?”
“எங்க எச்.ஆர் மாதவன்”
“மாதவனா?” கொஞ்சம் பயம் கலந்த எதிர்பார்ப்புடன் கேட்டேன்...
“அந்தாளு பேரு ரோஹித் மேனன்.... பாக்க அலைபாயுதே மாதவன் மாதிரி இருப்பான், அதான் அப்டி கூப்பிடுவோம்... கேரளாக்காரன்” இது என்ன இன்னொரு வில்லன் லேட்டரல் என்ட்ரி கொடுக்கிறான் என்று நொந்துகொண்டேன்....
“அவன் எதுக்கு உன்ன பத்தி பேசனும்?” என்றேன்....
“இத நீ அந்தாளுகிட்ட தான் கேக்கணும்... அப்பப்போ நான் டிரெஸ் பண்றத பத்தியும், ஹேர் ஸ்டைல் பத்தியும் சொல்லுவான்... கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி தான்”
சொல்லிவிட்டு அவன் குளிக்க சென்றுவிட்டான்.... எனக்கோ அடுத்த பீதி உள்ளுக்குள் உண்டானது.... அலுவலகத்தில் இப்படி ஒரு இம்சையா?... அதுவும் “மாதவன்” மாதிரியா?.... அட ஆண்டவா, ஏன் இப்டி சுத்தி சுத்தி ஆப்பு வைக்குற?.... ஆனாலும் பிரகாஷ் சொல்வதைப்போல, நானே பிரச்சினைகளுக்கு அடித்தளம் போட விரும்பவில்லை....
இரவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது தொலைக்காட்சியில் “பச்சை நிறமே பச்சை நிறமே....” பாடலை மாதவன் குதித்து குதித்து பாடிக்கொண்டிருந்தான்.... ஏனோ, அன்று அந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை... விக்கி அதை ரசித்து பார்த்தான்....
மறுபடியும் அதே குழப்பம், அதே எரிச்சல்....
படுக்கையில் அவன் என்னை கட்டிப்பிடித்தபோது, ஏனோ அதில் என்னால் முழு ஈடுபாடு கட்டமுடியவில்லை... ஆனால், என் குழப்பங்களால் அவனுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இருக்க கூடாது என்பதில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன்....
காலை அவன் அலுவக்காகத்துக்கு கிளம்பும்போது, அவன் உச்சரித்த “வெண்மதி வெண்மதியே நில்லு” மாதவனின் பாடலில் உள்நோக்கம் இருக்குமோ? என்று என் மனம் ஏனோ குழம்பியது....
ஆனால், எதையும் கவனிக்காமல் அவன் பாட்டுக்கு அலுவலகம் கிளம்பிவிட்டான்... மருத்துவமனை சென்ற நான், இன்று பிரகாஷிடம் என் குழப்பத்தை சொல்லவில்லை... இது என் தேவையில்லாத குழப்பத்தின் வெளிப்பாடு என்று எனக்கு தெரிந்தும், நான் அதை சந்தேகமாக பார்ப்பது தவறுதான்.... ஆனாலும், அந்த மாதவன் ஒருவேளை விக்கியை செட்யூஸ் செய்தால் என்ன செய்வது?....
எனக்கிருந்த குழப்பத்தில், ஓவிரான் போட வேண்டிய ஆளுக்கு டயசிப்பாம் போட்டுவிட்டேன்..... அந்த ஆள் அரை மயக்கத்துக்கு வந்துவிட்டார்... நிலைமை விபரீதம் ஆகிடாமல் இருக்க, அதற்கு மேலும் அதே குழப்பத்தோடு மருத்துவமனையில் இருந்தால் நிச்சயம் பெரிய அளவிலான விபரீதங்கள் உண்டாக வாய்ப்புண்டு என்று நினைத்து அரைநாள் விடுப்பெடுத்து வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தேன்.... மருத்துவமனையை விட்டு வெளியே வந்த என்னை, சாலை ஓரத்தில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த ஜாய் ஆலுக்காஸ் மாதவன் ப்ளெக்ஸ் மேலும் குழப்பியது....
வீட்டிற்கு செல்லாமல் விக்கியின் அலுவலகம் நோக்கி சென்றேன்... நானாக செல்லவில்லை, என் மனம் என்னை அங்கு செலுத்தியது... என்னை அறியாமல், அதனால் விளையும் விபரீதம் புரியாமல் விக்கியின் அலுவலகத்தை அடைந்துவிட்டேன்....
விசாலமான கட்டிடம், விக்கியின் பெயர் சொல்லி கேட்டு அவன் கேபினை அடைந்தேன்.... அங்கு அவனில்லை... அருகிலிருந்த நபரிடம் கேட்டபோது, எச்.ஆர் ரூம்’க்கு போயிருப்பார் என்றனர்.... அப்போது என்னை பார்த்து என்னருகில் வந்த ப்ரனேஷ், “வா வருண், என்ன திடீர்னு?” என்றான்...
“சும்மாதான்.... விக்கிய பாக்க வந்தேன்”
“அவன் கேபின்’ல இருக்குறத விட எச்.ஆர் ரூம்ல இருக்குறதுதான் அதிகம்... என்னதான் அப்டி பேசுறாங்களோ?” ப்ரனேஷ் தன் பங்குக்கு என்னை குழப்பிவிட்டு போனான்....
என் வலது புறம் இருந்த அறையின் கதவின் மேல், “எச்.ஆர்” என்று எழுதி இருந்தது.... அதுதான் அந்த அறை.... உள்ளேதான் இருவரும் இருக்கிறார்கள்.... என்ன செய்கிறார்கள்?... நிற்கும் ஒவ்வொரு நொடியும் முள்மேல் நிற்பதை போல உணர்ந்தேன்.... என்னை அறியாமல், நேராக சென்று அந்த கதவை படாரென்று திறந்துவிட்டேன்.... உள்ளே இருவரும் எதிரெதிரே அமர்ந்து, அலுவலக விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர்.... கதவை திறந்தபோதுதான், நான் என்ன செய்கிறேன்? என்பதை நானே உணர்கிறேன்....
திடீரென கதவை திறக்க, உள்ளே இருந்த எச்.ஆர் பதறிப்போய் எழுந்து, “யார் நீங்க?... மேனர்ஸ் இல்ல?...” திட்ட தொடங்கினான்... விக்கி எழுந்து அவரை சமாதானப்படுத்தி விட்டு, என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்....
எவ்வித அதிர்ச்சியும், கோபமும் படாமல், “என்னடா?... எதுவும் முக்கியமான விஷயமா?” என்றான்....
எச்சிலை விழுங்கிய நான், “இல்ல சும்மாதான்” என்றேன்....
“சரி, எனக்கு இன்னைக்கு கான்பரன்ஸ் விஷயமா வேலை இருக்கு, நீ வீட்டுக்கு போ, நான் ஈவ்னிங் வரேன்” சிரித்துக்கொண்டே அவன் சொன்னது என்னை இன்னும் உறுத்த வைத்தது.... என் மேல் எனக்கு கோபம் வந்தது.... வீட்டிற்கு சென்று அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்....
என் தவறுகளை நினைத்து மனம் நொந்தேன்.... அவன் வரும் நேரம் ஆகிவிட்டது....
கதவை திறந்து உள்ளே வந்தவன், எதையும் கவனிக்காமல் குளிக்க சென்றான்... என்னுடன் எதுவும் பேசவில்லை.... குளித்து முடித்து, உடைகளை மாற்றி தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்... வழக்கமான சிரிப்பு இல்லை, பேச்சு இல்லை.... எனக்கு குற்ற உணர்ச்சியும், தர்மசங்கடமும் மேலோங்கியது.... அறைக்குள் சென்று அவனை பார்த்தேன்.... அருகில் அமர்ந்தேன், என்னை இன்னும் அவன் கண்டுகொள்ளாமல் லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தான்.....
நானே பேச்சை தொடங்கினேன்....
“விக்கி, என்ன எதுவுமே பேசமாட்ற?”
“......”
“எதுவா இருந்தாலும் சொல்லுடா.... நான் தப்பு பண்ணா திட்டு, அதுக்காக பேசாம இருக்காத.... ரொம்ப கஷ்டமா இருக்கு.... என்ன தப்பு பண்ணேன் நான்?”
“தப்பு பண்ணினது தெரியுதுல்ல, என்ன தப்பு பண்ணணு தெரியலையா?” இன்னும் அவன் இறுக்கமான முகத்துடனே பதில் சொல்கிறான்...
“உங்க ஆபிஸ் வந்தது தப்பா?.... நீ கூடத்தான் என் ஹாஸ்பிட்டல் வந்த, அதை நான் தப்பா நெனச்சேனா?”
கோபம் கொப்பளிக்க என்னை பார்த்தவன், “நான் உன் ஹாஸ்பிட்டல் வந்ததுக்கும், நீ என் ஆபிஸ் வந்ததுக்கும் வித்தியாசம் இருக்கு.... நான் வந்தது அக்கறையால, நீ வந்தது சந்தேகத்தால” வெடித்து விழுந்தன வார்த்தைகள்....
“சாரிடா.... முட்டாள்த்தனமா பண்ணிட்டேன்.... உன்மேல இருக்குற எக்ஸ்ட்ரீம் லவ்வால இப்டி அறிவில்லாம பண்ணிட்டேன்.... சாரி எவ்வளவோ நான் வழிய சென்று என் தவறை அவனிடம் உணர்ந்ததாக காட்டிக்கொண்டாலும், அதை அவன் புரிந்துகொள்ளவில்லை....
“எனக்கு தலை வலிக்குது..... தூங்க விடு வருண்.... மத்தத அப்புறம் பேசிக்கலாம்” பிடிபடாமல் பேசிய அவன், என் பதிலை கூட எதிர்பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி படுத்துக்கொண்டான்.....
தவறு செய்துவிட்டேன், அதை உணர்ந்து அவனிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன்.... அவன் மட்டும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை....
சின்ன சின்ன சண்டைகள் ரொம்பவே மனதை காயப்படுத்திடுது.... ரொம்பவே கஷ்டப்பட்டு ஒருவாறு கண்ணயர்ந்தேன்.... திடீரென்று யாரோ என்னை எழுப்புவதை உணர்ந்தேன்.... விக்கிதான்.... இன்னும் விடியவில்லை.... இருள் சூழ்ந்த அறையில் விக்கியின் கைகளில் மட்டும் ஏதோ வெளிச்சம் தெரிந்தது.... குழப்பத்தோடு கண் விழித்த நான், நடப்பவற்றை உணரும் முன்பே அவன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் புஜ்ஜி” என்று கையில் இருந்த கேக்கை என் முகத்துக்கு நேராக நீட்டினான்.....
எனக்கு அது நிஜமாகவே இன்ப அதிர்ச்சிதான்.... சந்தோஷத்தில் என் கண்கள் கலங்கியே விட்டது.... நான் எதுவும் பேசுவதற்குள், கத்தியை கொடுத்து கேக் வெட்ட வைத்து, பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம்.... இரண்டு நாட்கள் நிகழ்ந்த குழப்பங்களில் நானே என் பிறந்தநாளை மறந்துவிட்ட நிலையில், அவன் அதை மறக்காமல் நினைவில் வைத்து, இந்த சண்டைக்கு மத்தியிலும் அதை கொண்டாடும் அவன் நிஜமாகவே என் வாழ்வின் பொக்கிஷமென நினைத்தேன்....
எனக்காக வாங்கி வைத்திருந்த கைகடிகாரத்தை என் கையில் கட்டி, அதை அழகு பார்த்தான்.... நேற்றைய நிகழ்வில் இவ்வளவும் நினைவில் வைத்து வாங்கி இருப்பது எனக்கு அதிசயமாக இருந்தது....
அப்போதுதான் அவனை கட்டிப்பிடித்து, “சாரிடா.....” என்றேன்.... அந்த மன்னிப்பிற்கான விளக்கம் எங்கள் இருவருக்கும் தேவையில்லை....
விக்கி, “நீ சந்தேகப்படுறதால எனக்கு எவ்ளோ ஹர்ட் ஆகுது தெரியுமா?... உன்ன எப்போ நான் லவ் பண்ண ஆரமிச்சேனோ, அப்போலேந்தே உன்ன தவிர வேற எந்த காண்டாக்ட்ஸ்’ம் நான் வச்சுக்கிறதில்ல.... நீ எனக்கு எவ்ளோ உண்மையா இருக்கியோ, அதே அளவு நானும் உனக்கு உண்மையா இருப்பேன்.... இது ஏன் உனக்கு புரியல?..... சரி, இனிமே இதப்பத்தி பேசவேணாம்..... இனி சந்தோஷமா இருக்குறத பத்தி மட்டும் யோசிக்கலாம்....” அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது சந்தேகங்களை சிதறடிக்க செய்தது, என் தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டியது.... என் கேவலமான செய்கையை எண்ணி மனம் நொந்து அழுதேன்..... வார்த்தையால் நான் கேட்ட மன்னிப்பைவிட, வார்த்தைகள் இன்றி என் கண்ணீரால் நான் கேட்ட மன்னிப்பு அவனை மனம் இழக வைத்தது.... கட்டி அணைத்து எனக்கு ஆறுதல் கூறினான்....
அன்றைய இரவு எங்கள் இருவருக்குள்ளும் மிகவும் உணர்வுபூர்வமான இரவாக இருந்தது.... இது என் வாழ்வின் முக்கியமான பிறந்தநாளாக அமைந்துவிட்டது... அவன் மனதின் இன்னொரு மென்மையான பக்கத்தையும் நான் உணர செய்தது இந்த நாள்... எங்கள் இருவருக்குள்ளும் இதுவரை இப்படி ஒரு முரண்பட்ட வாதம் உண்டானதில்லை.... இந்த முதல் ஊடல் நிச்சயம் எங்களுக்குள், முன்பைவிட அதிகமான பிணைப்பை உண்டாக்கியது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்....
இயல்பான தருணங்களில் நம்மால் வெளிப்படுத்திட முடியாத உணர்வுகளை, ஒரு ஊடல் மட்டுமே வெளிப்படுத்தும்.... விட்டுக்கொடுத்து வாழ்வதும், சகித்துக்கொண்டு வாழ்வதும் மட்டும் காதல் இல்லை.... ஊடல் மூலம் வெளிப்படும் உணர்வுகளின் வெளிப்பாடுதான் காதலுக்கு இன்னும் நெருக்கத்தை கொடுக்கும் என்பதை நான் உணர்ந்தேன்....
மறுநாள் விடிந்ததும் கூட அவன் முத்தம் கொடுத்த சத்தத்தினால் தான்... பிறந்தநாள் கொண்டாட்டங்களில் இத்தனை நாட்களும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை... ஆனாலும், இப்படி சின்ன சின்ன சந்தோஷங்கள் வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியம் என்பதை இன்று உணர்ந்தேன்.... வழக்கம்போல அவனையும் பணிக்கு அனுப்பிவிட்டு, நானும் மருத்துவமனை கிளம்பினேன்.... நான் மருத்துவமனையில் உற்சாகமாக இருப்பதை கவனித்த பிரகாஸ், “ஹாப்பி பர்த்டே வருண்.... இன்னைக்குதான் உன் முகத்துல பழைய பொலிவு தெரியுது... என்ன காரணம்னு தெரியல, எப்பவும் இதே போல இருடா” என்றான்.... உண்மைதான் நான் இனி இப்படியே இருக்க தீர்மானித்தேன்.... அன்று மாலை வீட்டிற்கு வந்த விக்கி, “சொல்லுடா, இன்னைக்கு எங்க போகலாம்?.... நீ பர்த்டே பேபி...... நீ சொல்ற இடத்துக்கு போகலாம்.....” என்றான்....
வரிசையாக பல இடங்களையும் பட்டியலிட்டான்.... அதில் எதிலும் நான் இடத்தை தேர்ந்தெடுக்காமல், “பீச் போகலாம் விக்கி....” என்றேன்....
என்னை அதிசயமாக பார்த்தான்.... ஆனாலும், என்ன காரணம்? என்றுகூட கேட்காமல் கிளம்ப ஆயத்தமானான்.....
என் பிறந்தநாள் அன்று நான் மனம் திறந்து நிறைய பேச கடற்கரைதான் சிறந்தது என்பதாலே அவனுடன் அங்கு செல்ல முடிவெடுத்தேன்..... நானும் அவனும் எங்கள் மணவாழ்க்கைக்கு பிறகு தனியாக வெளியே செல்வது இதுவே முதல் முறை என்கிற சந்தோஷத்தில் இன்னும் உற்சாகத்துடன் சென்றேன்....
அந்த உற்சாகம், மகிழ்ச்சி, ஏக்கம் எல்லாம் கடற்கரைக்கு சென்ற அந்த நொடியில் பறந்து போனது.... எங்களுக்காக எங்களுக்கு முன்பே அங்கு காத்திருந்த ப்ரனேஷ் தான் அதற்கு காரணம்... என்னை பார்த்ததும் ப்ரனேஷ் சம்பிரதாயத்துக்கு, “ஹாப்பி பர்த்டே வருண்” என்றான்.... சிரித்தபடியே நானும் “தாங்க்ஸ்” என்றேன்....
தனியாக விக்கியுடன் நிறைய பேசலாம் என்று நினைத்த எனக்கு ப்ரனேஷ் இருப்பு ஏமாற்றத்தை அளித்தது.... அதுவுமில்லாமல் எனக்கு விக்கி கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ப்ரனேஷ்’க்கும் கொடுத்ததை எண்ணி ஒரு பொறாமை.... எந்த எண்ணங்கள் வரக்கூடாது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேனோ, அதே எண்ணங்களை காலமும், சூழலும்  வலுக்கட்டாயமாக வரவழைத்தது....
சுண்டல் விற்பவனும், காதல் ஜோடிகளும், குழந்தைகளும் என்று அனைவரையும் எத்தனையோ கவலைகளை மறந்து, மகிழ்ச்சியாக்கும் கடற்கரை என்னை மட்டும் “துன்பக்கடலில்” மூழ்க வைக்கிறது....
விக்கி என்னை ஏன் முழுமையாக புரிந்துகொள்ள மறுக்கிறான்? என்று எனக்குள் கேள்வி எழுந்தது.... நண்பனாக, காதலனாக இருந்தவரை அப்படி இருப்பது தவறில்லை, வாழ்க்கை துணைவனாக ஆனபிறகும் எனக்கென்ற முக்கியத்துவத்தை அவன் கொடுக்க மறுப்பதை நான் எப்படி ஏற்பது?...
எல்லா உறவுகளும் ஒன்றாகிவிடுமா?.... அந்தந்த உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும், வகுக்க வேண்டிய எல்லைகளும் அவன் புரியாமல் இருப்பதில் எனக்கு மனம் வலிக்க செய்தது...
ப்ரனேஷ் இருக்கும்போது விக்கி என்னிடம் காதல் வார்த்தைகள் பேசுவதும், சீண்டி விளையாடுவதும் ஏனோ ஒருவித உறுத்தலை எனக்குள் ஏற்படுத்தியது.... எந்த கடற்கரை எனக்குள் அளவில்லா இன்பத்தை அளிக்கும் என்று நினைத்தேனோ, அதே கடற்கரை என்னை மனதிற்குள் அழ வைத்து வேடிக்கை பார்க்கிறது.... கடல் அலைகளின் இரைச்சலை விட, என் மனக்குமுறல் சத்தமாக ஒலித்தது....
என் உணர்வுகளை விக்கியோ, ப்ரனேஷோ புரிந்துகொள்ளவில்லை... அவர்கள் இயல்பாக பேசி சிரித்து மகிழ்ந்தனர், நானும் சிரித்து நடித்து அன்றைய பொழுதை அங்கு கழித்துவிட்டு வீட்டிற்கு செல்ல நள்ளிரவை நெருங்கிவிட்டது நேரம்....
களைப்பின் மிகுதியால் என்னை கட்டி அணைத்தபடி அவன் உறங்கினான், வழக்கமான குழப்பங்களும், கேள்விகளும் என்னை இன்றைக்கும் உறங்கவிடாமல் செய்தது..... ஆனாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இரண்டு நாட்கள், அவனுக்காக சிரித்தே நாட்களை நகர்த்தினேன்....
அதன்பிறகு எனக்கு வெளியில் செல்ல தயக்கமாகவே இருந்தது.....
அன்றொரு நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று, “வருண், மெரீனா ஸ்விம்மிங் பூல் போவோமா?.... ஸ்விம்மிங் போய் ரொம்ப நாள் ஆகுது” என்றான்....
“இல்லடா நான் வரல... எனக்கு சளி பிடிக்கிற மாதிரி இருக்கு...” வெளியில் செல்ல தயக்கம் என்பதால் அப்படி சொல்லவில்லை, நிஜமாகவே என் உடல்நிலை இன்று அப்படித்தான் இருக்கிறது....
“ஓகேடா... நீ ரெஸ்ட் எடு.... நான் போயிட்டு வரேன்” வழக்கமாக செய்வது போல என் தலையை கோதிவிட்டு சென்றான்.....
இப்படி சொல்லிவிட்டு அவன் யாருக்கோ அலைபேசியில் தொடர்பு கொண்டான்...
“ஸ்விம்மிங் போலாமா?”
“....”
“ஓகே.... இன்னும் ஒன் ஹவர்’ல நான் வந்திடுவேன்” சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்....
எனக்கோ குழப்பம் உண்டானது.... யாருக்கு பேசினான்?... யோசிக்கவல்லாம் எனக்கு தோன்றவில்லை, அவனிடமே கேட்டுவிட்டேன்.... நான் அவனுடன் வரவில்லை என்றதும் அவன் அந்த திட்டத்தை கைவிடுவான் என்று நினைத்தேன், அவனோ எனக்கு மாற்றாக யாரையோ அழைக்கிறான்.... யாராக இருக்கும்?
எழுந்து அவன் அருகில் சென்று, இயல்பாக “யார்கிட்ட பேசுன இப்போ?” என்றேன்....
“ப்ரனேஷ் கிட்ட....”
“எதுக்கு?”
“ஸ்விம்மிங் போக.... நீதான் வரலைன்னு சொல்லிட்டில்ல, அதான்...”
என் நிலையை எண்ணி நொந்துகொண்டேன்.... ப்ரனேஷ் பற்றி யோசிக்கவே இல்லை நான்.... அண்ணன் எப்போ எந்தரிப்பான், திண்ணை எப்போ காலியாகும்’னு காத்துக்கொண்டிருப்பவன் ப்ரனேஷ்.... நானே அதற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறேன் போல... வேறு வழி இல்லை, எனக்கு ஜன்னியே வந்தாலும் இன்று அவனுடன் நான் போயே ஆகணும்....
“பரவால்ல... நான் வரேண்டா.... ப்ரனேஷ் வரவேணாம்னு சொல்லிடு”
“உனக்கு சளி பிடிச்சிருக்குன்னு சொன்ன?”
“பரவால்ல.... அது ஒன்னும் பெருசா இல்ல” முகத்தை கைக்குட்டையால் துடைத்துவிட்டு, களைப்பான முகத்தை போலியாக செழிப்பாக இருப்பதை போல காட்டிக்கொள்ள முயன்றேன்....
“சரி, அப்டினா நீயும் வா... ப்ரனேஷ் கிட்ட சொல்லிட்டேன், அவனும் வரட்டும்.... முன்னெல்லாம் நானும் அவனும்தான் அங்க போவோம்”
எந்த காலத்திலும் இவன் என் எண்ணத்தை புரிந்துகொள்ளப்போவதில்லை.... விக்கியுடன் கிளம்பி மெரீனா ஸ்விம்மிங் பூல் நானும் சென்றேன்.... மற்ற வேலைகளுக்கு எப்போதும் தாமதமாக செல்லும் ப்ரனேஷ், விக்கி பற்றிய விஷயங்களுக்கு மட்டும் ரொம்பவும் முன்பே வந்துவிடுகிறான்.... இன்றும் நாங்கள் செல்வதற்கு முன் அவன் அங்கு வந்துவிட்டான்.... இப்போது நான் அவனை பார்த்து அதிர்ச்சியாகவல்லாம் இல்லை.... அவன் அப்படி வராமல் இருந்திருந்தால்தான் நான் ஆச்ச்சரியப்பட்டிருப்பேன்...... மூவரும் உள்ளே சென்றோம்..... வண்ண வண்ண உள்ளாடைகளுடன் காளைகள் போல இளைஞர்கள் திரிந்தனர், ஆங்காங்கே சில “சில்மிஷங்களும்” நடந்தது.... ஒரு காலத்தில் இதை நான் நிறைய ரசித்திருக்கிறேன், கொஞ்சம் அனுபவித்திருக்கிறேன்..... இன்றைக்கு சூழல் அப்படி இல்லை....
உடல் ஒரு பக்கம் என்னை நிலைகுழைய வைத்தது.... காய்ச்சல் வருவது போல இருக்கிறது, குளிக்க முடியாத சூழல்... அதனால், நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்காமல், அவர்கள் இருவரையும் மேலே நின்று கண்காணித்துக்கொண்டிருந்தேன்.... விக்கி நீச்சல் செய்தான், ப்ரனேஷ் நீச்சலை தவிர மற்ற அனைத்தையும் செய்தான்....
உடல் முழுக்க விக்கி ஆடையுடன் இருந்தபோதே இம்சை செய்தவன், வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு, தண்ணீருக்குள் இருக்கும் விக்கியை என்னதான் செய்ய மாட்டான்?... கரையில் இருந்த எனக்கு யூகம் மட்டுமே செய்ய முடிந்தது.... என்னென்னமோ கற்பனைகள் ஓடின, உடல் வாட்டத்தைவிட, இப்போது என் மன வாட்டமே பிரதானமாக என்னை ஆட்கொண்டது....
அவன் மட்டுமல்லாமல், அங்கு குளிக்க வந்த சிலரும் விக்கியை வைத்த கண் விலகாமல் பார்த்தது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது.... அவர்கள் நீருக்குள் நிற்கும் ஒவ்வொரு நிமிடமும், எனக்கு நெருப்பில் நிற்கும் உணர்வை தந்தது.....
ஒருவழியாக குளித்து முடித்து கரையேறினர் இருவரும்.... இன்னும் அவன் முழு திருப்தி அடையாதவனாக விக்கியின் தோள் மேல் கைபோட்டு வர, விக்கி நடக்கும்போது அவன் கைகள் விக்கியின் மார்பில் உரசியது.... அங்கு உரசியது, எனக்குள் எரிந்தது.... எதையும் காட்டிக்கொள்ளாமல் அவனுடன் வீடு வந்து சேர்ந்தேன்....
என் உணர்வுகளை எப்படி நான் விக்கியிடம் சொல்வது?.... சொன்னால், அதை சரியாக புரிந்துகொள்வானா?... என்ற கேள்விகள் என்னை இம்சித்தது.... ஆனாலும், அவற்றை கேட்கவோ, என் உணர்வுகளை சொல்லிடவோ பயமும் தயக்கமும் எனக்கு மிகுதியாக இருந்தது.... வீட்டிற்கு வந்தது முதல் நான் அவனிடம் எதுவும் பேசவில்லை.... கட்டிலில் படுத்து யோசித்துக்கொண்டிருந்தேன்..... என் அருகில் வந்து அமர்ந்த அவன், “என்னடா ஆச்சு?... உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று என் நெற்றியில் கை வைத்து பார்த்தான்....
“இல்லடா ஒண்ணுமில்ல....” நான் பொய் சொல்வதை அவன் அப்பட்டமாக அறிந்திருப்பான்..... ..
“உண்மையை சொல்லுடா...... வீடு ஞாபகம் எதுவும் வந்திடுச்சா?” இன்னும் நெருக்கமாக என் அருகில் அமர்ந்து கேட்டான்.....
“இல்ல.... அப்டிலாம் இல்லடா.... இனி வீடுன்னா அது இது மட்டும்தான், குடும்பம்னா அது நீ மட்டும்தான்...”
“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்க.... கொஞ்ச நாளாவே எதையோ மனசுக்குள்ள வச்சுகிட்டு நீ தவிக்கிறது புரியுது.... நீயாவே சொல்லுவனு நினச்சேன், சொல்லவே இல்ல.... அதான் நானே கேட்குறேன்...”
“அது.... அது வந்து....” சொல்லிடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன், ஆனால் எப்படி சொல்வதென்று புரியாமல் தவித்தேன்....
“ஏண்டா தயங்குற?... என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு?” என் கைகளை பிடித்து, இன்னும் என்னை பாதுகாப்பாக உணரவைக்கிறான்...... சொல்லிவிடலாம் என்று தீர்மானித்துவிட்டேன்.....
“அது.... நீ என்னைவிட்டு விலகுறியோனு பயமா இருக்கு விக்கி.....”
சிரித்த விக்கி, “லூசா நீ?..... என்ன ப்ராப்ளம் உனக்கு?... உன்னைவிட்டு நான் எப்டி விலகுவேன்?” என்றான்....
“இல்ல விக்கி.... நமக்குள்ள இடைவெளி அதிகமாகுற மாதிரி தோணுது.... நல்ம்மா ரெண்டு பேருக்கும் இடையில வேற ஒருத்தர் வர்ற மாதிரி இருக்கு.... அதான்” தலையை கவிழ்த்தியபடி சொல்லியே விட்டேன்....
“என்ன சொல்ற?... எனக்கு புரியலடா.... நாமதான் குடும்பத்தையே விட்டுட்டு வந்துட்டோமே.... நமக்குள்ள யார் வரப்போறாங்க?” புரியாமல் குழப்பத்தில் கேட்டான்....
“உன் பிரென்ட் ப்ரனேஷ் பற்றி சொல்றேன்... அவன்தான்” தயங்கியபடி வார்த்தைகளை விடுவித்தேன்....
“அவனுக்கு என்ன?... அவன்னால என்ன ப்ராப்ளம் உனக்கு?”
“அவன்கூட இனிமே நீ அளவோட பழக்கம் வச்சுக்க” குரல் வழுவிழந்து தத்தி தடுமாறி விழுந்தது....
“என்ன சொல்ல வர்ற?... அவன் எப்படி நம்ம ரெண்டுபேருக்கும் இடையில வருவான்னு நினைக்குற.... கொஞ்சம் தெளிவா சொல்லுடா....”
“என்னோட உரிமைகள்ல அவன் தலையிடுறான்.... ப்ரெண்ட்’னா அதுக்கு ஒரு லிமிட் இருக்குடா..... “
“நீ தேவையில்லாம குழம்புற.... அவன் என் காலேஜ் மேட், இப்போவரைக்கும் க்ளோஸ் பிரென்ட்.... திடீர்னு நீ சொல்றதால அவன்கிட்ட நான் என்னோட பழக்கத்த குறைச்சுக்க முடியாது....” வார்த்தைகளில் கொஞ்சம் காரம் தெறித்தது....
“நான் சொல்றதே உனக்கு புரியலையா?... நாம இப்போ லவ்வர் மட்டும் இல்லடா... அதையும் தாண்டி இனி வாழ்க்கை முழுக்க உனக்கு நான், எனக்கு நீதான்.... உன்னோட எல்லா விஷயத்துலயும் முதல் ஆளா நான்  இருக்கணும்னு நினைக்குறேன்.... எனக்கு அடுத்துதான் உன் வாழ்க்கைல இன்னொருத்தர் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.... என்னை பொருத்தவரைக்கும் நீதான் என்னோட எல்லாமே, ஆனால் உன்னை பொருத்தவரைக்கும் உன் ப்ரெண்ட்’கள்ல நானும் ஒருத்தனாத்தான் இருக்கேன்.... அதைத்தான் சொல்றேன்”
“புரியுதுடா.... நீதான் எனக்கு எல்லா விஷயத்துலயும் முதல் ஆள்... ஆனால், அவனும் எனக்கு முக்கியம்டா.... “
“தெளிவா சொல்லு.... உனக்கு நான் முக்கியமா? அவனா?”
“நீங்க ரெண்டு பேருமே என் ரெண்டு கண்கள் மாதிரி.... உன்னையும் அவனையும் எந்த விதத்துலையும் கம்பேர் பண்ண முடியாதுடா.... அவனுக்கு என்னைய தவிர வேற ப்ரெண்ட்ஸ் இல்லடா.... அவனோட இடத்துல நீ இருந்து பாரு புஜ்ஜி.... “ சொல்லிக்கொண்டே என்னை கட்டி அணைத்து தலையை கோதிவிட்டான்..... அவன் சொல்வதில் உண்மை இருந்தாலும், என் தரப்பு நியாயத்தை அவன் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.... வெளிப்படையாக கூறாமல் இதுவரை சொல்லிவிட்டேன், இனி வெளிப்படையாகவே அவனிடம் என் “அந்த” சந்தேகத்தையும்  சொல்லிவிட தீர்மானித்தேன்....
“அதுமட்டுமில்ல விக்கி, அவனோட ஒருசில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கல” நான் சொல்லி  முடிக்கும்போது, கட்டிப்பிடித்திருந்த அவன் என்னை விட்டு விலகி நின்று, “என்ன சொல்ற?.... அவனோட எந்த நடவடிக்கைகளை சொல்ற?” புருவத்தை உயர்த்தி புரியாமல் கேட்டான் விக்கி....
“அவன் உன்னோட நெருங்கி பழகுறது, உன்ன பார்க்குற பார்வை, தொட்டு பேசுற விஷயங்கள் எல்லாம் ஒரு பிரென்ட் பண்ற மாதிரி தெரியல” தலையை கவிழ்த்து மென்று விழுங்கி வார்த்தைகளை உதிர்த்தேன்.....
நான் எதிர்பாராத நேரத்தில் என் கன்னத்தில் “பளார்” என்று அறைந்தான்.... அதிர்ச்சியில் நிலைகுழைந்து போனேன் நான்.... மீண்டும் சுயநினைவுக்கு வரும் முன், அவனே, “என்ன கேவலமான புத்திடா உனக்கு?... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’னு சொல்ற மாதிரி உனக்கு பார்க்குறதெல்லாம் அப்டி தெரியுதா?..... ஊர் உலகத்துல ப்ரெண்ட் தொட்டு பேசுறது, ஜாலியா விளையாடுறதல்லாம் நீ பார்த்ததில்லையா?... ஏன் நீ இப்டி மாறுன?” வார்த்தைகளில் அனல் தெறித்தது....
“ஐயோ இல்லடா.... உன் மத்த ப்ரெண்ட்ஸ் பத்தி நான் அப்டி சந்தேகப்படல.... ஆனால், ப்ரனேஷ் செய்ற விஷயங்கள் நிச்சயம் ஏதோ தவறான நோக்கத்துலதான்னு எனக்கு தெரியுது... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” அவன் கையை பிடித்தேன்....
அவன் என் கையை உதறிவிட்டு, “இனிமேல் என்னை சந்தேகப்படுற மாதிரி பேசுறதா இருந்தா, பேசாமலே இருந்திடு.... ப்ரனேஷ் அப்படித்தான் என்னோட பழகுவான்.... உன்னோட சந்தேகத்த இன்னையோட நிறுத்திக்கோ” சொல்லிவிட்டு அவன் ஹாலுக்கு சென்றுவிட்டான்....
நான் என்ன சொல்ல வருகிறேன்? என்பதை கூட அவன் முழுமையாக அறிந்துகொள்ள விரும்பவில்லை.....
இனி எப்படி நான் இவனிடம் இந்நிலையை விளக்குவது?.... அவன்தான் என் உலகம்னு நான் இருக்கேன், பத்தோடு பதினொன்றாக அவன் என்னை நினைக்குறான்..... எனக்குன்னு இருக்குற உணர்வுகள், உரிமைகள், ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள்’னு எதையும் அவன் புரிஞ்சுக்க மாட்றான்.... என் அவசரத்தால் நிச்சயம் பிரச்சினை தீராது, இன்னும் பெரிதாகத்தான் ஆகும்....
ஆனாலும், அவன் என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் என்னிலையை புரிந்துகொள்வான்.... நானாக அவனிடம் இதை புகுத்த நினைத்தால், அது நிச்சயம் எதிர்விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.... அதனால், இந்த நேரத்தில் நான் பொறுமையை கடைபிடிக்கணும்..... தேவையில்லாமல் இனி இதைப்பற்றி நான் பேச்செடுக்க மாட்டேன்..... ஆயிரம் ப்ரனேஷ்’கள் வந்தாலும், என் விக்கி மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிட முடியாது.... அதனால், அவனோடு இனி நான் சண்டை போடக்கூடாது என்று தீர்மானித்தேன்.... எழுந்து ஹாலுக்கு சென்றேன்... தலையில் கைவைத்தபடி ஏதோ யோசித்துக்கொண்டிருந்தான்.... அவன் அருகில் சென்று அமர்ந்தேன், “சாரிடா, நான் தப்பா பேசிட்டேன்..... இனி அப்டி பேசமாட்டேன்.... மத்தவங்கள சந்தேகப்படுற நான், உன்னைய நம்பனும்னு இப்பதான் புரிஞ்சுகிட்டேன்” என்று அவன் மேல் சாய்ந்தேன்....
இன்னும் முழு சமாதானம் அடையாத அவன், கொஞ்சம் விலகி அமர்ந்து, “இனியாவது எதையும் யோசிச்சு பேசு...... என்னைய நம்பு.... அடிச்சதுக்கு சாரி” சொல்லிவிட்டு அறைக்கு சென்று படுத்துவிட்டான்.....
என் வார்த்தைகள் அவனை எந்த அளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.... ஆனால், நிச்சயம் இனி அவனை இதிலிருந்து மீட்க, அவனை பழையபடி உற்சாக நிலைக்கு கொண்டுவர முடிவு செய்தேன்.... அவன் மேல் கோபப்படவே கூடாது என்று முடிவாக இருந்தேன்... அன்று இரவு அவனை நான் எந்த விதமான தொந்தரவும் செய்யவில்லை.... அவன் அருகில், அவன் மூச்சுக்காற்றை ரசித்தபடியே நானும் உறங்கினேன்....
விடிந்ததும் நானே அவனிடம் வழிய சென்று பலமுறை பேச்சுக்கொடுத்தேன், சம்பிரதாயத்துக்கு முகம் காட்டாமல் பேசினான்... கோபம் வந்தாலும், அதை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை... அவன் பேச்சுக்களில் இடையிடையே குத்திக்காட்டுதல்களும் இருந்தது....
“ஏதோ கான்பரன்ஸ் வருதுன்னு சொன்னியே விக்கி, எப்போ?”
“அதுலயும் உனக்கு சந்தேகமா?.... அப்டி பொய் சொல்லிட்டு நான் யாரையும் கூப்டுட்டு மகாபலிபுரம் போய்ட மாட்டேன், கவலைப்படாத”
இதைப்போன்ற “ஊசி” போன்ற குத்தும் பதில்கள் அனைத்தையும் நான் ரொம்பவும் நிதானமாக அணுகினேன்.... எந்த அளவிற்கு நான் அவனை காயப்படுத்தி இருந்தால், அவன் இந்த அளவுக்கு என்னிடம் பாராமுகமாக பேசுவான் என்பதை உணர்ந்தேன்....
என்ன விலை கொடுத்தாவது, என் பழைய “விக்கி”யை மீட்க உறுதி பூண்டேன்.... அன்று மருத்துவமனையில் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.... அவனுக்காக என் பல சுபாவங்களை மாற்றி இருக்கிறேன்.... நானே தவறு செய்தாலும், அடுத்தவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கும் ஆளான என்னை, ஒவ்வொரு முறையும் அவனிடம் மன்னிப்பு கேட்கும்படி ஆக்கிவிட்டான்.... எவ்வளவோ இழப்புகள், பிரிவுகள். விட்டுக்கொடுத்தல்கள் என்று என் பக்கத்திலிருந்து நிறைய செய்துவிட்டேன்.... அது கூட ஒரு அழகான இழப்புகள்தான்... காதலுக்காக, காதலனுக்காக எதையும் இழப்பது கூட சுகமான இன்பம்தான் என்பதை நான் இப்போது உணர்கிறேன்....
இனி அவனுடன் நெருக்கம் மட்டுமே காட்டவேண்டும் என்று அவனுக்காகவே வாழ முடிவு செய்தேன்....
வழக்கம்போல வீட்டிற்கு சென்றேன், ஆச்சரியமாக எனக்கு முன்னால் அவன் இன்று வீட்டிற்கு வந்துவிட்டான்....
அவன் அறியாமல் மெல்ல சென்று அவன் பின்புறத்தில் நின்று கட்டி அணைத்தேன்.... வழக்கமாக நான் கோபமாக இருக்கும் சமயங்களில் அவன் செய்யும் உத்திதான், இன்று அதை நான் பயன்படுத்தினேன்.....
நான் கட்டி அணைத்ததும், அதை வெறுப்பது போல என்னை விலக்கிய விக்கி, முகத்தில் ஒரு அருவருப்போடு என்னை பார்த்து, “ச்சி..... விடுடா.... எப்ப பாத்தாலும் உனக்கு இந்த நெனப்புதானா?..... உடம்பல்லாம் மருந்து நாத்தம், முதல்ல போய் குளி” என்று தொடக்கூடாத எதையோ தொட்டதைப்போல் கைகளை கழுவினான்.....
நான் திகைத்தபடியே நின்றேன்.... அழுகையும், ஆத்திரமுமாக வந்தது... அவன் முன் அழுதுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குளியலறை ஓடினேன்..... ஷவர் நீர் என் உடலை நனைத்ததைவிட, என் கண்ணீர்தான் அதிகம் என் மேல் விழுந்தது....
“இப்படி புறக்கணிக்கும் அளவுக்கு நான் அருவருக்கத்தக்க ஒருவனாக ஆகிவிட்டேனா?.... அவன் நண்பனாக நினைக்கும் ஒருவனோடு இணைத்து பேசியது தவறுதான் என்றாலும், அதற்கு மன்னிப்பே இல்லையா? செக்ஸ் பற்றிய சிந்தனையில் நான் எப்போதும் இருப்பதாக அவன் நினைக்கிறானா?” அடுக்கடுக்கான கேள்விகள் என்னை இன்னும் அதிக கோபத்துக்கும், விரக்திக்கும் ஆளாக்கியது....
சிறிது நேரத்தில் என்னை சமாளித்துக்கொண்டு, உடலை துடைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.... ஹாலில் அமர்ந்து, எதுவுமே நடக்காதது போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.... நான் வெளியே வருவதை உணர்ந்தவன், நான் அறியாத வண்ணம் ஓரக்கண்ணால் என்னை பார்த்தான்.... அவனை பொருட்படுத்தாதது போல, நான் அறைக்குள் சென்றேன்....
தொலைக்காட்சியில் மக்கள் தொலைக்காட்சியின் “மலரும் பூமி” நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது..... சுட்டுப்போட்டாலும் விவசாயம் பற்றி பேசாதவன், அதை பார்க்கிறானா?.... அவன் தொலைக்காட்சியில் என்ன ஓடுகிறதென்றே கவனிக்கவில்லை, நிச்சயம் நடந்தவற்றை பற்றி யோசித்துக்கொண்டிருக்க வேண்டும்.... இறுக்கமான சூழலை கொஞ்சம் தளர்த்த தொலைக்காட்சி பார்ப்பதை போல பாவலா செய்துகொண்டிருந்தான்....
என்ன ஆனாலும் இன்று நானாக சென்று அவனிடம் பேசக்கூடாது.... தவறு நான் செய்த போதெல்லாம் நான் மன்னிப்பு கேட்க தயங்கியதில்லை, இன்று அவன் செய்த விஷயம் என்னால் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத ஒன்று....
நிஜமாகவே அவனுக்கு மருந்து வாடைதான் பிரச்சினையா?.... அப்படியானால், நாங்கள் காதலிக்கும் போது ஒருநாள் என் மருத்துவமனையில் ஸ்டோர் ரூமில், மருந்து நெடிகளுக்கு மத்தியில் “எல்லாம்” செய்தது மட்டும் அவனுக்கு பிடித்ததா?.... அப்போது மல்லிகை மணமாக இருந்தது, இப்போது மட்டும் சாக்கடை நாற்றமாக அடிக்கிறதா?....
நான் அவனை வெறும் செக்ஸ் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பதாக அவன் நினைக்கிறானா?... அப்படி நினைக்காவிட்டால் அவன் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை நிச்சயம் வந்திருக்காது..... எனக்குள் ஆயிரம் ஆயிரம், குழப்பங்களும், ஆற்றாமைகளும், வெறுப்புகளும் தோன்றி கேள்விகளாக உருவாகின... என்னையும் மீறி கண்களில் நீர் வழிந்தது.....
எவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை, என்னென்னவோ யோசித்து பயம்தான் அதிகம் உண்டானது.....
இப்போது அவன் அறைக்குள் வருவது தெரிகிறது.... அறையின் விளக்கை போட்டான்....  வேகமாக கண்களில் வழிந்த நீரை துடைத்து, அவன் வந்திருப்பதை தெரியாதது போல கண்களை மூடிக்கொண்டேன்.....
கட்டிலில் என் அருகில் படுத்து, என் பெயர் சொல்லி அழைத்தான்.....
“வருண்..... வருண்”
“......”
“வருண்.... எழுந்துரிடா” என் தோள்களில் கைவைத்து எழுப்பினான்.... என் தோளில் இருந்த அவன் கையை விலக்கிவிட்டேன்.... என் கோபத்தை இந்நேரம் அவன் புரிந்திருக்க கூடும்... என் அருகே இன்னும் நெருக்கமாக அமர்ந்து என் தலையில் கை வைத்து, “என்ன ப்ராப்ளம் உனக்கு?.... ஏதோ கோபத்துல பேசிட்டேன், அது தப்பா?” என்று அவ்வளவு பெரிய விஷயத்தை, இவ்வளவு எளிதாக கூறினான்.....
எனக்கு கோபம் அதிகமாகி, “கோபத்துல நீ என்ன வேணாலும் பேசுவ, நான் எல்லாத்தையும் கேட்டுட்டு உன்கிட்ட சிரிச்சு பேசணுமா?” எழுந்து அமர்ந்தேன்....
அப்போதுதான் என் கண்களை கவனித்திருக்க வேண்டும் அவன், “என்னடா கண்ணல்லாம் செவந்திருக்கு?.... அழுதியா?” அவன் கேட்கும்போதே அவன் கண்கள் கலங்கின..... எப்போதும் நான் அழுதாலும், அழுதது தெரிந்தாலும் அவன் துடித்து போய்விடுவான்....
“உன் மனசுல நெனச்சதைதானே நீ சொல்லிருக்க?... அப்டினா, நான் எப்பவும் செக்ஸ் எண்ணத்துல இருக்குறதா நீ நெனக்கிறியா?.... நீ அப்டி சொன்னப்போ செத்துடலாம் போல இருந்துச்சு தெரியுமா?” உதடுகள் துடிக்க கேட்டேன்......
என்னை கட்டி அணைத்த விக்கி, “சாரிடா.... லூசுத்தனமா பேசிட்டேன்.... சத்தியமா உன்ன நான் அப்டி நெனக்கலடா.... தப்பா இருந்தா அடிச்சிடுடா....” மனம் வெதும்பி பேசினான்....
என்னாலும் அவன் மீது அதற்கு மேல் கோபப்பட முடியவில்லை...
பசி, தூக்கம், பேச்சு கூட எங்கள் இருவருக்கும் அப்போது தேவைப்படவில்லை... அவன் தழுவல் ஒன்றே எனக்கான ஒரே ஆறுதலாக இருந்தது, என் மனதின் ரணங்களுக்கு மருந்தாக அவன் அரவணைப்பு இருந்தது.....
அப்படியே இருவரும் உறங்கிப்போனோம்.....
காலையில் இருவரும், முந்தைய நாள் நிகழ்வுகளை பற்றி பேசிக்கொள்ளவில்லை..... பேசி புது விவாதம் ஏற்பட நாங்கள் இருவரும் விரும்பவில்லை..... வழக்கமான பேச்சும், சிரிப்பும், தழுவல்களும், ரொமான்ஸ்’களும், சில நாட்கள்இடைவெளிக்கு பிறகு இன்று தொடர்ந்தது....
புத்துணர்வோடும், புது மன தெளிவோடும் அன்று பணிக்கு சென்றேன்.....
ஒவ்வொரு ஊடலும் எங்கள் இருவருக்குள்ளும் நெருக்கத்தை இன்னுமின்னும் அதிகமாக்கியதை, ஒவ்வொரு கூடலும் போதும் என்னால் உணரமுடிகிறது.....
மருத்துவமனையை இன்று உற்சாகமாக வலம் வந்தேன்.... அன்று மாலையும் எனக்கு முன்பே விக்கி வீட்டிற்கு வந்துவிட்டான்.... நேற்றுப்போல இன்றும் கட்டிப்பிடிக்க தயங்கி, அவனை பார்த்து சிரித்தவாறே குளிக்க செல்லும் முன்பு, என்னை அவன் இன்று கட்டிப்பிடித்தான்.....
“இப்போ மட்டும் நாத்தம் அடிக்கலையா விக்கி?”
சிரித்த அவன், “நாத்தமா?.... இது நறுமணம்டா.... குளிக்கவே வேண்டாம், நான் அப்படியே சாப்பிடுவேன்” சொல்லி என் உதடுகளை நோக்கி குறிவைக்க முயன்றவனை, ஒருவழியாக தடுத்து நிறுத்தி குளிக்க சென்றேன்....
கொதிநீராக நேற்று தெரிந்த ஷவர் நீர், இன்று குளிர் நீராக சிலிர்த்தது....
குளித்து முடித்து வெளியே வந்தேன், என்னை பார்த்து சிரித்த விக்கி, “சீக்கிரம் கிளம்புடா, வெளில போயிட்டு வரலாம்” ஒப்பனை செய்தவாறே என்னிடத்தில் கூறினான்....
இன்றும் அவன் கருப்பு நிற சட்டையில், என்னை சிலிர்க்க வைக்கும் அழகோடு காணப்பட்டான்... ஆனாலும், அவன் வெளியில் போவதாக கூறுவதில் உள்ளூற ஒரு பதற்றம்... ஒவ்வொரு முறை அவனோடு வெளியில் செல்லும்போதுதான் ஏதோ ஒரு பிரச்சினை எங்களுக்குள் உண்டாகிறது....
ஆனாலும், அவன் சொன்ன வார்த்தைக்கு மறுப்பேதும் சொல்லாமல், அம்மா’ சொன்னதை கேட்கும் அமைச்சரை போல விறுவிறுப்புடன் கிளம்பினேன்.... “எங்கே போறோம்?” என்று கூட நான் கேட்க மறந்து அவனுடன் சென்றேன், எங்கு சென்றாலும் பிரச்சினை வராமல் இருக்கணும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது..... பைக்கில் அவனுடன் செல்லும்போது வழக்கமான உரசல்களில் இன்று ஈடுபடவில்லை.... எனக்கு எண்ணமெல்லாம், நாங்கள் செல்லும் இடத்துக்கு எங்களுக்கு முன்னால் வழக்கமாக வந்துநிற்கும் ப்ரனேஷ், இன்று என்ன பிரச்சினை உண்டாக்கப்போறானோ! என்பதுதான்....
பைக் மாயாஜால் அடைந்ததும், இருவரும் இறங்கி திரை அரங்கம் உள்ளே சென்றோம்... டிக்கெட் வாங்க விக்கி சென்றதும், நான் சுற்றியும் முற்றியும் அங்கு ப்ரனேஷ் நிற்கிறானா? என்று கண்களை அலைபாய விட்டேன்.... டிக்கெட் வாங்கிவந்த அவன், நான் யாரையோ தேடுவதை கவனித்துவிட்டான்....
“என்னடா, யாரை தேடுற?”
“யாரையும் இல்ல.... சும்மாதான்”
“ப்ரனேஷ் தேடுறியா?... கவலைப்படாத, இனி நமக்குள்ள அவன் வரமாட்டான்.... உனக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நான் புரிஞ்சுகிட்டேன்.... இனி உனக்கு அப்புறம்தான் யாரா இருந்தாலும்”
அப்படியே அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கணும் போல இருந்தது... ஆனாலும், பொது இடம் என்பதால் என் உணர்வுகளை கட்டுப்படுத்தி அவன் கைகளை இறுக்கி பிடித்து, “தாங்க்ஸ் டா” என்றேன்....
“ச்சி... பரவால்ல விடு... அதுக்காக ப்ரனேஷை நான் அவாய்ட் பண்ண முடியாது... அவன் எப்பவும் என் க்ளோஸ் பிரென்ட்’தான், அதுல நீ தலையிடக்கூடாது” என் உற்சாக வெள்ளத்தில், ஒரு தடுப்பணை போல இப்படி கூறியது மனதிற்குள் கொஞ்சம் உறுத்தினாலும், இவ்வளவு அவன் எனக்காக இறங்கி வந்ததே எனக்கு மனநிறைவை கொடுத்தது.....
திரை அரங்கம் உள்ளே சென்றதும்தான், அங்கே அதிக கூட்டமே இல்லாததை உணர்ந்தேன்..... அப்போதுதான் அங்கு ஏதோ “இந்தி” திரைப்படம் ஓடப்போவதை உணர்ந்தேன்.... திரைப்படம் தொடங்கிவிட்டது.... எனக்கோ இந்தியில், “அச்சா, நஹி” தவிர ஒன்றும் தெரியாது.... இதில் எங்கே நான் படத்தை ரசிப்பது?... எல்லோரும் சிரிக்கும்போது நானும் சிரித்தேன், எல்லோரும் கை தட்டும்போது நானும் கைதட்டினேன்.... அவன் அருகில் கைபிடித்து, தோள் சாய்ந்து, மூச்சு காற்று ஸ்பரிசத்தில் இருந்த ஒன்றே ஆயிரம் காதல் படங்களுக்கு சமமல்லவா!..... இப்படி ஒரு தனிமையை தானே நான் இவ்வளவு நாளும் எதிர்பார்த்தேன், இப்போது எனக்கு மட்டும் அவன் என்கிற உணர்வு எனக்குள் சுடர்விட்டு எரிந்தது எனக்குள் உற்சாக மிகுதியை ஏற்படுத்தியது......
திரைப்படம் முடிந்து, இரவு உணவை முடித்துவிட்டு வீட்டை அடைந்தோம்.....
வீட்டிற்குள் சென்று கதவை சாத்தியதும், என்னை கட்டி அணைத்தான்.... அப்படியே என்னை இழுத்து அறைக்குள் படுக்கையில் கிடத்தினான்.... முகத்தோடு முகம் புதைத்து ஆழமான முத்தம் கொடுத்தான்.... முழு மனநிறைவுடன் இன்று நானும் அவனோடு கலந்தேன்.....
“இன்னைக்கு படத்துல செம்ம லவ் சீன்ஸ்’ல?” கட்டிப்பிடித்தவாறே கேட்டான்....
“அது காதல் படமா என்ன?” அப்பாவியாக கேட்டேன்.... சட்டென என்னை விலக்கி என் முகத்தை கவனித்தவன், “என்னடா சொல்ற?... படம் பார்த்தில்ல?” என்றான்....
“பார்த்தேன், ஆனால் புரியல”
“ஏண்டா?”
“எனக்கு ஹிந்தி தெரியாதே!”
“அடப்பாவி... அதை முதல்லயே சொல்லிருக்கலாம்ல...?” அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்....
“உனக்கு படம் பிடிச்சுதா?”
“பிடிச்சுது”
“அப்போ எனக்கும் பிடிச்சுது..... அதனால நீ கவலைப்படாத.... உனக்கு பிடிச்சது நிச்சயம் எனக்கும் பிடிக்கும்டா”
“ஆனால், என் ப்ரெண்ட்ஸ் மட்டும் பிடிக்காதுல்ல?” சொல்லிவிட்டு அவன் சிரிக்க நானும் சிரித்தேன்.... மீண்டும் இடையில் தடங்கல் உண்டான, எங்களுக்குள் நடந்த களவியல் காட்சிகள் இன்னும் உற்சாகத்துடனும், வேகத்துடனும் அடுத்த கட்டமாக நடந்தேறியது.....
அன்றைய இரவு நிச்சயம் என் வாழ்வின் ஒரு மிகப்பெரிய உற்சாகம் கொடுத்த இரவாக இருந்தது.....
சில நாட்கள் எங்களுக்குள், சிறு சலனம் கூட இல்லாமல் காதல் மிகுந்த வாழ்க்கையாக கடந்தது.... தெவிட்டாத இன்பம் மட்டுமே இந்த நாட்களில் எங்களுக்குள் இருந்தது.....
அன்றொருநாள் மாலை உற்சாகம் இழந்து அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தான்..... முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது.... வழக்கமாக கதவை திறந்ததும் என்னை பார்த்து அவன் வெளிப்படுத்தும் புன்சிரிப்பு கூட இன்று உயிர் இல்லாமல் தெரிந்தது..... நானாக எதுவும் கேட்கவில்லை.... குளித்து முடித்து, என் அருகில் அமர்ந்தவன், என் தோள் மீது சாய்ந்தபடியே பேச்சை தொடங்கினான், “வருண், இன்னிக்கு ஒரு கஷ்டமான நியூஸ் ஆபிஸ்’ல சொன்னாங்க”
“என்ன விஷயம்?” பலவித யூகங்களுக்கு மத்தியில் ஆர்வத்துடன் கேட்டேன்....
“நம்ம ப்ரனேஷை ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.... பூனே பிராஞ்ச்’க்கு....” சோகம் தொனிக்க கூறினான்.... எனக்கோ அது எல்லையற்ற மகிழ்ச்சியை உண்டாக்கும்  செய்தியாக தெரிந்தது.... எங்கள் இருவருக்குள்ளும் இருந்த ஒரே உறுத்தலும் பூனே செல்லப்போகிறது..... இனி எங்களுக்குள் எவ்வித மன வேறுபாடு நிகழவும் வாய்ப்பில்லை..... இப்படி நான் பலவிதமாக யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், “என்னடா எதுவுமே சொல்ல மாட்ற?” என்று என் முகத்தை பார்த்துவிட்டான்.... அதில் சுடர்விட்டு ஒளிர்ந்த மகிழ்ச்சியை அவன் கண்டுபிடிக்காமல் இருக்க மாட்டான்.....
“என்னடா சந்தோஷமான விஷயம் சொன்ன மாதிரி இப்டி ரியாக்ட் பண்ற?” அவன் இப்படி சொன்னபோதுதான், நான் சுயநினைவுக்கே வந்தேன்.....
“ஐயோ அப்டிலாம் இல்லடா.... நான் வேற ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்.... ச்ச, அவ்ளோ தூரம் போறானா அவன்?” முகத்தை கஷ்டப்பட்டு இறுக்கமாக மாற்ற முனைந்தேன்.....
“ஆமாடா..... அவன் அவ்வளவு க்ளோஸா யார்கிட்டயும் பழகமாட்டான்.... அவன் இருந்தவரைக்கும் எங்க ஆபிஸ்’ல என் வேலைல பாதியை அவன்தான் பார்த்தான்.... நாளைக்கே கிளம்பனும் அவன்... ரொம்ப கஷ்டமா இருக்கு...” சொல்லிவிட்டு என் மடியில் படுத்தான்.... அவன் தலை முடியை வருடிவிட்டு, நான் சந்தோஷத்தில் மிதந்தேன்.... இது தவறுதான் என்று எனக்கு தெரிந்தாலும், என் வாழ்க்கைதான் முதலில் எனக்கு முக்கியம்....
சிறிது நேரம் அதைப்பற்றியே அவன் பேசிக்கொண்டிருந்தான், அவனுக்கு எப்போதும் ஆறுதலாக இருக்க வேண்டிய நான், இப்போதும் அவனுக்கு ஆறுதல் கூறினேன்....
“வருண், இன்னைக்கு நைட் அவனுக்கு சென்டாப் கொடுக்குறோம்..... நைட் நாம அங்கேயே ஸ்டே பண்ணிட்டு, காலைல வரலாம்.... கிளம்பு” உடையை மாற்றிக்கொண்டே என்னையும் கிளம்ப சொன்னான்....
எனக்கு துளியும் அங்கு செல்ல விருப்பமில்லை, எப்படி மறுப்பது என்று புரியாமல், “நான் வரல விக்கி, நீ போயிட்டு வா” என்றேன்....
“என்னாச்சு?.... இன்னும் அவன்மேல இருக்குற சந்தேகம் உனக்கு போகலையா?” அவன் குரலில் வேகமும், கோபமும் தெரிந்தது....
நிலைமை விபரீதம் ஆகிவிடக்கூடாது என்ற பயத்தில், “ஐயோ இல்ல விக்கி, எனக்கு நிஜமாவே தலை வலிக்குது.... இப்போ கூட மாத்திரை சாப்ட்டுட்டுதான் உக்காந்திருக்கேன்” பொய்யை மறைக்க பல பொய்களை உதிர்த்தேன்....
“ஓஹ்.... சாரிடா.... நான் டென்ஷன்’ல பேசிட்டேன், நீ ரெஸ்ட் எடு..... நான் போயிட்டு காலைல வரேன்” என் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு அவன் வெளியே சென்றுவிட்டான்....
இன்று கார்த்திகை, காலண்டரில் சிரித்தபடியே கையை உயர்த்தி அருள் பாவித்துக்கொண்டிருந்த முருகன், என்னை பார்த்து ஏதோ சொல்வது போல தோன்றியது.... எப்படியோ, இன்று இரவோடு எனக்கும் அவனுக்கும் இடையில் வேறொருவன் இல்லை என்கிற மனநிறைவு என்னை உற்சாக மிகுதிக்கு ஆளாக்கியது.....
சன் மியூசிக்கில் எனக்காகவே இன்று முழுக்க முழுக்க காதல் பாடல்களாக போடுகின்றனர்..... அதை ரசித்தபடியே ஹாலில் உறங்கிவிட்டேன்.... வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது..... அப்போதுதான் விழிக்கிறேன்.... வசந்த் டிவியில் பிரபல செக்சாலஜிஸ்ட் “விந்து முந்துறது சிலருக்கு வர்றதுண்டு” சொல்லிக்கொண்டு இருக்கிறார்... அப்போதுதான் மணியை கவனித்தேன், பன்னிரண்டை கடந்திருந்தது.... இந்த நள்ளிரவில் யாராக இருக்கும்? என்கிற குழப்பத்தோடு கதவை திறந்தேன்.....
விக்கிதான் வந்திருக்கிறான்.... முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது.... தூக்க மிகுதியால் இருக்கலாம் என்று நானும், சிரித்தபடியே உள்ளே வழிவிட்டேன்.... “என்னடா, காலைல வருவன்னு சொன்ன?... இப்பவே வந்துட்ட?” என் கேள்விக்கு பதில் சொல்லாமல், அறைக்குள் சென்று படுத்துவிட்டான்....
எதனால் இப்படி இருக்கிறான்? என்ன நடந்திருக்கும்? எதுவும் எனக்கு யூகிக்க கூட முடியவில்லை.... போட்டிருந்த உடைகளை மாற்ற கூட மறந்தவனாக, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல கூட மறந்தவனாக படுக்கையில் படுத்துவிட்டான்.... அதற்கு மேல் அவனை நான் எதுவும் கேட்க விரும்பாமல், அவன் அருகில் படுத்துவிட்டேன்....
விடிந்ததும் வழக்கம்போல நான் எழுந்து, குளித்து, உடை மாற்றி பணிக்கு கிளம்பினேன்.... இன்னும் அவன் எழவில்லை... அடித்து போட்டாற்போல, அப்படி ஒரு தூக்கம்.... நானும் அவனை தொந்தரவு செய்யாமல் கிளம்பிக்கொண்டிருந்தேன்.... வெளியே கிளம்புவதற்கு முன் அவன் அருகில் சென்று, அவனை எழுப்பினேன்...
“விக்கி.... இன்னிக்கு ஆபிஸ் போகலையா?”
“இல்லடா....” கண்களை விழித்து என்னை பார்த்தான்.... கண்கள் சிவந்திருந்தது, முகம் வீக்கத்துடன் காணப்பட்டது... அவன் அழுதிருக்கக்கூடும் என்று யூகிதுக்கொண்டேன்.... என்னிடம் சொல்லக்கூடிய விஷயமாக இருந்தால் அவனே சொல்லி இருப்பான், ஏன் எதுவும் சொல்லவில்லை?... அப்படி என்னிடம் கூட சொல்ல கூடாத ரகசியம் அவனுக்குள் எதாவது இருக்குமா என்ன?... குழப்பமாக இருந்தது.... இதே குழப்பத்துடன் என்னால் மருத்துவமனைக்கு சென்று நிச்சயம் நிம்மதியாக இருக்க முடியாது.... அவனிடமே கேட்டுவிட முடிவெடுத்தேன்....
“விக்கி....”
“என்னடா?” வார்த்தையில் உயிர் இல்லாமல் இருந்தது...
“கேட்குறேன்னு தப்பா நினைக்காத, ஏன் ஒரு மாதிரி இருக்க?... உடம்பு எதவும் சரி இல்லையா?” அவன் அருகில் அமர்ந்து, அவன் கையை பிடித்து கேட்டேன்....
மெளனமாக என்னை பார்த்தான்.... அந்த பார்வையில் ஒரு தயக்கம் தென்பட்டது.....
“என்கிட்ட சொல்ல கூடாத விஷயம்னா, சொல்லவேணாம்” எழ முற்பட்ட என் கைகளை பிடித்து இழுத்து, அருகில் மீண்டும் அமரவைத்தான்...
இப்போது அவனும் எழுந்து அமர்ந்து, என் கைகளை பிடித்து, “எப்டி சொல்றதுன்னு தெரியல வருண்.... நீ சொன்னத அப்பவே கேட்டிருந்தா, இவ்வளவு ஆகிருக்காது” என்றான்... எதை சொல்கிறான்? என்று எனக்கு புரியவில்லை.... வழக்கமான பதட்டம், பயம் எல்லாம் எனக்குள் ஏற்பட தொடங்கிவிட்டது... அவனே மேற்கொண்டு சொன்னான், “நைட் எல்லாரும் டிரிங்க்ஸ் சாப்ட்டு ப்ரனேஷ் ரூம்ல படுத்திருந்தோம்.... அப்போ, போதைல ப்ரனேஷ் என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிட்டான்...”
அதிர்ச்சியில் நான் அவன் கைகளை விலக்கிவிட்டு, எழுந்துவிட்டேன்...
“என்னடா சொல்ற?... அப்டினா?” அதிர்ச்சியில் கேட்டேன்....
“ஆமா.... என்கிட்ட அவன் தவறா நடந்துகிட்டான்” சொல்லிவிட்டு தலையை கவிழ்த்துக்கொண்டான்.....
எனக்கு கோபம், வெறுப்பு எல்லாம் கலந்து வெறியாக மாறியது... “இவ்வளவு பெரிய விஷயத்த எப்டிடா உன்னால இவ்வளவு சாதாரணமா சொல்ல முடியுது?... உனக்கு நான் எவ்வளவு தடவை அதை படிச்சு படிச்சு சொன்னேன், ஏண்டா உனக்கு புத்தி வரல?”
“சாரிடா.... அவன் இந்த நோக்கத்துல என்கூட பழகுனது எனக்கு தெரியாது.... அவனை நான் ரொம்ப நம்பிட்டேன்”
“ஒருத்தன் சாதாரணமா தொடுறதுக்கும், வேற எண்ணத்துல தொடுறதுக்கும் வித்தியாசம் கூட தெரியாத குழந்தை இல்லடா நீ... உனக்கு அவன் பண்ணது பிடிச்சிருந்திருக்கு, அதான் நீ இவ்வளவுநாளா அமைதியா அதை ரசிச்சிருக்க... உன்ன நான் எவ்வளவு நம்பினேனோ, அந்த அளவுக்கு நீ என்னை ஏமாத்திருக்க....” வார்த்தைகள் என்னை அறியாமல் தடுமாறி விழுந்தன....
“விக்கி, என்ன பேசுறன்னு யோசிச்சு பேசு... லூசு மாதிரி கண்டதையும் பேசாத” அவனும் கோபத்தில் பேசத்தொடங்கினான்.....
“இந்த மாதிரி கேவலமான விஷயம் செஞ்சுட்டு எப்டிடா உன்னால பேசமுடியுது?” நான் பேசும்போது விக்கியின் மொபைல் அடிக்க, திரையில் ‘ப்ரனேஷ்’ என்ற பெயர் பளிச்சிட்டது.... எனக்கோ கோபம் இன்னும் பலமடங்காக ஆனது.... இவ்வளவு நடந்த பிறகும் அவன் விக்கிக்கு போன் செய்வதை நினைத்து கடுமையான கோபம் கொண்டேன்.... டேபிளில் இருந்த விக்கியின் போனை எடுத்து தரையில் வீசினேன்.... அது பேட்டரி கழன்று பல பாகங்களாக சிதறியது....
இதைக்கண்டு கோபமான விக்கி, ஆக்ரோஷத்துடன் என் அருகில் வந்து கன்னம் பழுக்க ஒரு அறை விட்டான்... நிலை தடுமாறி கட்டிலில் விழுந்தேன்.... என்னை பார்த்து, “நீ மனுஷனே இல்லடா... நீ ஒரு சைக்கோ... உன்கூட வாழற ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனையா இருக்கு” சொல்லிவிட்டு வீடே அதிரும் அளவுக்கு அறையின் கதவை சாத்திவிட்டு ஹாலுக்கு சென்றுவிட்டான்....
என்ன நடக்கிறது? என்பதை நான் உணரும் முன்பே, அருகில் பழம் நறுக்கி வைக்கப்பட்டிருந்த கத்தி என் கண்ணை உறுத்த, என்னை கேட்காமல் என் மனம் அதை நோக்கி பாய்ந்தது.... சட்டென அந்த கத்தியை எடுத்தேன், வலது கையின் மணிக்கட்டில் பதிந்து கிழித்தேன்.... இந்த நிகழ்வுகள் நொடிப்பொழுதுகளில் நடந்துமுடிந்துவிட்டது...
என் மனம் சரி, தவறு என்பவற்றை யோசிக்கவோ, நிகழ்வுகளை அலசி ஆராயவோ நேரம் கொடுக்காமல் இப்படி செய்துவிட்டது.... பதற்றத்தில் நான் செய்யும் ஒவ்வொரு காரியமும், ஏதோ ஒன்றை என்னிடம் இழக்க செய்யும்... இன்று நான் செய்த இந்த காரியம் என் உயிரையே என்னிடத்திலிருந்து பிரிக்கப்போகிறது....
ரத்தம் நீராக வழிந்து, என் வெள்ளை கோட்’ஐ சிவப்பு சாயம் பூச வைத்தது.... ஹாலில்தான் அவன் இருக்கிறான், சத்தம் போட்டு கூப்பிடக்கூட என்னால் முடியவில்லை.... ஒவ்வொரு நொடியும் கடக்கும்போதுதான் நான் செய்த தவறின் விபரீதம் புரிகிறது... எழுந்து நிற்க கூட முடியவில்லை, கண்கள் மெல்ல இருண்டது... இந்த உலகை விட்டு நான் செல்லப்போகிறேனா?.... ஆண்டவா!...... மயங்கி தரையில் விழுந்தேன்.... சிறிது நேரத்தில், கதவு திறக்கும் சத்தம் கேட்டது... நான் விழுந்த சத்தம் கேட்டு அவன் வந்திருக்கக்கூடும்.... அழுகிறான்.... “வருண்.... வருண்” என் கன்னங்களை தட்டுகிறான்.... ஐம்புலன்களில் செவி மட்டுமே இன்னும் கொஞ்சம் உயிரோட்டத்துடன் இருக்கிறது....
அவனிடம் மன்னிப்பு கேட்க மனம் சொன்னாலும், வாயால் அது முடியவில்லை... இப்போது மெல்ல மெல்ல என் செவித்திறனும் செயலிழந்து போனது....
மீண்டும் ஏதோ சத்தங்கள் எனக்கு கேட்கிறது.... நான் இறந்திருக்கக்கூடும்... அப்படியானால் என்ன சத்தம் இது?.... “பீப்” சத்தம் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.... என் நாசிகளை மருந்து நாற்றம் ஊடுருவி சென்றது... அப்படியானால் இது சொர்க்கமோ, நரகமோ இல்லை.... கண்களை லேசாக முழித்து பார்த்தேன்... வலது கையில் கட்டுப்போடப்பட்டிருக்கிறது, இடது கையில் சலைன் மற்றும் மருந்துகள் ஏறிக்கொண்டிருந்தது... விரலில் பல்ஸ் சோதிக்கும் கருவி மாட்டப்பட்டிருக்கிறது.... அது எழுப்பும் சத்தம்தான் அந்த “பீப்” ஒலி... ரத்தம் ஏற்றப்பட்ட காலி பாக்கெட் அருகில் கிடந்தது.... சந்தேகமே இல்லாமல் மருத்துவமனைதான்....
என் வலது பக்கம், கையில் கட்டப்பட்டிருந்த கட்டினை பார்த்தவாறே விக்கி அமர்ந்திருக்கிறான்.... அவன் கண்களில் ஒரு மிரட்சி தெரிகிறது.... அவனை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்.... என் கையால் அவன் விரலை வருடினேன்... அப்போதுதான் நான் விழித்திருப்பதை அவன் கண்டான்.... சூரியனை பார்த்ததும், மலரும் சூரியகாந்தி மலரைப்போல அவன் என்னை பார்த்து முகம் மலர்ந்தான்....
எச்சிலை விழுங்கியவாறு அவனை பார்த்து, “சாரி” என்று சொல்ல முயன்றேன்....
என்னை தடுத்தவன், அருகில் இருந்த க்ளாஸில் தண்ணீர் ஊற்றி எனக்கு குடிக்க கொடுத்தான்... மெல்ல அதை வாங்கி பருகியபிறகு, எனக்குள் இருந்த களைப்பு குறைந்தது... கிளாசை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு என் அருகில் வந்தான் விக்கி.... வழக்கமான முத்தம் கொடுக்க போகிறான் என்று எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பாராத விதமாக நிலைகுழையும் அளவுக்கு ஒரு அறை அறைவிட்டான்.....
என்ன நடக்கிறது? என்று எனக்கு புரியவில்லை... ஏன் அடித்தான்? என்று குழம்பிய நேரத்தில் அவனே தொடங்கினான், “ஏண்டா இப்டி பண்ணின?... வீடு, குடும்பம், சொசைட்டி எல்லாத்தையும் பகச்சுகிட்டு நாம வாழ்ந்தது இப்டி சாகுறதுக்கா?... ப்ரனேஷ் விஷயத்த நான் உன்கிட்ட சொல்லாம மறச்சிருக்க முடியும்... அதை உன்கிட்ட சொல்றேன்னா, அதுவும் உன்மேல இருக்குற நம்பிக்கையால்தான்.... நேத்து நைட் ப்ரனேஷ் அப்டி பண்ணவுடனே, அவனோட அதுக்கு மேல ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.... அதனாலதான் அந்த லேட் நைட்லையும் நம்ம வீட்டுக்கு வந்துட்டேன்.... நான் அவன் செஞ்சதை புரிஞ்சுக்காதது என் தப்புதான், அதுக்குத்தான் சாரி சொன்னேன்... அதுக்கு நீ என்னைய எதுவேனாலும் பண்ணிருக்கலாம், உன்னைய ஏண்டா கஷ்டப்படுத்திக்கற?” வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதை ஊசியால் குத்தியது....
“சாரிடா.... அவசரப்பட்டு பேசிட்டேன், செஞ்சுட்டேன்.... இனி சத்தியமா அப்டி நடந்துக்க மாட்டேன்.... இவ்வளவு நடந்த பிறகும் ப்ரனேஷ் உனக்கு கால் பண்ணதுதான் எனக்கு இன்னும் கோபத்த அதிகமாக்கிடுச்சு”
“தப்பு செஞ்சவன் அவன், மன்னிப்பு கேட்க கால் பண்ணான்.... ஆனால், அது மன்னிக்கக்கூடிய தப்பு இல்ல.... ஒருவேள நான் கால் அட்டன்ட் பண்ணிருந்தா, நிச்சயம் கண்டபடி திட்டிருப்பேன்.... அந்த கஷ்டத்த அவனுக்கு கொடுக்காம அவன பூனேக்கு அனுப்பிட்ட” சிரித்தான் அவன்....
“சரி... எதுக்குடா தண்ணி குடுத்துட்டு அப்புறம் என்னைய அறைஞ்ச?” புரியாமல் கேட்டேன்....
“மயக்கத்துல இருந்தா அடி உனக்கு சரியா வலிக்காதுல்ல, அதான் தெளிய வச்சு அடிச்சேன்” என் கன்னத்தை வருடி, அதற்கும் மன்னிப்பு கேட்டான்....
“இனிமே இப்டி எதுவும் நடந்தா இப்டி பண்ணிடாதடா.... ஒருசில மணிநேரத்துல நான் உறைஞ்சு போய்ட்டேன்...”
“கவலைப்படாத.... இனி அப்டி நீ பண்ணினா, என் கையை கிழிச்சுக்க மாட்டேன்... உன் கழுத்ததான் கிழிப்பேன்” இதை கேட்ட அவன் அதிர்ந்து சிரிக்க, நானும் சிரித்தேன்..... அப்படியே அவன் அறைந்த கன்னத்தில் ஆழமாக முத்தத்தை பதித்தான்.... அவன் அருகில் இருக்கும் நேரமெல்லாம் கதிரொலியாக இருந்து, பனித்துளியாக என்னை உருக வைத்து விடுகிறான்.... இந்த சில நிமிடங்களுக்காக இன்னும் ஆயிரம் முறை வேண்டுமானாலும், கையை கிழித்துக்கொள்ளலாம் என்று எனக்கு தோன்றியது.... முட்டாள்த்தனமான எண்ணம்தான்.... காதலில் எல்லாமே இன்பம்தானே....
அவனுக்காக அனைத்தையும் இழந்தேன், ஆனாலும் எல்லாம் இருக்கும் மனநிறைவு அவன் அருகில் இருக்கும்போதெல்லாம் என்னுள் இருக்கிறது.... அந்த நிறைவே போதும் என் வாழ்நாள் முழுமைக்கும்...... (முற்றும்)

No comments:

Post a Comment